ஐ பி.எல். போட்டிகள் பொதுவாக சி.எஸ்.கே,வுக்கும் பிற அணிகளுக்கும் இடையே நடக்கும் போட்டிகளாக மாறிவிட்டன, பொறுப்பாகச் சொன்னார் மஞ்சள் சட்டைக்காரர் ஒருவர்.
இது வரை நடந்த 11 ஐ.பி.எல் போட்டிகளில் இரண்டு போட்டிகளில் சி.எஸ்.கே அணி இல்லை. மீதி ஒன்பது போட்டிகளிலும் இறுதி நான்கு அணிகளில் ஒன்றாக சி.எஸ்.கே இடம்பெற்றது. ஏழுமுறை இறுதிப் போட்டிகளில் ஆடியது. மூன்று முறை கோப்பையை வென்றிருக்கிறது. இதில் தற்போதைய வெற்றி மிகவும் சிறப்பானது. காரணம் இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு சி.எஸ்.கே மீண்டும் களமிறங்கி வென்றிருப்பதுதான்.
சி.எஸ்.கே அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்கள் பெரும்பாலான பேருக்கு வயது முப்பதுக்கும் மேல் என்பது ஒரு குறையாகவே முன்வைக்கப்பட்டது. ஆனால் அதுதான் எங்கள் வலிமை என்று காட்டிவிட்டார் 36 வயதான தோனி. இறுதிப்போட்டியில் ஆடிய வாட்சன் 117 ரன்கள் அடித்தார். அவர் வயது 36. ஆஸ்திரேலிய அணியிலிருந்து அவர் ஓய்வுபெற்றுவிட்டார். ஆல்ரவுண்டராகக் கருதப்படும் அவர் முன்பு ராயல்.சேலெஞ்சர்ஸ் அணிக்கு ஆடுவார். அவர் கடைசிவரிசையில் இறக்கப்படுவார். அவரை ஒரு பந்துவீச்சாளராகத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால் தோனி அவரை ஓபனிங் ஆட்டக்காரராக இறக்கியதுடன் ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் பயன்படுத்தினார். ‘‘வாட்சனுக்கு காலில் அடிபட்டிருந்தது. அதனால் அவரைப் பாதுகாக்கவேண்டிய கடமை எங்களுக்கு இருந்தது'' என்று சொன்னார் தோனி. அதே போல் சி.எஸ்.கே.வின் பயிற்சியாளர் பிளெமிங் ‘‘ அணியை உருவாக்கும்போது சென்னை ஆடுகளத்திற்கு ஏற்ற வீரர்களை தேர்ந்தெடுத்தோம். ஆனால் திடீரென்று சென்னை போட்டிகளை புனேவுக்கு மாற்றிய போது எங்களுடைய வீரர்கள் தேர்விலும் உத்தியிலும் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டி வந்தது. வீரர்கள் அதைப் புரிந்து கொண்டு செயல்படுத்தினார்கள்' என்றார். கடைசி நேரத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு அணியை தயார் செய்வது அவ்வளவு சுலபமான விஷயமில்லை. ஆனால் துரித கதியில் அதை செய்து காட்டினார் தோனி.
சி.எஸ்.கேயின் ஆரம்ப காலத்தில் இருந்தே அனுபவமிக்க சீனியர் ஆட்டக்காரர்களை நம்புவது என்கிற போக்கு உண்டு. ஹெய்டன், ஹஸ்ஸி ஆகியோர் முந்தைய காலங்களில் ஆடினர். முதல் ஆண்டு ப்ளமிங் ஓபனிங் ஆட்டக்காரராக இறங்கினார். ஹஸ்ஸி சிறப்பாக ஆடி ஒருமுறை ஆரஞ்சு தொப்பி பெற்றார். பிந்தைய சீசனில் மெக்கல்லம், ஸ்மித் ஆகிய இருவரும் ஆடினர்.
சென்னை கிங்ஸ் அணி எப்போதுமே தாங்கள் ஒரு குடும்பம் என்ற நினைவிலேயே இருப்பதுதான் வெற்றிக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. தோனி தன் மனைவி மகளுடன் வருவதுபோல் விஜய், உள்ளிட்ட வீரர்களும் தங்கள் குழந்தைகளுடன் எல்லா ஆட்டங்களுக்கும் வருவர். இறுதிப்போட்டி வெற்றி முடிந்தவுடன் வீரர்களின் குழந்தைகளை மைதானத்தில் அமர வைத்து ஒரு வீரர் விளையாடிக் கொண்டிருந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
ரவீந்திர ஜடேஜா வெற்றிக்கு பின்பாக பேசும் போது, ‘‘தோனி எப்பவும் சொல்லும் விஷயம் ஒன்றுண்டு. ஜெயித்தால் அணியாக ஜெயித்தோம் என்பார். தோற்றாலும் அணியாக தோற்றோம் என்பார். தோல்விகளுக்கு எந்த தனிப்பட்ட வீரரையும் பலிகடாவாக மாற்ற மாட்டார்'' என்றார். இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் சிறந்த பீல்டரான ஜடேஜா முக்கியமான ஆட்டத்தில் இரண்டு ஈஸியான கேட்ச்சுகளை நழுவ விட்டிருந்தார். அடுத்த மேட்ச்சில் ஜடேஜா இருப்பாரா என்று எல்லோரும் சந்தேகப்பட்ட போது ஜடேஜாவை தொடர்ந்து பயன்படுத்தி முக்கியமான விக்கெட்டுக்கள் பலவற்றை சாய்க்க வைத்தார் தோனி. வீரர்கள் மீது அவர் வைக்கும் நம்பிக்கை அவர்களை மீண்டெழ உதவுகிறது.
பஞ்சாப் அணியுடன் நடந்த போட்டி ஒன்றில் அவர் மேற்கொண்ட தந்திரம் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. வழக்கமாக முதல்வரிசை ஆட்டக்காரர்கள் அவுட் ஆனதும் டோனி, ப்ராவோ வருவார்கள். அவரோ பந்து வீச்சாளர்களான ஹர்பஜன் சிங், சாஹர் இருவரையும் இறக்கினார். ‘‘ எதிரணியின் வியூகங்களை குழப்பிவிடுவதை நான் விரும்புகிறேன். முன்னணி ஆட்டக்காரர்களுக்கு சரியான அளவில் பந்துவீசும் வீரர்கள், இவர்களைப் போன்ற சாதாரண ஆட்டக்காரர்களுக்கு சற்று தளர்வாக வீசுவார்கள்.. இது பலனளித்தது'' என்றார் பிறகு தோனி. ஆனால் இந்த விபரீத விளையாட்டை இத்துடன் நிறுத்திக் கொண்டார்.
‘‘வெற்றிக்கு மனத்தின் செயல்பாடுதான் முக்கியம். உடல் செயல்பாடு இரண்டாம் பட்சமே,'' என்கிற தோனி நாம் எல்லோரும் அறிந்திருப்பதைப் போல களத்தில் எப்போதுமே கூலாக இருப்பார். அனேகமாக ட்ரெஸ்ஸிங் ரூமில் வைத்து தவறு செய்யும் வீரர்களை வாங்கு வாங்கென்று வாங்கிவிடுவார் போலிருக்கிறது. ஏனெனில் ஒருமுறை செய்யும் தவறை மறுமுறை சிஎஸ்கேயில் வீரர்கள் செய்வது அரிது. கடைசிப் போட்டிக்கு முந்தைய போட்டியில் ஹர்பஜன் சிங்கை அணியில் சேர்த்திருந்தார், ஆனால் பௌலிங் தரவேயில்லை. இதை கேட்ட போது, ‘‘என்னிடம் நிறைய கார்கள், பைக்குகள் உள்ளன. அனைத்தையும் ஒரே சமயத்தில் பயன்படுத்த முடியாது. அணியில் ஏழு பௌலர்கள் இருக்கிறார்கள். ஆடுகளத்தின் தன்மை, விளையாட்டின் போக்கு, களத்திலிருக்கும் ஆட்டக்காரர் போன்றவற்றைக் கொண்டே யாரைப் பயன்படுத்துவது என்பதை முடிவு செய்ய முடியும்'' என்றார். இது தான் கேப்டன் கூல்.
ப்ராவோ, டுபிளசிஸ், மெக்கல்லம், தோனி என நான்கு சர்வதேச காப்டன்கள் சிஎஸ்கேவில் ஒரே சமயத்தில் இருந்திருக்கிறார்கள். இந்த கேப்டன்களின் ஈகோக்களை எல்லாம் சமாளிக்கும் கேப்டன்களின் கேப்டனாக இருப்பதால் தான் வெற்றியை தொடர்ச்சியாக ருசிக்க முடிகிறது.
அதேசமயம் மும்பை அணியில் தடவிக் கொண்டிருந்த அப்பட்டி ராயுடு போன்ற வீரர்களை ஏலத்தில் எடுத்து வைரமாக ஜொலிக்க வைக்க தோனியால் முடிகிறது. அதாவது திறமைகளைக் கண்டறிந்து வழிகாட்டுதல்! ஒரு தலைவனுக்கு இருக்கவேண்டிய முக்கிய திறன் இது!
ஜூன், 2018.