சிறப்புக்கட்டுரைகள்

தியாகுவும் மிகைபுனைவும்

துரைசிங்கவேல்

நக்சல்பாரி இயக்கம் தொடக்கத்தில் (1969) தனிநபர் அழித்தொழிப்பை வழியாக கொண்டிருந்தது உண்மைதான், ஆனால், 74-க்கு பிறகு இந்தியாவெங்கும் புதிய பார்வை-கள் முன்வைக்கப்பட்டன. 77-ல் தெளிவாகவே மக்கள்திரள் வழி பலகுழுக்களால் முன் வைக்கப்-பட்டு மக்கள்திரள் இயக்கங்-கள் கட்டப்பட்டன.

தருமபுரி பகுதியிலும் 70கள் இறுதி-யில் பல்வேறு மக்கள்திரள் போராட்டங்கள் நடைபெற்றன. இவை கூட்டக்குழு என்ற நக்சல்பாரி அமைப்பால் தலைமை தாங்கப்பட்டது. 70களின் இறுதியில் கூட்டக்குழு என்ற அமைப்பு 1980-ல் மக்கள்யுத்தம் கட்சியாக மாறியது. 2002 வரை இதன் தலைமையிலேயே அனைத்து மக்கள் திரள் போராட்டங்களும் நடைபெற்றன. கூலிஉயர்வு, கந்துவட்டிக்கெதிராக, கொத்தடிமைக்கெதிராக, ஆதிக்கசாதி நிலக்-கிழார்களின் அட்டூழியங்களுக்கெதிராக என்று ஆதிக்கச் சாதி உழைக்கும் மக்களும் தலித் மக்களும் அணி திரட்டப்பட்டனர். இதனாலேயே இரட்டைக்குவளை ஒழிப்பு போராட்டங்களில் தோழர் பாலனால் வன்னிய ஆதிக்க சாதி உழைக்கும் மக்களை அணிதிரட்ட முடிந்தது. (இப்போராட்டங்களின் சாட்சியாகவே தோழர் அப்பு-பாலன் சிலை நாய்க்கன் கொட்டாயில் உள்ளது.)

இக்காலப்பகுதி சுமார் 35 ஆண்டுகள் நீண்ட நெடிய மக்கள்திரள் போராட்ட வரலாற்றை கொண்டதாகும். இதுபோன்ற போராட்ட வரலாற்று கட்டத்தை தமிழகத்தில் வேறெந்த பகுதியும் பெற்றதில்லை.

இதன் எதிரொலியே 84ல் நடைபெற்ற அப்பு-பாலன் சிலை திறப்பு விழாவிற்கு தடையை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டனர். இதன்பிறகு மக்கள் யுத்தக் கட்சியின் பிளவின் காரணமாக சிலமாதங்கள் இயக்கம் பின்னடைவை சந்தித்தது.

87ல் இருந்து 95 வரை கடும் போராட்ட கட்டமாகவே இருந்தது. இக்கட்டத்தில் மீண்டும் மீண்டும் தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்கள் எடுக்கப்பட்டு உழைக்கும் மக்களின் ஒற்றுமை கட்டியமைக்கப்பட்டது. இக்கட்டத்தில்-தான் நத்தம் கிராம மக்கள் ‘சாதி இழிவுப் பணிகளை’ செய்யமாட்டோம் என்று அறிவித்தனர்.

1996லிருந்து 2002வரை உழைக்கும் மக்களின் ஒற்றுமை திடப்படுத்தப்பட்டது, அதனால் இக்கட்டத்தில் மக்களின் போராட்டங்கள் அரசுக்கெதிராகவே இருந்தன. இதில் பல, பகுதிக்கோரிக்கைகளுக்காக இருந்தபோதிலும், கல்வி கட்டாய நன்கொடைக்கெதிரான போராட்டம் மிக முக்கியமானது.  நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள்திரள் போராட்டங்-களில் மேலே ஒன்றிரண்டு முக்கிய நிகழ்வுகளையே குறிப்பிட்டுள்ளேன். அனைத்து கருப்புச்சட்டங்களும் இப்பகுதியில்தான் முதலில் பாயும். இவர்கள் யாரும் புரட்சிகர மிகையுணர்ச்சியுடன் அழித்தொழிப்பிலோ சாகச செயல்களிலோ ஈடுபடவில்லை. அதேபோல, மேற்கண்ட அடக்குமுறை கைதுகள் எல்லாம் ஒரு-சில போராளிகளின் சிறைப்படுத்தல் அல்ல. பல நூற்றுக்-கணக்கான மக்கள் (பெண்கள்,  சிறுவர்கள், குழந்தைகள் உட்பட) தனது வாழ்வாதாரங்களுக்காகவும் மற்றும் சனநாயக உரிமைகளுக்காகவும் போராடியதன் விளைவு ஆகும்.

மேலும், தலித்துகளும், ஆதிக்கசாதி உழைக்கும் மக்களும் 35 ஆண்டுகளாக இணக்கமாகவே இருந்துள்ளனர். இடையில் ஒன்றிரண்டு முறை ஆதிக்கசக்திகள் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சித்த போதும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

தியாகுவைப் பொருத்தவரை அழித்தொழிப்பு நடவடிக்கை மட்டுமே வேலையாக இருந்தசமயத்தில் ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டவர். இவர் சிறைப்பட்டதிலிருந்து மா.லெ.கட்சிக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எண்பதுகளின் தொடக்கத்தில் சிறையில் சிலரிடம் கேட்டதாகச் சொல்கிறார். 85க்கு பிறகானதை யாரிடம் கேட்டுக்கொண்டார்? புரட்சிகர வரலாற்றை ஆய்வு செய்யும் முறை இதுதானா?

தொடக்கத்தில் புரட்சிகர மிகையுணர்வு வாதத்திற்கு கவரப்பட்டு வந்த தியாகு, சிறையை விட்டு வந்த பின்னரும் “மிகையுணர்வு” மயக்கத்திலிருந்து மீள முடியாமல், தமிழ்தேசிய மிகையுணர்வு வாதத்திற்கு மாறிக்கொண்டார்.

கடந்த சிலமாதங்களாக தமிழ்நாட்டில் நடந்துக்கொண்டிருக்கும் சாதிய பெருமழையின் வேகத்தில் “தமிழ்த்தேசிய மிகையுணர்வு வாதம்” வெளுத்துவிட்டதே என்ற புலம்பலும், தமிழ்நாட்டின் முக்கிய சிக்கலான சாதி எதிர்ப்பு, நிகழ்ச்சி நிரலுக்கு வந்துவிட்டதே... சிவப்பு நிறம் வேறு தெரிகிற மாதிரி உள்ளதே என்ற ஆதங்கமும்தான் இவரது இந்த வெளிப்பாடு.

(துரைசிங்கவேல், தலைவர், மக்கள் சனநாயக குடியரசு கட்சி)  

- அந்திமழை டிசம்பர் 1 இதழில் வெளியான தியாகுவின் கட்டுரைக்கான எதிர்வினை.

பிப்ரவரி, 2013.