இந்த நாட்டிலுள்ள இந்தியர்கள் அனைவரும் அடுத்த 90 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்- இது கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவின் முன்னாள் அதிபர் இடிஅமீன் 4 , ஆகஸ்ட் , 1972 அன்று வெளியிட்ட அரசு ஆணை. அப்போது உகாண்டாவின் மொத்த ஜனத்தொகையில் ஒரு சதவீதம் தான் இந்தியர்கள். ஆனால் அந்நாட்டின் மொத்த வருவாயில் இருபது சதவீதத்தை பெறுபவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்களின் மூதாதையர்களை பிரித்தானிய அரசு இரயில்வே கட்டுமான பணி செய்வதற்காக கூலிகளாக இந்தியாவிலிருந்து உகாண்டாவிற்கு 1890ல் அழைத்துச் சென்றிருந்தது. கடினமான அந்த வேலையில் போது பணி முடித்து உயிரோடிருந்தவர்களில் பலர் இந்தியா திரும்பிவிட மீதம் இருந்தவர்கள் தொடர்ச்சியான உழைப்பினால் உகாண்டாவின் முக்கியமான செல்வந்தர்களாயிருந்தனர்.
நாட்டை விட்டு சில உடைகள் சொற்ப பணத்தோடு வெளியேறினார்கள். பெரும்பான்மையானவர்கள் இங்கிலாந்திற்கு சென்றார்கள் அகதிகளாக. 85 ஆண்டிற்கு முன் அடிமைகளாகச் சென்று வியாபாரம் மூலம் உகாண்டா சமூகத்தின் உயர் அடுக்குகளை வசமாக்கியவர்கள் மீண்டும் இங்கிலாந்தில் அகதிகளாகச் சென்று தெருமுனைக் கடைகளைத் திறக்க ஆரம்பித்தனர்.
2012 ல் லண்டனில் அகதிகளாக வந்து சிகரம் தொட்ட அவர்கள் சமீபத்தில் நாற்பதாவது ஆண்டை மிக விமரிசையாக கொண்டாடினர். வெட்ட வெட்ட விஸ்வரூபம் எடுக்கும் இவர்கள் இந்தியர்கள், பேசும் மொழி குஜராத்தி.
வருடம் 1974 , மும்பையின் பிரிட்டிஷ் தூதரக அலுவலகம். விசா வேண்டி வரிசையில் நின்றிருந்தவர்களில் பிம்ஜிபாய் பட்டேலும் (Bhimjibhai patel) லும் ஒருவர்.
தனது முறை வந்ததும் கடவு சீட்டையும் (passport) விசா தொடர்பான தாள்களையும் அலுவலரிடம் கொடுத்தார் பிம்ஜிபாய்.‘எதற்காக நீங்கள் இங்கிலாந்து செல்ல வேண்டும்?’ என்று பிரித்தானிய அலுவலர் ஆங்கிலத்தில் கேட்டார்.
ஆங்கிலம் தெரியாத பிம்ஜிபாய் ‘ ஐயா குஜராத்தியில் கேளுங்கள்?’ என்றார்.
எரிச்சலான அலுவலர் ,‘ உங்களுக்கு இங்கிலாந்தில் யாரையாவது தெரியுமா? இங்கிலாந்தில் எங்கு தங்குவீர்கள்? எதற்காக இங்கிலாந்து போக வேண்டும் ?’ என்று ஆங்கிலத்தில் கேள்விகளை அடுக்கினார்.
‘ ஐயா தயவு செய்து குஜராத்தியில் பேசுங்கள் ?’ என்று கெஞ்சினார் பிம்ஜிபாய்.
இருவரும் தமது மொழியிலே பேசிக்கொண்டிருந்தனர்.
கோபமுற்ற பிரித்தானிய அலுவலர் கடவுச் சீட்டில் ஒரு சீலைக் குத்தி தூக்கி எறிந்தார்.
தனது கடவுச் சீட்டில் என்ன சீல் குத்தப்பட்டிருக்கிறது என்பதை பிம்ஜிபாயால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அங்கிருந்த ஒரு குஜராத்தி பெண்மணியிடம் போய் என்னவென்று குறிப்பைப் பற்றி கேட்டார். ‘விசா தர மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது’
‘ காரணம் ஏதும் இருக்கிறதா?’
‘அப்படி ஏதும் இல்லை’
‘அந்த அலுவலரிடம் ஏன் எனக்கு விசா மறுக்கப்பட்டது என்பதை விசாரித்துக் கூற முடியுமா?’
அலுவலரிடம் விசாரித்துவிட்டு பெண்மணி ,‘ ஆங்கில மொழியில் ஒரு வார்த்தைக்கூட தெரியாத நீங்கள் இங்கிலாந்து போய் எதுவும் செய்ய முடியாது என்பதால் விசா மறுக்கப்பட்டிருக்கிறதாம்’
‘ சகோதரியே , அவருக்கு இந்தியாவில் எந்த மொழியாவது தெரியுமா? இந்தியாவின் எந்த மொழியும் தெரியாமல் அவரால் இந்தியாவில் வேலை செய்யமுடியும் போது ஆங்கிலம் தெரியாமல் இங்கிலாந்தில் ஏன் வாழ முடியாது என்று கேளுங்கள்’
இந்த வாதத்தை மொழிபெயர்த்து அலுவலரிடம் கூறினார் அந்த குஜராத்தி பெண்மணி.
வாதத்தின் லாஜிக் அலுவலரை யோசிக்க வைத்தது. பின் லேசான புன்னகையோடு பிரித்தானிய அலுவலர் , தூக்கி எறிந்த கடவுச்சீட்டை திரும்பக் கேட்டார். மாலை வந்து விசாவை வாங்கிக் கொள்ளச் சொன்னார்.
வறுமையினால் படிப்பை தொடரமுடியாமல் விவசாய கூலியாக வாழ்வை ஆரம்பித்த இந்த பிம்ஜிபாய் பட்டேல் பின் வைரத் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளி ஆனார். தொடர்ச்சியான உழைப்பும், ரிஸ்க் எடுக்கும் தன்மையும் பிம்ஜிபாயை சூரத் நகரிலுள்ள 120 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ‘டைமண்ட் நகருக்கு’ உரிமையாளராக்கியது. எவ்வளவு படித்திருந்தாலும் உயர் நிலையிலிருந்தாலும் இரண்டு குஜராத்திகள் சந்தித்துக்கொள்ளும் போது அனேகமாக தமது தாய் மொழியில் மட்டுமே பேசிக் கொள்வார்கள்.வாழ்வில் உயர்வதற்கும் வெற்றிபெறுவதற்கும் தாய் மொழி மட்டும் தெரிந்திருந்தால் போதுமானது என்பது அனேக குஜராத்திகளின் எண்ணமாக இருக்கிறது.
பரோடாவில் உள்ள பிரசித்தி பெற்ற பள்ளியில் எனது புதல்வர்கள் படித்து வந்தனர். 2006 ஆம் வருடம் என்று நினைவு.புதிய வருடத்திற்கு கட்டணத்தைப் பள்ளி நிர்வாகம் 42 சதவீதம் உயர்த்திவிட்டது. அநியாயமா உயர்த்திவிட்டார்களே பள்ளிக்கூடத்தில் போய் கேட்கலாமா என்று நான் கேட்க, வேண்டாங்க நீங்க போய் ஏதாவது கேட்டு வைக்க பிள்ளைகளை பழிவாங்கிறப் போறாங்க என்ற மனைவி புலம்பலை மட்டும் விடவில்லை. ஆனால் குஜராத்தி பெற்றோர் குழுவாக சேர்ந்து கூடி விவாதித்தனர். பள்ளி நிர்வாகத்தை அணுகி கூடுதலாக என்னென்ன வசதிகள் செய்து தரப்போகிறீர்கள் , கட்டணத்தை ஏன் இவ்வளவு சதவீதம் கூட்டுகிறீர்கள் , பணவீக்கம் இத்தனை சதவீதம் தானே? என்று பல கேள்விகளை எழுப்பினர். பள்ளி நிர்வாகம் சரிவர பதிலளிக்காமல் போக , ஒரு அமைப்பு உருவாக்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
நீண்ட போராட்டத்திற்கு பின் பள்ளி நிர்வாகம் இறங்கி வந்து கட்டண உயர்வை 12 சதவீதமாக குறைத்தது. உரக்க கோஷமெழுப்பாமல் , கல்லெறியாமல் போராடி வெல்லமுடியுமென்பதையும் அவர்கள் உணர்த்தினார்கள்.
தமிழகத்தை விட அரசியல் பற்றி குறைவாகவே விவாதிக்கும் குஜராத்திகள் இந்தியாவின் அரசியல் அதிகாரத்தை தங்களுக்கு எட்டும் தூரத்திலே எப்போதும் வைத்திருக்கிறார்கள். மகாத்மா காந்தி மற்றும் பாகிஸ்தானின் தேசதந்தை ஜின்னா இருவரும் குஜராத்திகள் என்பதில் அவர்களுக்கு பெருமையுண்டு.
சர்தார் வல்லபாய் பட்டேல் , மொராஜ்தேசாய், சிமென்பாய் பட்டேல், நரேந்திரமோடி என்று மிகக் குறைவான குஜராத்தி தலைவர்களே தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்திய போதிலும் எப்போதும் அதிகாரத்தை விட்டுக் கொடுப்பதில்லை. ராஜீவ்காந்தி பதவியிலிருந்த காலத்தில் மாதவசிங் சொலங்கியும், சோனியாவின் வலதுகரமான அகமது பட்டேலும், கட்சி சார்பின்றி தமது சொந்த மாநிலமான குஜராத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பை பெற்றிருந்தனர். பெரிய போராட்டங்கள் இல்லாமல் அரசியல் அதிகாரத்தால் குஜராத்திகளின் தேவைகள் நிறைவேறுவது தமிழகம் ஆய்ந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
தங்கள் மாநிலத்திற்கு நல்லது என்கிற போது பிற மாநிலத்தவர்களை வைத்து வேலை வாங்குவதில் குஜராத்திகள் மிகவும் கெட்டி.1949ல் ஒருவர் குஜராத்திற்கு வந்தார். திறமையுடன் வந்தவரை வைத்து உலகத்தரமுள்ள கூட்டுறவு நிறுவனமொன்றை அமைத்தனர்.அவரது நிர்வாக திறமையினால் அந்த கூட்டுறவு நிறுவனம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவால் விட்டது. அந்த கூட்டுறவு நிறுவனம் வெற்றியடைந்த போது பல குஜராத்திகளுக்கு அந்த வெளிமாநிலத்தவரிடம் இருந்து தலைமைப் பதவியை பறித்தால் என்ன என்று தோன்றியது. ஆனால் மாநிலமே அந்த வெளிமாநிலத்தவருக்கு ஆதரவு அளித்தது. 57 வருடங்கள் தலைமைப் பதவியில் தொடர்ந்தார். அவர் வர்கீஸ் கூரியன்.நிறுவனம் அமுல். இந்தியாவில் இது போன்று வேறு எங்கும் நிகழ்ந்ததில்லை.
கடந்த இருபது ஆண்டுகளாக தமிழகத்திற்கு வெளியே வாழும் நான் ஐந்தரை ஆண்டுகள் குஜராத்திலும் வாழ்ந்தேன். தங்களது சொந்த ஊரை விட்டு வெளி மாநிலங்கள் / நாடுகளில் வாழும் இந்திய இனங்களில் முக்கியமானவர்கள் தமிழர்களும், குஜராத்திகளும்.
நீண்ட காலம் குஜராத்திகளிடம் பழகியதில் இருந்து சில குணாதிசயங்களை தமிழர்கள் பின்பற்றலாம்.
1. இன்ஜினியரிங், மருத்துவ படிப்பு ஏன் கல்லூரி படிப்புக்கூட சரியாக படிக்காத பிள்ளைகளை கரித்துக் கொட்டுவதை விட்டு விட்டு அவனுக்கு சரிவருகிற அல்லது பிடிக்கிற மாதிரி ஒரு வழியை காட்டுங்கள். அவர்கள் படித்தவர்களை விட உயரத்திற்கு செல்லலாம். நன்கு படித்து, கடினமாக உழைத்து உயர்ந்த பதவிகளை நோக்கி பயணிக்கலாம் தப்பில்லை. ஆனால் தொழில் தொடங்குவது கௌரவ குறைச்சலான விஷயமில்லை.
2.சினிமா பாருங்கள், கொண்டாடுங்கள், தவறில்லை. ஆனால் சினிமா பைனான்ஸ் நேரிடையாகவோ மறைமுகமாகவோ மார்வாடிகளிடமும், குஜராத்திகளிடமும் தான் உள்ளது.வெற்றிகரமாக சினிமா பைனான்ஸ் செய்வது எப்படி என்று விவாதியுங்கள், அதற்கான பாதை புலப்படும்.
சினிமா முதல் தங்கம் வரை தமிழர்கள் வெறும் நுகர்வோர்களாகவே இருக்கிறார்கள். அதன் மூலம் வரும் லாபத்தில் பெரும் பகுதி எல்லை கடந்து செல்கிறது. பிற இடங்களில் இருந்து லாபம் உள்ளே வரவேண்டுமென்றால் தொழில் தொடங்குவதை அதிகம் ஊக்குவிக்கவேண்டும்.
3.தமிழர்களில் கணிசமானோர் தமிழகத்திற்கு அப்பால் புலம் பெயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களோடு தாய் தமிழகத்திற்கு அமைப்பு ரீதியான உறவுகளும் , தொடர்புகளும் அவசியம். இதை தமிழக அரசே முன்னெடுக்க வேண்டும். உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் வெற்றித் தமிழர்களின் அறிவு, தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உதவலாம். மகாத்மா காந்தியும் , நரேந்திர மோடியும் வெளிநாட்டு வாழ் குஜராத்திகளிடம் மிக நெருக்கமான உறவை வைத்திருந்தார்கள். 2014 பாராளுமன்ற தேர்தலில் மோடியின் பிரச்சாரத்தின் அடிப்படைகளை உருவாக்கிய மனோஜ்லட்வா இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியின் முக்கிய உறுப்பினர். குஜராத்தியான மனோஜ் லட்வாவின் வெளிநாட்டு அனுபவம் மோடிக்கு பெருமளவில் உதவியது.
தமிழகம், குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் நீண்ட கடலோரம் உண்டு. சரித்திரத்தில் இரு இனத்தாரும் திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் என்பதற்கு போதுமான ஆதாரம் உண்டு.ஆனால் தமிழர்கள் கடந்த 75 ஆண்டுகளில் வேலை,சம்பளம் என்பதில் கவனத்தை திருப்பிக் கொண்டார்கள்.
மீண்டும் தமிழர்கள் திரை கடலோடித் திரவியம் தேட வேண்டிய காலம் வந்து விட்டது.