சிறப்புக்கட்டுரைகள்

தமிழர்களுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை! - பிரான்சிஸ் ஹாரிசன்

அசோகன்

இலங்கையில் பணிபுரிந்த முன்னாள் பிபிசி செய்தியாளர் பிரான்சிஸ் ஹாரிசனின் : Still Counting the dead: Survivors of Srilanka's Hidden War என்ற நூல் ஈழப்போரில் தப்பிப்  பிழைத்த தமிழர்களின் கதைகளைச் சொல்கிறது. இது தமிழிலும் காலச்சுவடு வெளியீடாக மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. நூல் எழுதிய அனுபவம் மற்றும் தற்போதைய நிலவரம் குறித்து அந்திமழையுடன் அவர் பகிர்ந்துகொண்டார்.

உங்கள் நூலுக்குக் கிடைத்த எதிர்வினைகள் என்ன?

தமிழ்நெட் இணையதளம் என் நூலை விரும்பவில்லை என்பது உங்களுக்குத் தெரிந்-திருக்கலாம். அவர்கள் இந்த நூல் அவர்களின் போராட்டத்தின் அரசியலை அகற்றி, தப்பிப் பிழைத்தவர்களை வேதனை-யால் முனகுபவர்களாக மாற்றுவதாக அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் உலகின் பல பகுதிகளில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் பல தமிழர்கள் உண்மையைச்சொல்லும் இப்புத்தகத்தை எழுதியதற்காக தங்கள் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றி தெரிவிப்பதாகச் சொன்னார்கள். புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கூட தம் மக்கள் அனுபவித்த கொடூரத்தின் முழு பரிணாமத்தையும் அறிந்திருக்கவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. போரிலிருந்து குரல்களைக் கேட்பதும் வீடியோக்களைப் பார்ப்பதும் என்பது வேறு. மரணத்தை நோக்கிய பயணத்தில் இருக்கும் ஒரு தனிமனிதனைப் பின் தொடர்வது என்பது வேறு. விரிவான வாசகர்களை முன்வைத்து இந்நூலை எழுதினேன். இலங்கை அரசியலைப் பற்றி எதுவும் தெரிந்திராத சாமானிய ஆங்கிலேயர்களும்கூட படிக்கக்கூடிய நிஜமான சம்பவங்களாகத் தான் எழுத விரும்பினேன்.

தொழில்முறையில்தான் இதை அணுகியிருப்பீர்கள். இருப்பினும் இந்த நூலை எழுதியது எம்மாதிரியான அனுபவமாக இருந்தது?

 இந்நூலை எழுதியது என்னை முழுவதுமாக மீள முடியாதபடிக்கு மாற்றிவிட்டது. நானும் ஒரு தாய். தங்கள் குழந்தைகளுக்கு உணவூட்டவும் காப்பாற்றவும் சாமானிய தமிழ்த் தாய்மார்கள் காட்டிய வீரம் பற்றிய செய்திகள் என்னைப் பெரிதும் தொட்டன. அவர்கள் எதிர்கொண்ட சூழலை எதிர்கொள்ள நேர்ந்தால் என்னால் அவர்களைப் போல நடந்துகொண்டிருக்க முடியுமா என்பது சந்தேகமே. அவர்களை என்னுடைய ஹீரோக்களாகக் கருதுகிறேன். சென்னையில் இந்த நூல் வெளியிடப்பட்ட போது அதில் உள்ள லோகேசனின் கதையை மேடையில் வாசித்தேன்.  அதில் சாவதற்கு முன்னால் ஒரே ஒரு முறை தன் குழந்தைக்குப் தாய்ப்பாலூட்டிவிட்டு சாகிறேன் என்று தன் குழந்தையைக் கொண்டுவாருங்கள் என்று ஓலமிட்ட ஒரு தாய் பற்றிய சம்பவம் வரும். அக்குழந்தைக்கு அந்த தாய்ப்பாலை விட்டால் உணவேதும் கிடைக்க வழி இல்லை. அந்த வரிகளை வாசிக்கவே நான் மிகவும் சிரமப்பட்டேன். ஏனெனில் என்னை மிகமிக உருக்கிய சம்பவம் அது.

போரின் கடைசி நாட்களில் என்ன நடந்தது என்பது பற்றி உங்களிடம் ஏதேனும் தகவல்கள் உண்டா?

புலிகளின் அரசியல் தலைவர்களான நடேசனும் புலித்தேவனும் வெள்ளைக் கொடியுடன் சென்று இலங்கை ராணுவத்திடம் சரணடைந்ததைப் பார்த்த இரண்டு நேரடிச் சாட்சிகளை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களின் இறந்த உடல்களை ஒரு சாட்சி அதன் பின்னால் நேரிலும் பார்த்திருக்கிறார். அவர்களுடன் சுமார் 40 போராளிகள் சரணடைந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும்ஒரு தடயமும் இன்றி காணாமல் போய்விட்டார்கள்.  சரணடைந்த புலித்தலைவர்களுடன் காணப்பட்ட மூத்த பாதிரியார் பிரான்சிஸ் காணாமலேயே போய்விட்டார். கர்னல் ரமேஷ் உயிருடன் காணப்பட்டு பின்னர் இறந்துபோய் கிடந்த கொடூரமான வீடியோ, ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர்களின் சானல் 4 வெளியிட்ட, நிர்வாண கைதிகள் சுட்டுக்கொலை செய்யப்படும் வீடியோக்கள் போல நிறைய இருக்கின்றன. ஒரு சுதந்திரமான சர்வதேசக் குழுவால் இது முறையாக விசாரிக்கப் படவேண்டும்.

ஐநா அமைதியான பார்வையாளராக இருந்தது என்று எழுதியுள்ளீர்கள்?

ஐ.நாவின் உள் விசாரணை அறிக்கையான பெட்ரி அறிக்கை போர்ச்சமயத்தில் இலங்கைப் பிரச்சனையில் எப்படி ஒரு சார்பாக நடந்துகொண்டது என்பதைக் காட்டுகிறது. இதுதான் அச்சமயத்தில் ஊடங்களில் செய்திகள் வெளியான விதத்தை மாற்றி அமைத்தது. மனித உரிமைக் குழுக்கள் செயல்படும் விதத்தையும் தீர்மானித்தது என்று நினைக்கிறேன். ஐ.நாவை நம்பி எல்லோரும் செயல்பட்டார்கள். அத்துடன் அவர்களுக்கு இலங்கையால் வெள்ளைப் புலிகள், பயங்கரவாதிகள் என்று ஒதுக்கப்படுவோம் என்ற அச்சமும் இருந்தது.

உங்கள் அனுபவத்தில் இலங்கைப் பிரச்னையுடன் ஒப்பிடும் பிரச்னையாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

சிரியா. இலங்கையை விட விரிவாக ஊடங்களால் செய்திகள் எழுதப்படுகின்றன. ஆனாலும் முடிவு ஏற்படவில்லை. இலங்கையைப் பொருத்தவரை சண்டை முடிந்து விட்டது; நடந்தது நடந்ததுதான். ஆகவே இனிமேல் அதில் கவனிக்க எதுவும் இல்லை என்று உலகம் நினைக்கிறது. தமிழர்களுக்கு எதிரான போர் இன்னும் ஓயவில்லை. அது வேறு வழிகளில் நடத்தப்படுகிறது. கற்பழிப்பு, காணாமல் போகுதல், சித்திரவதை, கலாசார தாக்குதல்கள், தமிழர் வசிக்கும் இடங்களில் சிங்களக் குடியேற்றம், வரலாற்றை திருத்தி எழுதுதல் ஆகிய வழிகள் அவை. பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் தொடர்ச்சி என்ற பெயரால் சென்னையை விட 12-ல் ஒரு பங்கு நிலத்தில் ஐந்து மாதங்களில் 70,000 அப்பாவி மக்கள்(ஐ.நா கணிப்பு) கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவமாக இது வரலாற்றில் பார்க்கப்படும் என்று நான் கருதுகிறேன்.

நீங்கள் எழுத விரும்பியும் இந்நூலில் எழுதாமல் விட்ட சம்பவங்கள் உண்டா?

இந்நூலை எழுதிய பிறகு ஏராளமான பெண்கள், ஆண்கள் குழுவாக வன்புணர்ச்சி செய்யப்பட்ட தகவல்களை அறிந்தேன். 2012 இறுதி வரையிலும் இது நடந்தது. இப்போதும் கூட இது நடந்து கொண்டிருக்கலாம். நான் நூல் எழுதிய கால கட்டத்தில் பாலியல் வன்முறைக்குள்ளானவர்கள் என்னிடம் பேசத் தயங்கினார்கள். இருப்பினும் ஒரு துணிச்சலான பெண்ணின் கதை நூலில் உள்ளது. இப்போது லண்டனில் தஞ்சம் கேட்டு நிறைய பேர் வருகிறார்கள். காட்டுமிராண்டித்தனமான கொடூரங்களுக்கு உள்ளாகி நடந்ததைச் சொல்லக் கூட முடியாத நிலையில்தான் அவர்கள் உள்ளனர்.

மார்ச், 2013.