சிறப்புக்கட்டுரைகள்

தமிழ் வசந்தம்

ஜோதிமணி

அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் முற்றுகை, அரபு வசந்தம்  இவற்றையெல்லாம்  பார்த்தபோது இப்படியொரு போராட்டம் தமிழ்மண்ணில் சாத்தியம் என்று கனவில் கூட நினைத்ததில்லை. ஏன் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இங்கு போராட்டகுணமே அற்றுப்போய்விட்டதே என்கிற ஆதங்கம்கூட எனக்கு இருந்தது. ஆனால் இன்று ஒரு தமிழராக தலைநிமிர்ந்து நிற்கிற பெருமையை, பூரிப்பை தங்கைகளும்,தம்பிகளும், தமிழக மக்களும் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். இந்தியா மட்டுமல்ல உலகமே இதை ஆச்சர்யத்தோடும், மரியாதையோடும் உற்றுப் பார்த்தது. உள்ளம் நெகிழ்ந்து பாராட்டி மகிழ்ந்தது. போராட்டத்திற்கு தலைமை இல்லை, போராட்டத்தில் அரசியல் இல்லை,சரியான தருணத்தில் முடித்திருக்க வேண்டும் என்பதுபோன்ற கண்டுபிடிப்புகள் அர்த்தமற்றவை.

உலக வரலாற்றில் பல போராட்டங்களுக்கு தலைமை இருந்ததில்லை. உதாரணமாக இந்தப் போராட்டத்தோடு பல விதத்தில் ஒத்த தன்மைகொண்டு வால் ஸ்ட்ரீட் முற்றுகை, அரபு வசந்தம் போன்ற மாபெரும் வரலாற்றுப் புரட்சிகள் மக்களை மையப்படுத்தியே நடந்தது. மாறிவரும் நவீன உலகில் மக்கள் வானத்திலிருந்து ஒளிவட்டங்களோடு தோன்றும் ஒரு தலைவரை எதிர்பார்த்துக் காத்திருக்க மாட்டார்கள். போராட்டங்களும், புரட்சிகளும் தன்னெழுச்சியாகவே உருப்பெரும் என்பதை நாம் தான் புரிந்துகொள்ளவேண்டும். சமூக வலைத்தளங்கள் அதற்கான கூடுதலான சாத்தியங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. ஒவ்வொரு தனிமனிதனும் ஊடகமாக மாறிவரும் ஒரு வெளி வரலாற்றை நிச்சயம் புரட்டிப் போடும். போட்டிருக்கிறது.

இப்போராட்டத்தில் அரசியல் கட்சிகள்தான் இல்லையே தவிர இது முழுக்க முழுக்க அரசியல் போராட்டம் தான். ஜல்லிக்கட்டு தவிர விவசாயிகள் பிரச்சினை, கார்பரேட் நிறுவனங்களின் சுரண்டல், தமிழ் கலாச்சாரம், சுயசார்பு, சர்வதேச பொருளாதார அரசியல், சாதி,மதம் உட்பட அனைத்தும் அலசப்பட்டது. ஜல்லிக்கட்டு மட்டும் தான் போராட்டக்காரர்களின் ஒரே இலக்கு என்று நாம் நினைத்தால் இந்தப் போராட்டத்தை குறைத்து மதிப்பிடுகிறோம் என்றே பொருள்.

ஒரேமுகமாக அரசியல்கட்சிகளை ஏன் மாணவர்களும்,இளைஞர்களும் மறுதலிக்கிறார்கள் என்பதை அரசியல் கட்சிகள் யோசிக்கவேண்டிய தருணமிது. தேவை ஒரு நேர்மையான ஆத்மார்த்தமான சுயபரிசோதனை. அதைச் செய்யாமல், நாங்கள் இருந்திருந்தால் போராட்டம் இப்படி முடிந்திருக்காது என்பதுபோன்ற எதிர்வாதங்கள் நாம்  இந்த ஜென்மத்திற்கு திருந்தப்போவதில்லை என்கிற அவநம்பிக்கையையே இவர்களிடம் விதைக்கும். நாம் இழந்துவிட்ட நம்பிக்கையை மீட்பதற்குப் பதிலாக இன்னும் இடைவெளி அதிகமாகும்.

தெரிந்தோ,தெரியாமலோ இந்த நவீன யுகத்தின் இளைய தலைமுறை ஒரு பொக்கை வாய்க் கிழவனின் அகிம்சைப் பாதையை போராட்டத்தின் ஆன்மாவாக தேர்ந்தெடுத்தது ஒரு இனிமையான ஆச்சர்யம். ஒத்துழையாமை இயக்கம்,உப்பு சத்தியாக்கிரகம் உட்பட பல முக்கியமான போராட்டங்களை அதன் உச்சத்தில் இருக்கும் போது நிறுத்திவிடுவது காந்தியின் வழக்கம். அதனால் தான் உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை மிகுந்த ஒரு நாட்டிற்கு சூரியனே மறையாத, ஆயுதவலிமை மிகுந்த ஒரு தேசத்தோடு கத்தியின்றி, இரத்தமின்றி, அகிம்சையை ஆயுதமாகக் கொண்ட ஒரு யுத்தம் சாத்தியமானது. இந்தியாவின் விடுதலையை உலகமே வியப்போடு பார்த்தது. இந்தப் போராட்டமும் அப்படியொரு வியப்பையே விதைத்தது. மாணவர்களும்,இளைஞர்களும் எப்படி அமைதிவழியில் போராடுகிறார்கள் என்பதை உலகமே உற்றுப்பார்த்தது. காந்தி போராட்டத்தின் முடிவு மட்டுமல்ல வழிமுறையும் முக்கியம் என்பார். இந்தப் பிள்ளைகள் அதில் இறுதிவரை உறுதியாக இருந்து வெற்றிபெற்றார்கள். முதல் இரண்டு நாட்களால் தேசிய ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட இந்தப் போராட்டம் பிறகு உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது அதன் அமைதிவழிக்காகத்தான். அதுவே முக்கியம்.  எந்த ஒரு போராட்டத்திலும் எப்போதும் கற்றுக்கொள்வதற்கு ஏதாவது இருக்கும். இதிலும் அப்படியே !

இவர்கள் தமிழகத்தின் கூட்டு மனசாட்சி.

 நீண்டகாலமாக உள்ளே கனன்றுகொண்டிருந்த நெருப்பின் ப்ளாஷ் லைட்! (மறக்கமுடியாத காட்சி!) அலங்காநல்லூர், மதுரை, சென்னை, கோவை, திருச்சி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில்  உட்கார்ந்திருப்பவர்களிடையே அவர்கள் தமிழர் என்பதைத் தாண்டி எவ்வித நேரடித் தொடர்பும் இல்லை. ஏன் ஒரே இடத்தில் அருகருகே அமர்ந்திருக்கிற பலரும் அறிமுகமற்றவர்கள். போராட்டத்திற்கென்று எவ்வித நெறிமுறைகளும் வகுக்கப்படவில்லை.

ஆனால் சொல்லி வைத்தது போல அனைத்து இடங்களிலும் எல்லாம் சரியாக நடக்கிறது. அரசியல்வாதிகளுக்கு உள்ளே அனுமதி மறுக்கப்படுகிறது. அவசர ஊர்திகளுக்கு முன்பாக கூட்டத்தை விலக்க பைக்குகள் பைலட் வண்டிகளாக மாறி காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்கின்றன. மனிதச் சங்கிலிகள் போக்குவரத்தை ஒழுங்குசெய்தபடியே இருக்கின்றன. ஊடக நண்பர் ஒருவர் நெகிழ்ச்சியோடு சொன்னார். அலங்காநல்லூரில் போராட்டம் முடிந்துவிட்டது. அந்த இடமே களேபரமாக கிடந்தது. இன்னும் அதிக எண்ணிக்கையில் காவல்துறையினர் நின்றுகொண்டிருக்கிறார்கள். இன்னும் பதற்றம் முழுமையாக விலகியிராத  சூழல். அங்கே இருபதுபேர் வட்டமாக மனிதச்சங்கிலி அமைத்து நிற்க அதற்குள் பத்துபேர் அங்கே கிடந்த குப்பைகளை பொறுக்கி சுத்தம் செய்தார்கள். அதைப் பார்க்கும்போது கண்கலங்கிவிட்டது என்று. எங்கும் அவ்வளவு சுத்தம். இஸ்லாமிய சகோதரர்களின் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு எவ்வித இடையூறும் இல்லாத ஏற்பாடுகள். ஆயிரக்கணக்கான ஆண்களின் முன்னிலையில் இளம்பெண்கள் மிகுந்த பாதுகாப்போடும்,நிம்மதியாகவும் உறங்குகிறார்கள் ! இவையெல்லாம் சொல்ல வருகின்ற செய்திகள் என்ன?

தமிழ்ச்சமூகம் எப்போதோ அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது. சாதி ஒழிந்துவிடவில்லை தான்; ஆனால் அதன் குரூரத்தை கேள்வி கேட்கிற, சிந்திக்கின்ற இளைய தலைமுறை உருவாகியிருக்கிறது. பாலின சமத்துவம் இன்னும் தொலைதூர கனவுதான். ஆனால் ஒரு  பெண்ணை உடலாக மட்டும் பார்க்காமல்,சக மனுஷியாகப் பார்க்கிற ஒரு தலைமுறை உருவாகிவிட்டது. மாற்று மதத்தினரை, அவர்களது நம்பிக்கைகளை இயல்பாக  உள்வாங்கிக்கொள்ளும் பழைய இந்தியாவின் நற்குணங்கள் புதிய இந்தியாவுக்கான சவால்களைத் தாண்டி வேரூன்றியிருக்கிறது. தனது கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுப்பதன் மூலமும்,பாதுகாப்பதன் வழியாகவும் தனது ஆதி அடையாளத்தை தக்கவைத்துக்கொள்வதில் உறுதியோடு இருக்கிறது. வளர்ச்சிக்கும், பகிர்தலுக்குமான அதிகரித்துவரும் இடைவெளியின் ஆபத்தையும், அதன் மையமாக இருக்கிற மக்களோடு தொடர்பற்ற, ஆடம்பரமான, ஊழல் மிகுந்த அரசியலையும்  எதிர்கொள்வதற்கு நெடுங்காலமாக  உள்ளுக்குள் தயாராகி வந்திருக்கிறது என்பதே இந்த ‘தமிழ் வசந்தம்’ உரக்கச் சொல்லும் சேதி.  இதைப் புரிந்துகொண்டு உரிய விதத்தில் எதிர்வினையாற்றுவதும், நம்பிக்கையை மீட்டெடுப்பதுமே அரசியல் கட்சிகளும், அரசுகளும் செய்ய வேண்டியவை. அடக்குமுறையால் இதை எதிர்கொள்ள நினைப்பவர்கள் நினைவில் கொள்ளவேண்டியது ஒன்றைத்தான்:

‘எல்லாப் பூக்களையும் நீங்கள் பறிக்கலாம்

ஆனால் உங்களால் வசந்தத்தை தடுத்து நிறுத்த முடியாது’

    -பாப்லோ நெருடா

பிப்ரவரி, 2017.