கவிதை என்பது மொழியின் அக இயக்கம். இதை சரித்திரம் என்னும் நமது திட ஞாபகத்தின் காலவெட்டில் வைத்து அனுமானிப்பது மிகச் சிக்கலானது. இன்று ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்களாவது சமகால கவிதை மொழியில் பேரற்புதங்களுடன் தீவிரம்கொண்டிருக்கிறார்கள். மையம் கலைந்த ஒரு கொண்டாட்டமும், கட்டற்ற ஒரு சுதந்திரமும், பலநூறு பாதைகளுமாக திறந்துகொண்டுள்ள அந்த இடத்திலிருந்து பெயர்களை, சில செல்நெறிகளை, சில மையங்களைத் தொடும் அடையாளச் செயல்பாடு அர்த்தமற்றதாகிவிடும். இரண்டாயிரத்துக்குப் பிறகான கவிதையின் சில பொதுச் சுபாவங்களை கவனித்துப் பார்க்கலாம்.
மொத்தமாக பதுங்கு குழிகளில் வந்து விழுந்தார்கள்
அப்பா நாம் ஏன் பாம்பைப் போல
படுத்தபடியே நகர்கிறோம்''
இறைவன் வானிலிருந்து
திராட்சைகளை வீசிக்கொண்டிருக்கிறார் மகளே!
அவை புளிக்கும் திராட்சைகள்
உனக்குப் பிடிக்காதல்லவா (ச.துரை)
இன்றைய கவிதை மனச்சூழலின் ஒரு சிறு உதாரணமாக இக்கவிதை. எவ்வளவு அடர்த்தியான துயரமும் பேரவலமும் எத்தனை எடையற்று, ஒரு இறகு போல அசாதரணமான எளிமையுடனும் அபத்தநகையாகவும் இதில் சொல்லப்பட்டுள்ளது எனப் பார்க்கலாம். கண்ணீரின் ரத்தத்தின் பேராற்றை ஒரு மலராக இக்கவிதை மாற்றிவிடுகிறது. யுத்தப் பெருந்துயர்களை காவியங்கள் செவ்வியலாக மாற்றும் ஒரு ருசியும் வலியின் பேராழமும் இந்த நான்கு வரிகளில் ஒரு விளையாட்டு போல தொடப்பட்டுவிட்டது. வேடிக்கை, விளையாட்டு, அபத்தங்கள், பாரமற்ற தன்மை, உரைநடை, பகடி, புனைவுத் தன்மை எல்லாம் இன்றைய கவிதையின் இயல்புகளாகியிருக்கின்றன.
சமகால கவிதையின் தோற்றுவாய்கள் தொண்ணூறுகள் என்னும் பித்தும் கனவுமான பெரும் சுழல்களின் ஒரு பதின்மத்தில் பொதிந்துள்ளன. அகநிலையில், சிறுபத்திரிகை கையளித்த படைப்பு மொழியும் ஞானமும் ஒரு பரிணாம உச்சிக்கும், புற நிலையில் மொழியின் அதிகாரப் புலங்களிலிருந்து விலக்கப்பட்டிருந்த பெருந்திரளானோர் வாசிப்பிலும் &எழுத்திலும் பிரவேசித்ததும் உடனிகழ்ந்ததன் ஒரு பெரும்பருவம் அது. அழகியல் & அரசியல் , வடிவம்& சாரம், மனம் & உடல், புனைவு & யதார்த்தம் என்ற பழைய இருமைகள் எல்லாம் பாகுபாடு நீங்கி முயங்கியதன் புதிய ஒரு அழகியலால் கவிதையில் பல தேவதைகளின் நடனம் தொடங்கிய காலம். தொண்ணூறுகளை அதற்கு முந்தையதிலிருந்து சற்று வேறுபடுத்த வேண்டுமானால், அதற்கு முன்பு நவீன கவிதை என்றாலே அகவயத் தீவிரம், இறுக்கமான மொழி, கவிஞனின் தன்னிலை, சுயத்தின் அழுத்தம், மனமே ஒரு நிலப்பரப்பாக இருப்பது, ஒரு துயருணர்வு மேலோங்கி இருப்பது போன்ற சில பொது இயல்புகளைக் கூறலாம். தொண்ணூறுகளில் இருந்து இரண்டாயிரங்களில் முகிழ்த்த கவிதை பல பொருள்களும் கதாமாந்தர்களும் கொண்டதாக, உடலின் சொற்களாக, காட்சிகளும் புனைவுகளும் கூடியதாக, கொண்டாட்டமும் விளையாட்டுகளுமானதாக உருமாறி வந்தது. இவை எல்லாம் சில பொதுவியல்புகள் மட்டுமே. தொண்ணூறுகளில் இருந்து இரண்டாயிரங்களில் முகிழ்த்த இக்கவிஞர்களின் ஒவ்வொரு தனியுலகும் நட்சத்திரத்திற்கும் நட்சத்திரத்திற்குமான இடைவெளிகளுடன் பிரத்யேகம் கொண்டவை.
பெண்ணுடல் ஒரு ஆண்மைய சமூக , பண்பாட்டு , மொழிப் புனைவாக முடக்கப்பட்டிருப்பதினின்றும் விடுவித்து, அதன் சுயபாலின ஆற்றலையும் படைப்புத் தீவிரத்தையும் முன்வைத்து உடலரசியல் கவிதைகளாக ஒரு பயணம் தீவிரப்பட்டது. மாலதி மைத்ரியின் கவிதையொன்றில் யோனி ஒரு பட்டாம்பூச்சியாக பறக்கும் விடுதலைக் களிப்பு.. குட்டி ரேவதியில் பெண்ணுடலுக்கும் பிரபஞ்சத் துக்குமான நீரோட்டங்கள்.. சுகிர்தராணி, சல்மா என நீளும் ஒரு வரிசை.
ஒரு பக்கம் எல்லையற்ற சுதந்திரத்திலும் ஒவ்வொரு கணமும் புத்துருவாகிக்கொண்டும் ஆயிரம் உடல்கள், ஆயிரம் வரலாறுகளின் பல்லுடலியாகவும் மறுபக்கம் வரலாற்றால் மொத்தமாக வெறுமைசெய்யப்பட்டு மதிப்பு
நீக்கமான மனித இருப்புக்குள் நுகர்வுதாண்டிய உயிர்ப்பை உசுப்பியபடியும் இன்றைய கவிதை இயங்குகிறது. இன்றைய கவிதையின் சிறப்பம்சமே அதன் குறிப்பிட்ட திசையற்ற தன்மைதான். உண்மையில் ஒவ்வொரு தொகுதியும் ஒவ்வொரு கவிஞரும் ஒரு தனிப் போக்கு, தனி இயக்கம். இந்த மையமிழப்புதான் நிகழ்கவிதையின் கொண்டாட்டமும் ஊழும்கூட.
இளங்கோ கிருஷ்ணன், வெய்யில், சபரிநாதன், பெரியசாமி இசை, நரன், பெரு விஷ்ணுகுமார்,
பச்சோந்தி, மௌனன் யாத்ரிகா, ச.துரை, வே.நி.சூர்யா, றாம் சந்தோஷ், என முடிவற்று
நீளும் இவையெல்லாம் ஒரு நபர்களை மட்டும் குறித்த பெயர்களல்ல. சபரிநாதன் கவிதையில் இந்த பிரபஞ்ச இருப்பே ஒரு மகா அபத்தமாகியும் மறுகணம் பேரழகுமாகித் தெரிகிறது. ஒரு பக்கம் நமது காலத்தின் உள்ளீடின்மையை, குழப்படிகளை வேடிக்கை செய்தபடியே
செவ்வியலான மகத்துவங்களையும் எட்டிப் பிடிக்கும் அருங்குணம்கொண்டவை சபரிநாதன் கவிதைகள்.
மின்மினியே
யார் தொட்டு எழுப்பியது உனை
எந்தக் கரம் உனக்குப் பார்வை தந்தது
எவ்வுடல் நீங்கிப் போகிறாய் எவ்வுடல் நோக்கிப் பாய்கிறாய்
கனவா நனவா கருத்த வெட்ட வெளியில்
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்
எத்தனை யுகங்கள் இருட்டில் அமர்ந்திருந்தாய் கண்ணே ஊமையாய்
பின் எத்தனை நூற்றாண்டு காய்ச்சலோடு சுருண்டு கிடந்தாய் நிலத்தடியில்..
இதுவரை சொன்ன சமகால கவிதைப் பொதுவியல்பின் எல்லா வரையறையையும் அபத்தமாக்கும் செவ்வியலான, பாடல்போன்ற, நித்தியத் துயரமும் அழகுமான இக்கவிதையின் அகாலத் தன்மையை எந்த மதிப்பீட்டு வரம்பிலும் பொருத்திவிட முடியாது.
அதிகாரம், ஒடுக்குமுறைகளின் அரசியல் விஞ்ஞானங்களை உச்சபட்ச கவித்துவத்துவத்துடன் அழகியலுடன் ஊடறுத்தலும், நவீனம், செவ்வியல், வழக்காறுகள் எனப் பல வெளிகளில் மயங்கிச் செல்லும் மர்மமும் ஆயுதங்களும் பொதிந்தவை வெய்யில் கவிதைகள்.
ஒரு நுண்ணியிரி
விரும்பியபடியே
யானையைத் தன் உணவுமேசைக்கு வரவழைத்துப்
புசிக்கிறது.
அதில் எந்த மர்மமும் இல்லை என்கிறது விதி.
பற்களை இழுத்துச் செல்லும் எறும்புகள் கோர்க்கின்றன
மதயானையின் புன்னகையை.. ( வெய்யில் )
இதில் உள்ள நாடகம், வன்முறை, ஊழ், விளையாட்டு எல்லாவற்றையும் ஒரு கதவு போல எளிதாகத் திறந்துவிடுவது சாத்தியமல்ல. வே.நி.சூர்யாவின் கவிதையில் மனிதத்தலை எப்போதும் கில்லட்டினுக்கு அடியில் துண்டிக்கப்பட தயாராக இருக்கிறது. வரலாறு என்னும் பெரும் இயந்திரத்துக்குள் மனித உடல் துண்டுதுண்டாகிக் கொண்டிருக்கும் குருதியும் இரைச்சலும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
அவன் நினைவுகளின் தண்டவாளங்களில்
புகைரதம் போல்
ப்ளேடொன்று புகைவிட்டபடி போய்க்கொண்டிருந்தது
ஸ்டேஷன்களை மறந்த ரயில்
அவன் கழுத்துக்கு திடீரெனப் பாய
(பார்ப்பதற்கு மான் துள்ளுவதைப் போல)
சிவப்பாய் கடுமழை பொழிந்ததங்கு ..
( வே.நி.சூர்யா)
‘ழ' என்ற பாதையில் நடமாடும் பெரு விஷ்ணுகுமாரின் விளையாட்டு, விசித்திரம், விபரீதப் புனைவு என, காலம் இடத்தில் அடுக்கப்பட்ட பொருள்களை பல தலைகீழாக்கங்கள் செய்யும், நமது நிதான புலன்களை ரோலர் கோஸ்டர் அதிர்வுக்குள்ளாக்கும் கவிதைகளை மீண்டும் மீண்டும் அணுக வேண்டும்.
அவர் நூதனக் கிறுக்கனாயிற்றே..
தன் காது தும்மலிடும் துளைகளையெல்லாம்
அடிக்கடி இடமாற்றிக்கொள்வார்
டம்ளருக்குள் இறங்கி குளித்துக் கொண்டிருப்பார்
தலையணையுறைக்குள்
மொட்டைமாடியை நுழைத்துக்கொண்டிருப்பார்
சட்டைப் பொத்தான்களை மாத்திரைகளாக விழுங்கிக் கொண்டிருப்பார்
உயரதிகாரி ஒருவரை அறைந்துகொண்டிருப்பார்
இன்றேல் அந்தப்பக்கம்
யாரிடமாவது போய்
அவரைப்பற்றியே விசாரித்துக்கொண்டிருப்பார். (பெரு. விஷ்ணுகுமார்)
அறிவியல் மெய்மைகளுடன் கவிதையின் விளையாட்டைத் தொடங்கும் பாம்பாட்டி சித்தனின் இஸ்ரேலியம் தொகுப்பு ஒரு தனிப்பாதை. பகடியால் எல்லா மகத்துவங்களையும் தொட்டுக் கவிழ்க்கும் இசையின் கவிதையொன்றில் , கடவுள் தன் கைகளில் நம்மை ஒரு பந்தென ஏந்தி மேலும் கீழும் என தட்டி அசைத்துக்கொண்டே ''உன்னைக் கைவிடுவதுமில்லை விட்டுவிடுவதுமில்லை'' என வேடிக்கை செய்வதும் , மனிதன் தேவனே எம்மை தயவுசெய்து விட்டுவிடும் என மன்றாடுவதுமான இடம் நமது கடவுளற்ற காலத்தின் அற்புதமான ஒரு நகைச் சித்திரம்.
பாசிச அரச முறைகள் , ஒற்றைப் பேரடையாளங்களின் சித்தப்பிறழ்வான கும்பல் கொலைக்களங்களில் ஒவ்வொரு நாளும் பீதியடைந்துகொண்டிருக்கும் நமது பொது இருப்பையும் பன்மிய நனவிலியையும் தூண்டியபடி ‘பீஃப்' கவிதைகளுடன் வரும் பச்சோந்தி சமகாலத்தின் தீவிர அரசியல் மனச்சான்றாகி மொத்த கவிதைப் பரப்பையும் கலவரப்படுத்துவதை எளிதில் கடந்துசெல்ல முடிவதில்லை.
இன்று இருபதிருபதில் நிற்கும்போது , கவிதை பல சுழல்கள், பல கண்கள் கொண்டதாக இருக்கும்போதே நுகர்விய மதிப்புகளும் சந்தை ஊக்கங்களும் தொடர்ந்து இலக்கிய வெளிகளை முற்றுகையிட்டுக்கொண்டிருக்கும் காலத்திலும் இருக்கிறோம். மனிதனை வெறும் நுகர்வோனாகச் சுருக்கும், அவனது புலன்களை பூதாகரப்படுத்திக்கொண்டே சாரத்தை நோய்மையிலாழ்த்தும் பயன்மதிப்புகளுக்கு எதிராகத்தான் கவிதை தொடர்ந்து தீவிரம்கொள்கிறது. உன்னதங்கள் எல்லாம் கவிழ்க்கப்பட்டுவிட்ட காலத்திலும் கவிதை ஒரு அதீதத்தை நோக்கித்தான் எம்புகிறது.
முலையை கனியோடு ஒப்பிடமாட்டேன். கனி ஒரு நுகர்பொருள். புசிக்க புசிக்க அது மெல்லச் சிறுத்து சூன்யத்தில் முடிந்து இல்லாமல் போகிறது, எனவே முலைகளை மலர்களோடே ஒப்பிடுவேன் என்பது போன்ற ஷங்கர் ராமசுப்பிரமணியனின் ஒரு கவிதை இருக்கிறது.. அதில் ஒரு பகுதி..
‘‘முலை ஒரு கனி அல்ல. கனியின் சாறும் தசையும், பசியை ஆற்றக் கூடியது. கனிகளை அணில்கள், குருவிகள், என் கவிதையில் வரும் செம்போத்துப் பறவைகள் மற்றும் வீட்டு விலங்குகள் சிலவும் உட்கொள்ளும். நான் கவிஞனென்பதால் முலைகளை மலரென்று அழைப்பேன். உபயோக மதிப்பைத் தாண்டி நீங்கா அழகின் இறவாமைக்குள் அதன் அலகு நீள்வதால் முலைகளை நான் மலரென்றே அழைப்பேன்.''
நுகர்வுக்கும் பயன்மதிப்புக்கும் வெளியிலேயே எப்போதும் அசாதாரணமாக உயிர்த்திருக்கும் கவிதையையும் இதில் அப்படியே பொருத்திப் பார்க்கலாம்.
பிப்ரவரி, 2020.