சிறப்புக்கட்டுரைகள்

தமிழர் ஒற்றுமை என்ன விலை?

தமிழய்யா

மொழிவாரி மாநிலங்களாக நாடு பிரிக்கப்பட்ட போது தமிழகத்துக்குச் சேரவேண்டிய பல பகுதிகள் அண்டைமாநிலங்களோடு சேர்க்கப்பட்டுவிட்டன. அந்த நேரத்தில் தமிழகத்தலைவர்களிடம் ஒற்றுமை இல்லாத காரணத்தால்தான் இழந்த பகுதிகளைப் போராடி மீட்கமுடியவில்லை என்று சொல்லப் பட்டுக்கொண்டிருக்கிறது. தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் நம்மிடம் இருந்திருந்தால் பல்லாண்டுகளாக தொடரும் முல்லைபெரியாறு சிக்கலே இருந்திருக்காது என்றும் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்தக் காலகட்டத்தைப் பற்றிப் பேசினாலே காமராசரின், குளமாவது மேடாவது எல்லாம் இந்தியாவுக்குள்தானே இருக்கிறது என்று மிகப்பெருந்தன்மையோடு சொல்லி தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுத்த சொற்களை மறக்கமுடியாது.

அதன்பின்னர் 1974 இல் தமிழகஅரசிடம் எவ்வித ஒப்புதலையும் பெறாமல் இந்திராகாந்தி கச்சத்தீவை இலங்கை அரசுக்குத் தாரை வார்த்துக்கொடுத்தார். அப்போது தமிழகத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி, இந்திராகாந்தியை எதிர்க்கத் துணிவில்லாமல் அதை விட்டுவிட்டார் என்கிற விமர்சனங்கள் ஒரு பக்கமும், அதற்காக நான் எவ்வாறெல்லாம் போராடினேன் என்று கலைஞரின் கூற்றுகள் ஒரு பக்கமும் அவ்வப்போது பேசப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

1983-க்குப் பின்னர் தமிழகத் தமிழர்களைத் தமிழர்களாக உணரவைப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் ஈழத்தமிழர் இன்னல்கள் மட்டுமே இருக்கின்றன. அதைத்தாண்டி தமிழகத்தின் எந்தச்சிக்கலாலும் தமிழர்களை ஒருங்கிணைக்க முடியவில்லை. இதிலும் தமிழர்களை ஒருங்கிணைக்க முடிவதில்லை என்றாலும் தமிழர்களாக உணரவைப்பதற்காவது முடிகிறது என்று ஆறுதலடையலாம்.

இந்த ஆறுதலும் தேர்தல் அல்லாத காலகட்டங்களில் மட்டுமே. தேர்தல் என்று வந்துவிட்டால், கட்சி ரீதியாகப் பிரிந்துபோய்விடுவார்கள். அந்நேரத்தில் தங்களுடைய கட்சி வெற்றிபெற வேண்டும் என்கிற சிந்தனையைத் தவிர வேறொன்றும் பெரிதாகத் தெரியாது.

இவை எல்லாவற்றையும் மீறி ஈழத்தமிழர் நலன் என்கிற அடிப்படையில் தமிழகத்தின் அனைத்து அரசியல்கட்சிகளும் ஒருங்கிணைந்து தமிழகச்சட்டமன்றத்தில் இரண்டு தீர்மானங்களைக் கொண்டு வந்தன என்பது சமீபத்திய வரலாற்றில் மிகமுக்கியமான நிகழ்வாக இருக்கிறது. அதிமுக ஆட்சி கொண்டுவந்த ஒரு தீர்மானத்தை வரவேற்று சட்டமன்றத்திலேயே திமுகவும் பேசியது. அதற்கும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இதற்குக் காரணம், இந்த அரசியல்கட்சிகள் உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் வைத்துப் பேசுகின்றன என்பது மத்திய அரசுக்கு நன்கு தெரியும். அதனால்தான் இந்த ஒற்றுமையைக் கண்டு அவர்கள் அஞ்சவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதேசமயம் இந்த ஒற்றுமை வருவதற்கு தமிழகத் தமிழர்கள் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களின் உத்வேகமான போராட்டங்கள்தாம் காரணம். ஒரே அமைப்பின் கீழ் இணைந்து பணியாற்றவில்லையென்றாலும் ஒரே கருத்தைப் பேசிக் கொண்டிருந்ததன் பலன்தான் என்றும் சொல்லப்படுகிறது. இவை அரசுகளை மிகவும் இலேசாகத்தான் அசைத்துப் பார்க்கின்றன என்று குறைபட்டுக்கொள்ளும் அதே நேரத்தில் மக்கள் மனதில் இது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இது தேர்தல் நேரத்தில் வெளிப்பட்டுவிடுமோ என்கிற பயம் எல்லா அரசியல்கட்சிகள் மனதிலும் விதைக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிமுக, திமுக உள்ளிட்ட எல்லா அரசியல்கட்சிகளும் ஒரேகுரலில் பேசக்காரணமாக இருந்தவை, தமிழ்த்தேசியத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அமைப்புகள்தாம். ஈழச் சிக்கல் மட்டுமின்றி தமிழகத்தின் உரிமைகள் மத்திய அரசால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பறிக்கப்போடும்போதெல்லாம் அதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவதும் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவதும் இந்த அமைப்புகள்தாம்.

இப்போது இந்த அமைப்புகளுக்குள்ளான முரண்பாடுகள் கொள்கைகளைத்தாண்டி முன்னிறுத்தப்படுகின்றன என்பதுதான் கவலைக்குரிய செய்தி. 

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி காலவரையற்ற பட்டினிப்போராட்டத்தை தியாகு தொடங்கினார். அந்தப் போராட்டத்துக்கு கொள்கை அடிப்படையில் எல்லா தமிழ்த்தேசிய அமைப்புகளும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதும் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் திறப்புவிழாவுக்கு எல்லாத் தமிழ்த்தேசிய அமைப்புகளுக்கும் அழைப்பு கொடுக்கப்படவில்லை என்பதும் குற்றமாகச் சொல்லப்படுகிறது.    

ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ளவே விரும்பாத அரசியல் கட்சிக்காரர்கள் கூட மக்களுக்குப் பயந்து ஒரே குரலில் பேசத் தொடங்கியிருக்கும் இந்தச் சூழலில் கொள்கை மாறுபாடு இருந்தாலும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து அன்பு செலுத்துகிற தமிழ்த்தேசியத் தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் போயிருப்பது வருத்தத்துக்குரிய செயலாக இருக்கிறது.

தமிழகச் சட்டமன்றத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றினாலும் அதே ஈழத்தமிழர்களின் துயரத்தை முன்வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் திறப்புவிழா நிகழ்வுக்கு பல நெருக்கடிகளைக் கொடுத்து முடக்கப் பார்த்தது தமிழகஅரசு. நீதிமன்றத்தின் துணையோடு முற்றத்தைத் திறந்துவிட்டாலும் எவ்வித முன்னறிப்பும் இல்லாமல் சுற்றுச்சுவரை இடித்தார்கள். ஈழச்சிக்கல் உட்பட தமிழகத்தின் அடிப்படை உரிமைகளுக்காக எப்போதும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிற கொளத்தூர்மணி தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

அரசுகள் எல்லாமே ஒரே மாதிரி சிந்திக்கின்றன.

ஒசாமா பின்லேடனைக் கொன்று அவரை இந்தஇடத்தில் புதைத்தோம் என்று சொன்னால்கூட அந்த இடத்தைப் புனிதத்தலமாக மாற்றிவிடுவார்கள் என்று எண்ணிய அமெரிக்கா, அவரைக் கடலில் போட்டுவிட்டதாகச் சொல்லுகிறது. ஈழத்தில் மாவீரர்கள் நினைவாக எழுப்பப்பட்ட நினைவிடங்களைக் கண்டு பயந்து அவற்றை இடித்துத் தள்ளியது சிங்களஅரசு. அதோடு மட்டுமில்லை, பிரபாகரன் பிறந்த வீட்டை, சிங்களர்கள் உட்பட எல்லோருமே போயப்பார்த்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதற்காகவே அந்தவீட்டை இடித்தது சிங்களஅரசு. அதன்பின் பிரபாகரன் தங்கியிருந்த பதுங்குகுழி என்று சிங்களஅரசு சொன்னதும், அதைப் பார்க்கக் கூட்டம் கூட்டமாக மக்கள் கூட அதையும் வெடிவைத்துத் தகர்த்துவிட்டது சிங்களஅரசு.

மிகமுக்கியமான கொள்கை அடிப்படையிலான இந்தச் சிக்கலை தமிழ்த்தேசியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராடினால்தான் வெற்றி பெறமுடியும். அதைவிட்டுவிட்டு இது ஜெயலலிதாவுக்கும் நடராசனுக்குமான சிக்கல் என்று எளிமைப்படுத்தி அதை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகளில் சிலர் இறங்கியிருக்கிறார்கள். மொத்தத்தில் தமிழகத்தின் அடிப்படை உரிமைகளுக்காகக் கூட ஒன்று சேர மறுக்கி றார்கள் என்று அண்டைமாநிலங்களை எடுத்துக்காட்டி குற்றும் சுமத்திய தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் இப்போது தங்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாமல் இருப்பது வருத்தத்துக்குரிய செய்தி.

ம.பொ.சி., மார்ஷல் நேசமணி போன்ற தலைவர்களின் தனித்தபோராட்டங்களே அன்றைக்கு தமிழர்களின் நில உரிமைப்போராட்டங்களில் வெற்றி பெறக் காரணமாக இருந்திருக்கின்றன. பெரிய கட்சிகளால் சாதிக்கமுடியாததை சிறு இயக்கங்களாலும் சாதிக்கமுடியும் என்பதற்கு இதுவே உதாரணம். இதில் பெரிய இயக்கங்களும் ஒன்று சேரமுடிந்தால் எவ்வளவோ சாதிக்கலாமே... தமிழ்த்தேசிய இயக்கங்கள் இதையும் மனதில் வைத்து ஒற்றுமையாகச் செயல்படுவது நல்லது.

டிசம்பர், 2013