இலங்கைக்கு புதிய அரசியல் சாசனம் வரைய ஆயத்தங்கள் நடக்கின்றன. இதற்காக நாடாளுமன்றத்தை அரசியல் யாப்புச் சபையாக மாற்றுவதற்கான மசோதா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுவதே பாக்கி. புதிய அரசியலமைப்பு 3 இலக்குகளைக் கொண்டதாகச் சொல்லப்படுகின்றது. முதலாவது: அதிகளவு அதிகாரங்களைக் கொண்டுள்ள அதிபர் ஆட்சி முறையை இல்லாதொழித்தல். இரண்டாவது: தேர்தல் முறையில் மாற்றம். மூன்றாவது: இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு.
அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த 2015 ஜனவரி 8 தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளார். இலங்கையிலுள்ள நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறை இல்லாதொழிக்கப்படும் என்ற வாக்குறுதியை முன்வைத்துத்தான் அதிபர் தேர்தலை அவர் எதிர்கொண்டிருந்தார். அதில் பெரிய வெற்றியையும் பெற்றிருந்தார். வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மைத்திரியும் அவரது கட்சியினரும் உறுதியாகவுள்ளனர்.
இலங்கையின் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்திருப்பது அரசியலமைப்புத் திருத்தம் கடினமானதாக இருக்கப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றது என விமர்சகர்கள் சிலர் குறிப்பிடுகின்றார்கள். எதிர்த் தரப்பில் உள்ள முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ பிரிவினரோ அல்லது ஜே.வி.பி.யோ கூட அதிகாரம் மிக்க அதிபர் ஆட்சி முறை மாற்றப்படுவதை எதிர்க்கப்போவதில்லை. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனை நிச்சயமாக ஆதரிக்கும். அந்தவகையில் அரசியலமைப்பு மாற்றத்தின் முதலாவது இலக்கு கடினமானதாக இருக்கப்போவதில்லை.
அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் இரண்டாவது இலக்காக தேர்தல் முறை மாற்றம் அமையும் எனக் குறிப்பிட்டிருந்தோம். இது சர்ச்சைக் குரிய ஒன்றாகத்தான் இருக்கும். தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலமாக கொண்டுவரப்பட்டது. இது பெருமளவுக்கு ஐ.தே.க.வுக்கு சார்பானதாகவே நோக்கப்படுகின்றது. ஸ்ரீல.சு.க. முன்பிருந்த தேர்தல் தொகுதி முறையை விரும்புகின்றது. இந்த முரண்பாடுகளுக்கு மத்தியில் இரண்டுக்கும் இடைப்பட்டதாக கலப்பு தேர்தல் முறை ஒன்று புதிய அரசியலமைப்பின் மூலம் உருவாக்கப்படலாம் என்ற கருத்து உள்ளது. அதற்கான யோசனை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனைவிட தமிழர்களுடைய பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் புதிய அரசியலமைப்பில் என்ன சொல்லப்படப்போகின்றது என்பதுதான் தமிழர்களின் அக்கறைக்குரிய விஷயம். இதனைத் தான் இந்தியாவும் எதிர்பார்த்திருக்கின்றது. புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என்ற அம்சம் இடம்பெறுமா? அல்லது ஐக்கிய இலங்கை என்ற அடிப்படையில் அதிகாரப்பரவலாக்கல் திட்டம் ஒன்று முன்வைக்கப்படுமா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பிரதான கட்சிகளும் இதில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கின்றன. அதாவது, ஒற்றையாட்சி முறை மாற்றப்படாது என்பதுதான் அவர்களின் கருத்தாகவுள்ளது.
அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளும் ஒற்றையாட்சி முறைமையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அரசியலமைப்பு திருத்தம் ஒற்றையாட்சிக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது. அரசியலமைப்பு திருத்தமானது பௌத்த சிங்கள கொள்கையை எந்த விதத்திலும் பாதிக்காத வகையிலும் ஏனைய மத, இன உரிமைகளை பலப்படுத்தும் ரீதியிலும் உருவாக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அதிகார பகிர்வின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கும் எந்தவொரு சாத்தியமும் இல்லை. அதேபோல் சர்வதேச ஆலோசனைகளை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. குறிப்பாக அதிகாரப்பகிர்வு விஷயத்தில் இந்தியாவின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட 13 ஆம் திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகாரப்பகிர்வை வழங்கப்போவதும் இல்லை எனவும் மிகவும் திட்டவட்டமான முறையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருக்கின்றார்; பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இதே நிலைப்பாட்டைத்தான் கொண்டிருக்கின்றது.
அதாவது, சிங்கள இனவாதிகளின் உணர்வுகளுக்கு முரணாகச் செயற்படுவதற்கு அரசாங்கத்தில் இணைந்திருக்கும் இரு கட்சிகளுமே தயாராகவில்லை. இவ்விரு தரப்பினரும் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் அதனைத்தான் பிரதிபலிக்கின்றது. அரசியலில் இன்று பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஷ தரப்பினர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிங்களக் கடும் போக்காளர்களை தூண்டிவிடலாம் என்ற அச்சமும் இவர்களுடைய இந்த நிலைப்பாட்டுக்கு காரணமாக இருக்கலாம். ஆக, தமிழர்களுடைய பிரச்சினைக்கான தீர்வு இந்த அரசியலமைப்பிலாவது முன்வைக்கப்படுமா என்பதில் சந்தேகம்தான் எழுகின்றது.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறை எவ்வாறானதாக இருக்கப்போகின்றது என்ற கேள்வி எழுகின்றது. கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பதை அதன் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்: ‘நாட்டில் ஏற்பட்ட யுத்தம் நாட்டை பல வருடங்களுக்குப் பின் தள்ளிவிட்டது. தமிழ் மக்கள் பெரிய நெருக்கடிகளையும் கஷ்டங்களையும் சந்தித்தார்கள். இன்று எவரும் தனிநாடு கேட்கவில்லை. தனித் தமிழீழ கோரிக்கையும் இன்று இல்லை. யுத்தம் முடிவடைந்ததோடு தனி நாட்டுக் கோரிக்கை கைவிடப்பட்டுள்ளது. பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பின் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு ஸ்திரமான தீர்வை காண முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது‘ என சம்பந்தன் குறிப்பிட்டிருக்கிறார்.
‘அதுமட்டுமன்றி நாட்டு மக்களின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து ஒரே இலங்கை உருவாக்கப்பட வேண்டும். நான் ஒரு இலங்கையன் என்றும் இது எனது நாடு என்றும் பெருமையாக கூறும் நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும்‘ எனவும் சம்பந்தன் ஒரு படி மேலே வந்து எடுத்துரைத்திருக்கிறார்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்திற்கு அப்பால் சென்று அதிகாரங்கள் பகிரப்படமாட்டாது என்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படப் போவதில்லை எனவும் அரசாங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் தமிழ் பேசும் மக்கள் இணைந்த வடக்கு, கிழக்கில் 13 ஆவது திருத்த சட்டத்திற்கு அப்பால் செல்லும் அதிகாரப்பகிர்வையே கோரி நிற்கின்றனர். த.தே.கூ. இந்த விஷயத்தில் ஏதாவது விட்டுக்கொடுப்புக்களைச் செய்துவிடலாம் என்ற காரணத்தினால்தான் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை அமைக்கப்பட்டிருக்கின்றது.
பேரவையால் முன்வைக்கப்படப்போகும் தீர்வுத் திட்டம் கூட்டமைப்பின் யோசனையைவிட கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அத்துடன், கூட்டமைப்பு கடுமையான ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கான அழுத்தத்தைக் கொடுப்பதாகவும் பேரவையின் செயற்பாடுகள் அமையும்.
தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஒன்று புதிய அரசியலமைப்பின் மூலமாக வழங்கப்படுவதை மகிந்த ராஜபக்ஷ தரப்பு அனுமதிக்கப்போவதில்லை. தமது அரசியலுக்கு அதனை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்துவார்கள். ராஜபக்ஷ தரப்பின் புத்தெழுச்சியை மைத்திரி - ரணில் தரப்பு விரும்பவில்லை. அதனால், ராஜபக்ஷ தரப்பை சீண்டாத ஒரு ‘தீர்வை‘ அவர்கள் விரும்பலாம். அது உண்மையில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரங்களைக் கொடுக்கக்கூடிய நியாயமான ஒரு தீர்வாக அமையப் போவதில்லை. அதாவது மீண்டும் பழைய இடத்திலிருந்துதான் ஆரம்பமாகப்போகின்றதா? அவ்வாறான நிலையில் 2016 இல் தீர்வு எனக் கூறிவரும் சம்பந்தன் என்ன செய்வார்?
பிப்ரவரி, 2016.