சிறப்புக்கட்டுரைகள்

தாத்தாவும் பேரனும்

ராஜா கண்ணன்

இந்த முறை பாலுமகேந்திரா இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்போடு நடிப்பையும் கையிலெடுத்து அட்டகாசம் செய்திருக்கிறார். தலைமுறைகள் உயிர்ப்புடன் இருக்கும் திரைப்படம்.  தாத்தா சேரில் ஒய்யாரமாக தூங்கும் பேரனின் விரல் பிரித்து மிட்டாய் சாப்பிடுவது, கிராண்ட்பா யுவர் ஆவன்னா வாஸ் லிட்டில் ஷேக்கி என்று பேரன் சொல்வது, பதிவுசெய்யப்பட்ட நாய் குரைப்பைக் கேட்டு பதறி எழுவது என்று காட்சியமைப்புகள் ஒவ்வொன்றும் ஒரு ஹைக்கூவைப்போல செதுக்கப்பட்டு மொத்தப்படமும் ஒரு ஹைக்கூ தொகுப்பைப்போல மிளிர்கிறது. ஒகேனக்கல்லை ஒட்டிய காவிரிக்கரையோர கிராமத்தின் அழகை பாலுமகேந்திராவின் கேமரா ஆசை ஆசையாய் அள்ளிப்பருகி நமக்கு விருந்து வைக்கிறது.

பழமையில் ஊறிப்போன கிராமத்துப்பெரியவர் சுப்புவின்(பாலு) மகன்(சசி) சென்னையில் மருத்துவர். தன் அப்பாவை மீறி அனாதை விடுதியில் வளர்ந்த, தமிழ் தெரியாத, கிருத்துவப்பெண்ணான தன் சக மருத்துவரை(ரம்யா ஷங்கர்) மணக்கிறான். சுப்பு தன் சாவுக்குக்கூட வரக்கூடாதென்று அவனை விரட்டி விடுகிறார். பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பின் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே திரும்பவும் நெருக்கம் உருவாக, மொழியாலும், தலைமுறை இடைவெளியாலும் தள்ளியிருக்கும் தாத்தாவும் பேரனும் எப்படி நெருக்கமாகிறார்கள், ஒருவரால் மற்றவர் எப்படி மாறுகிறார்கள், இருவருக்கும் ஏற்படும் கலாச்சார அதிர்ச்சிகள்/ பறிமாற்றங்கள் படத்தின் மையச்சரடு.

இந்த எளிமையான கதைக்கு நடுவே மேலே படிக்க ஆசைப்பட்டு, பெரியவரால் கல்யாணம் செய்துவைக்கப்பட்டு நான்காவது குழந்தை பெண்ணாகப் பிறக்க காத்திருக்கும் மகளின் சோகங்கள், வேறு தெருவில் இருக்கும் அவருடைய இரண்டாவது மனைவியின் பதின்வயதுப்பெண்ணுக்கும் மருத்துவ மகனுக்கும் நடக்கும் பாந்தமான உரையாடல்கள், பெரியவருக்கும் மருமகளுக்கும் இடையே மெல்ல மெல்ல மலரும் நெருக்கம் என்று இயக்குநரின் முத்திரை படம் முழுவதும்.

பாலுமகேந்திராவை அவருடைய ட்ரேட் மார்க் தொப்பியிலும், கருப்புக்கண்ணாடியிலும், ஜீன்ஸ் சட்டையிலும் கம்பீர கனவானாக பல வருடங்கள் பார்த்த நமக்கு, வழுக்கைத்தலையுடன், நாடி, நரம்பு தளர்ந்த, எளிமையான வயோதிகராகப்பார்ப்பது ஆரம்பத்தில் அதிர்ச்சியளித்தாலும், சிறிது நேரத்தில் அறிவுஜீவி இயக்குனர் மறைந்து அந்த கிராமத்து முதியவரின் பிம்பமே மேலோங்குகிறது. இது நடிகர் பாலு மகேந்திராவின் பெரிய வெற்றி. படத்தில் வரும் பெண்கள் வழக்கம் போல ஒப்பனை இல்லாமலும் (இல்லாததாலோ?) அழகாக இருக்கிறார்கள். பெரியவரின் பழமையான வீடும், காவிரியும் படத்தின் முக்கியப்பாத்திரங்கள்.

 கொரியப்படமான த வே ஹோமுடன் இதை ஒப்பிடலாம். ஒரு நகரச்சிறுவன் கிராமப்பாட்டியுடன் கழிக்கும் நாட்களும், அவனுள் ஏற்படும் மாற்றங்களும் அப்படத்தில் காட்டப்படுகிறது. இரு படங்களுக்கிடையே உள்ள பெரிய வித்தியாசம் இந்தப்பாத்திரப்படைப்புகள் தான். கொரிய சிறுவன் மேல்தட்டு நகரச்சிறுவர்களுக்கேயுரிய கர்வம், திமிர் போன்ற குணங்களோடிருக்கிறான். பாட்டியின் எதிர்பார்ப்பில்லாத பாசம் எப்படி அவனை மாற்றுகிறதென்பது தான் மையக்கதை. தமிழில் சிறுவன் பெற்றோர் சொல் கேட்பவனாக, தாத்தாவை ஆரம்பத்திலிருந்தே மதிப்பவனாகத்தான் காட்டப்படுகிறான். தாத்தா தான் அதிகம் மாற்றம் தேவைப்படுகிறவராக சித்தரிக்கப்படுகிறார். முப்பது வருடங்களுக்கு பிறகு பேரன் சசிக்குமார் தாத்தா சொல்லிக் கொடுத்ததையெல்லாம் நினைத்துப்பார்ப்பது போல் காட்டினாலும் தாத்தா தான் அதிகம் கற்றுக்கொள்கிறார். ஓரு சிறுவன் மாறுவதும், ஒரு முதியவர் மாறுவதும் கண்டிப்பாக ஒன்றல்ல.

இளையராஜா இந்தப்படத்துக்கு தேவையான, உறுத்தாத, ஜீவனுள்ள இசையை அளித்திருக்கிறார்.  சசியின் தங்கையாக வரும் வினோதினி கர்ப்பிணியாக அண்ணனிடம், கோபத்தோடும், இயலாமையோடும், பாசத்தோடும் கண்களில் நீர் வழியப்பேசும் அந்த ஒரு காட்சியில் அசத்துகிறார். மாஸ்டர் கார்த்திக்கின் சின்னச்சின்ன முகமாற்றங்கள், உடல்மொழி இயக்குனரின் வெற்றி.

முதிர்ந்து தளர்ந்த காலத்தில் பிள்ளைகளுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்க தயாராகவிருக்கும் முந்தைய தலைமுறை தாத்தா இவர். ‘தமிழையும்,இந்த தாத்தாவையும் மறந்துடாதடா’ என்று பேரனிடம் சொல்வது போல் வாத்தியார் நமக்கு பிரம்பெடுக்காமல் அன்புப்பாடம் எடுத்திருக்கிறார்.

ஜனவரி, 2014.