தனா 
சிறப்புக்கட்டுரைகள்

“தூக்கமுடியாத அளவுக்கு புத்தகம் வாங்கினார் மணி சார்!”

நேர்காணல் : தனா

வாசுகி

விக்ரம் பிரபு, சரத்குமார் நடிப்பில் உருவாகிவரும்  ‘வானம் கொட்டட்டும்' திரைப்படத்தின் இயக்குநர் தனாவை அந்திமழைக்காக சந்தித்தோம்.

''சின்ன வயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள்  இருந்தது. நான் அசத்தலாக நடிப்பேன் என்று ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையும் இருந்தது.  ஆனால்  பள்ளியில் நடைபெற்ற நாடகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை. என்னடா இது இப்படி நடந்துவிட்டதே என்று வருந்தியபோது. பெண் வேடம்தான் இருக்கிறது என்றார்கள். எனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டுமே இருந்ததால் பெண் வேடத்தில் நடித்தேன். நான் ஏற்று நடத்த கதாபாத்திரம்
'காஞ்சனா'. பின் நாட்களில் இந்த பெயரை வைத்தே நண்பர்கள் கேலி செய்தனர்.  நான் கல்லூரி படிப்பு முடித்து இணையதள வடிவமைப்பாளராக  வேலை செய்தபோது எனது பெரியப்பாவின் மகன் மூலமாக ஞாநி எனக்கு அறிமுகமானார்.

அவர் நடத்தி வந்த பரிக்‌ஷா நாடகக் குழுவில் சேர்ந்தேன். எங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது ஒன்றாக இணைந்து நாடகம் அரங்கேற்றுவோம். இப்படியாக ஒரு மூன்று வருடங்கள் நகர்ந்தது.

நடிப்பை போல்தான் இலக்கிய வாசிப்பையும்
நேசித்தேன். என்னை இலக்கிய  வாசகனாக்கியதில் அம்மாவிற்கு பெரும் பங்கு உண்டு. அம்மா  எப்போதும் வாசித்துகொண்டே இருப்பார். நூலகத்திற்கு செல்லும் பழக்கம் அம்மாவிற்கு இருந்தது. வீட்டின் அலமாரியில் பொன்னியின் செல்வன், கடல் புறா, சிவகாமியின் சபதம் என்று நிறைய புத்தகங்கள் இருக்கும்.

பொன்னியின் செல்வனில் தொடங்கிய வாசிப்பு ராஜேஷ்குமார், சுஜாதா எழுதிய நாவல்களுக்கு
சென்றது. தொடர்ந்து ஜெயமோகனை

சென்றடைந்தேன். அவர் எழுதிய 'பின் தொடரும் நிழலின் குரல்' என்னை அதிகமாக பாதித்தது. மூன்று மாதங்களுக்கு மேலாக அந்த பாதிப்பிலிருந்து என்னால் வெளிவர முடியவில்லை. ஏன் இவர் இவ்வளவும் அழுத்தமாக எழுதுகிறார் என்றுகூட தோன்றியது.

அப்போதுதான் அவரின் இணையதள பக்கம் இருப்பது தெரியவந்தது. வேலைக்கு அலுவலகம்  சென்றதும்  முதலில் அவர் இணையதளப் பக்கத்திற்கு சென்று படிப்பதுதான் என் முதல் வேலையாக இருந்தது.

அவரின் காடு, ரப்பர், கன்னியாகுமரி என்று தேடித் தேடி படித்தேன். மின்னஞ்சல் வழியாக எனது கருத்தை வாசகனாக பகிர்ந்துகொண்டேன். அவரும் அதற்கு பதில் அனுப்பினார். இப்படியாக பல மாதங்கள் சென்றது.

ஜெயமோகன் அவர்களுக்கு பயணம் பிடிக்கும் என்பதால் மேகமலைக்கு அவரை அழைத்து செல்ல வேண்டும் என்று தோன்றியது. அவரும் சரி வருகிறேன் என்றார். அந்த பயணத்திற்கு பிறகு அவருடனான  நட்பு மேலும் அதிகமானது.

நான் இளங்கலை கணினி அறிவியல் படிக்கும்போதிலிருந்து மணிரத்னம் படத்தின் மீதும் அவரின் மீதும் தீரா பற்றுதல் ஏற்பட்டது.  அவரை சந்திக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாக இருந்தது. எனது வாழ்க்கையை மாற்றும் சந்திப்புகள் எல்லாம் புத்தகத் திருவிழாவில் நடந்தது என்றே கூறலாம்.

ஒரு நாள் இயக்குநர் மணிரத்னத்தை புத்தகத் திருவிழாவின்போது பார்த்தேன். ஜெயமோகனும் அவரும் பேசிக் கொண்டிருந்தனர். அவசர வேலையால் ஜெயமோகன் பிஸியாகிவிட்டார். அப்போது மணி சாரிடம் பேச நேரம் கிடைத்தது.  இலக்கியத்தைப் பற்றி அவரிடம் பேசிக்கொண்டே இருந்தேன். எல்லா புத்தக ஸ்டாலுக்கும் சென்று 'இதை வாங்குங்கள் சார்' என்பேன். ஏன் அந்த புத்தகம் வாங்க வேண்டும் என்பதையும் விளக்குவேன். அவரும் பதில் ஏதும் கூறாமல் சிரித்துக்கொண்டே புத்தகங்களை வாங்கிக்கொண்டார். ஒரு கட்டத்திற்கு மேல் அவர் வாங்கிய புத்தகத்தை இருவராலும் சுமக்க முடியவில்லை.  

மணிசார் படங்களில் எது பிடித்தமான படம் என்று கேட்டால் எல்லாம் என்றுதான் சொல்ல வேண்டும். அவரின் இருவர் திரைப்படம் 'ஒரு பாடம்' என்றுதான் கூறுவேன். சினிமாவைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் இருவர் திரைப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். எப்படி கூட்டத்தை கையாள்வது, கேமிராவின் கோணங்கள், நடிகர்களின் உடை என்று சினிமாவின் நுணுக்கங்களை இதிலிருந்து கற்ற முடியும்.ஜெயமோகன் அவர்களை மணி சார் அலுவலகத்திற்கு சில முறை அழைத்துச் சென்றிருக்கிறேன். 2011 ஆம் ஆண்டு பொன்னியின்
செல்வன் படம் தொடங்கப் போவதாக மணிசார் முடிவு செய்தபின், வசனங்கள் எழுத ஜெயமோகன் அவரின் அலுவலகத்திற்கு செல்வார். அப்போது மணிசார் துணை இயக்குநர் வேண்டும் என்று ஜெயமோகனிடம் கூறியிருக்கிறார். என்னிடம்கூட ஜெயமோகன்  கேட்கவில்லை. 'ஏன் நீங்கள் தனாவை சேர்த்துக் கொள்ள கூடாது' என்று மணிசாரிடம் ஜெயமோகன்  கூறியிருக்கிறார். அதற்கு மணிசார் ' எனக்கு ஓகேதான். ஆனால் இங்கே சாப்ட்வேர் துறைபோல் சொகுசாக இருக்க முடியாது. கடினமாக உழைக்க வேண்டும். அதற்கு அவன் தயார் என்றால் எனக்கு எந்த சிக்கலும் இல்லை' என்று கூறியிருக்கிறார். ஜெயமோகன் எனது தொலைபேசி எண்ணை அவருக்கு கொடுக்க மணி சார் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். எனக்கு அந்த குறுச்செய்தி வந்தபோது 'பை மணி' (BY MANI) என்றிருந்தது. முதலில் அது மணி சார் என்று எனக்கு தெரியவில்லை. ஏதோ ஒரு  கம்பெனியின் எச்ஆர் என்றுதான் நினைத்தேன். அதன்பிறகு ஜெயமோகன் சாரிடம் பேசியபோதுதான் தெரிந்தது அது மணிசார் என்று. அடுத்த நாளே அவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்து கொண்டேன். பணியை விட்டு செல்கிறேன் என்றுகூட எனது நிறுவனத்திற்கு  நான் மின்னஞ்சல் அனுப்பவில்லை. 'வானம் கொட்டுவதுபோல்' சில தருணங்கள் நம்மீது கொட்டும் அதை அப்படியே பிடித்துக் கொள்ள வேண்டும். கேமிரா, லென்ஸ், பட இயக்கம்,  ஆடை வடிவமைப்பு, இப்படி எல்லாவற்றையும் அவர்தான் எனக்கு சொல்லிக்கொடுத்தார். ஒரு பள்ளிக்கு செல்லும் மாணவனைப்போல் கற்றுகொள்ள தொடங்கினேன்.

கடல் படத்தில் துணை இயக்குநராக பணியாற்றியதும், மணிசார் என்னை அழைத்து தனியாக படம் செய் என்றார். ஆனால் நான் மாட்டேன் என்றேன். இன்னும் கற்க வேண்டியது இருக்கிறது என்றேன். தொடர்ந்து ஓகே கண்மணி படத்திலும் வேலை செய்தேன். ஓகே கண்மணி படப்பிடிப்பின் இறுதி நாளில் 'ஒழுங்கா ஒரு படம் பண்ணு' என்றார்.

தொடர்ந்து கதை எழுதினேன். 'காதலுடன் சேர்ந்த த்ரில்லர் வகையிலான கதையை எழுதி சாரிடம் காண்பித்தேன். கதை நன்றாக இருக்கிறது. ஆனால் இதுபோன்ற நகர கலாச்சாரங்களை எப்போது வேண்டுமானாலும் படமாக்கலாம். நீ தென் தமிழகத்திலிருந்து வந்தவன்.
அம் மண்ணைப் பற்றிய கதை எழுதலாமே என்றார். அப்போதுதான் படைவீரன் படத்தின் கதை உருவானது. பால்ய பருவத்தில் எங்கள் ஊர் சின்னமனூரில் நடைபெற்ற சாதிக்கலவரம் என்னை அதிகமாக பாதித்தது. அந்த பாதிப்பிலிருந்து உருவாக்கப்பட்ட கதையே படைவீரன். இந்த கலவரம் நடந்தபிறகுதான் ஊர் எப்படிசாதியாக இருக்கிறது என்று புரிந்தது. அனைவரும் மற்றவர்களின் சாதியை தெரிந்துகொண்ட பிறகுதான் பழகவே தொடங்குகின்றனர் என்பதும் புரிந்தது. சாதி கலவரத்திற்கு ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும்தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது.

எல்லா சமூகத்தை சேர்ந்தவர்களும் சாதிப் பெருமையை தூக்கிப்பிடிகின்றனர். கலவரம் நடைபெற்ற போது சுமார் ஒன்றரை மாதம் வெளியே செல்ல முடியவில்லை. அதையே படமாக்கினேன்.

படைவீரன் படம் எனக்கு பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு படத்தை எடுப்பதோ அதை தயாரிப்பதோ எளிமையான விஷயம்தான் ஆனால் அதை திரையிடுவதில், மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிக்கல் இருக்கிறது. படம் வெற்றியடைய வேண்டும் என்றால் மூன்று விஷயங்கள் மிகவும் முக்கியம். முதலாவது படத்தின் இயக்குநர் மீது  மக்களுக்கு  எதிர்பார்ப்பு இருக்க வேண்டும். இரண்டாவது, நடிக்கும் நடிகர்கள் மக்கள் மனதிற்கு நெருக்கமானவர்களாக இருக்க வேண்டும். மூன்றாவது, பிரபலமான தயாரிப்பு நிறுவனம் நமது படத்தை தயாரிக்க வேண்டும். இதில் எதுவும் இல்லை என்றால் 'நீங்கள் தலை சிறந்த கதையை படமாக  எடுத்தாலும் அது நஷ்டத்தைத்தான் தரும். மேலும் ஒரு திரைப்படம் வெளியாகாமல் போவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கிறது. இந்த படிப்பினைகளை படைவீரன் திரைப்படம் கற்றுக்கொடுத்தது. படம் சரியாக செல்லவில்லை என்ற மனவலியிலிருந்து மீள எனக்கு மணி சாரும், ஜெயமோகனும் உதவினர்.

ஜெயமோகன் கதையை 'தேகி' என்ற கன்னடப் படமாக நான் இயக்கினேன். அது கலைப்படம் என்பதால், அத்திரைப்படத்தை இயக்குவது
சவாலாக இருந்தது. இதைத்தொடர்ந்து 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தில் சில நாட்கள் வேலை செய்தேன். 

 வானம் கொட்டட்டும் படத்தின் கதையை மணி சாருக்காகத்தான் எழுதினேன். ஆனால் அவர் என்னை இயக்க சொல்லிவிட்டார். தயாரிப்பை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. மெட்ராஸ் டாக்கீஸ் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறது.  இப்போதும் மணி
சார்தான் என்னோடு இருக்கிறார். ஜனவரியில் திரைப்படம் வெளியாகும்,'' என்று முடிக்கிறார் தனா.