சிறப்புக்கட்டுரைகள்

திராவிடப் பொங்கல்ல்ல்!!

ஒரு பார்வையாளனின் குறிப்பேடு

Staff Writer

சென்னை அண்ணா சாலையில் டி.எம்.எஸ். அலுவலகம் அருகே உள்ள தமிழ்முழக்கம் வளாகத்தில் கோம்பை எஸ்.அன்வரின் ‘யாதும்’ ஆவணப்படத்தை ஓலைச்சுவடி வாசகர் வட்டத்தினர் திரையிட்டிருந்தார்கள். தமிழ் முஸ்லிம்களின் அடையாளத்தைத் தேடுகிற படம். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான  தமிழ் முழக்கம் சாகுல்  அமீது பேசுகையில் ஆவணப்படத்தைப் பாராட்டினார். ஆனால் அவருக்கு ஒரு சிக்கல். “இந்தப் படத்தை நான் பெரிய அளவிலான மக்களிடம் கொண்டு செல்ல விரும்புகிறேன். ஆனால் அதில் பல பள்ளிவாசல்கள் திராவிடக் கட்டடக் கலையைப் பயன்படுத்திக் கட்டப்பட்டிருக்கின்றன என்று வருகிறது. இந்த திராவிட என்ற சொல்தான் எனக்குப் பிடிக்கவில்லை.இயக்குநர் இதைக் கவனிக்கவேண்டும்”என்றார். அன்வர் நீண்ட விளக்கம் அளிக்கவேண்டியதாயிற்று.

“கர்நாடகா, ஆந்திரா போன்ற இடங்களிலும் இந்த கற்தூண்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் கட்டடக் கலை உள்ளது.இதை தொல்பொருள் மொழியில் திராவிடக் கலை என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். எனவே தான் அந்த பெயரை வைத்திருக்கிறேன்” என்பதுஅவரது விளக்கம். கார்ட்டூனிஸ் பாலா குபீரென எழுந்து ஒரு கேள்வி கேட்டார்: “அது என்னங்க? தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல் களைக்காண்பிக்கும்போது திராவிடக் கட்டடக் கலை என்கிறீர்கள். கேரளாவில் உள்ள பள்ளிவாசல்கள் கட்டப்பட்ட விதம் கேரளக் கட்டடக் கலை என்கிறீர்களே?” ”அது கேரளாவில் மட்டுமே காணப்படும் பாணி. மற்ற மாநிலங்களில் இல்லை. அதனால்தான் அந்த பெயர்” என்று அன்வர் மெதுவாக விளக்கம் தந்தார்.

இந்த திரையிடல் முடிந்ததும் நாம் போய்ச்சேர்ந்த இடம் அண்ணா சாலையில் உமாபதி கலை அரங்கம். மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர்சக்திவேலின் தமிழ்நாடு தமிழருக்கே என்ற நூலின் இரண்டாவது பதிப்பு வெளியீட்டுவிழா. நாம் போனபோது இரவு ஒன்பதரை என்றாலும் சளைக்காமல் கூட்டம் நடந்தது. திராவிடத்தைப் பொளந்து கட்டுவதில் பெயர் பெற்ற அருகோ முழங்கிக் கொண்டிருந்தார்: ‘அண்ணா இறந்தபின்னால் ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டியது யார்? நாவலர் நெடுஞ்செழியன். ஆனால் கருணாநிதி தெலுங்கர் என்பதால் அவரை முதல்வர் ஆக்கினார் பெரியார். கருணாநிதியை விமர்சிக்காமல் தமிழ் தேசியம் பேச முடியாது”என்று ஒரே போடாகப் போட்டார்.

பக்கத்தில் இருந்த நண்பரை விட்டு விட்டு திரும்பிப்பார்க்காமல் எடுத்தோம் ஓட்டம்.

சிலநாள் கழித்து பொங்கலை திராவிடர் திருநாள் என்று தமிழர் தலைவர் கி.வீரமணி மூன்று நாட்கள் விமரிசையாகக் கொண்டாடினார்.  ஆனால் இங்கு அவர் வைத்த திராவிடப் பொங்கலுக்கும் கடுமையான எதிர்ப்பு தமிழ் தேசியப் பேரியக்க கட்சித் தலைவர் பெ.மணியரசனிடம் இருந்து எழுந்தது. ‘’தமிழர் திருநாள் என்று நீண்ட நெடுங்காலமாக தமிழ் அறிஞர்களாலும், தமிழக அரசியல் தலைவர்களாலும் தமிழ் மக்களாலும் அழைக்கப்-பட்டுகொண்டாடப்பட்டுவரும் பொங்கல் விழா நாட்களைத்தான் புதிதாக வீரமணி அவர்கள் ‘திராவிடர் திருநாள்’ விழா என்று கொண்டாடுகிறார்.தமிழர் என்ற இயற்கையானதும் நடைமுறையில் உள்ளதுமான இனப்பெயரை மறுத்து, ‘திராவிடர்’ என்ற செயற்கையான பெயரை திணிக்கும்முயற்சியில் திராவிடர் கழத்தின் இன்னொரு செயலே, ‘திராவிடர் திருநாள்’ விழாவாகும்.   திராவிடத்தின் கூறுகளாக வீரமணியார் கூறிக்கொள்ளும், ஆந்திரப் பிரதேசம் - கர்நாடகம் - கேரளம் ஆகிய மாநிலங்களில் திராவிடர் திருநாள் கொண்டாடப்படுகிறதா? திராவிடர் திருநாள்என்ற பெயரில், பொங்கல் விழாவோ, அல்லது வேறு ஒரு விழாவோ நடைபெறுவதில்லை. பின்னர், தமிழ்நாட்டில் மட்டும் ஏமாளித்தமிழர்களின் தலையில் இல்லாத இனப்பெயரான திராவிடர் என்பதை சுமத்த முயல்வது ஏன்?  வீரமணியார் கடந்த சில ஆண்டுகளாக தமிழர் திருநாளை திராவிடர் திருநாளாக திரிபுவேலை செய்து கொண்டாடுகிறார். ஆனால், தமக்கு மட்டும் “தமிழர் தலைவர்” என்று வீரமணியார் பட்டம் போட்டுக் கொள்கிறார்” என்று செமத்தியாக சீறியது அந்த அறிக்கை.

இந்த அறிக்கை வந்த மறுநாள் திராவிடப் பொங்கல் விழாவில் பார்வையாளராகக் கலந்துகொண்டோம்.

திராவிடர் கழகத்தின் மூத்த பிரமுகரான மஞ்ஞை வசந்தன் பேச வந்தார். ‘’ இன்று திராவிடம் என்ற சொல்லை ஆராய்கிறாயே...  காந்தியார் முதல்முதலில் சென்னைக்கு வந்தபோது சீனிவாச ஐயங்காரின் வீட்டுத் திண்ணையில் உட்கார வைத்து அனுப்பிவிட்டார்கள். வீட்டுக்குள்ளே அனுமதிக்கவில்லை. ஏனென்றால் சூத்திர காந்திக்கு அவர்களின் கூடத்தில் இடமில்லை. ஆனால் அதே காந்தியார் இரண்டாம் முறைவந்தபோது அந்த வீட்டின் கூடத்துக்கு அழைத்துச் சென்று அமரவைக்கிறார்கள்.  வெளியே வருகிறபோது காந்தி சொல்கிறார், திண்ணையிலேஉட்கார்ந்திருந்த என்னை வீட்டுக்குள்ளே அனுமதித்தது ஈவேரா பெரியாரின் போராட்டமே என்று. அந்த பெரியாருக்குத் தெரியாத தமிழாராய்ச்சியா உங்களுக்குத் தெரியப்போகிறது? இன்றைக்கு தமிழ் தேசியம் திராவிடம் என்று பேசுகிறார்களே.. தந்தை பெரியார் தன் மூளையிலே கசக்கி கசக்கி உருவாக்கியது திராவிடம் என்ற சொல். ‘தமிழர்  கழகம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்றுதான் எல்லோரும்சொல்கிறார்கள். நானும் அப்படித்தான் விரும்புகிறேன். ஆனால் நானும் தமிழன் என்று சொல்லி பிராமணர்கள் இதில் வந்துவிடுவார்கள். எனவே தான் திராவிடன் என்று சொல்கிறேன்’ என்றார் பெரியார். தந்தை பெரியாருக்குத் தெரியாத சொல்லாராய்ச்சியா?” என்று கேட்டு கைதட்டல்பெற்றார்.

 அலுவலகம் வந்து முகநூலை மேய்ந்தோம்.  ‘’ஏம்பா சாதிக்கொரு கோவில் வச்சிருக்கீங்க...? ஏம்பா சாதிக்கொரு திருவிழா வச்சிருக்கீங்க...? ஏம்பா ஊருக்கு வெளில சக தமிழர்களை வச்சிருக்கீங்க..? ஏம்பா ரெட்டை டம்ளர் வச்சிருக்கீங்க...? தமிழர்களுக்குள்ளயே சாதி மீறி திருமணம்செஞ்சா ஏன்டாப்பா கொலை வெறி கொண்டு அந்த ஜோடிய கொலை செய்றீங்க...? ச்சீ..இதெல்லாமா கேள்வி? இந்த கேள்விகளா முக்கியம்? ’திராவிடர் திருநாள்’னு ஏன்டா பெயர் வச்சீங்க...?’ என்று கேட்டிருந்தார் மகிழ்நன். பா.ம என்ற ஊடகவியலாளர்.

சில நாள் கழித்து முரசொலியில் தமிழர் திருநாள் என்று தலைப்பிட்டு தந்தை பெரியாரின் கட்டுரை(1959) ஒன்றைப் போட்டிருந்தார்கள். அதில் நாலு வரியைப் படித்துக்காட்டினார் எழுத்தாள நண்பர் ஒருவர்: ‘தமிழர் விழா(பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக்கூடியது அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன். இந்தப் பொங்கல் பண்டிகையை தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்.” இதை முரசொலி போட்டதில் ஏதேனும் உள்குத்து உண்டா என்று கேட்டார்.

எமக்கு ஒன்றும் புரியவில்லை. திராவிடர்களும் தமிழர்களும்  2015-ஐ விறுவிறுப்பாக ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள் என்பது  மட்டும் விளங்கியது.

பிப்ரவரி, 2015.