எங்கள் வீட்டு வாசலில் ராணுவ யூனிஃபார்மில் நின்ற மாணிக்கத்தை ஆச்சரியத்துடன் நாங்கள் எல்லோரும் பார்த்தோம். எட்டு மாசத்துக்கு முன்னால் எங்கள் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த மாணிக்கம் திடீரென்று “வாரு’க்கு போய் சேர்ந்துவிட்டான். இரண்டாம் உலகப் போரை எங்கள் ஊரில் “வாரு” என்றுதான் கூறுவார்கள்.
வானம் பார்த்த பஞ்சப் பிரதேசமான வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்த எங்கள் ஊரில் பலர், என்னைத் தூக்கிக் கொண்டு ஊர் சுற்றிய சண்முகம் உள்பட, “வாரு”க்கு போய் விட்டார்கள். எங்கோ பர்மாவிலும் சிங்கப்பூரிலும் நடந்த “வாரு” தூரத்து இடி முழக்கமாக இல்லாமல் எங்கள் சிற்றூரின் சாதாரண மக்களின் வாழ்வில் சில தாக்கங்களை ஏற்படுத்தியது.
மாணிக்கம் அந்தக் காலத்து ராணுவ உடையான காக்கி தலைப்பா, காக்கி சட்டை, அரை நிஜாரும் கஞ்சி போட்டு விரைத்து நிற்க பூட்ஸ் போட்ட காலுடன் கம்பீரமாக நின்றது ஏழு வயசான என்னை மிகவும் கவர்ந்தது. “ஏம்பா, எப்படி மில்ட்ரில சேர்ந்தே?” என்ற என் கேள்வியைக் கேட்டு மாணிக்கம் சிரித்தான். “தம்பி, கோட்டை மைதானத்தில வெள்ளைக்கார ஆபீசர் நொண்டிக்கினே வந்தாரு, அங்க லைனா எல்லாரையும் நிக்க சொல்லி. எங்க உள் கையத் தடவிப் பார்த்தாரு. யாருக்கு கை மொற மொறப்பா இருந்திச்சோ அவனல்லாம் ‘பர்த்தி’ ஆயிட்டான்,” என்று மாணிக்கம் சொன்னதும் நான் என் உள்ளங்கையைத் தடவிப் பார்த்தேன்.
அதைப் பார்த்த மாணிக்கம் சிரித்தான். “நீ போனா எடுக்கமாட்டான். உனக்கு வயசாவல. கை மொற மொறனு இருக்கணும்” நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, குய்யோ முறையோ என அலறிக் கொண்டு மாணிக்கத்தின் தாயார் மூச்சிரைக்க ஓடி வந்தாள். வந்தவள் என் தாயாரின் காலில் விழாத குறையாக, “ஐயோ தாயி என்னாத்த சொல்லுவேன், இந்த படுபாவிப் பய, இரணியா (ஹெர்னியா) விழாதிக்காரன் (எங்கள் ஊர் பேச்சில் ‘வியாதி’ விழாதியாக உருமாறிப் போகும்) மில்ட்ரில சேர்ந்துட்டான். அவனுக்கு ஐயாதான் வைத்தியம் பண்ணாரு. அவன் மிலிட்ரில செத்துடுவாம்மா, நீதான் ஐயாவாண்ட சொல்லி மில்ட்ரிலேந்து அவனை எடுத்துக் கொடு தாயி” என்று புலம்பினாள். அதன்படி என் தகப்பனார் ராணுவ அதிகாரிகளிடம் மாணிக்கத்தின் ‘விழாதி’யை எடுத்துச் சொல்லி ராணுவத்திலிருந்து விடுவித்தார்.
எங்கள் சித்தப்பா ஏற்கனவே இந்திய கடற் படையில் ஆபீசராக கட்டாய சேவையில் இருந்ததால், நாங்கள் எல்லோரும் இரண்டாம் உலகப் போரின் போக்கை உன்னிப்பாக கவனித்து வந்தோம். தினமும் காலையில் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் போது பிள்ளைகளைக் கூட்டி, தலைமை ஆசிரியர் நடேச ஐயர் “இந்திய ராணுவம் இன்று வெற்றிகரமாக ரங்கூனிலிருந்து (அல்லது ப்ரோம், பெகு என்று பெயர் தெரியாத ஊர்களிலிருந்து) பின்வாங்கியது’ என்று ஜப்பானியரிடம் அடிபட்டு ஓடுவது பெரிய சாகசம்போல விளக்குவார்.
ஏழு வயசில் கூட எனக்கு அவர் பேசியதைக் கேட்டு சிரிக்கத் தோன்றும். எங்களைப் பொறுத்தவரை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்தான் ஹீரோ. அவர் இந்திய தேசிய ராணுவத்தைத் துவக்கி, ஜப்பானியருடன் சேர்ந்து பிரிட்டிஷ் ராணுத்தை எதிர்த்தது பிடித்திருந்தது. ஆனால் தலைமை ஆசிரியர் தன்னை ஜார்ஜ் மன்னரின் பிரதிநிதி என்று நினைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தார். ஆகவே மௌனமாகப் போர் செய்திகளை கேட்போம்..
எங்கள் ஊர் பொது வெளிகளில் ராணுவத்தினர் பயிற்சிக்காக அடிக்கடி தங்குவார்கள். அவர்களில் பல வெள்ளையரும் இருந்தார்கள். நாங்கள் பள்ளிக்குப் போகும் போது வழியில் வெள்ளைக்கார சிப்பாய்களையும் அவர்களது ராட்சத லாரிகளையும் நாங்கள் வேடிக்கை பார்ப்போம். ஒரு முறை அவர்களில் ஒருவன் எங்களைக் கூப்பிட்டு இங்கிலீஷ் பாட புத்தகத்தை வாங்கி படிக்கச் சொன்னான். எல்லோரும் பயந்து நடுங்கினாலும், நான் அதைத் திக்கித் திணறிப் படிக்க அவன் எனக்கு ஒரு கைப்பிடி சாக்லேட் தந்தான். என்னுடன் வந்த ராதாமாதவன் அதுவரை சாக்லேட்டைப் பார்த்ததே இல்லை. அதைத் தின்று அனுபவித்தவன் அன்று முழுவதும் சாக்லேட்டில் முட்டை போடுவாங்களா என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் திண்டாடினான். அங்கு நின்ற பெரிய டேங்கர் லாரிகள் வெள்ளைக்காரர்கள் குடிக்க பியர் நிரப்பியவை என்று நாங்கள் எல்லோரும் நம்பினோம்.
எங்கள் ஊர் வெங்குபதி பில்டிங்கில் போர்முனைப் படைகளுக்கு ராணுவ காக்கி சீருடைகளைத் தைத்து அனுப்ப ஓயாமல் தையல் யந்திரங்கள் இயங்கின. வங்காளத்தில் அரிசி விளைச்சலை முழுமையாக அரசு கையகப்படுத்தி ராணுவத்திற்கு அனுப்ப, பல லட்சம் மக்கள் பட்டினியில் இறந்த செய்தி இருட்டடிப்பு செய்யப்பட்டது. எப்போதுமே போதிய விளைச்சல் இல்லாத எங்கள் ஊரில்கூட கட்டாயக் கொள்முதலால் உணவுப் பொருட்களுக்கு பயங்கர தட்டுப்பாடு ஏற்பட்டது. காப்பிக்கு பதிலாக ராகிக் காப்பி அவதரித்தது. சர்க்கரை இறக்குமதி முற்றிலுமாக தவிர்க்கப்பட்டதால் வெல்லக் காப்பியை குடித்தோம். அரிசிக்கு பதிலாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட உலர்த்தப் பட்ட உருளைக் கிழங்குத் துருவல்கள் விற்பனைக்கு வந்தன.
எங்கள் வீட்டில் தினசரி இரவு ஒன்பது மணிக்கு என் தாயார் ரகசியமாக நேதாஜியின் ஆசாத் ஹிந்த் தேசிய ராணுவத்தின் தமிழ் ரேடியோ ஒலிபரப்பைக் கேட்பாள். ரேடியோ பாங்காக் அலைவரிசையில் “இந்திய தேசிய ராணுவத்தின் தமிழ் ஒலி பரப்பு” என்று கம்பீரக் குரலில் தமிழில் போர் செய்திகள் படிப்பார்கள். சில சமயம் நேதாஜியின் மேடைப் பேச்சுகளையும் ஒலி பரப்புவார்கள். அந்த ஒலிபரப்பைக் கேட்க அரசு தடை விதித்திருந்ததால் அதை திருட்டுத்தனமாகக் கேட்பதில் எனக்கு ஒரு ஆனந்தம் இருந்தது.
காந்திஜியின் சத்தியாக்கிரகப் போரில் பங்கு பெற்று சிறை சென்ற என் தகப்பனார்கூட ஒரு காலகட்டத்தில் இந்திய தேசிய ராணுவத்தில் தானும் சேரலாமா என்று யோசித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னையும் எனது அண்ணனையும் அவர் ஒரு நாள் கூப்பிட்டு “நான் மிலிட்ரில சேர்ந்தா நீங்க என்ன பண்ணுவீங்க?” என்ற விசித்திரமான கேள்வியைக் கேட்டிருக்க மாட்டார். ஏனெனில் காந்தியவாதியான அவர், பிரிட்டிஷ் இந்திய ராணுவத்துக்குத் துணை போகும் வாய்ப்பே இல்லை. அவர் உயிருடன் இருந்த போது இதற்கு விளக்கம் கேட்கத் தோன்றவில்லை.
ஹீரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மீது அமெரிக்க விமானங்கள் அணு குண்டு வீசித் தாக்கி பல்லாயிரம் சாதாரண மக்களை சாம்பலாக்கிய சம்பவத்தை காலைச் செய்தியில் தலைமை ஆசிரியர் வெற்றிக் குரலுடன் சொன்னது நினைவில் இருக்கிறது. சில நாட்களுக்குப் பிறகு ஜப்பானியர் சரணடைந்தார்கள். எங்கள் ஊரின் சில முக்கிய புள்ளிகள் கோட்டை மைதானத்தில் கூடி ஜார்ஜ் மன்னர் படத்தை அலங்கரித்து வைத்து கும்பிட்டு, வெற்றி விழா எடுத்து வாழ்க வாழ்கவே ஜார்ஜ் மன்னர் வாழ்கவே என்று புகழ் பாடினார்கள். அதைக் கண்டு வெட்கிய நான் எங்கள் ஊர் பெரிசுகள் மீது தீராத வெறுப்புக் கொண்டேன்.
போருக்குப் பிறகு என் வகுப்பில் படித்து வந்த மறைந்த ராணுவத்தினரின் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்களுக்கு ஆண்டுக்கு நாலரை ரூபாய் கல்வி உதவித்தொகை சரியான காலத்தில் அரசு வழங்கவில்லை. அரசின் அந்த மெத்தனம் இன்னமும் மாறவில்லை!
மே, 2016.