இந்தியா வருடத்திற்கு 165 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்தி செய்து உலக அரங்கில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த முதலிடம் நம்முடைய உற்பத்தித்திறனால் வந்தது இல்லை.
எண்ணிக்கையால் வந்திருக்கிறது. உலக கால் நடை எண்ணிக்கையில் 55% எருமைகளும், 16% மாடுகளும் இந்தியாவில் தான் இருக்கிறது. நாம் கால்நடைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவில்லை. மேற்கத்திய நாடுகளில் அதிகரித்திருக்கிறார்கள். அமெரிக்காவில் 90 லட்சம் மாடுகளிலிருந்து 9 கோடி டன் பால் உற்பத்தி செய்கிறார்கள். இந்தியாவில் 90 லட்சம் மாடுகள் 1.4 கோடி டன் பால் உற்பத்தி மட்டுமே கொடுக்கிறது. இந்திய கால்நடைகள் அதன் உற்பத்தி திறனிலிருந்து 26-51% குறைவான உற்பத்தியையே கொடுக்கின்றன. இதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக தீவனங்கள், மரபியல், சுகாதாரம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றைச் சொல்லலாம்.
இதில் தீவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனங்கள் தேவைக்கு குறைவாகவே உள்ளன. தனியார் நிறுவனங்கள் அனைத்தும் அடர் தீவன உற்பத்தியில் கவனம் செலுத்துகின்றன. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் அடர் தீவனங்களின் விலை 50% மேல் உயர்ந்துள்ளது. இங்கு கால்நடை வளர்ப்பவர்கள் பெரும்பாலும் சிறு மற்றும் குறு விவசாயிகளே. தீவன விலையேற்றத்தால் அவர்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக பசுந்தீவன உற்பத்தியை நாம் அதிகப்படுத்த வேண்டும். அதிக மகசூலைத் தரும் பசுந்தீவனங்களை விளைவித்து தீவன செலவைக் குறைத்து பால் உற்பத்தியை அதிகரிக்கலாம். சோளம் போன்ற வறட்சியைத் தாங்கக்கூடிய பயிர்கள் நம் சூழலுக்கு உகந்தவை.
அடுத்ததாக நம்முடைய நாட்டின் கால நிலைக்கு தக்க வகையிலான, அதிக உற்பத்தி தரக்கூடிய கால்நடை இனங்களை மரபியல் வல்லுனர்கள் உருவாக்க வேண்டும். இந்தியாவின் கிர் வகை மாடு பிரேசில் நாட்டில் நாளொன்றுக்கு 40 லிட்டர் பால் கொடுக்கிறது. நம்முடைய நாட்டின் இனத்திலிருந்து அவர்கள் அதிக உற்பத்தியை எடுக்கும்போது நாம் ஏன் செய்ய முடியாது?
நம்முடைய முன்னோர் சொன்னது போல வருமுன் காப்பதே சிறந்தது. கால்நடைகளில் நோய் தாக்கி மருத்துவத்திற்கு செலவிடுவதைவிட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் செலவைக் குறைக்கலாம். தடுப்பூசி, குடற்புழு நீக்கம் மற்றும் சுகாதாரமான சுற்றுப்புறம் மூலம் பெரும்பாலான நோயைத் தடுக்கலாம். மடி வீக்க நோய் வந்தால் மருத்துவ செலவு, உற்பத்திக் குறைவால் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படும். ஆனால் 300 ரூபாய் செலவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் மடி வீக்க நோய் வராமல் தடுக்க முடியும்.
கால்நடை விரிவாக்கப் பணிகளை அந்தந்த இடம் மற்றும் சூழல் சார்ந்து இன்னும் மேம்படுத்த வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு பால் உற்பத்தி என்பது அவர்களின் தேவை சார்ந்தது மட்டுமல்ல, பொருளீட்டும் வழி என்பதை உணரச்செய்து அதற்கான வழிகளை காட்டிடல் வேண்டும்.
இறுதியாக, பெண்கள் பெருமளவில் ஈடுபட்டிருக்கும் விவசாயம் சார்ந்த துறைகளில் திறன் மேம்பாட்டுக்கான இடங்களுக்கு அவர்களை அனுமதிப்பதில்லை. அதனால் பெண்கள் மட்டுமே இயங்கக்கூடிய குழுக்கள் அமைப்பது அவசியம். அப்படிச் செய்ததனால் உற்பத்தித்திறன் பெருகியதை பீகார், தெலுங்கானா மாநிலங்களில் கண்கூடாக நான் கண்டேன்.
(தனம்மாள் ரவிச்சந்திரன், ஆராய்ச்சி மருத்துவர்,சர்வதேச கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்)
மார்ச், 2019.