ஓவியம் ஜீவா
சிறப்புக்கட்டுரைகள்

தி.மு.க.வில் ஓர் ஆதிவாசி!

ப.திருமாவேலன்

மிகச் சிறுவயதில் மனதில் பதிந்த இரண்டு பெயர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அமுதன், கடையநல்லூர் ஆயை.மு.காசாமொய்தீன்!

இருவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலக்கிய அணியைச் சார்ந்தவர்கள். எனது அப்பாவின் புத்தக அலமாரியில் இருந்த ஒரு புத்தகத்தில் இவர்கள் இருவரது பெயரும் இருந்தன, ‘பிராமணன் பிறக்கவில்லை' என்பது அந்த புத்தகத்தின் தலைப்பு. அமுதன் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பேராசிரியர் அன்பழகன் பேசியது அது. இதனை சிறுபுத்தகமாக வெளியிட்டவர்

காசாமொய்தீன். பத்து ஆண்டுகளுக்கு முன்புதான் அமுதனைப் பார்த்தேன். ஒரு மாதத்துக்கு முன்புதான் காசாமொய்தீனைப் பார்த்தேன். ஆனால் அவர்கள் பெயர்கள், முப்பதைந்து ஆண்டுகளாக முகம் அறியாமல் அறிமுகமாக இருக்கிறது. புத்தகத்துக்கு இருக்கும் மகத்தான குணமே இதுதான். நீலகண்ட சாஸ்திரி எப்படி இருப்பார், சி.வை.தாமோதரனார் எப்படி இருப்பார், மௌனி எப்படி இருப்பார், எஸ்.என்.நாகராஜன் எப்படி இருப்பார், ஜி.நாகராஜன் எப்படி இருப்பார் என்று ஒருவருக்கு தெரியாது. ஆனால் அவர்களைப் படித்துப் படித்து ஏதோ நமக்கு மிக நீண்ட காலம் அறிமுகம் ஆனது போல நினைப்பதைப் போலத் தான் அமுதனும். மிக நீண்ட காலமாக வாழ்ந்து வந்துள்ளார் மனதுக்குள்.

பத்தாண்டுகளுக்கு முன்னால் ஒருநாள் ஆனந்தவிகடன் அலுவலகத்துக்கு அமுதன் அய்யாவும் அவர் மகன் அன்புவும் வந்து கீழ் தளத்தில் காத்திருந்தபோது, ‘எப்படி இருக்கீங்க அய்யா?' என்றேன். ‘நாம் இப்போது தானே முதல்தடவையாக பார்க்கிறோம்?' என்றார்கள். அப்போது, ‘பிராமணன் பிறக்கவில்லை' என்ற புத்தகம் பற்றிச்

சொன்னேன். ‘ஏ அப்பா! அந்த புத்தகத்தை நினைவில் வைத்துள்ளீர்களே இன்னமும்' என்றார். ‘என் அப்பா தான் காரணம்' என்றேன். ‘எல்லாப் பிள்ளைகளும் நினைவில் வைத்திருப்பது இல்லை' என்றார்.

‘அந்தக் காலம் மாதிரி இந்தக் காலம் இல்லை' என்பது அவரது கட்சி. அந்தக் காலம் மாதிரி இந்தக் காலம் இருக்காது, இருக்கவும் முடியாது என்பதை உணர்ந்தும் இருந்த புலவர் அவர்.

விருதுநகர் செந்தில்குமார் கல்லூரியில் படித்தவர். படிக்கும்போதே 1957ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை  சிக்கெனப் பிடித்தவர். அந்தக் கல்லூரியில் திராவிட மாணவர் மன்றம் தொடங்கியவர். அவர் மாணவர் பேரவைத் தலைவராக இருந்தபோது செயலாளராக இருந்தவர் க.சுப்பு. விருதுநகரில் திமுக மாணவர் மாநாட்டை இவர் நடத்தியபோது அவர்களோடு கைகோர்த்தவர்கள் தான் ‘சொல்முத்து' கா.காளிமுத்துவும், பெ.சீனிவாசனும்( காமராசரிடம் வெற்றியைப் பெற்றுக் கொண்டவர்!)

‘இறுதிவரை சகாராவையே தாண்டாத' நா.காமராசனும்!

‘தமிழ்நாடு' என்று பெயர் சூட்டுவதற்காக விருதுநகரில் உண்ணாவிரதம் இருந்த தேசியத் தமிழன் சங்கரலிங்கனாருடன் சில மாணவர்களும் உண்ணாவிரதம் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் அமுதன்.

1963&ல் இவருக்கு பேரறிஞர் அண்ணா ஒரு தந்தி அனுப்பி, ‘உடனடியாக வந்து சேரவும்' என்று அழைத்தார். அந்த ஆண்டு நடந்த சட்ட எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு அமுதன் கைதானார்.

ஆகாசவாணி எதிர்ப்பு போரா? அமுதன் இருப்பார். இந்தி எழுத்து அழிப்பா? அமுதன் இருப்பார். விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட்டமா? அமுதன் இருப்பார். சட்ட எரிப்பா? அமுதன் இருப்பார். இந்தி எதிர்ப்பு நகல் எரிப்பா? அமுதன் இருப்பார். இப்படி சிறை என்றால் போதும் சிலிர்த்துக் கொண்டு கிளம்பிவிடுவார். சிறை அவருக்கு கூழ் அல்ல அமுது!

‘‘அந்தக் காலத்தில் கல்லூரியில் சேர்ந்திருந்தோமே தவிர, எங்கே படித்தோம். என்னுடைய அறைக்கு தான் திராவிட இயக்க அனைத்து இதழ்களும் வரும். மாணவர்கள் மொத்தமாக உட்கார்ந்து படிப்போம். அண்ணாவும் சம்பத்தும் மோதிக் கொண்டு இருந்தபோது நாங்கள் அண்ணாவை தான் ஆதரித்தோம். ஆனாலும் சம்பத்தும் கண்ணதாசனும் எழுதியதை ரசித்தோம்'' என்று மறைக்காமல் சொன்னார். கண்ணதாசன் எழுத்தை படித்து விட்டு அந்த கட்டுரைக்கு மேலே இரண்டு கண்களை வரைந்து கண்ணீர் சிந்துவது போல சித்திரித்திருந்தாராம் அமுதன் அப்போது.

அப்படியானால் படிப்பு பாழாகி இருக்குமே என்று நினைக்கிறீர்களா? அதுதான் பொதுப்புத்தி. அமுதன் வாங்கிய பட்டங்கள், மாதத்தின் முப்பது நாட்களும் முப்பது நாட்களில் 720 மணிநேரமும் விடாமல் படித்தவர்களால் கூட பெற முடியுமா என்பது சந்தேகமே!

பி.ஏ.பொருளாதாரம், எம் ஏ. சமூகவியல், எம்.ஏ.அரசியல், எம்.ஏ.வரலாறு, எம்.ஏ.தத்துவம் , சமயம், எம்.ஏ.பொருளாதாரம், எம்.பில்., பி.எச்.டி... இன்னும் முடியவில்லை. எல்.எல்.பி. என்று அஞ்சல் வழியில் அறிவிப்பில் வரும் அனைத்துப் பட்டங்களையும் பெற்றவர் அமுதன்.

அரசியல் ஆர்வம் ஒருவரின் படிப்பை கெடுத்துவிடாது என்பதற்கு உதாரணம் அமுதன்.

பெரியார், அண்ணா, ஜீவா, கலைஞர், நாவலர், நாஞ்சிலார் எனப் பலப்பல தலைவர்களை அந்தக் கல்லூரிக்கு அழைத்து பேச வைத்தவர். இவர் தலைமையில் கலைஞர் பேசிய தலைப்பு தான்: 'குறளோவியம்'.

கல்லூரி படிப்பு முடிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த அமுதன், அங்கே ஹோம்லேண்ட் தனிப்பயிற்சிக் கல்லூரியை தொடங்கி இருக்கிறார். அங்கே போய் படித்தால் அரசியல் பேசுவார்கள் என்று பிள்ளைகளை பலரும் அனுப்பாமல் இருந்தார்களாம். நன்றாக கற்றுத் தருகிறார்கள் என்று ஊருக்குள் தகவல் பரவியதும் தான் கூட்டம் கூடி இருக்கிறது. இந்த தனிப்பயிற்சிக் கல்லூரியில் தமிழ் கற்றுக் கொடுப்பவராகத் தான் காளிமுத்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர்களோடு பெ.சீனிவாசனும் வந்து சேர்ந்தார்.

இவர்கள் மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அமுதனுக்கு ராமலிங்காபுரம். காளிமுத்துவுக்கு ராமுத்தேவன்பட்டி. சீனிவாசன், அப்பயநாயக்கன்பட்டி. அதுவும், அந்தக் காலத்துல என்று அவர் பேசத் தொடங்கினால், காதைக் கடன் கொடுத்து விட்டு காத்திருக்கலாம். மூளையும் மனதும் நிறைந்து விடும். அவ்வளவு தகவல்கள் சொல்வார். ஏ.வி.பி. ஆசைத்தம்பியில் ஆரம்பித்து எஸ்.எஸ்.தென்னரசுவில் கொண்டு வந்து முடிப்பார்.

இலக்கிய அணி சார்பில் நடந்த நிகழ்ச்சி பற்றிச் சொன்னார்.

‘‘கவியரசு முடியரசனுக்கு நாங்கள் மணிவிழா நடத்தினோம். முடியரசன் அவர்கள் பேசும்போது, ‘ஒரு காலத்தில் இயக்கத்தில் உறவு முறையால் அழைத்தோம். அய்யா என்று பெரியாரையும் அண்ணா என்று அண்ணாவையும் அழைத்தோம். இப்போது கலைஞர் என்று அழைப்பது ஒட்டவில்லை. அதனால் கலைஞரை சின்ன அண்ணா என்று அழைப்போம்' என்று பேசிவிட்டார்.

அடுத்து பேசிய கலைஞர், அதனை மறுத்தார். 'அண்ணா மறைந்துவிட்டார் என்று நினைத்தால் தான் சின்ன அண்ணா என்று ஒருவரை அழைக்க முடியும். அண்ணா மறைந்ததாகவே நான் நினைக்கவில்லை. அதனால் சின்ன அண்ணா என்பது பொருந்தாது. நான் தான் உடன்பிறப்பே என்று அழைக்கிறேனே.இதை விட என்ன உறவுச் சொல் தேவை?' என்றார் கலைஞர். இப்படி யார் எதைச் சொன்னாலும் மறுத்து பதில் வைக்கும் திறன் கொண்டவர் கலைஞர்,'' என்று ஒரு முறை சொன்னார். ஓரி என்ற மன்னன் அம்பு எய்தான். அந்த அம்பு, யானையின் உடலைத் துளைத்து, புலியின் உடலைத் துளைத்து, மானின் உடம்பை துளைத்து, பன்றியின் உடம்பைத் துடைத்து, கடைசியில் உடும்பையும் துளைத்துவிடுகிறது என்று ஒரு பாடல் உண்டு. அதாவது மன்னனின் வீரத்தைச் சொல்கிறது இந்த பாடல். ஓரியின் விழாவில் பேசிய கலைஞர் சொன்னாராம். ‘யானையின் உடம்பைத் துளைத்த அம்பு, புலியின் உடலைத் துளைக்க முடியாது. ஏனென்றால் யானையை விட புலியின் உயரம் குறைவு. புலியின் உடலை துளைத்த அம்பு மானின் உடலை துளைக்க முடியாது. மானின் உயரம் குறைவு. மானின் உடலை துளைத்த அம்பு பன்றியின் உடலை துளைக்க முடியாது. பன்றியின் உயரம் குறைவு. பன்றியின் உடம்பை துளைத்த அம்பு உடும்பின் உடம்பை துளைக்க முடியாது. அதன் உயரம் குறைவு. எனவே புலவர் சொல்வது எப்படி சாத்தியம்?'என்று கலைஞர் கேட்டாராம். ஓரியை பெருமைப்படுத்தும் விழாவில் இப்படி பேசி விட்டாரே என்று பலரும் நினைத்தார்கள்.

அப்போது தான் கலைஞர், ‘மன்னன் நேராக இருந்து அம்பு எய்திருந்தால் இது சாத்தியம் இல்லை. ஆனால் மன்னன், மலை உச்சியில் இருந்து அம்பு எய்கிறான். யானை மீது பட்டு, அதன் கீழ் உள்ள புலி மீது பட்டு, அதன் கீழ் உள்ள மான் மீது பட்டு, அதன் கீழ் உள்ள பன்றி மீது பட்டு, உடும்பு மீது பட்டிருக்க முடியும்' என்றார், கலைஞர். இப்படி எல்லாம் அந்தப் புலவர் நினைத்திருப்பாரா என்று தெரியாது. கலைஞர் இப்படி சிந்தித்தார். அந்த அறிவுக்கூர்மை தான் அவரை இத்தனை ஆண்டுகள் தலைவராக வைத்திருந்தது‘ என்றார், அமுதன் ஒரு முறை.

 ஆனந்தவிகடனில் எனது கட்டுரைகள் வெளியானதும் அதைப் படித்துவிட்டு அழைப்பார். உடன்பாடாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும் அவரது விமர்சனம் அறிவுப்பூர்வமானதாக இருக்கும். எடுத்துக் காட்டுகளோடு இருக்கும். அவரை ஒருமுறை குறிப்பிட்டு ஆனந்த விகடனில் எழுதி இருந்தேன். உடனே அழைத்து மிக நீண்ட நேரம் அவரது வாழ்க்கை குறித்துப் பேசினார். இளமைக் காலம் முழுவதுமே நினைவு கூர்ந்தார். 40 நிமிடங்களுக்கு மேல் செல்பேசியில் பேசினார். படிக்கக் கிடைக்காத வரலாறுகள் அவை. இப்படிப்பட்ட தனிமனித நூலகங்கள் அரசியல் களத்தில் அதிகம். அந்த நூலகங்கள் அந்த மனிதர்கள் எரிக்கப்படுவதோடு சேர்ந்து எரிக்கப்பட்டு விடுகின்றன.

‘ஸ்ரீவில்லிபுத்தூர் அமுதன் பேசுகிறேன்ங்க' என்று தான் எப்போதும் சொல்வார். ஆனால் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர சபைக்கு நின்றபோதும் தோற்றார். சிவகாசி சட்டமன்றத்துக்கு நின்றபோதும் தோற்றார். ‘தேர்தலுக்கு அமுதன் நிற்பார், வழக்கமாக தோற்பார்' என்று பேராசிரியர் ஒருமுறை பேசினார். தேர்தல் அரசியல் அவருக்கு கைகூடவில்லை. அதனால் தான் இலக்கிய அணியில் மனநிறைவான வேலைகளைப் பார்த்தபடி இருந்தார். ‘அமுதன் பேசினால் அடடா அதற்குள் முடித்துவிட்டாரே என்று நினைக்கும் படி பேசுவார்' என்றார் கலைஞர். உதயக்கதிர், திருப்புமுனை என்ற இரண்டு இதழ்களை நடத்தியவர். காளிமுத்து திமுகவில் இணைந்தபோது அமுதன் வகித்த இலக்கிய அணிச்செயலாளர் பதவி அவருக்கு போனது. காளிமுத்து கட்சி மாறியதும் மீண்டும் அமுதனுக்கே அந்தப்பதவி தரப்பட்டது. ‘‘காளிமுத்து கல்லூரிக் காலத்தில் அமுதனிடம் தான் வளர்ந்தான். அமுதனிடம் தான் லட்சிய உணர்வைப் பெற்றான். இலக்கிய உணர்வையும் பெற்றான். எனவே கலைஞர் சரியாகத்தான் கொடுத்துள்ளார்'' என்று காளிமுத்து சொன்னார். இப்படிப் பலருக்கு உணர்வை ஊட்டிக் கொண்டே இருந்தவர் அமுதன். பதவிகளில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்!

அமுதனை நினைத்தால் இராசபாளையம் சங்கீதா கண்ணன் நினைவுக்கு வருவார். பழைய காலத்தை நினைவூட்டும் பதுங்கு குழிகள் இவர்கள். அதில் தான் இருப்பார்கள். அவ்வப்போது வெளியில் வந்து பேசிவிட்டு போய்விடுவார்கள். எங்களது வாழவந்தாள் புரத்துக்கு அருகில் உள்ள கிழவிகுளம் கிராமத்தைச் சேர்ந்த கதிரேசன் அவர்களது மகன்கள் தான் அமுதனை அடிக்கடி நினைவூட்டுவார்கள்.எல்லா இயக்கங்களிலும் உணர்வூட்ட அமுதன்கள் இருந்தார்கள்!

அவர் தன்னை ‘திமுகவில் ஓர் ஆதிவாசி' என்று சொல்லிக் கொண்டார். அவரது கொள்கையாகச் சொன்னது: ‘ தலைவர் சரணம்! இயக்கம் சரணம்! கொள்கை சரணம்!'

பிப்ரவரி, 2020.