சிறப்புக்கட்டுரைகள்

’’தூக்க வியாதியின் அடுத்த பக்கம் சோகமானது''

இரா. கௌதமன்

டாக்டர் விஜயகிருஷ்ணன் பிரபல காது, மூக்கு,தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை ஈ.என்.டி ரிசர்ச் பவுண்டேசனிலுள்ள  தூக்க ஆராய்ச்சி மையத்தின் தலைவர். ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள அவருடைய மருத்துவ மையத்தில் சென்னை தூங்க செல்லும் இரவில் அந்திமழைக்காக சந்தித்தோம். “இரவில் தூக்கமின்மை,வேலை நேரத்தில் தூங்கி வழிவது போன்றவை தூக்க வியாதிக்கான அறிகுறிகள்.இதனை சரியான நேரத்தில் கண்டறிந்து சரிசெய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும்” என்கிறார் அவர்.

இன்றைய நம்முடைய வாழ்கை முறை தூக்கத்தை எந்த அளவிற்கு பாதிக்கிறது?

சரியான முறையில் சொல்லவேண்டுமென்றால் இரவு 8 மணிக்கு சாப்பாடு,10 மணிக்கு தூக்கம்,காலை 6 மணிக்கு விழிப்பு 8 மணிக்கு காலை டிபன் என்றிருக்க வேண்டும்.இப்படி சரியான முறையில் இருக்கும்போது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் வளர்சிக்கு உதவுகிறது. நம்முடைய வேலையை பொறுத்து தூக்க நேரத்தை மாற்றிக்கொள்-கிறோம். இதனால் இரவு தூங்கவேண்டிய நேரத்தில் வேலை செய்யும்போது குளிர்பானம்,கொறிக்கும் துரித உணவு வகைகளை சாப்பிடும்போது உடல் பருமன் ஏற்படு-கிறது. ஹார்மோன்கள் சரியாக சுரக்கவில்லை என்றால் உடலின் அனைத்து செயல்பாடுகளும் பாதிக்கப்படுகிறது.இதன் தொடர்ச்சிதான் அப்ஸ்டரக்டிக் ஸ்லீப் அப்னியா (Oஞண்tணூதஞிtடிதிஞு குடூஞுஞுணீ அணீணணிஞுச்-Oகுஅ) எனப்படும் தூக்க வியாதி.

தூக்க வியாதிக்கும் உடல் பருமனுக்கும் என்ன தொடர்பு?

உடல் பருமனாக உள்ளவர்களுக்கு சாதாரண ஆட்களைவிட அதிக அளவு ஆக்ஸிஜன் தேவை. நுரையீரல் அதிகமாக வேலை செய்ய வேண்டி இருக்கும். அதுவுமில்லாமல் படுத்தவுடன் வயிறு அதிக அழுத்தம் கொடுக்கும். அந்த அழுத்தத்தில் நுரையீரல் தேவையான அளவு விரியமுடியாது. அதனால் தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காததால் தூக்கம் தடைபடும். இரண்டாவது வகை கழுத்து பருமன் அதிகமாக உள்ளது. கழுத்தின் சுற்றளவு 40-42 செ.மீ வரை பாதிப்பில்லை. இதைவிட அதிகமாகும்போது அழுத்தத்தினால் மூச்சு தடை ஏற்படும். குறட்டைக்கு இது முக்கியமான காரணம். அடைப்பு அதிகமாகும்போது தூக்க வியாதி வருகிறது.

ஆனால் குறட்டை நல்ல தூக்கத்திற்கான அடையாளமாக சொல்லப்படுகிறதே.

உண்மைதான். நல்ல தூக்கத்தில் தசைகள் அனைத்தும் தளர்ந்து இருக்கும். இந்த நிலையில் உள் நாக்கும், நாக்கும் மூச்சு பாதையை அடைக்கும். நம் அனைவருக்குமே ஒரு மணி நேர தூக்கத்தில் 5 அல்லது 6 முறை அடைப்பு ஏற்படும்.இதனால் பிரச்சனை ஏதுமில்லை. முழுமையான அடைப்பில் குறட்டை வராது.அதிகமான அடைப்பு ஏற்படும்போது தூக்கத்தை பாதிக்கும். நல்ல தூக்கத்தில் மூளை ஓய்விலிருக்கும். மூச்சு தடை ஏற்படும்போது ஆக்ஸிஜன் தேவையினால் மூளை சரியான ஓய்விலிருக்காது. அதனால் அடுத்த நாள் காலை கண் விழிக்கும்போது உடல் மற்றும் மனம் சோர்வாக இருக்கும். தலைவலி, எரிச்சல், வேலை நேரத்தில் தூக்கம் போன்றவற்றிற்கு தொடக்கப் புள்ளி இதுதான்.

நம்முடைய என்னென்ன பழக்கங்கள் இந்த பிரச்சனையை தீவிரப்படுத்துகிறது?

மது முக்கியமான பிரச்சனை. ஏற்கெனவே சொன்னது போல மூச்சு அடைப்பு ஏற்படும் போது ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறையும். அப்போது மூளை ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைந்துவிட்டது மூச்சை இழு என்று நுரையீரலுக்கு தகவல் கொடுக்கும். உடனே நுரையீரல் மூச்சை வேகமாக இழுக்கும்போது அடைப்பு நீங்கும். ஆனால் மது மற்றும் தூக்க மாத்திரை சாப்பிட்டவர்களின் மூளை மிகவும் களைப்படைந்து இருக்கும். இந்த நிலையில் அது நுரையீரலுக்கு தகவல் தருவதென்பது மயக்க நிலையில் உள்ள ஒருவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து கேள்வி கேட்பது போன்றதுதான். மூளையினால் சரியாக இயங்க முடியாது. அதுமட்டுமில்லாமல் நெகட்டிவ் பிரஷரில் உணவு குழாய் முழுக்க புண்ணாகும்.

தூக்க வியாதியினால் என்னென்ன பாதிப்புகள் உண்டாகிறது? சமுதாயத்தை எந்த அளவிற்கு இது பாதிக்கிறது?

தூக்க வியாதியில் ஒரு நொடி கண்ணயரும்போது விபத்திற்கான வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலான வாகன விபத்துகள் இதனாலேயே ஏற்படுகிறது. முக்கியமாக இந்த வியாதியினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு தாங்கள் இப்படி ஒரு வியாதியினால் அவதிப்படுவதே தெரியாது. இரவு சரியான நேரம் தூங்கவில்லை, அசதியாக இருக்கிறது என்று தங்களுக்குதானே சமாதானம் சொல்லிக்கொண்டிருப்பார்கள். நிலைமை முற்றி மருத்துவமனைக்கு வரும்போதுதான் அவர்களுக்கு தெரியும். அடுத்து தீவிரமான நிலையில் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படும். குறட்டை அதிகமாகும்போது பக்கத்தில் யாரும் தூங்க முடியாது. மன நல பிரச்னை,  விவாகரத்து என்று இந்த பிரச்னையின் அடுத்த பக்கம் சோகமானது.

வளர்ந்த மற்ற நாடுகளில் இந்த பிரச்னையை எப்படி எதிர்கொள்கிறார்கள்?

மேலை நாடுகளில் அரசாங்க மற்றும் பெரிய தனியார் நிறுவன வாகன ஓட்டிகள்  பதிவுபெற்ற மருத்துவமனைகளில் தூக்க வியாதி சோதனை செய்து சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் காமிரா பொருத்தப்பட்ட வாகனங்களில் நீண்ட தூர பயண சோதனை என்று அனைத்து வழிகளிலும் சோதனை செய்த பின்னரே ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. நம்மூரிலும் இதனை அமல்படுத்த வேண்டிய காலமும் கட்டாயமும் வந்துவிட்டது.

தூக்க சோதனைக்கும் மருத்துவத்திற்கும் ஒருவருக்கு எவ்வளவு செலவாகும்?

இரவு 9 மணியிலிருந்து காலை 6 மணிவரை சோதனை சாலையில் பரிசோதித்துக்கொள்ள 10,000 லிருந்து 12,000 வரை செலவாகும். பிரச்னையின் தீவிரத்தை பொறுத்து வெவ்வேறு வகையான சோதனைகள் செய்யப்படும்.இதனையே தங்களுடைய வீட்டிலேயே 5,000 ரூபாய்க்குள்ளும் சில அடிப்படை சோதனைகளை செய்து கொள்ளலாம். மருத்துவத்திற்கான செலவு என்பது பிரச்னையின் தீவிரத்தை பொறுத்தது. சிலருக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படும். சிலருக்கு தூங்கும்போது சில உபகரணங்களை தலையில் மாட்டிக் கொள்ள வேண்டியிருக்கும். சிலருக்கு மாத்திரைகள் மட்டுமே. மேலை நாடுகளில் பரிசோதனையிலிருந்து மருத்துவம் வரை அனைத்தும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் கிடைத்துவிடுகிறது. தூக்க வியாதிக்கு இந்தியாவில் யாரும் மருத்துவ காப்பீடு வழங்குவதில்லை. இதனால் பண வசதி இல்லாதவர்கள் பிரச்சனையின் தீவிரத்தை புரிந்து கொண்டால் கூட,மருத்துவம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். அரசாங்கம் இந்த விஷயத்தில் தலையிட்டு மருத்துவ காப்பீடுகளுக்கு உதவி செய்தால் மட்டுமே இதனை சமாளிக்க முடியும்.

மாரச், 2013.