சிறப்புக்கட்டுரைகள்

தாத்தாவின் கருப்பராயன்!

எம்.கோபாலகிருஷ்ணன்

வெயில் தணிந்த மாலை வேளையில் பெருமாநல்லூர் சாலை எம். ஜி.ஆர். காட்டின் பாறைக்குழி மேட்டில் தாத்தாவுடன் நடந்துகொண்டிருந்தபோதுதான் கேட்டேன் ‘‘வாராவாரம் முனியப்பன் கோயிலுக்கு ஏன் போறீங்க தாத்தா?''.

தாத்தா நல்ல உயரம். கருத்து நீண்டு உரமேறிய கை கால்கள். அவருடன் நடக்கும்போது மூச்சுவாங்கும். எப்போதும்போல தாத்தா பதில்பேசாமல் நடந்தார். மேட்டுப்பாளையத்தில் வீனஸ் பேக்கரியைக் கடந்து சாமக்காட்டுக்குத் திரும்புவதற்கு சற்று முன்பாக செல்வி ஸ்டோருக்கு அருகில்  இடதுபக்கமாய் உள்ளது முனியப்பன் கோயில். பெரிய ஆலமரம். ஓட்டுக் கூரையுடனான கோயில் திண்ணையில் இருபுறமும் உட்கார்ந்ததுபோல் வாளேந்திய இரண்டு முனியப்பன்கள். எதிரில் நுனியில் எலுமிச்சைகள் செருகிய வேல்கம்புகள். கோயிலின் இடதுபக்கமாய் பெரிய குதிரைகள் இரண்டு.

கோயிலுக்கு பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடைக்காரர் தாத்தாவைக் கண்டதும் பத்து பைசா சூடக்கட்டிகள் நான்கை எடுத்து வைத்தார். வேட்டி மடிப்பிலிருந்து ஐம்பது பைசா நாணயத்தை எடுத்துத் தந்தார். சூடக்கட்டிகளை கையில் எடுத்துக்கொண்டு கயிற்றில் தொங்கிய வாராந்தரிகளை நோட்டமிட்டேன். அப்பா வழக்கமாக இந்தக் கடையிலிருந்துதான் குமுதமும் கல்கண்டும் வாங்கி வருவார்.

கோயிலில் மங்கிய விளக்கொளி. தாத்தாவோடு வேடிக்கை பார்த்தபடி நடந்துவரும்போதிருந்த உற்சாகம் வடிந்து பயம் தலைகாட்டியது. ஆலமரத்தில் அடைந்த பறவைகளின் இரைச்சல். சூழ்ந்திருக்கும் இருள். காற்றில் ஒலிக்கும் மணிகள். முறுக்கிய மீசையும் திரண்ட கண்களுமாய் நெஞ்சு நிமிர்த்தி உக்கிரத்துடன் வீற்றிருக்கும் உருவங்களை நிமிர்ந்து பார்க்காமல் தாத்தாவுடன் ஒண்டிக்கொண்டேன். சூடமேற்றி கைகூப்பி வேண்டி நிற்கும் தாத்தாவின் முதுகில் வேர்வை வழிந்தது. மண்ணில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். குதிரைவீரர்களின் பீடத்திலும் இரண்டு சூடங்களை கொளுத்தினார். வெளிச்சத்தில் உருவங்கள் மேலும் உக்கிரம் கொண்டன.

‘அடுத்தவாரம் தாத்தாவோட வரக்கூடாது' என்று நினைத்தபடியே வேகமாக அவருக்கும் முன்னால் நடந்தேன். காற்று வீசியடிக்க வேல்கம்பின் மணிகள் ஒலித்தன.

அன்றிரவு வாசலில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் சுருட்டை புகைத்தபடியே சொன்னார். ‘‘ஊர்ல இருக்கற கருப்பராயனை அடிக்கடி போய் பாக்க முடியறதில்லை. அதான் வாராவாரம் இங்க இருக்கற முனியப்பனை பாத்துட்டு வரேன்.''

திருப்புக்குளியூர் என்று அழைக்கப்படும் அவிநாசியின் புகழ்பெற்ற சிவாலயத்துக்கு தெற்கில் அமைந்துள்ளது உமையஞ்செட்டிபாளையம். அவநாசியிலிருந்து சோமனூர் செல்லும் பாதையில் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள விலக்கில் மேலும் இரண்டு கிலோமீட்டர் கிழக்கில் அமைந்த சின்னஞ்சிறிய கிராமம். நாற்புறமும் விவசாய நிலங்கள் சூழ்ந்த கிராமத்தின் மத்தியில் நாற்பது கைத்தறி நெசவாளர் குடும்பங்கள். கிராமத்துக்குள் நுழையும்போது அரசமரத்தடி பிள்ளையார் கோயில் அதற்கடுத்து குலதெய்வமான சௌடேஸ்வரி அம்மன் கோயில். கோபுரமும் கொடிமரமுமாய் அமைந்த கோயில் அல்ல அது. காற்றோட்டமான கூடமும் அம்மன் பேழையையும் பூசைக்குத் தேவையான பொருட்களையும் பாதுகாப்பதற்கான சின்னஞ்சிறிய அறையையும்கொண்ட ஓட்டுக்கூரையுடனான இரண்டு அங்கண வீடுதான் அம்மன் கோயில். நவராத்திரியின்போது ஒன்பது நாட்களும் களைகட்டும். ஆற்றங்கரையிலிருந்து அம்மனை அழைத்து வரும் ‘சக்தி அழைப்பி'ல் தொடங்கி பண்டிகை முடிந்து அவளை ‘அனுப்பி'த் தரும் வரையிலும் ஊரில் தறிச்சத்தம் கேட்காது. ‘சக்தி அழைப்பி'ன்போது வன்னி மரத்தில் அம்பெய்தி அசுரனை அழித்ததும் சலங்கைகள்கொண்ட கத்திகளை தோளிலும் மார்பிலும் மோதியபடி ‘பா தாயே பா' என ஆவேசத்துடன் அம்மனை அழைத்து வருவார்கள் பக்தர்கள். மீண்டும் அம்மன் ஊருக்குள் உலா வரும்போதும் ‘கத்தி போடு'வது நடக்கும். அம்மன் வழிபாட்டின் முக்கிய அம்சம் என்பதால் சிறுவரிலிருந்து பெரியவர் வரையிலும் எல்லோருமே கத்திபோடுவதுண்டு.  திருவிழா முடிந்த பிறகு தறிபுகுந்து வாட்டமிட முடியாமல் தோளிலும் மார்பிலும் மஞ்சள் பத்துடன் திண்ணையில் உட்கார்ந்திருக்கவும் நேரும். பத்து நாள் கொண்டாட்டம் முடிந்து மீண்டும் தறியில் இறங்கி வாட்டம்போட்டு சேலையை நெய்து முடித்தால்தான் அவிநாசி சந்தைக்குப் போக காசு கிடைக்கும். ஆனால் தறியில் இறங்கி வாட்டமிடுவதும் பழைய வேகத்துடன் நெய்வதும் மறுநாளே சாத்தியப்படாதது. உடல் களைப்பும் மந்தமும் நீங்கி சோம்பலை உதறிவிட்டு வேலையில் கவனம் செலுத்தும்போது கையிருப்பு காலியாகியிருக்கும்.

பெரிய பண்டிகை நாட்களைத் தவிர அமாவாசை பூசை உண்டு. மற்ற நாட்களில் அம்மன் கோயிலில் பெரிய பரபரப்பு இருக்காது.

அதிகமும் வீட்டைவிட்டு வெளியில் வராத தாத்தா வெள்ளிக்கிழமை சாயங்காலம் இடுப்பு வேட்டியைச் சுற்றிக்கொண்டு புறப்படுவார். விழுதுகள் இறங்கி நிற்கும் பெரிய ஆலமரத்தைக் கடந்து வேகமாக மேற்குதிசையில் நடப்பார். அத்திமரத்திலிருந்து உதிர்ந்த பழங்கள் மண்ணில் சிதைந்து கிடக்கும். வண்டிப் பாதையின் வடக்குப்பக்கம் வெள்ளாங்காட்டுத் தோட்டத்தில் ஆளுயரத்துக்கு வளர்ந்து நிற்கும் சோளத்தட்டுகள். கிணற்றுமேட்டுக்கு அடுத்து பருத்திக்காடு. பனைமர வரிசையுடனான அப்புக்குட்டியின் தோட்டத்தைக் கடந்து வறட்டுப் பள்ளம். பெரிய மழை விடாது பெய்தால்தான் இரண்டு நாட்களுக்கு தண்ணீர் சலசலத்தோடும். பள்ளத்தைக் கடந்து மேலேறியதும் அடர்ந்த கிளுவை வேலியுடனான மயிலான் தோட்டம். வடக்குப்பக்கமாய் திரும்பும் ஒற்றையடிப் பாதையில் கொஞ்ச தூரம் நடந்ததுமே கருப்பராயன் கோயில் வந்துவிடும். பருத்த பாதிரிமரத்தினடியில் கிழக்குமுகமாய் சிறுமேடை. மத்தியில் எண்ணெய் மினுக்கத்துடன் கருப்பராயன். காய்ந்த சந்தனம் குங்குமம். உலர்ந்த செம்பருத்திகள். எதிரில் மணிகளுடன் வேல்கம்புகள். தடித்த செவ்வெறும்புகள் ஊர்ந்திருக்கும். காற்றில் அணையாமலிருக்க கற்களைத் தடுப்பாக அமைத்த விளக்குப் பிறையில் மண் தீபம்.

இடுப்புவேட்டியிலிருந்து சூடத்தை எடுத்து கருப்பராயனுக்கு முன்னால் வைத்து கொளுத்தும்போது மாலை மங்கியிருக்கும். கண்களை மூடியபடியே நின்றிருப்பார். காற்றில் சலசலக்கும் சோளத்தட்டுகள். மரங்களில் அணையும் பறவைகள். சூடம் கரைந்து நெருப்பு அணையும் சமயத்தில் நெடுஞ்சாண்கிடையாக மண்ணில் விழுந்து வணங்குவார். எழுந்து அப்படியே அமர்ந்து கருப்பராயனை பார்த்துக்கொண்டிருப்பார். சில நொடிகள்தான். சூடம் அணைந்ததுமே எழுந்து ஒற்றையடிப் பாதையில் நடக்கத் தொடங்குவார்.

ஊரில் இருந்தவரைக்கும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் கருப்பராயனுக்கு சூடமேற்ற முடிந்த தாத்தாவுக்கு திருப்பூருக்கு வந்த பிறகு அது சாத்தியப்படவில்லை. ஆரம்பத்தில் அமாவாசை நாட்களில் மட்டும் போய் வந்தார். பின்னர் அதுவும் முடியவில்லை.

ஆனால் கருப்பராயனை மறக்கக்கூடாது என்பதற்காக வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு முடியெடுத்து காது குத்துவது கருப்பராயன் கோயிலில்தான் என்று முடிவு செய்ததின் பலன் எங்கள் குடும்பத்தின் இன்றைய நான்காம் தலைமுறைக்கும் உமையஞ்செட்டி பாளையம் கருப்பராயன் கோயிலில்தான் முடியெடுப்பதும் காதுகுத்துவதும் என்று தொடர்கிறது.

வேளாண்மையைத் தொழிலாகக்கொண்ட கொங்கு நிலப்பகுதியில் விவசாய நிலங்களின் ஒரு அம்சம் காவல் தெய்வங்கள். தொடக்கத்தில் சிறு கற்களை நிலத்தில் பதித்து வழிபடத் தொடங்கியிருக்கவேண்டும். பின்னர் சிறு மேடை அமைக்கப்பட்டிருக்கும். மண் விளக்கு, வேல் கம்பு என்ற மாற்றங்கள் தொடர்ந்திருக்கும். முறுக்கு மீசையும் உருட்டு விழிகளுமாய் வலது கையில் வாளோங்கி நிற்கும் உருவத்தை எப்போது அடைந்ததென்று தெளிவில்லை. குதிரைவீரர்களும் நாய்களும் சிறு உருக்களும் சேர்ந்துகொண்டன. கொங்குப் பகுதியில் பயணம் செய்யும்போது விளைநிலங்களுக்கு நடுவிலும் சாலையோரத்திலும் வண்ணப்பூச்சுடனான கருப்பராயன் கோயில்களை காணமுடியும். பெரும்பாலான கோயில்களில் வாளேந்திய கருப்பராயன் சிலை அமைக்கப்பட்டிருந்தபோதும் ஆதியில் பதிக்கப்பட்ட கல்தெய்வங்களுக்கும் பூசையுண்டு. பல இடங்களிலும் ஒன்பது கன்னிமார்களுக்கு இன்றும் சிலைகள் கிடையாது. 

மயிலான் தோட்டத்தில் அமைக்கப்பட்ட கருப்பராயனை தாத்தா எப்போது எதற்காகப் பற்றிக்கொண்டார் என்று தெரியவில்லை. அவரைத் தொடர்ந்து இன்னும் சிலரும் கருப்பராயனை வழிபடத் தொடங்கி இன்று ஆடி மாதத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில் பண்டிகைக் களை கொண்டுவிடுகிறது. அன்றிருந்த எவரும் இன்று உமையஞ்செட்டிபாளையத்தில் இல்லை. எல்லோருமே திருப்பூருக்கும் அதையொட்டிய பகுதிகளுக்கும் குடிபெயர்ந்துவிட்டனர். அமாவாசை நாளிலும் ஆடி மாதத்திலும் கருப்பராயனை வழிபட வருகிறார்கள். பாதிரி மரம் இன்னும் அடிபருத்து கிளையோங்கி நிழல் விரித்திருக்கிறது.  தோட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தபோதும் கருப்பராயன் கோயிலுக்கென்று தனிப்பாதையும் தோட்டத்துக் கிணற்றிலிருந்து குழாய்களை அமைத்து கோயிலுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார்கள். உடைந்த மண் குதிரைகளை சீரமைத்து உயரமான கூரை அமைத்து குதிரை வீரர்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். வேம்பும் பாதிரியும் நிழல்விரித்திருக்க கோயிலைச் சுற்றி உட்கார்ந்து இளைப்பாறலாம். உண்ணலாம். அருகில் தென்னைமரங்கள். வேலியோரம் முழுக்க கருவேப்பிலைகள். வடக்குப்பக்கம் பள்ளத்தில் அடர்ந்த வேலிகாத்தான்களுக்கு நடுவில் மயில்கூட்டம். ஊருக்குள் இருக்கும் பூசாரிக்கு தகவல் கொடுத்துவிட்டால் மறுநாள் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடுகிறார். பொங்கலிடுவது, முடியெடுத்து காது குத்துவது, கிடா வெட்டுவது உட்பட எல்லா சடங்குகளும் கொண்டாட்டத்துடன் நடந்தேறுகிறது.

ஆடிமாதத்தில் பலரும் கிடாய் வெட்டி பொங்கலிடுவதுண்டு. விருந்து பரிமாற வசதி யில்லாததால் கிடாயை மட்டும் பலியிட்டுவிட்டு எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். சிலர் சேவல் பலியிடுகிறார்கள்.

இப்போது வருடத்தில் ஒருமுறை உமையஞ்செட்டிபாளையம் கருப்பராயன் கோயிலுக்குச் செல்வதென்பதை வழக்கமாக்கியிருக்கிறோம்.

ஏதேனுமொரு விடுமுறை நாளில் திருப்பூரிலிருந்து காலையில் ஏழு மணிக்கெல்லாம் மொத்தக் குடும்பமும் புறப்பட்டு வருவோம். உதிர்ந்த இலைகளையும் குப்பைகளையும் கூட்டிப் பெருக்கிவிட்டு அடுப்பு மூட்டி பொங்கலுக்கான ஏற்பாடுகள் நடக்கும். இன்னொரு பக்கம் காலை உணவாக வீட்டிலிருந்து கொண்டுவந்த இட்லி பரிமாறப்படும். வீட்டின் நான்காம் தலைமுறையான ஏழு பிள்ளைகளுக்கும் ஒரேயொரு செல்லப் பெண்ணுக்கும் இதே இடத்தில் முடியெடுத்து காதுகுத்திய நாட்களைப் பற்றி பேச்செழும். தலையில் தண்ணீர் தெளித்து கைவைப்பது பிடிக்காமல் முடியெடுக்க வந்தவரை திட்டிக்கொண்டே அழுத கதையும் காதுகுத்த வந்தவருக்கு காணிக்கைக் கொடுக்கக்கூடாதென்று அடம்பிடித்த கதையும் சிரிப்பொலிக்கு நடுவே மீண்டும் சொல்லப்படும்.

இடையில் வாரிசுகளை அழைத்துக்கொண்டு ஊருக்குள் செல்வோம். ‘இதுதான் நம்ம தாத்தவோட வீடு', ‘இதுதான் பஜனை கோயில். இங்கதான் நம்ம தாத்தா மத்தாளம் வாசிச்சார்', ‘இங்கதான் நம்ம பெரிய தாத்தா வைத்தியம் கத்துக்கிட்டார்' என்று பழைய கதைகளை நினைவுபடுத்துவோம்.

சிதைந்த மண் சுவர்களும் உடைந்த மரக் கதவுகளும் காலத்தின் சாட்சிகளாய் இன்றும் உண்டு. காலையில் பாவு நீட்டி கஞ்சிபோட்டு உலர்த்திய கட்டாந்தரைகள் இப்போது இல்லை. ஆனால் ஆலமரங்களும் அத்திமரங்களும் மூப்படைந்து நிற்கின்றன. ஊருக்குள் எங்கும் தறிச்சத்தம் இல்லை. சில வருடங்கள் வரைக்கும் ஊருக்குள் போகும்போது மூதாட்டிகள் சிலர் விசாரிப்பதுண்டு. தாத்தாவைப் பற்றிச் சொன்னவுடன் சுருக்கங்கள் நிறைந்த முகத்தில் சிரிப்பு விரிய ‘அட நம்ம பொன்னா செட்டியாரோட வாரிசுங்களா... போச்சது போ. இத்தன வருஷங்கழிச்சு மறக்காம வந்துருக்கீங்க' என்று மகிழ்ந்ததுண்டு. இப்போது அவர்களும் இல்லை.

பொங்கல் பொங்கி தயாரானதும் பச்சரிசி இடித்துப் பிடித்த ‘விளக்குமா'வை தலையில் வைத்து மகள் கோயிலைச் சுற்றி வருவாள். அதன் பின் அபிஷேக பூசையும் அலங்கார பூசையும். ஒருமணிக்கு பூசைகள் முடிந்ததும் மதிய உணவு. அபிஷேகம் பொங்கலுடன் தக்காளி சாதமும் புளி சாதமும். உண்டு முடித்து எல்லாவற்றையும் சுத்தப்படுத்திவிட்டு புறப்படும்போது சூடிய பூக்களுடன் விளக்கொளியில் மினுமினுக்கும் கருப்பராயனைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொள்வோம்.

இந்த முறை மே முதலாம் தேதி விடுமுறையன்று கோயிலுக்குப் போக வாய்த்தது. பிள்ளைகளுக்கு ஊர்சுற்றிப் பார்ப்பதில் ஆர்வமில்லை. பூர்விக ஊரும் கதைகளும் பழகிப்போய் அலுத்துவிட்டன. வேப்பமரத்தடியில் விரிக்கப்பட்ட ஜமுக்காளத்தில் படுத்தபடி அவரவர் அலைபேசியில் ஆழ்ந்திருந்தனர். மயில்கள் அகவின. கருவேப்பிலைப் பழம்கொத்த வந்த கிளிகளும் பறந்திருந்தன.

தாத்தாவையும் அதன்பின் வாரிசுகளையும் ஆட்கொண்டிருக்கும் மயிலான் தோட்டத்துக் கருப்பராயன் இன்னும் அதே பழைய கோயிலில் எண்ணெய் மினுக்கத்துடன் அருள்பாலித்து நிற்கிறார்.

ஏப்ரல், 2020.