சிறப்புக்கட்டுரைகள்

தமிழ்க் குடும்பத்தில் தமிழ் இல்லை!

மு.இளங்கோவன்

சிங்கப்பூரில் உள்ள ஆறாவது பெரிய பல்கலைக் கழகமான சிம் பல்கலைக்கழகத்தில் 2006 ஆம் ஆண்டு முதல் பட்ட வகுப்பில் தமிழ் பயிற்றுவிக்கப்படுகின்றது. இப்பல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டப்படிப்பு படிப்பவர்கள் சிங்கப்பூர் அரசின் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரியமுடியும்.

இப்பல்கலைக்கழகத்தில் தமிழ்படிக்க விரும்புவர்களுக்குப் பேருதவியாக இருப்பவர் முனைவர் க.சண்முகம். அவரிடம் உரையாடினோம்.

சண்முகம் மலேசியாவில் பிறந்தவர். அவர்களின் முன்னோர்கள் திருநெல்வேலிப் பகுதியிலிருந்து சென்றதால் திருச்செந்தூர் முருகன் நினைவாகச் சண்முகம் என்ற பெயர். மலேசியாவின் ஜோகூர்பார்கு பகுதியில் தோட்டத் தொழிலில் இவரது பெற்றோர் ஈடுபட்டிருந்தனர். கடும் உழைப்பில் குடும்பம் நடத்த வேண்டியிருந்தது. ஒன்பது வயதில்தான் இவருக்குப் பள்ளிப்படிப்பு கிடைத்தது.

இளம் வயதில் தந்தையாரை இழந்து குடும்பச்சூழல் காரணமாகச் சிங்கப்பூருக்கு வந்து கலைமகள் தமிழ்ப்பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை படித்தவர். அப்பொழுதெல்லாம் தமிழகத்திலிருந்தும் மலேசியாவிலிருந்தும் ஆசிரியர்கள் வந்து தமிழ் பயிற்றுவித்துள்ளனர். பத்தாம் வகுப்புவரை படித்து முடித்ததும் தமிழாசிரியர் வேலை கிடைத்தது. ஆசிரியரான பிறகுதான் ஆங்கிலம் படிக்கவே தொடங்கினார்.

அதன் பின்னர் தன் கல்வித்தகுதியை உயர்த்திக் கொண்ட அவர், மூன்று ஆண்டுகள் சிங்கப்பூர் கல்வி அமைச்சில் துறைத்தலைவராக இருந்தார். இக்காலத்தில் இலக்கணம், இலக்கியத்தை சிறப்பாக நடத்த பல பயிலரங்குகளை ஏற்பாடு செய்து அனைவரின் உள்ளத்திலும் இடம்பெற்றார். சிங்கப்பூரில் தமிழ்க்கல்வி வளர்வதற்கு அடிப்படைப் பணியாற்றியவர்களுள், சிந்தித்தவர்களுள்  சண்முகம் அவர்களும் ஒருவர் என்று குறிப்பிடலாம்.  “சிங்கப்பூரில் தமிழின் தற்பொழுதைய நிலை: இல்லச்சூழலில் தமிழ்மொழிப் புழக்கம்” என்பது இவர்தம் முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்பு.

சிங்கப்பூர் 1965 இல் சுதந்திரம் அடைந்தது. அதன் பிறகு தமிழைப் பேசுபவர்களின் தொகை நாளுக்கு நாள் குறைந்துவருவதை இவரின் ஆய்வு எடுத்துரைக்கின்றது. சிங்கப்பூரில் வாழும் 60 தமிழ்க்குடும்பங்களை நேர்காணல் செய்தும், வினாநிரல் வழங்கியும் உற்றுநோக்கியும் ஆய்வு செய்தவர். மேற்கு ஆஸ்திரேலியாப் பல்கலைக்கழகத்தில் 2011 இல் இந்த ஆய்வு நிறைவுக்கு வந்து இவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது.

1985 இல் பிலிப்பைன்சு ஆய்வாளர் ஒருவர் கூச்ட்டிடூ ஃச்ணஞ்தச்ஞ்ஞு டிண குடிணஞ்ச்ணீணிணூஞு என்ற தலைப்பில் ஆய்வு செய்து வீடு, கோயில்களில் தமிழ் உள்ளது என்று ஆய்வு முடிவை எழுதினார். சண்முகத்தின் ஆய்வு வழியாக 2011 ஆம் ஆண்டுகளில் தமிழ்க் குடும்பத்தில் தமிழ் இல்லை என்பது தெரியவருகின்றது.

”சிங்கப்பூரில் இப்பொழுது ஆறு வயதுவரை தமிழ்க் குழந்தைகள் தமிழ் பேசுவதில்லை. பாலர் பள்ளிகளில் சீனம், மலாய், ஆங்கிலம் பயில்கின்றனர். ஒன்றாம் வகுப்பில்தான் தமிழ் அறிமுகம் ஆகிறது. தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகும் முன்னணித் தொலைக்காட்சிகளில் ஆங்கிலம் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால் சிங்கப்பூர்த் தமிழ் வளர்ச்சியில் அது பாதிப்பை ஏற்படுத்துகின்றது. தொடக்க வகுப்பை முழுமையாகத் தாய்மொழியில்தான் நடத்தவேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகளிடம் சிந்திக்கும் திறனும், அறிவாற்றலும் மேம்படும்” என்று இவர் குறிப்பிடுகிறார்.

தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு வருபவர்கள்கூட தங்கள் பிள்ளைகள் இந்தி படிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் மலையாளம், தெலுங்கு மொழியைத் தாய்மொழியாக உடையவர்கள் தங்கள் மொழியைப் பிள்ளைகளுக்குப் பயிற்றுவிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுடன் குடும்பத்தில் தமிழில் உரையாடுவதில்லை என்றும் இதனால் பேச்சுத் தமிழ் சிங்கப்பூரில் குறைந்துவருகின்றது என்றும் கவலைகொள்கிறார்.

இந்த கவலையால்தான் சண்முகம் சிங்கப்பூரில் உள்ள காளியம்மன் கோயிலில் சரசுவதி பாலர் பள்ளி உருவாக்கித் தமிழைக் குழந்தைகள் படிக்க வழிசெய்தார். தொடக்கத்தில் 90 பிள்ளைகள் இங்குச் சேர்ந்தனர். இன்று முந்நூறுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் படிக்கின்றனர்.

பிப்ரவரி, 2014.