தொ. பரமசிவன் தமிழகத்தின் முன்னணி பண்பாட்டு ஆய்வாளர்களுள் ஒருவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி விருப்ப ஒய்வு பெற்று, தற்போது பாளையங்கோட்டையில் வசிக்கிறார்.
நாட்டார் தெய்வங்களின் மூல வடிவங்கள் மற்றும் அதன் வைதீக மாற்றங்கள் குறித்தும், அந்தெய்வங்கள் தங்களை எவ்வாறு தக்கவைத்துக்கொண்டுள்ளன என்பது பற்றியும், அந்திமழை இதழுக்காக மீண்டும் தன் கள நினைவுகளை அசைபோட்டார் தொ.ப.
‘‘நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிபலி, பலி வடிவஙகள்தான் காட்சிகளாக நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்துள்ளது. நாட்டார் தெய்வங்கள் ‘தத்துவவிசாரங்களிலே' நொறுங்கிப் போகுமளவு மெலிதானவையல்ல. அவற்றின் வேர்கள் வலிமையானவை. அவை வட்டாரத்தன்மையும் உயிர்ப்பும் உடையன. தமிழ்நாட்டின் சமூக வரலாற்றினையும் பண்பாட்டு வரலாற்றினையும் கண்டுணருவதற்குத் துணை நிற்கும் சான்றுகளில் குறிப்பிடத்தகுந்தது தாய்த்தெய்வ வழிபாடாகும். இந்தாய்த்தெய்வ வழிபாடே சிறுதெய்வவழிபாடு, நாட்டார் தெய்வவழிபாடு என்ற சொல்லாட்சிக்கு முன்னமே உள்ளது. தமிழ்நாட்டில் வணங்கபெறும் தாய்த் தெய்வங்களில் மாரியம்மன், காளியம்மன், பொன்னியம்மன், இசக்கியம்மன், பத்திர காளியம்மன் என்ற பெயர்களில் வழிப்படுகின்றனர். தென்மாவட்டங்களில் பெண் மக்கள் பெயர் வழக்குகளில் மாரியம்மாள், இசக்கியம்மாள், காளியம்மாள் என்றும் ஆண் மக்கள் பெயர் வழக்குகளில் மாரியம்மன் , காளி, இசக்கியப்பன் என்றும் இப்பெயர் காணப்படுகிறது. தமிழகத்தின் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் லோகநாயகி, லோகாம்பாள் என்ற பெயர் வழக்குகள் காணப்படுகின்றது. பொதுவாக இப்பெயர் வழக்கு, பார்ப்பனர் அல்லாதோர்க்கிடையில் தான் காணப்படுகிறது.
மேலும் தமிழ்நாட்டுத் தாய்த்தெய்வம் பற்றிய குறிப்புகள் பெரும்பாலும் இலக்கியங்களில் இருந்துதான் நமக்குக் கிடைக்கின்றன. சங்க இலக்கியங்களும் பிற்கால இலக்கியங்களும் தரும் குறிப்புகளின்படி குழந்தை பெற்ற தாயினைக்குறிக்கும் சொல்லாகச் ‘செல்வி' என்ற சொல்லே காணப்படுகின்றது. ‘காடுகெழு செல்வி, கடல்கெழு செல்வி' என்ற சொல் முற்காலத்தில் பயன்படுத்தப்பெற்றுள்ளது.
தாய்த்தெய்வவழிபாட்டின் மூல வடிவமான ‘யோனி'த் தெய்வ வழிபாடு. (வட்டார வழக்கில் ‘சட்டிபானை கழித்தல்') இன்னும் தமிழ்நாட்டுக் குடும்பங்களில் நடைமுறையில் உள்ளது. இத்தெய்வத்துக்கான வடிவங்கள், முகம் இல்லாமல் (முகத்துக்கு பதிலாக தாமரைப்பூ) ஒன்றிரண்டு மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன. பெரும்பாலான தமிழர் வீடுகளில் பிறந்த குழந்தை உயிரோடு இருந்தால் வீட்டின் உள்ளாகவோ வீட்டின் பின்புறமாகவோ மகப்பேற்றுத் தீட்டைக் கழிப்பதற்குச் செய்யும் சடங்கானது யோனி வழிபாடே ஆகும். இந்த சடங்கானது விளக்கு முன்னால் சோறு படைத்து, கருவாட்டு குழம்பு வைத்து, ஒரு அவித்த முட்டையில் ஒரு குச்சியை நட்டுவைத்து படைப்பார்கள். இந்த படையலை ஆண்கள் பார்க்கக்கூடாது. வெளியே போங்க என்று சொல்லிவிடுவார்கள். இந்த படையலை குழந்தை பெற்றவளும் குழந்தைப்பெறுவதற்கு தொட்டு பிடித்தவளும் சாப்பிடுவார்கள்.
தாய்த்தெய்வவழிபாட்டின் அடையாளங்களாக எதையெல்லாம் குறிப்பிடலாம்?
பழந்தமிழர்களின் தாய்த் தெய்வக் கோயில்களான அம்மன் கோயில்கள் 99 விழுக்காடு வடக்கு நோக்கியே அமைந்துள்ளன. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் முப்புறமும் கடல் சூழ்ந்த நாடாகவே தமிழகம் இருந்துள்ளது. எனவே பகைப்படை வடதிசையிலிருந்து மட்டுமே வரமுடியும். தெய்வம் வடக்குத்திசை நோக்கித் தன் மக்களைக் காக்க ஆயுதம் ஏந்தி நிற்கின்றது என்பதே தொல் வரலாற்று உண்மை. மேலும் பழந்தமிழர்களின் தாய்த் தெய்வம், அரசுகள் உருவானபோது போர்த் தெய்வமாக மாற்றப்பட்டு ‘‘கொற்றவை'' என்ற பெயரோடு வழங்கப்பட்டது இப்பெயருக்கான வேர்ச்சொல் ‘கொல்' என்பதாகும். பெருந்தெய்வக் கோயில்களில் ஆண் தெய்வத்திற்கு அருகில் நின்று கொண்டு அல்லது அமர்ந்துகொண்டிருக்கும் உமை, திருமகள், ஆகிய தெய்வப் படிமங்களின் கையில் நீலம், தாமரை ஆகிய மலர்களே காட்டப்பட்டிருக்கும். அக்காலத்தில் தாய்த் தெய்வம் இப்போது போல ஊரின் நடுவில் இருக்கவில்லை. அதன் வாழிடம் காட்டுக்குள் இருந்தது. ஆண்வாடையின்றித் தனியாக தாய்த்தெய்வம் அமர்ந்துள்ள கோயில்களே இன்றும் தமிழ்நாட்டில் அதிகமாக காணப்படுகின்றன. தாய்த்தெய்வங்கள் அனைத்தும் கையில் ஆயுதங்கள் ஏந்தியுள்ளன என்பதே தனித்தன்மையாகும். வடக்கு நோக்கி அமர்ந்திருத்தல், கையில் ஆயுதம் ஏந்தியிருத்தல், தலையில் பெரும்பாலும் அக்கினி மகுடம் கொண்டிருத்தல், கழுத்தில் காரையும் (கழுத்தை ஒட்டி அணியும் நகை) பொட்டும் அணிந்திருத்தல், நிமிர்ந்த முகம் ஆகியவை தாய்த்தெய்வத்தின் தனி அடையாளங்களாகும். வழிபாட்டு முறையில் பொங்கலும், முளைப்பாரியும், சாமியாட்டமும், இரத்தப்பலியும் தாய்த் தெய்வத்தை அடையாளம் காட்டும் தனிக்கூறுகள்.
தாய்தெய்வ வழிபாட்டில் இருந்து வைதீக வழிபாட்டிற்கு மாறிய கோயில்களைப்பற்றி...
தமிழ்நாட்டில் பெருந்தெய்வக் கோயில்கள் சிலவற்றில் குறிப்பாகச் சிவன் கோயில்களில் & தந்தைத் தெய்வத்தைவிட தாய்த்தெய்வம் ஆழ்ந்த பக்திக்கும் பெருத்த மரியாதைக்கும் உரியதாக விளங்குகின்றது. இவற்றோடு சில நுட்பமான சடங்கியல் அசைவுகளும் இக்கோயில்களில் காணப்படுகின்றன. கன்னியாகுமரியிலுள்ள குமரித் தெய்வம், திருநெல்வேலி காந்திமதி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, என்பன போன்ற சில தாய்த் தெய்வங்களை இவ்வகையில் குறிப்பிட்டுச் சொல்லாம். மதுரை மீனாட்சித் தெய்வம் தானே தனியுரிமையோடு முடிசூடி அரசாளும் தெய்வமாகும். இக்கோயில் திருவிழாவில் திருமணச் சடங்குக்கு முன்னர் அவள் மட்டும் முடிசூடும் ‘பட்டாபிஷேகம்' என்னும் திருவிழாச் சடங்கும் ‘திக்குவிஜயம்' என்ற பெயரில் அரசி நகரசோதனை செய்யும் திருவிழாச் சடங்கும் நிகழ்த்தப் பெறுகின்றன. அவள் அரசியே தவிர அவள் கணவன் அரசன் அல்லன். இப்படி ஒரு தனித்தன்மைகொண்ட தெய்வம் இந்தியாவில் வேறேங்கும் இல்லை. சிலப்பதிகாரம் குறிப்பிடும் ‘தென்னவன் குலமுதல் கிழத்தி' ( பாண்டியரின் குலதெய்வம்) இவளாகவே இருந்திருக்கவேண்டும். இத் தொடர்பையும் தொன்மையினையும் காட்டும் நுட்பமான சான்று ஒன்று அண்மையில் கிடைத்துள்ளது. எருமைத் தலை அரக்கனை அழிப்பதற்காக நவராத்திரித் திருவிழாவில் இவள் தவம் செய்யும்போது எட்டாம் திருநாள் விழாவில் ‘‘வேப்பம்பூ மாலை சூடுதல்'' என்பது தமிழ்நாட்டில் வேறு எங்கும் கண்டும் கேட்டும் அறியாத செய்தியாகும். பாண்டியர்களின் அடையாள பூமாலையான வேப்பம்பூமாலையை இத்தெய்வம் சூடிக் கொள்வது இத்தெய்வம் பாண்டியரின் குல தெய்வம் என்ற கருத்தினை உறுதி செய்கின்றது. பாண்டியர்களின் குடிப்பெயர்களில் ஒன்றாக வேம்பன் என்ற பெயரைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுவதும் இங்கு கவனிக்கத்தக்கது. இதேபோலதான், திருஆனைக்கா அகிலாண்டேஸ்வரி தெய்வமும் தாய் தெய்வ வழிபாட்டில் இருந்து வைதீகதெய்வமாக மாறியிருக்கிறது. இந்த கருத்தை யாரும் இதுவரை மறுத்து ஆய்வுசெய்து எழுதியது கிடையாது. மதுரை மீனாட்சியை சமணர்களின் ‘‘யக்க்ஷி'' என்றும் சிலர் கூறுகின்றனர். வணங்கியும் செல்கின்றனர். ஆனால் தமிழர்கள் நாகூர், வேளாங்கண்ணி, பொட்டல்புதூர் கந்தூரி விழாவிற்கு சென்று வழிபடுவதுபோலதான் நான் இதைப்பார்க்கிறேன். மற்றப்படி சமணர்களுக்குத் தொடர்பு இல்லை.
சாதிய ரீதியாக தெய்வங்கள் வணங்கப் படுவதைப்பற்றி...
சில தாய் தெய்வங்கள் குறிப்பிட்ட மக்கள் திரளுக்குரியவையாக, பொதுப்பட எல்லோராலும் வணங்கப்பட்டாலும், குறிப்பிட்ட சில சாதியாருக்கு அவை பெரியஅளவில் ‘உணர்வு. உரிமை' உடையவனவாக காணப்படுகின்றன. எடுத்துக் காட்டாக தமிழ்நாட்டில் பத்திரகாளி அம்மனைப் பெருமளவு நாடார் சாதியினரே வணங்குகின்றனர். அதுபோலவே ஆசாரி என்று அறியப்படும் கம்மாளச் சாதியினர் பெரும்பாலும் காமாட்சி அம்மனைக் குலத்தெய்வமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறாகத் தமிழ்நாட்டில் பல நூறு தாய்த் தெய்வங்களை அடையாளம் காணமுடியும். அண்மைக்காலமாகத் திருவிழா நாட்களில் மட்டும் தாய்த்தெய்வத்தை வைதீகப்படுத்தி பார்ப்பனர்கள் பூசை செய்கின்றனர். ஏனைய நாட்களில் தாய்த் தெய்வத்திற்கான பூசை, பார்ப்பனர் அல்லாத சாதியாராலேயே செய்யப்படுகின்றது. எனவே இவற்றின் பூசாரிகளாகப் பண்டாரம், வேளார் (குயவர்), உவச்சர் (கம்பர்) போன்ற பார்ப்பனரல்லாத சாதியரே உள்ளனர்.
தமிழர்கள் கடவுளை சனநாயக ரீதியில் அனைத்து மதக்கடவுளையும் வழிபட்டு வருகின்றனர். அவைகளைப்பற்றி சொல்லுங்கள்...
வைதீகச் சார்பற்ற எளிய தமிழ் மக்கள் பிற சமயத் தெய்வங்களையும் தமதாக ஏற்றுக்கொள்ளும் சனநாயகத் தன்மை உடையவர்களாக இருக்கின்றார்கள். வீரமாமுனிவர் தான் கட்டிய கோயிலில் தாய் மரியாளுக்கு அவர் ‘பெரிய நாயகி' என்றே பெயரிட்டார். முதலாம் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலில் அம்மனின் பெயர் பெரியநாயகியே ஆகும். இந்த உணர்வோடுதான் கத்தோலிக்கக் கிறித்துவத் தேவாலயங்களை கிறித்துவர் அல்லாத மக்கள் ‘இயேசு கோயில்' என்பதற்குப் பதிலாக மாதா கோயில் என்று பெயரிட்டழைத்து வருகின்றனர். அதேபோல் நெல்லை, குமரி மாவட்டங்களில் பரவலாக வணங்கபெறும் இசக்கியம்மன் ஒரு சமண சமயத்தெய்வமாகும். சமணமதம் தென்தமிழ் நாட்டில் கி.பி.13 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பூண்டற்றுப்போயிற்று. ஆனால், ‘‘அம்பிகா யக்ஷி'' என சமணப் புராணங்களில் கூறப்பெறும் இசக்கி யம்மன் மட்டும் அதே பெயரிலும் பகவதியம்மன் என்ற பெயரிலும் பல சிற்றூர்களில் இன்றளவும் வழிபடப்பெறுகின்றது. சமணமதம் வேரற்றுப் போனாலும் அம்மதம் உருவாக்கிவைத்திருந்த தாய்த் தெய்வங்களை வைதீகத்திற்கு அடிமைப்படாத தங்களுடைய வழிபாட்டுக்குரிய தெய்வங்களாக ஏற்றுக்கொண்டு பெண்கள் அக்கோயில்களைப் பேணிக் காத்து வருகின்றனர்.
தமிழகத்தின் தாய்த்தெய்வ வழிபாடு நூற்றுக்கணக்கான பரிமாணங்களை உடையது. இப்பரிமாணங்கள் அத்தெய்வங்கள் வழிபடப்பெறும் வட்டாரத்தின் சமூக அரசியல் வரலாற்றோடு தொடர்புடையன. இவ்வரலாற்றை மேலும் ஆய்வு செய்ய மாணவர்கள் முன்வரவேண்டும். அப்போதுதான் தமிழகச் சமுதாய வரலாற்றின் உறுதியான அடித்தளம் கட்டியமைக்கப் பெறும் என்பதில் ஐயமில்லை'' - என்று பெருமூச்சு விட்டு ஏக்கத்தோடு கூறுகிறார் தொ.பரமசிவன்.
ஏப்ரல், 2020.