சிறப்புக்கட்டுரைகள்

"தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் நூலை பிரபலப்படுத்த எதுவும் செய்வதில்லை''

பத்ரி சேஷாத்ரி, பதிப்பாளர் கிழக்கு பதிப்பகம்

மிஷ், சேத்தன் பகத் போன்றவர்கள் நூற்றுக்கணக்கான கோடிப்பேருக்கு எழுதுகிறார்கள். ஏனெனில் அவர்களின் சந்தை மிகப்பெரியது. தமிழ் எழுத்தாளர்கள் ஏழரைக் கோடித் தமிழர்களை முன்வைத்தே எழுதுகிறார்கள் என்பதைக் கணக்கில் கொள்ளவேண்டும்.

தமிழ் எழுத்தாளர்கள் பொதுவாக தான் எழுதுவதுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். அதைத் தாண்டி அதை பிரபலப்படுத்த எதையும் செய்ய மறுக்கிறார்கள். தங்களை ஒரு பிராண்ட் ஆக அவர்கள் முன்னிலைப் படுத்தினால் இன்னும் அதிகமாக விற்பனை செய்யலாம்.

தமிழில் கவிஞர் வைரமுத்து இந்த விதத்தில் சிறப்பாக செயல்படுகிறார். அவரது புதிய நூல்கள் அதிகமாக விற்பனை ஆகின்றன. அவர் தன் நூல்களை தன் சொந்த பதிப்பகத்தில் பதிப்பிக்கிறார்; வெளியீட்டுக் கூட்டம் போடுகிறார். போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்.

ரஜினி, கமல் திரைப்படம் போன்று பிரம்மாண்டமாக யோசித்து பெரிய விற்பனையை நோக்கி எழுத்தாளர்கள் எழுத முன்வரவேண்டும். ஆங்கிலத்தில் மிகப் பிரம்மாண்டமாக விற்பனை ஆகின்றவை புனைகதைகள்தான். ஒரு கட்டத்தில் தமிழில் சுஜாதா, ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர்,சுபா, போன்றவர்கள் பரபரப்பாக எழுதினார்கள். பெரிய வாசகர் வட்டம் இருந்தது. அப்போது பெரிய விற்பனை உத்திகளைப் பயன்படுத்தி பெரிய எண்ணிக்கையில் நூல்களை விற்கும் வாய்ப்பை தவற விட்டுவிட்டோம். அவர்கள் டிவி சீரியல்களுக்கு எழுதப் போய்விட்டார்கள். இனி தமிழில் அதுபோல புனைகதை வாசிக்கும்

வாசகர்கள் உருவாகும் காலம் வருமா என்று சொல்ல இயலவில்லை.

பொதுவாக ஒரு எழுத்தாளருக்கு நூல் எழுதினால் 10 சதவீதம் ராயல்டி கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில் ஒரு சராசரியாக நல்ல வசதியான வாழ்க்கை வாழ ஆண்டுக்கு ஆறு லட்ச ரூபாய் தேவை என்று வைத்துக் கொண்டால் அவர் எழுத்தை  மட்டுமே நம்பி பிழைக்க முடியுமா? அதை அவரால் எட்ட முடியுமா?   ஒரு சின்னக் கணக்குப் போட்டுப்பார்ப்போம். நூலின் விலை 100 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் ஒரு பிரதி விற்றால் அவருக்கு ராயல்டி 10 ரூபாய் கிடைக்கும். ஓராண்டில் 60,000 பிரதிகள் விற்றால்தான் அவருக்கு ஆறு லட்சரூபாய் கிடைக்கும். தமிழில் ஒரு நூல் மட்டும் அவ்வளவு விற்கும் என்று கருதமுடியாது. எனவே ஓர் ஐந்தாண்டுகாலத்தில் அவர் சில நல்ல விற்பனையாகும் நூல்களை எழுதியிருந்தால் அவை மொத்தமாக ஒராண்டில் 60,000 பிரதிகள் விற்பனை ஆகும் வாய்ப்பு உள்ளது. அப்போது 6 லட்சம் ரூபாய் சாத்தியம். எங்கள் பதிப்பகத்தில் ஒரே புத்தகத்துக்கு ஓராண்டில் 6 லட்சம் அளவுக்கு ராயல்டி கொடுத்துள்ளோம். அது சோம. வள்ளியப்பன் எழுதிய அள்ள அள்ளப் பணம். அத்துடன் ஒரு சில எழுத்தாளர்கள் தொடர்ந்து எங்களிடம் ஆண்டுக்கு இரண்டு லட்சம் வரை ராயல்டி பெற்று வருகிறார்கள். ஆனால் அதையே நம்பி வாழ்க்கை நடத்த முடியாது என்பது உண்மைதான்.

சாண்டில்யன் நிறைய நூல்களை எழுதி உள்ளார். அவற்றின் விலையும் அதிகம். அவரது நூல்கள் விற்பனை மூலம் சுமார் 5-6 லட்ச ரூபாய் ராயல்டி கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

சுஜாதாவின் நூல்களை உயிர்மை, கிழக்கு, திருமகள், விகடன் ஆகிய நான்கு பதிப்பகங்கள் வெளியிடுகின்றோம். சுமார் 120 நூல்கள் உள்ளன. விலை 30, 50 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது. அவரது நூல்கள் விற்பனையும் நன்றாக உள்ளது. 6 லட்ச ரூபாய் வரை ராயல்டி செல்லும் வாய்ப்பு உள்ளது.

ரமணிச்சந்திரன் நூல்களும் நன்றாக விற்பனை ஆகின்றன. சுமார் 80 தலைப்புகளில் அவர் நாவல்கள் உள்ளன. 6-7 லட்சம் அவருக்கு ராயல்டி கிடைக்க வேண்டும் என்பது என் ஊகம்.

தமிழில் அதிகம் விற்பனை ஆவது கல்கியின் நூல்கள்தான். அது நாட்டுடைமை ஆகிவிட்டது. கண்ணதாசனின் நூல்கள் தொடர்ந்து நன்றாக விற்பனை ஆகிவருகின்றன. அப்துல்கலாமின் அக்கினிச் சிறகுகள் நூல் மிக அதிகமாக அது வெளியிடப்பட்ட ஆண்டுகளில் விற்பனை ஆனது. ஆனால் இப்போது குறைந்துள்ளது.

கோபிநாத் எழுதிய இந்த புத்தகத்தை வாங்காதீங்க என்ற நூல் எக்கச்சக்கமாக விற்பனை ஆகியுள்ளது. மதனின் வந்தார்கள் வென்றார்கள், கிமு கிபி ஆகியவையும் பெஸ்ட் செல்லர்கள்தான்.

சாருநிவேதிதா, ஜெயமோகன் போன்ற நவீன இலக்கிய எழுத்தாளர்களுக்கு பெரிய வாசகர் வட்டம் உள்ளது. ஆனால் அது முழுமையாக விற்பனையாக மாறுகிறதா என்பதில் எனக்கு சந்தேகம். சாருநிவேதிதாவின் புதிய நாவல் எக்சைலை நாங்கள் வெளியிட்டோம். முதலில் 2000 பிரதிகள் அச்சிட்டோம். விற்றுத் தீர்ந்துவிட்டு அடுத்த வெளியீடு இப்போது விற்பனை  ஆகிக்கொண்டிருக்கிறது.

(நமது செய்தியாளரிடம் கூறியதிலிருந்து)

மே, 2013.