சிறப்புக்கட்டுரைகள்

தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரிய பிராண்ட்

அசோகன்

நடிகர் சிவகுமார், இயக்குநர் பாரதிராஜா, கவிப்பேரரசு வைரமுத்து, எழுத்தாளர்  ச.தமிழ்ச்செல்வன்,ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் என நிகழ்கால பேராளுமைகள் கலந்துகொண்ட விழா அது. ஆனால் ஆச்சரியகரமாக எந்த ஆளுமையுமே முன்னிறுத்தப்படாமல் ஒரே ஒரு பெரியவர் மட்டுமே முன்னிறுத்தப்பட்டார். அவர் நிழலின் கீழ் நிகழ்கால ஆளுமைகள் பவ்யமாக அமர்ந்திருந்தனர். மேடையில் மணிக்கணக்காக முழங்கும் இவர்கள் ஒரு சில மணித்துளிகள் மட்டுமே அடக்கமாக பேசி அமர்ந்தனர். அந்த பெரியவர் வேறுயாருமல்ல! திருவள்ளுவரே தான்!

வள்ளுவர் குடும்பம் அழைக்கிறது என்று அழைப்பிதழில் அச்சிட்டு இருந்தார்கள். ‘வாய்ஸ் ஆஃப் வள்ளுவம்’ என்கிற வாட்ஸ் அப் குழு அது. ராஜேந்திரன் என்கிற இந்திய வருவாய்ப் பணி அதிகாரி உருவாக்கிய குழு. அரசு  அதிகாரிகளுடன் இளைஞர்களும் ஆர்வலர்களும் கொண்ட அக்குழுவில் ஒடிஸாவில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரியான ஆர்.பாலகிருஷ்ணனும் உண்டு. ஏற்கெனவே சிந்துவெளி ஆய்வில் தமிழ் வேர்களைத் தொட்டு, இன்று கீழடியில்  அதை  உணர்ந்திருக்கும் ஆய்வுகளின் முன்னோடியான  பாலகிருஷ்ணன் இப்போது திருக்குறளையும் கையில் எடுத்திருக்கிறார். அவர் திருக்குறளின் காமத்துப்பாலில் சில குறள்களை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நாட்டுப்புற பாடல்களை இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையமைக்க முக்கியமான பாடகர்களைப் பாட வைத்து ஒலிப்பதிவு செய்தனர். அந்த பாடல்களை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை நாரதகான சபா அரங்கில் நிகழ்ந்தது. இந்த நாட்டுக்குறள்களுக்கு ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் அழகான ஓவியங்களும் மதிப்பைக் கூட்டி இருந்தன. மிக பிரம்மாண்டமாக நடந்த நிகழ்ச்சியின் இன்னொரு முக்கிய அம்சம், சொன்னமாதிரி ஆறுமணிக்கு ஏவுகணை அனுப்புவதுபோல் ‘கவுண்ட் டவுன் சொல்லி நிகழ்வைத் தொடங்கியது!

ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப

“சென்ற ஆண்டில் ஒருமுறை விமானத்தில் டெல்லிக்குப் போய்க்கொண்டிருக்கும்போது என்னுடைய போனில் திருக்குறள் ஆப்ஸைத் திறந்து படித்துக்கொண்டிருந்தேன். காமத்துப்பால் பக்கம் திரும்பினேன். அந்த குறள்களைப் படித்துக்கொண்டிருந்தபோது, அக்குறள்களுக்கான என்னுடைய உணர்வுகளை கவிதை வடிவில் போனிலேயே எழுதினேன். அந்த பயணத்தின்போது இரண்டு குறள்களுக்கு எழுதிவிட்டேன். விமானத்தை விட்டிறங்கியதும் வாய்ஸ் ஆஃப் வள்ளுவம்  வாட்ஸ் அப் குழுவில் பதிவு செய்தேன். அதை உறுப்பினர்கள் மிகவும் ரசித்தார்கள். ஆகவே தொடர்ந்து எழுதினேன். அந்த காலகட்டத்தில் ஒடிசா அரசில் பல்வேறு துறைகளின் பொறுப்புகளைக் கவனித்துக்கொண்டிருந்தேன். அந்த கவிதைகளை எழுதியபோது ஒருபுறம் மாநில அரசின் பட்ஜெட் வேலைகள்; மறுபுறம் சட்டமன்றம். இரவு வீட்டுக்கு வரவே பத்துமணி ஆகும். அதற்குப்பின் கவிதையை குழுவில் போடுவேன். இரவு முழுக்க குழு உறுப்பினர்கள் கருத்துகளை பதிவு செய்வார்கள். அதற்கு சித்திரங்கள் போடப்படும். மிகவும் தரமான வாசகர்கள் அவர்கள். இந்த வரவேற்பு எனக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்தது.

 ஒரு நாள் உலக உறக்க தினம் என்று வாட்ஸ் அப்பில் வந்தது.  அன்று காலை நடைப்பயிற்சியின்போது உறக்கம் என்ற சொல் பற்றி காமத்துப்பால் பின்னணியில் யோசித்தேன். உலகம் முழுக்க ஒவ்வொரு இரவிலும், அது மாறுபட்ட நேரங்களில் வருகிறது என்றாலும் காதல் வயப்பட்ட பெண் தன் காதலனை நினைத்து தூங்காமல் இருக்கிறாள் என்று தோன்றியது.

ஃபிஜி, சான்பிரான்சிஸ்கோ, சிட்னி, கோலாலம்பூர், சென்னை, என பத்து டைம் ஸோன்களை தேர்வு செய்தேன். அங்கெல்லாம் கிரின்வீச்சுக்கும் உள்ளூர் நேரத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை  அட்டவணைப் படுத்திக்கொண்டு அலுவலகம்  சென்றுவிட்டேன். அன்று எங்கள் மாநில பட்ஜெட் நிறைவேற்றப்படும் நாள். எனவே  இரவு தாமதமாகவே வீடு திரும்பினேன். இன்று பட்ஜெட் என்பதால் உங்களைத் தொந்தரவு செய்யவில்லை என்று வாட்ஸப்பில் கவிதைக்காக காத்திருந்த ஒருவர் பதிவு செய்தார். யாரிடமும் அன்று பத்து கவிதைகள் போடுவேன் என்று சொல்லவில்லை. ஆனால் அன்றிரவு ஒவ்வொரு டைம்ஸோனுக்குமாக பத்து கவிதைகளை ஐந்து நிமிட இடைவெளியில் இரவு பதினொன்று நாற்பத்தி ஐந்துக்கு ஆரம்பித்துப் பதிவு செய்தேன். உலகின் பத்து இடங்களில் பத்து வேறுபட்ட மனிதர்கள்; வேறுபட்ட காரணங்களுக்காக விழித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்கும் திருக்குறள் பொருந்தும். உலகப்பொதுமுறை! இது கவிதைகளுக்குப் பொதுவான பாடுபொருள்!

அன்றிரவு வள்ளுவர் குடும்பம் உறங்கவே இல்லை!

இதில் சில குறள்களை நாட்டுப்புற பாடல்களாகவும் எழுதினால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. மதுரையைப் பூர்வீகமாக கொண்டவன் என்பதால் 33 ஆண்டுகள் வெளிமாநிலங்களில் இருந்தாலும்கூட மண்ணின் சொற்கள் என்னிடம் இருந்து மறைந்துவிடவில்லை என்பதை  எனக்கே ஞாபகப்படுத்துவதாக அவை அமைந்தன.

இந்த நாட்டுப்புறப்பாடல்களுக்கு இசை அமைக்க  இசை அமைப்பாளர் தாஜ்நூரைத் தெரிவு செய்தோம். அவர்  சும்மா பாடல்களை வாங்கிச் சென்றிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஒரே வாரத்தில் ஒரு பாடலுக்கு இசை அமைத்து அனுப்பி இருந்தார். என் வரிகளை இசையின் மூலம் மதிப்புக் கூட்டியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். மீதிப்பாடல்களுக்கும் அவரே இசை அமைக்குமாறு கேட்டுக்கொண்டேன். முக்கியமான நாட்டுப்புறப் பாடல்களைப் பாட பாடகர்களை வைத்து பதிவு செய்தோம். என்னால் அச்சமயத்தில் கூட இருக்க முடியாது. நண்பர் சங்கர சரவணன், உடனிருந்து

சொல், உச்சரிப்பு போன்றவற்றைக் கவனித்துக்கொண்டார். ஒவ்வொரு பாடகரும் பாடி முடித்தபின் என்னுடன் நெகிழ்ச்சியுடன் பேசுவதைக் கேட்க ஆச்சரியமாக இருக்கும்.

எதற்காக இந்த  நாட்டுக்குறள்?

திருவள்ளுவர் கடந்தகாலத்தின் போக்கில் பல்வேறுவிதமாகக் கருதப்பட்டிருக்கிறார். கடைசியாக அவரை நாயனார் என்று

சொன்னார்கள். அவர் சமணரா என்று விவாதித்தார்கள். ஆனால் வள்ளுவர் இவை எதிலும் அடங்காதவர். உலகிலேயே சிறந்தது

 அமுதம் என்பார்கள். ஆனால் வள்ளுவரோ குழந்தையின் சிறு கை அளாவிய கூழ்தான் அமுதத்தை விட உயர்ந்தது என்பார். வான் மழையை அமுதம் என்பார். இதையெல்லாம் பார்க்கும்போது வள்ளுவர்

சுதந்தரமான ஒரு கவிஞர் என்பதே எனக்கு உறுதியாயிற்று. அவர் சமய நம்பிக்கை உடையவர்தான். இறப்புக்குப் பின் செல்லும் உலகைவிட இந்த உலகத்தை அவர் பெரிதாகக் கருதினார். வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும் என்றார்.

பொதுவாக காமத்துப்பால் மீது நமக்கு சின்னதாக ஒரு விலக்கம்  உண்டு. ஆனால் காமத்துப்பாலில் உயர்வான காதலும் நேசமுமே இருக்கின்றன. ஏன் இந்த விலக்கம் என்று எனக்குப் புரியவே இல்லை. தமிழிலக்கியம் படித்து ஐஏஎஸ் ஆன எனக்கு தமிழ் இலக்கியத்துக்கு செய்யவேண்டிய கடப்பாடாக இதைக் கருதினேன். தமிழ்ச்சமூக வரலாற்றில்  மிகப்பெரிய ஆளுமையாக ஒருவரைச் சொல்லவேண்டும்  என்றால் வள்ளுவரை மட்டுமே சொல்லவேண்டும். நம் சமூகத்தின் மிகப்பெரிய ‘பிராண்ட்’ என கையில் எடுக்கவேண்டியது திருவள்ளுவர்தான். உலகில் யாருக்குமே இப்படியொரு பிராண்ட் இருக்கமுடியாது. தான் எழுதிய கவிதையில் தான் எழுதிய மொழியின் பெயரைச் சொல்லாமல், தான் வாழ்ந்த நாட்டின் பெயரைச் சொல்லாமல், அங்கு ஓடும் நதியின் பெயரைச் சொல்லாமல் மலையின் பேரைச் சொல்லாமல் எழுதிய உலகக் கவிஞர். இது உலகப் பொதுமறை அல்ல! உலகப் பொதுமுறை!  இப்படியொரு மனிதனை தமிழின் மகுடமாக, அரியாசனமாக, பிராண்டாக முன்னிறுத்திக் கொண்டாடத்தான் இந்த முயற்சிகளைச் செய்கிறோம்! இது ஒரு தொடக்கம்.  இந்த நாட்டுக்குறள் இனி தேவைப்படும்போதெல்லாம் அறம் பாடும்; பொருள் பேசும்; இன்பம் கொண்டாடும்!” என்று முடித்தார் பாலகிருஷ்ணன்.

ஜனவரி, 2017.