சிறப்புக்கட்டுரைகள்

துணிந்து சாப்பிடலாம்!

உலகம் உன்னுடையது

முத்துமாறன்

பெங்களூருவில் வசிக்கும் இயந்திரவியல் பொறியாளர் லலிதா ராவ் சாஹிப். இயல்பாகவே சமையலில் ஆர்வம் உடையவர். காரணம்  உணவுப்பொருள் தயாரிப்புத் துறையில் இருந்த அப்பா. லலிதா பல்லாண்டுகளாக எல்லோரும் சுவையுடன் சமைத்துச் சாப்பிடும் அளவுக்கு சாம்பாரில் இருந்து இட்லி தோசை வரைக்கும் விரைவான தயாரிப்புக்காக சிறுகாகிதப்பைகளில் அடைத்து உடுப்பி ருசி என்ற பெயரில் அறிமுகப்படுத்தி விற்பனைக்குச் சந்தைப் படுத்திவருகிறார். பல்வேறு முறைகளில் சந்தைப்படுத்தியவர் இப்போது சில்லறை விற்பனை முறையில் களம் இறங்கியிருக்கிறார்.

சுவையும் மிக நன்றாக இருக்கிறது.கடைகளில் கிடைக்கும் உடனடியாகத் தயார் செய்வதற்கான கலவைப்பொருட்களை வாங்கி சமைத்தால் வயிற்றைக் கெடுத்துவிடுமோ என்ற அச்சத்தில் வாழும் காலம் இது.  எங்கள் பொருட்களில் சுவையும் இருக்கும்; அதே சமயம் வயிற்றுக்கும் எதுவும் செய்யாது. இது முழுக்க இயற்கையான உணவுப் பொருட்கள் கொண்டது என்ற உறுதியாகச் சொல்கிறார்.

“பொதுவாக உடனடியாக சமைத்து சாப்பிடச் சிறந்தவை என்று கடைகளில் கிடைக்கும் உணவுத் தயாரிப்புகள் மீது இருக்கும் அச்சம் அவற்றில் பதப்படுத்துவதற்காக கலந்திருக்கும் வேதிப்பொருட்கள்தான். ஆனால் எங்கள் பொருட்களின் முக்கிய அம்சமே எந்த இடத்திலும் வேதிப்பொருட்களோ செயற்கை வண்ணங்களோ இல்லை என்பதுதான். வண்ணங்களுக்கு இயற்கையான மஞ்சளையும் காரமற்ற ஆந்திர மிளகாய் வகைகளையும் பயன்படுத்துகிறோம். அந்த காலத்தில் வற்றல் வடாம் போன்றவற்றை  காயவைத்து ஆண்டுக்கணக்கில் பாதுகாத்துவைப்போமே, அதே முறையில்தான் இதையும் செய்கிறோம். உணவுப்பொருட்களில் இருக்கும் ஈரப்பதத்தை ஒரு தொழில்நுட்பம் மூலமாக குறிப்பிட்ட விழுக்காடு நீக்கிவிடுகிறோம். இதை நீக்கிவிடுவதன் மூலம் அது கெட்டுப்போகாது. இதற்காகப் பல ஆராய்ச்சிகள் செய்திருக்கிறோம்” என்கிற லலிதாவுக்கு சமையல் பொருட்களைத் தயாரித்து சந்தைப்படுத்தும்  தொழில் துறை ஆர்வம் வந்தது எப்படி?

“என்னோட குடும்ப பின்னணி உடுப்பி சார்ந்தது. உங்களுக்கே தெரியும்  உடுப்பின்னா உணவகத் தொழில் சார்ந்தது. என்னோட தந்தை கோவையில் ராகி மால்ட் தயாரித்துக்கொண்டிருந்தவர். ராகிமால்ட் நாராயண ராவ் என்றே அவருக்குப் பெயர். அதனால் எனக்கு தொழில்துறை மீது இயல்பாகவே ஆர்வம். பல ஆண்டுகளுக்கு முன் என்னுடைய கணவர் எஸ்.ஆர்.ராவ் சாஹிப், ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வரும் வெளிநாட்டு தொழில்துறை நிபுணர்கள் 2020-ல் இந்தியாதான் உணவுத்துறைக்கு தலைமையகமாக விளங்கும் என்று சொல்வார்கள். அது எங்களுக்குத் தூண்டுதலாக அமைந்தது என்று சொல்லலாம்.

அப்படி 1999-லேயே இதற்கான முயற்சிகளைத் தொடங்கிவிட்டோம். தரமான இயற்கையான உணவுப்பொருட்களை வாங்கி அரைத்து காயவைத்து பொருட்களைத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவந்தோம். அப்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் சந்தைப்படுத்துவதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. எனவே பெருநிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு செய்துகொடுத்தோம். இடையில் மேலும் ஆய்வுகள் செய்து நிறைய பொருட்களையும் உருவாக்கினோம்.  நாடு முழுக்க மகளிர் தொழில்முனைவோர் வலைப்பின்னல் மூலமாக  சந்தைப் படுத்தினோம். வாங்கி வீட்டில் சமைத்துப்பார்த்த பெண்கள் நல்ல ஆதரவு கொடுத்தார்கள். நாங்கள் அறிமுகப்படுத்திய ஆரோக்கிய பானத்துக்கான பொடியும் நல்ல ஆதரவு பெற்றது. நிறைய நல்ல எதிர்வினைகள் வந்தன. வடநாட்டில் வாழ்நாள் முழுக்க பாலே அருந்தாத ஒரு மூதாட்டி எங்களுடைய பாதாம் பானத்தை அருந்தி அதையே மிகவும் தொடர்ந்து விரும்பி அருந்தியதாக அவரது மகன் சொல்லி மகிழ்ந்தார். இன்னொரு பெண்மணி எங்கள் ரவாதோசை மாவு எந்த அளவுக்கு அவருடைய கடையில் வருமானத்தைப் பெருக்கியது என்று பகிர்ந்துகொண்டார்.

இவ்வளவு வரவேற்புக்குப் பின்னர்தான் சில்லரை விற்பனை சந்தையில் இறங்கலாம் என்று 2010-ல் முடிவு செய்து களத்தில் குதித்தோம். வெறுமனே விற்பனை மட்டும் போதாது என்று ‘கேபே உடுப்பி’ என்ற பெயரில் உணவகமும் பெங்களூரில் தொடங்கினோம். அங்கு எங்களுடைய உடனடி உணவுகள் தயாரிப்புகள் மட்டுமே பரிமாறப்படுகின்றன. சமையல்காரர் என்று யாரும் இல்லை. உணவு தயாரிப்பவர் மட்டுமே இருப்பார். தோசை செய்பவரே பரோட்டாவும் செய்வார்; கேசரி பாத்தும் செய்வார். இப்போது அகமதாபாத்திலும் இந்த உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரிலும் தொடங்க இருக்கிறோம். எங்களுடைய தனித்தன்மையே இதுதான். நாங்கள் வெறும் உணவுப் பொருட்கள் மட்டும் அடைத்து விற்கவில்லை. உணவகமும் நடத்துகிறோம். மொத்தமாகப் பார்த்தால் முன்னூறு பேருக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்” என்று கூறுகிறார் லலிதா ராவ் சாஹிப்.

உடுப்பி ருசி என்ற பெயரில் 97 விதமான உணவு வகைகளை இவர் அறிமுகப்படுத்தி உள்ளார். இட்லி, தோசை, முதலான நமது பாரம்பரிய உணவு வகைகளை உலகம் முழுக்க எளிமையான வகையில் கொண்டுசெல்லும் முயற்சி என்று அடக்கத்துடன் சொல்கிறார்.

செப்டெம்பர், 2016.