வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்பது,
சென்னைக்கே மிகவும் பொருந்தும்.
பள்ளிக்கே செல்லாதவர் முதல், பொறியியல் படித்தவர்கள் வரை வந்தவரை கைவிட்டதில்லை சென்னை. தவிர, திரைப்பட கனவுகளுடன் வந்து ஜொலிக்கும் நட்சத்திரங்களாக மாறியவர்கள், மஞ்சள் பையுடன் பேருந்திலிருந்து இறங்கி தொழிலதிபர்கள் ஆனவர்கள், வட்டச் செயலாளராக வலம் வந்து இன்று அமைச்சர் களாக கோலோச்சுபவர்கள் என எந்தத் துறையினராக இருந்தாலும் அன்போடு அரவணைப்பது சென்னைதான்.ஆனால் இன்று இதை விட்டு தப்பினால் போதும் என்று சொந்த ஊருக்கு ஓடுகிறார்கள் பலர். காரணம்& இங்குதான் கொரோனா பரவல் அதிகம்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘‘சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால் இங்கு கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது!'' என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில்தான், ‘‘திருச்சியை இரண்டாவது தலைநகராக்கினால், சென்னையில் மக்கள் நெருக்கம் குறையும்!'' என்ற குரல் மீண்டும் எழுந்திருக்கிறது.
ஆம்.. ‘மீண்டும்'தான்! நாற்பதாண்டுகளுக்கு முன்பே, ‘‘சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகரித்துவிட்டது. இதைத் தடுக்க வேறு ஊருக்கு தலைநகரை மாற்ற வேண்டும்!'' என்று சிலர் பேச ஆரம்பித்தனர். இந்த குரலை செவிமெடுத்திருந்தார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்.
இது குறித்து, ‘தமிழக தலைநகர் மாற்றுவதற்கான அமைப்பின்' தலைவர் எம்.சேகரனிடம் பேசினோம்.
அவர், ‘‘அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். திருச்சியை இரண்டாவது தலைநகராக்கப் போவதாக அறிவித்தார். திருச்சி அண்ணாநகர் நவல்பட்டில் தலைமைச் செயலகத்தின் ஒரு பகுதியை கொண்டுவர திட்டமிட்டார். இதற்கான பணிகளை அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம் கவனித்து வந்தார். திருச்சிக்கு எம்.ஜி.ஆர். வந்தால் தங்குவதற்காக திருச்சி உறையூர் கோணக்கரை பகுதியில் ஒரு பெரிய பங்களாவும், கூட்டம் நடத்த இடமும் கட்டப்பட்டன.
அந்த காலகட்டத்தில், அதாவது 1984ல் எம்.ஜி.ஆருக்கு திடீரென உடல் நலம் குன்றியது. எஸ்.டி. சோமசுந்தரம், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கினார். இந்திராகாந்தி துர்மரணம் அடைந்ததும் அந்த காலட்டத்தில்தான். இப்படி பல்வேறு காரணங்களால், இம்முயற்சி தள்ளிப்போனது. பிறகு அதைப்பற்றி யாரும் பேசவில்லை!'' என்றார், எம்.சேகரன்.
சமூக ஆர்வலர் குமார், ‘‘அப்போதே இம்முயற்சிக்கு எதிர்ப்பும் கிளம்பியது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, திருச்சிக்கு தலைநகரம் மாற்றப்படுவதை எதிர்த்தார். தவிர, சென்னையை மையமாக வைத்து செயல்படும், ரியல் எஸ்டேட் அதிபர்களும், தங்கள் நிலத்தின் விலை குறையும் என்பதால் இத்திட்டத்தை எதிர்த்து லாபி செய்ததாகவும் ஒரு தகவல் உலவியது!'' என்கிறார்.
‘‘இப்போதாவது, திருச்சியை தலைநகரமாக்க வேண்டும்!'' என்கிறார், தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழு செயலாளர் எஸ்.புஷ்பவனம்.
இவர், ‘‘அப்போது சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதைப் போக்க, பெரிய அளவில் திட்டமிட்டு, அதற்காக 440 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிட்டார்கள். அதே நேரம், இதைவிட குறைந்த செலவில் திருச்சிக்கு தலைநகரை மாற்றிவிடலாம் என்று ஆலோசனை சொல்லப்படவே அதை எம்.ஜி.ஆர். ஏற்றார்.
திருச்சியை இரண்டாவது தலைநகராக்குவது பல நன்மைகளைத் தரும். இது தமிழ்நாட்டின் மத்திய பகுதி. தற்போது குமரி, கோவை பகுதிகளில் இருந்து தலைநகர் சென்னைக்கு பல மணி நேரம் பயணித்துச் செல்ல வேண்டி இருக்கிறது. திருச்சி என்றால் சில மணி நேரத்தில் பயணித்தால் போதும். இதனால், நேரம், மனித உழைப்பு, டீசல், சுற்றுச்சூழல் மாசு எல்லாம் குறையும்!'' என்றார்.
தி.மு.க. செய்தித்தொடர்பாளரும் வரலாற்று ஆய்வாளருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன், ‘‘கேரளாவின் தலைநகரம், திருவனந்தபுரம். ஆனால் வர்த்தக தலைநகரம் கொச்சின். இங்குதான் அம்மாநிலத்தின் உயர்நீதிமன்றமும் இருக்கிறது. கேரளாவில், பிரபல திரை நட்சத்திரங்கள்கூட, தங்களது சொந்த ஊரில் & அது கிராமமாக இருந்தாலும் அங்குதான் வசிப்பார்கள். இங்கே அந்த கலாச்சாரம் வரவேண்டும். அப்படி வந்தால், குறிப்பிட்ட ஊரில் குவியும் கூட்டம் குறையும்.
குறிப்பிட்ட நகரத்திலேயே நிர்வாகம், தொழில், போக்குவரத்து இருந்தால், நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படத்தான் செய்யும். ‘மதுரையை தலைநகராக்க வேண்டும்' என்று எழுதியவன்தான் நான். சென்னை என்பது சமீபத்தில் உருவான ஊர். ஆனால் நமது வரலாற்றில், தஞ்சை, மதுரை, திருச்சி, உறையூர்தான் தலைநகரங்களாக இருந்தன!'' என்கிறார்.
கவிஞர் ஜெயபாஸ்கரன், தலைநகரை மாற்றுவதை எதிர்க்கிறார். இவர், ‘‘புயல், வெள்ளம், குடி நீர் பஞ்சம் ஏற்படும்போதெல்லாம், ‘தலைநகரை மாற்றவேண்டும்' என்று சிலர் பேச ஆரம்பிப்பார்கள். இப்போது கொரோனா பீதியால் பேச ஆரம்பித்திருக்-கிறார்கள்.
சென்னையை விட பெரிய நகரங்களான மும்பை, கொல்கொத்தா, போன்றவை எப்படி செல்படுகின்றன? வெள்ள பாதிப்பு இல்லாமலிருக்க, வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்; குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதைவிட்டுவிட்டு தலைநகரை மாற்ற வேண்டும் என்பது சரியான கருத்து அல்ல!'' என்கிறார்.
புஷ்பவனத்தின் கருத்து வேறு மாதிரி இருக்கிறது. இவர், ‘‘சென்னை தலைநகரமாக இருப்பதை பெருமையாக சிலர் நினைக்கிறார்கள். இதில் கவுரம் என சொல்வதற்கு ஏதுமில்லை. அமெரிக்காவில், நியூயார்க் வர்த்தக தலைநகரமாகவும், வாஷிங்டன் டி.சி. நிர்வாகத் தலைநகராகவும் இருக்கின்றன. ஏன், இந்தியாவிலேயே மும்பைதான் வர்த்தக தலைநகரம். நிர்வாக தலைநகராக டில்லிதானே இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில், கோடை காலம் குளிர் காலத்தில் ஜம்முவும் காஷ்மீரும் ஆறாறு மாதங்களுக்கு தலைநகராக இருக்கின்றவே.
பஞ்சாப், ஹரியானா இரண்டுக்கும், சண்டிகார் என்ற யூனியன் பிரதேசம்தானே தலைநகராக இருக்கிறது! தற்போது ஆந்திராவில் கூட, மூன்று தலைநகரங்களை உருவாக்கப்போகிறோம் என்று அறிவித்திருக்கிறார்களே!'' என்கிறார் புஷ்பவனம்.
இந்தக் கருத்தை ஆமோதிக்கும் சேகர், ‘‘சென்னையை இனி விரிவாக்கம் செய்ய முடியாது. ஒரு புறம் கடல், இன்னொரு புறம் ஆந்திர மாநிலம். ஆகவே, தலைமைச் செயலகத்தின் சில பிரிவுகளையாவது திருச்சிக்கு கொண்டுவர வேண்டும்!'' என்கிறார்.
இக்கருத்தில் புஷ்பவனம் மாறுபடுகிறார். இவர், ‘‘ஒட்டுமொத்தமாக தலைநகரை திருச்சிக்கு மாற்றுவதே சரியானதாக இருக்கும். தொழில், வர்த்தகம், திரைத்துறை, கடல் & விமான & ரயில் போக்குவரத்து ஆகியவற்றால் சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாகிவிட்டது. தவிர தினமும் பத்து லட்சம் பேர் வந்து செல்கிறார்கள். ஆகவே திருச்சியை முழுமையான தலைநராக்குவதுதான் வழி!'' என்கிறார்.
உயரநீதிமன்ற வழக்கறிஞர் அருள்துமிலன், ‘‘திருச்சி & புதுக்கோட்டை & தஞ்சை முக்கோண பகுதியில் ஏராளமான அரசு நிலங்கள், எந்தவித பயன்பாடும் இன்றி கிடக்கின்றன. இப்பகுதியில் தண்ணீர் வசதியும் இருக்கின்றது. ஆகவே இப்பகுதிக்கு தலைநகரை மாற்றுவது நல்லதே!'' என்கிறார்.
வரலாற்று ஆய்வாளர், தியோடர் பாஸ்கரன், ‘‘ஆங்கிலேயர்கள் கடல் வணிக நோக்கத்துக்காக தற்போதைய சென்னை பகுதியை, சென்னப்ப நாயக்கர் என்பவரிடமிருந்து வாங்கினார்கள். ஆகவே இப்பகுதி சென்னபட்டினம் என அழைக்கப்பட்டது. இது நடந்தது 1600களில். இது மதராசபட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் தங்கள் உச்சரிப்புக்கு ஏற்ப, மெட்ராஸ் என அழைத்தனர். தங்கள் பாதுகாப்புக்காக இங்கே ஜார்ஜ் கோட்டை கட்டினார்கள்.
அவர்களது வர்த்தகமும் அதிகாரமும் பெருகப்பெருக, சென்னையும் விரிவடைந்துகொண்டே வந்தது. இந்தியாவின் முதல் மாநகராட்சி, உலகின் இரண்டாவது மாநகராட்சி என்ற பெருமைகளும் சென்னைக்கு உண்டு. அன்று மயிலாப்பூர், தண்டையார் பேட்டை போன்ற பகுதிகள் தனித்தனி ஊர்களாக இருந்தது மாறி, இந்தப்பக்கம் திண்டிவனம், அந்தப்பக்கம் கும்மிடிப்பூண்டி என நீண்டுவிட்டது. ஆகவே, நிர்வாகத்தின் சில துறைகளை திருச்சிக்கு மாற்றினால் நல்லதே!'' என்கிறார்.
அதிமுக பிரமுகரும், தொலைக்காட்சி விவாதங்களில் அக்கட்சி சார்பாக பங்குபெறுபவருமான ரவி குழந்தைவேலு, ‘‘திருச்சியை இரண்டாவது தலைநகராக்குவது என்பது சரியான செயல்தான். எம்.ஜி.ஆர். காலத்தில் இதற்கான முயற்சி ஆரம்பிக்கப்பட்டபோது, இங்கே கடல்வழி மார்க்கம் இல்லை, சென்னை அளவுக்கு விமான போக்குவரத்து வசதி இல்லை, தவிர சென்னையை ஒப்பிடும்போது ரயில் போக்குவரத்தும் குறைவு என்று சொல்லப்பட்டது. தேவைக்கேற்ப விமான மற்றும் ரயில் போக்குவரத்தை அதிகரித்துவிடலாம். மற்றபடி சென்னையின் நெரிசலை குறைக்க திருச்சியை இரண்டாவது தலைநகராக்குவது சரியான விசயம்தான்,'' எனக் குறிப்பிடுகின்றார்.
முழுமையாக தலைநகரை திருச்சிக்கு மாற்றுவது ஒருபுறம் இருந்தாலும் நெரிசலைக் குறைக்க ஓரிரு அரசுத்துறைகளின் தலைமையகங்களையாவது சென்னையை விட்டு இடம்பெயர்க்க அரசு முயற்சி செய்யலாமே...
மூத்த பத்திரிகையாளர் ஏ.டி. சுகுமார், திருச்சியின் அடிப்படை வசதிகள் குறித்து கூறுகிறார்:
“திருச்சி ஏழு சதுர கிலோமீட்டர் சுற்றளவு கொண்டதாக இருக்கிறது. மேலும், நான்கு திசைகளிலும் சுமார் இருபது கிலோ மீட்டர் தூரம் வரை, குடியிருப்புகள் விரிந்துள்ளன. காவிரி ஓடும் பகுதி என்பதால் தண்ணீர் வசதிக்குக் குறைவில்லை.
அதே நேரம், திருச்சியின் பல பகுதிகள், ராணுவத்தின் வசம் உள்ளது. அதேபோல திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் மன்னார் புரம், விமான நிலையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியாக இருக்கிறது. இதுபோன்ற 30 ஏக்கர் பரப்பளவு எதற்கும் பயன்படுத்தப்படாத களர் நிலமாகவே இருக்கின்றது. மாநகராட்சி வசம் இவற்றை அளித்தால்தான் கட்டமைப்பு வசதிகளை பெருக்க முடியும்.
உதாரணத்துக்கு, திண்டுக்கல் – மதுரை இணைப்புப் பால பணிகள் கிட்டதட்ட முடிந்த நிலையில், ஒன்றரை ஏக்கர் நிலத்தை ராணும் வழங்கினால் அப்பணி முடியும். ஆனால் ராணுவம் இன்னும் தராததால், அப்படியே பால பணிகள் தடைபட்டு நிற்கின்றன.
தவிர, திருச்சியில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் செங்கிப்பட்டி அருகே பல நூறு ஏக்கர் தரிசு நிலம்.. அரசு நிலம் இருக்கிறது. அங்கு தலைநகரை அமைக்கலாம். இதன் மூலம் தலைநகர் பகுதியின் விரிவாக்கம் திருச்சியோடு நிற்காமல், தஞ்சை பகுதிக்கும் பரவும். இதனால் மக்கள் நெரிசல் ஏற்படாமல் இருக்கும்.”
ஜூலை, 2020.