சிறப்புக்கட்டுரைகள்

தெய்வ தரிசனம் – நான்கு காட்சிகள்

சுகுமாரன்

காட்சி - 1

வர்கள் இரண்டு பேர். புராண சினிமாப் படப்பிடிப்பின் இடைவேளையில் வந்தவர்கள்போல இருந்தார்கள். காவி உடை. நீண்டு வளர்ந்த தாடியும் சிகையும்.தீர்க்கமான கண்கள். துல்லியமான ஆங்கில உச்சரிப்பில் சொன்னார்கள். “அம்மா உங்களைப் பார்க்க விரும்புகிறார்கள்”.

ஒரு விநாடி குழப்பமாக இருந்தது. அம்மா எதற்காக என்னைப் பார்க்கத் தூது அனுப்புகிறாள். அதுவும் அந்நியர்களை. வந்தவர்களை உட்காரச்

சொல்லி விட்டு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் அலுவலகம் வரும் வழியில் பார்த்த சுவரொட்டிகள் நினைவுக்கு வந்தன. பார்க்க விரும்பியது என் அம்மா அல்ல என்றுபுரிந்தது. அவர்களிடம் “நீங்கள் சொல்கிற அம்மா என்னைப் பிரத்தியேகமாகப் பார்க்க விரும்புவதன் காரணம் விளங்கவில்லை” என்றேன்.

இருவரும் சொல்லிவைத்தது போல ஒரே நொடியில் புன்னகை செய்தார்கள். தெய்வீகப் புன்னகை அது. மிகையோ குறைவோ இல்லாமல் அளவான புன்னகை. சொல்லிவைத்தாற்போல புன்னகையை மலரவிட்டு ஒரு நொடிக்குப் பிறகு அதேபோல புன்னகையை அணைத்து விட்டுச் சொன்னார்கள்.

“உங்களை மட்டுமல்ல. முக்கியமான பத்திரிகையாளர்கள் எல்லாரையும் அம்மா அழைத்திருக்கிறார்கள். நான்கு நாட்கள் நகரத்திலிருப்பார்கள். பொதுமக்களுக்கு தரிசனம் தருகிறார்கள்.அம்மாவின் விஜயம் எல்லா மக்களுக்கும் தெரிய வேண்டுமில்லையா? அதன் பொருட்டு எல்லா பத்திரிகையாளர்களையும் அழைத்திருக்கிறோம். ஒரு நாளைக்கு ஒன்றோ இரண்டோ பேர். நாளை உங்கள் பத்திரிகைக்கு என்று ஒதுக்கியிருக்கிறோம். நீங்கள் அம்மாவைப் பார்க்கலாம். அவரது செய்தியைக் கேட்கலாம். அதை வெளியிடலாம்.”

அம்மாவின் புகழ் இன்றைய கோடி வாட்ஸ் பிரகாசத்துடனில்லாமல் ஆயிரம் வாட்ஸ் ஜொலிப்புடன் தொடங்கியிருந்த நாட்கள். ஜொலிப்பு மிகக் குறைவான எண்ணிக்கையுள்ள மக்களைத்தான் எட்டியிருந்தது. ஊடக சகாயத்துடன் புகழின் வெளிச்சத்தை மேலும் சில வாட்ஸ்கள் அதிகப் படுத்த விரிவான முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன. அந்தத் திட்டத்தை ஒட்டியே இருவரும் வந்திருக்கிறார்கள். வருகையின் காரணம் புரிந்ததுமே அவர்களுக்கு உதவ முடியாது என்றும் விளங்கியது. நான் வேலை பார்த்துக் கொண்டிருப்பது பகுத்தறிவுப்பாசறையினரால் நடத்தப்படும் பத்திரிகையில். அதில் ஆன்மீக சங்கதிகளுக்கு இடமில்லை. தவிர எனக்கே அந்த விவகாரங்களில் நம்பிக்கையில்லை. சந்தேகங்களே அதிகம். எனவே பொதுவாக அதுபோன்ற ஆட்களைப் பற்றிப் பத்திரிகையில் எதுவும் வெளியிட நேரும் வாய்ப்பைத் தவிர்த்துக் கொள்ளவே பார்ப்பேன். அவர்களிடம் சொன்னேன்.

“நீங்கள் வந்தது பற்றி சந்தோஷம். ஆனால் இந்த விவகாரத்தில் என்னால் எதுவும் செய்ய முடியாது. மன்னிக்கவும். இந்தப் பத்திரிகையில் ஆன்மீக சமாச்சாரங்களோ பக்திக் கட்டுரைகளோ வெளியிடுவதில்லை. அதனால் உங்கள் அழைப்பை ஏற்க முடியாது”.

இரண்டு தாடிகளும் ஒன்றையொன்று வருடிக் கொள்ளும் நெருக்கத்தில் முகத்தை வைத்துக் கொண்டு இருவரும் மலையாளத்தில் பேசிக் கொண்டார்கள். தணிந்த குரல் பேச்சு எனக்குக் கேட்டது. அட்சரம்

பிசகாமல் விளங்கவும் செய்தது. ‘இந்த மனிதர் இப்படிச் சொல்கிறார், ஆனால் இதே பத்திரிகையில்தானே பறவைகளுடன் தேவலோக பாஷையில்பேசுவதாக புருடா விடுகிற சட்டை போடாத சாமியார்ப் பயலின் பேட்டி வந்தது. அதுவும் அட்டைப்படக் கட்டுரையாக. அதையும் இந்த ஆள்தானே எழுதியிருந்தான். இப்போது என்னவோ பகுத்தறிவு என்று பொய் சொல்லுகிறான். அந்தச் சாமியார் பெரிதாக எதையாவது கொடுத்திருப்பான். இவனும் வாங்கிக் கொண்டு எழுதி விட்டு நம்மிடம் சுத்தனாகக்  காட்டிக் கொள்ளுகிறான். இவனுடைய முதலாளிகள் வீட்டுப் பெண்கள் ரகசியமாகக் கோவிலுக்கும் சாமியார் மடங்களுக்கும் போவது நமக்குத் தெரியாதா என்ன?’

எனக்கு காது மடல்களில் நெருப்புப் பிடித்து உடல் நடுங்கியது. அடக்கிக் கொண்டு அவர்களைப் பார்த்துச் சிரித்தபடியே மலையாளத்தில் பதில் சொன்னேன்:

“நீங்கள் சொன்னது சரிதான். அந்தச் சாமியாரைச் சந்தித்துப் பேட்டி எடுத்தது நான் தான். அட்டைப் படம்போட்டு உள்ளே கலர்ப்படங்களுடன் கட்டுரையாக வெளியிட்டதும் நானேதான். ஆனால் அந்தக் கட்டுரையை நீங்கள் படித்திருக்க வேண்டும். அதற்காக வக்கீல் நோட்டிஸ் அனுப்ப விருப்பதாகச் சாமியார் சொல்லி இருக்கிறார்”.

கேட்டதும் அவர்கள் முகத்தில் மறுபடியும் புன்னகை மலர்ந்தது. முன்னை விட அதிக நேரமும் முன்னைவிட அதிகப் பிரியத்துடனும் மலர்ந்தது. ஆசுவாசச் சிரிப்பாக மாறியது.

“சார், மலையாளியா?” என்று விசாரித்தார்கள்.

“நான் தமிழ் நாட்டிலேயே பிறந்து தமிழ் பேசியே வளந்தவன். என்னை மலையாளி என்று எந்த மலையாளியும் ஒப்புக் கொள்வதில்லை.” என்றேன்.

“நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். உங்களைப் போன்றவர்கள் அம்மாவைப் பார்க்க வேண்டும். அம்மாவுக்கும் அது பிடிக்கும். நீங்கள் கட்டாயம் வர வேண்டும். மறுக்கக் கூடாது. நாளைக் காலை பதினோரு மணிக்கு எங்கே இருப்பீர்களோ அங்கே வந்து காரில் அழைத்துப் போகிறோம். காரிலேயே கொண்டு வந்து விடுகிறோம். வரவேண்டும். இல்லை வருகிறீர்கள். ஒருமுறை அம்மாவை தரிசித்தால் போதும். நீங்கள் மனது மாறிவிடுவீர்கள்” என்று எழுந்தார்கள்.

பதில் சொல்லத் தெரியாமல் விழித்தேன். பிறகு சுதாரித்துக் கொண்டு “வருகிறேன். ஆனால் அதைப் பற்றியெல்லாம் எழுத மாட்டேன்” என்றேன்.

“சார் வந்தால் போதும். மற்றதெல்லாம் தானாக நடக்கும்” என்று கை கூப்பினார்கள். நானும் பதில் வணக்கம் செய்து அறையை விட்டு வெளியேறுபவர்களின் பின் தோளில் அலைபாய்ந்து கொண்டிருந்த கூந்தலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு நீளமான முடி.

காட்சி - 2

மறுநாள்  காலை மணி பதினொன்றரை. நான் அலுவலகத்துக்கு வருவதற்கு முன்பே கார் வந்து காத்திருந்தது. சக அலுவலக நண்பர்களிடம் சொல்லி விட்டு ஏறிக் கொண்டேன். காரின் முன் கண்ணாடியில் அம்மாவின் படம் போட்ட ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது.  காருக்குள்ளே இருந்து பார்த்த போது இட வலமாகத் தெரிந்த அதேபோஸில் அம்மாவின்  சின்னப் படம் காரில் டாஷ்போர்டிலும் சின்ன பிளாஸ்டிக் பிரேமுடன் வைக்கப்பட்டிருந்தது. காரில் ஓட்டுநரும் நானும் மட்டுமே. மடத்தைச் சேர்ந்த காரா என்று விசாரித்தேன். இல்லை, ஒரு திரையுலகத் தம்பதியின் கார் என்று ஓட்டுநர் பதில் சொன்னார். எனக்கும் அவர்களைத் தெரிந்திருந்தது. கணவர் பாடகராகவும் நடிகராகவும் இருப்பவர். மனைவி நடிகை. இருவரும் அம்மாவின் அணுக்கத் தொண்டர்கள். பாடகர் அம்மாவின் மகிமையைப் போற்றும் பாடல்களைப் பாடி கேசட் டாகவும் வெளியிட்டிருந்தார். அலுவலகத்திலிலிருந்து தொடங்கிய ஆன்மீகப் பயணம் பத்துப் பதினைந்து நிமிடங்களில் சந்நிதான வாசலில் பூர்த்தியானது. முந்தைய நாள் பார்க்க வந்த இருவரும் புன்னகையுடன் காத்திருந்தார்கள்.

அதிகாலையில் தொடங்கிய தரிசனத்துக்காக முன் இரவிலிருந்தே வரிசையில் நின்றிருந்த பக்தர்களைத் தாண்டி அழைத்துச் சென்று அம்மா முன்னால் நிறுத்தினார்கள். திரையுலக, அரசியல், சமூகப் பிரபலங்கள் சிலரும் மேடைமேல் கைகட்டி நின்றிருந்தார்கள். வரிசையாக மேடையேறி வந்த ஒவ்வொரு பக்த புருஷனையும் பக்த ஸ்திரீயையும் அம்மா கட்டியணைத்து மலர்ந்த முகத்துடன் ஏதோ விசாரிப்பதும் அணைப்புக்குள்ளிருந்தவர்கள் சிலிர்ப்புடனும் ஆனந்தக் கண்ணீருடனும் உருகுவதையும் பார்த்துக் கொண்டிருந்தேன். சிலருக்கு அம்மாவை நெருங்கும் முன்பே கண்ணீர் பொங்குவதை ஆச்சரியத்துடன் கவனித்தேன். பொது தரிசனத்தின் சின்ன இடைவேளையில் அம்மா பிரமுகர்களுக்கு ஆசி வழங்கினார். தன்னை விடவும் வயது முதிர்ந்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை அம்மா அணைத்துக் கொண்டபோது அதுவரை மனதுக்குள் தெரிந்து கொண்டிருந்த  கன்றை வருடும் தாய்ப்பசுவின் படம் சிங்கத்தின் பிடியில் சிக்கிய பசுவின் படமாக மாறியது. தலை உலுக்கிக் கொண்டு பார்த்தபோது போலீஸ் சிங்கம் கைகளைக் கட்டிக் கொண்டு பவ்வியமாக விலகி நின்றிருந்தது. என்னை அழைத்து வந்தவர்கள் அம்மாவின் காதருகே குசுகுசுத்தார்கள். அம்மா புன்னகையுடன் என்னைப் பார்த்தார். நெருங்கிப் போனதும் என் தலையைப் பற்றி அவர் தோள்மீது சாய்த்துக் கொண்டார். காதருகே “.... பத்திரிகையா? மலையாளியா?” என்று கேட்டார். “இல்லை, தமிழ்தான்” என்று முனகினேன்.

அவருடைய முக்காட்டின் மொடமொடப்பு காதில் உரசியது. “நன்றாக வருவாய்” என்று தலையை வருடினார். நான் விடுபட்டு நகர்ந்தேன். இருவரும் கூட வந்தார்கள். காரில் ஏறும் முன்பு ஒரு ரெக்சீன் பையை பிரசாதம்போல நீட்டினார்கள். ஜனத் திரளின் மத்தியில் வேறெதுவும் பேச முடியாத இக்கட்டு. தயக்கத்துடன் வாங்கிக் கொண்டேன்.

“சாருக்கு எழுதுவதற்கானது எல்லாம் இதற்குள் இருக்கின்றன. இந்தக் கார்டை வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது சந்தேகமிருந்தால் தாராளமாக அழைத்துக் கேட்கலாம். ஆனால் அதற்குத் தேவையிருக்காது.அம்மாவின் தரிசன அனுபவம் உங்களை மாற்றியிருக்கும்” என்றார்கள். இத்தனை வயசுக்கால நன்மையையும் தீமையையும் ஒரு நிமிட ஆன்மீக ஸ்பரிசம் மாற்றி விடாது என்று தோன்றியது. ஏதோ அறியாப் பிள்ளையிடம் சொல்லுவதுபோல ஒரு பத்திரிகையாளனிடம் சொல்லுகிறார்களே என்று கோபம் வந்தது.

“முன்பே சொன்னேன் , நான் எழுத மாட்டேன். ஆனால் ஒரு சந்தேகத்துக்கு மட்டும் பதில் தெரிந்தால் நல்லது” என்றேன். “கேளுங்கள் சார்” என்றார்கள். கேட்டதும் முகத்திலிருந்த சிரிப்பு இருண்டது. டிரைவரிடம் வண்டியை எடுக்கச் சொல்லி விட்டு விறைப்பான கும்பிடுபோட்டு விட்டு நிற்காமல் கூட்டத்துக்குள் கரைந்தார்கள்.

காட்சி - 3

காரில் அலுவலகம் திரும்பிக் கொண்டிருந்தபோது பையைத் திறந்து பார்த்தேன். அம்மாவின் படம். பாடக பக்தர் பாடிய அம்மா துதிப்பாடல் காசெட்.  அம்மாவைப் பற்றி வெளிநாட்டுப் பக்தர் எழுதிய அனுபவக் குறிப்பு நூலின் பிரதி. அம்மாவின் தலைமையகத்தைப் பற்றியும் சேவைகளைப் பற்றியும் தயாரிக்கப் பட்ட கையேடு. அம்மாவின் திருவுருப் பதித்த ஒரு வெள்ளி டாலர். கூடவே ஒரு உறை எல்லாம் இருந்தன. உறையைப் பிரித்தேன். புது நூறு ரூபாய்த் தாள்கள் சில இருந்தன. அவமானமாகவும் தர்ம சங்கடமாகவும் உணர்ந்தேன். அந்தப் பொருட்களை என்ன செய்யலாம் என்று குழப்பமாக யோசித்தேன். குழப்பத்தை மாற்றிக் கொள்ள ஓட்டுநரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர் தம்பதிகளின்  நிரந்தரக் காரோட்டியல்ல. சுற்றுலா ஊர்தி ஓட்டுபவர்.

நடிகையின் சிபாரிசில் ஓரிரு சினிமாக்களில் காரோட்டியாகவே நடித்திருக்கிறார். அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோதே பிரசாதப் பொருட்களை என்ன செய்யலாம் என்ற குழப்பத்துக்கு முடிவு கிடைத்தது. அலுவலகம் வந்து காரை விட்டு இறங்கும் முன்பு புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டேன். அம்மா படம் போட்ட ரெக்சீன் பையை ஓட்டுநரிடம் கொடுத்தேன். “இதை நீங்க வெச்சுக்குங்க” என்று நீட்டிய பையைப் பிரித்துப் பார்த்தவர் “துட்டுக் கீதே சார்” என்றார். “வேணும்னா நீங்க வெச்சுக்குங்க. இல்லேன்னா அந்த மடத்து உண்டியல்லேயே போட்ருங்க” என்றேன். அவர் விழித்தார். “உங்க பேர்?”  என்று கேட்டேன்.

“இங்கர் சார் ”  அப்படி ஒரு பெயரா?

 “முளுப் பேரு இங்கர்சால் சார்” என்றார்.

காட்சி - 4

அம்மாவைத் தரிசித்து விட்டு வந்த பிறகு பத்திரிகையின் இரண்டு வாரத்து  இதழ்கள் வெளிவந்து முடிந்திருந்தன. அம்மாவின் பக்தர்களான சினிமாத் தம்பதியரின் மக்கள் தொடர்பாளர் அலுவலகம் வந்தார். அவரும் அம்மாவின் தொண்டர். அம்மாவைப் பற்றிய கட்டுரை வருமா வராதா என்று விசாரித்தார். ‘ஆப்டர் ஆல்’ ஒரு பிஆர் ஓ நம்மைக் கேள்வி கேட்பதா என்ற பத்திரிகையாளக் கோபம் படமெடுத்து ஆடியது. “நான் எழுத மாட்டேன்னு சொல்லிட்டுதானேங்க அங்கே போனேன். அப்புறம் என்ன கேள்வி?” என்று எகிறினேன். அவர் தணிந்தார். “அதில்ல சார், சின்னதா ஒரு மேட்டர் போட்டாலும் போதும்” என்றார். “பாருங்க, நான் இந்தப் பத்திரிகையில எவ்வளவு நாள் இருப்பேன்னு தெரியாது. ஆனா நான் இருக்குறவரைக்கும் அந்த மாதிரி விஷயத்தைப் போட மாட்டேன்கிறது மட்டும் நல்லாத் தெரியும்” என்றேன். அவருக்கும் ரோஷம் பொத்துக் கொண்டது.

“அதத்தான் சார் நானும் சொல்றேன். நீ வேணும்னாப் பாரு, இதே பத்திரிகையில அம்மாவோட கட்டுரையைக் கேட்டு வாங்கிப் போட வெக்கிறேன்” என்றார். அவர் சட்டைப் பையில் சொருகியிருந்த பேனாவின் கிளிப்பில் வட்ட வடிவில் இருந்த சின்ன  டாலரிலிருந்த அம்மாவின் படம் என்னைப் பார்த்துச் சிரிப்பதாகத் தோன்றியது.

விடுபட்ட ஒரு காட்சி

இது நடந்து சரியாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் நிறுவனமே ஒரு மலையாளத் தொலைக்காட்சியையும் தொடங்கியது. நான் அதன் தலைமைச் செய்தி ஆசிரியராக ஆனேன். அம்மாவின் புகழின் வெளிச்சம் பல கோடி வாட்ஸாகப் பேரொளியுடன் உலகம் முழுவதும் பரவியிருந்தது. அந்தச் சமயத்தில் வந்த பொன்விழாவில் பிரதமர், குடியரசுத் தலைவர் கலந்து கொண்ட நாட்களைத் தவிர விழா நடந்த ஒரு வார காலத்து நிகழ்ச்சியை படம் பிடிக்கவோ ஒளிபரப்பவோ நான் முயற்சி செய்யவில்லை. ஊடகம் மாறினாலும் பகுத்தறிவுப் பாசறையை

சேர்ந்ததுதானே அதுவும் என்பதால் அந்த நிலையைக் கடைப்பிடித்தேன். அதுவும் அவர்களுக்கு வெறுப்பேற்றியது என்பது அப்போது புரியவில்லை. வேலை செய்து கொண்டிருந்த தொலைக் காட்சியில் தொடர முடியாத சிக்கல் வந்தபோது இன்னொரு தொலைக்காட்சியில் பணிபுரியும் வாய்ப்பு தட்டுப்பட்டது. புரட்சிக்-காரரான ஒரு செய்தியாளர்தான் அந்த இன்னொரு தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர். அவர் அழைப்பின் பேரில் சென்று பார்த்து வேலைக்கு உத்தரவாதம் பெற்றேன். அதைக் கொண்டாடப் புரட்சிக்காரரான செய்தி ஆசிரியர் நட்சத்திர ஓட்டலில் பகல் விருந்துக்கும் அழைத்தார். விருந்துக்கு வந்த தொலைக் காட்சி நிர்வாகக் குழுத் தலைவரை ஓட்டல் வராந்தாவில்  பார்த்ததும் இரண்டு உண்மைகள் புலப்பட்டன. அந்த வேலை கிடைக்காது. அன்றைக்கு மதியானச் சோறு கிடையாது.

வராந்தாவில் இருந்தபோது நிர்வாகக் குழுத் தலைவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார்கள். துல்லியமான ஆங்கில உச்சரிப்பில் அவர் சொன்னார்; “சாருக்கு என்னை ஞாபகம் இல்லாமலிருக்கலாம். எனக்கு மறக்கவில்லை. பல வருடங்களுக்கு முன்பே சந்தித்திருக்கிறோம்”. முதல் காட்சியில் பார்த்தபோது அவருக்கு இருந்ததை விடத் தாடியும் கூந்தலும் குறைக்கப்பட்டும் நரையோடியுமிருந்தது. உடன் வந்த இன்னொரு சுவாமியை அனுப்பிக் காரிலிருந்து ஒரு புத்தகத்தைக் கொண்டு வரச் செய்தார். அதை வாங்கி என்னிடம் காட்டினார். தமிழ்ப் பத்திரிகை. அதில் அம்மா வாராவாரம் அருளிய உபதேசங்களின் தொகுப்பு. அது நான் வேலை பார்த்த அதே பத்திரிகை!  

ஜூலை, 2013.