சிறப்புக்கட்டுரைகள்

தமிழக மாவீரர்!

அவர்கள் அவர்களே

ப.திருமாவேலன்

நான் பார்த்த முதல் புலி, ‘அச்சுதன்'. பதினோறாம் வகுப்பு படிக்கும் போது கோவில்பட்டிக்கு ஈழ விதையை விதைக்க வந்த புலி அச்சுதன். அவர் அப்போது தன்னை யாழ்ப்பாணம் என்று சொல்லிக் கொண்டதாக நினைவு.

சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஒருவர் பெயர் நினைவில் இல்லை. கோவில்பட்டி சரஸ்வதி விடுதியில் தங்கி இருந்தார். அவர் தான் அச்சுதனை அழைத்து வந்தார். அப்போது ஒருநாள் அச்சுதன் சொன்னார். ‘‘இப்போதுதான் கடையத்தில் இருந்து வருகின்றேன். பேராசிரியர் அறிவரசன் அய்யா வீட்டில் தங்கி இருக்கோம்'' என்றார். பேராசிரியர் அறிவரசன் என்ற பெயர் அப்போது தான் என் காதில் விழுகிறது.

‘‘அய்யா வீடு தான் புலிகளின் புகலிடம்'' என்றார் அச்சுதன். அந்தப் புகலிடமான பேராசிரியர் அறிவரசன் மார்ச் 4ம் நாள் மறைந்துவிட்டார்.

சட்டம் படிக்க சென்னைக்கு வந்துவிட்டேன். ஒருநாள் பெரியார் திடல் சென்றிருந்தபோது தான், அறிவரசனைச் சந்தித்தேன். கோவில்பட்டி என்றதும் என் பெயரைச்

சொன்னார். ‘‘அச்சுதன் சொன்னது'' என்றார். அந்தக் காலத்து நினைவுகளை நின்றும் அமர்ந்தும் சொன்னார் அய்யா. அநேகமாக இது 1990களின் தொடக்க ஆண்டுகளாக இருக்கும். ‘‘தமிழீழம் கிடைத்தால் அங்கே போய் விட வேண்டியது தான்'' என்று சொல்லிக் கொண்டார். ‘‘தமிழர்களின் கனவு தேசம் அதுவாகத்தான் அமையும்'' என்றார். திடலுக்குச் செல்லும் போது சந்திப்பேன். அதன்பிறகு அவரோடு தொடர்பு இல்லை.

பழ.நெடுமாறன் அவர்கள் உலகத்தமிழர் பேரமைப்பைத் தொடங்கியபோது, அதன் நிகழ்வில் மீண்டும் சந்தித்தேன். 2002 ஆக இருக்கலாம். ‘‘தமிழீழம் அமைப்பதும், உலகத் தமிழர்களை ஒருங்கிணைப்பதும் நோக்கம்'' என்றார். அந்த விழா மேடைகளில் அதிகம் இடம்பெற்றார்.

 திடீரென ஒரு தகவல், ‘‘பேராசிரியரை, தம்பி பிரபாகரன் அங்கேயே நிரந்தமாக அழைத்துச் சென்றுவிட்டார்கள்'' என்று. அது ராஜபட்சே ஆட்சிக்கு வந்த நேரம். ‘‘இது தமிழர்களுக்குச் சாதகமான சூழ்நிலை அல்ல'' என்று நாங்கள் எங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த நேரம். அதன்பிறகு சில நண்பர்கள் மூலமாக அறிந்தேன், அய்யா அங்கு சென்றுவிட்டார் என்று.

சில ஆண்டுகள் கழித்து நெல்லையில் இருந்து ஒரு நண்பர் பேசினார், ‘‘அறிவரசன் அய்யா இங்கு வந்துவிட்டார்'' என்று சொன்னார். அவரை பார்க்க ஆள் அனுப்பி வைத்தேன். என்னை நலம் விசாரித்தவர், தொலைபேசியில் பேசினார். அது 2008. ‘‘நிலைமை எதுவும் சரியில்லை. என்னை தம்பியே அனுப்பி வைத்துவிட்டார்'' என்று சொன்னார்.

பாலச்சந்திரன் கொல்லப்பட்டபோது அவர் எழுதிய பதிவு தான் உலகத்தை விம்மி அழ வைத்தது:

‘அம்மா! அப்பாவைப் பாக்கணும்... அழைச்சுட்டுப் போங்கம்மா...‘ அன்று கேட்ட இந்தக் குரல்...!

மதிவதனி அம்மையாரின் மடியில் அமர்ந்து கொண்டு அப்பாவைப் பார்த்து அவருடன் பேச வேண்டும் என்ற விருப்பத்தை & ஏக்கத்தை & வெளிப்படுத்திய

சிறுவன் பாலச்சந்திரனின் குரல்தான் அது.

நான் கிளிநொச்சியில் தங்கியிருந்த காலத்தில், 2007&ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் ஒருநாள் தலைவர் பிரபாகரனைப் பார்க்க வேண்டும் என விரும்பிய அவரது இளைய மகன் பாலச்சந்திரனுடைய அந்தக் குரல் என் செவிகளில் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தலைவர் பிரபாகரன் அவர்களுடைய துணைவியாரும் பிள்ளைகளும் பெற்றோர் - வேலுப்பிள்ளை, பார்வதி அம்மையார் ஆகியோரும் கிளிநொச்சி நகர் அருகில் ஓரிடத்தில் வாழ்ந்திருந்தனர்.தலைவர் பிரபாகரன் எந்த நாளில் எந்த நேரத்தில் எங்கு இருப்பார் என்பது, இயக்கப் பொறுப்பாளர்கள் - தளபதிகள் - சிலரைத் தவிர வேறு எவர்க்கும் தெரியாது. பொது  மக்களைப் போலவே, தலைவர் பிரபாகரன் குடும்பத்தினரும் விரும்பிய வேளைகளில் எல்லாம் அவரைப் பார்த்துப் பேச முடியாத நிலை. பெற்றோரையும் மனைவி மக்களையும் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் எழுகின்ற போது, வீட்டுக்கு வந்து

சிறிது நேரம் குடும்பத்தினருடன் இருந்து செல்வது உண்டு.

கிளிநொச்சி நகருக்கு வெளியே தமிழ்ப் பயிற்சிகல்லூரி வளாகத்தில் நான் தங்கியிருந்தேன். மதிவதனி அம்மையார் வந்து என்னை

செஞ்சோலைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு அருகில் ஒரு சிறுவன் அவர் கையைப் பற்றிக் கொண்டு நின்றிருந்தான். அதற்கு முன் அவனை நான் பார்த்ததில்லை. அம்மையாருடன் நெருக்கமாக நின்றதையும் அவன் முகச்

சாயலையும் பார்த்து, அவன் தலைவர் மகனாக இருக்கலாம் என்று எண்ணினேன். மதிவதனி அம்மையார், அந்தச்

சிறுவனிடம் பேசினார், ‘தம்பி! ஐயா பாடம்

சொல்லப் போறாங்க; ஐயா

சொல்வதைக் கேட்டு நான் எழுதணும்

நீங்க வெளியே போய் நம்ம பிள்ளைகளோட விளையாடுவீங்களாம்; சரியா?'' என்றார். விருப்பமில்லாமல் சிறுவன் வெளியே

சென்றான்.

பின்னர் வந்தான். நான் அம்மையாரைப் பார்த்தேன். ‘இவர் என் இளையமகன்' என்று மகனை எனக்கு அறிமுகப் படுத்தினார். ‘தம்பி! ஐயாவுக்கு வணக்கம் சொல்லுங்க‘ என்றார். வணக்கம் சொன்ன அந்தத் தம்பியை, அருகில் வரச்சொல்லி ‘தம்பி வாங்க ... பள்ளியில் படிக்கிறீங்களா? எந்த வகுப்பில் படிக்கிறீங்க?' என்றேன். மழலை மாறாத குரலில், ‘ஆண்டு மூன்று' (மூன்றாம் வகுப்பு) என்றார். ‘உங்க பேர் என்ன? சொல்லுங்க' என்றேன். ‘பாலச்சந்திரன்' என்றார்.

முந்திய நாள் பாட வேளையில், அனைவரும் தமிழில் பெயர் சூட்டி கொள்வதற்கான இயக்கம் தமிழீழத்தில் செயற்படுவது குறித்துக் கலந்துரையாடினோம். பாலச்சந்திரன் என்பது தமிழ் இல்லையே என்ற எண்ணத்துடன் அம்மையார் முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன்.

‘என் தம்பி பெயர் பாலச்சந்திரன்; அவன் களத்தில் வீரச்சாவடைந்து விட்டான். அவன் நினைவாக அவன் பெயரைத் தம்பிக்குச் சூட்டியிருக்கிறோம்' என்று அம்மையார் தெளிவு படுத்தினார்.

தம்பி பாலச்சந்திரனை அருகில் அழைத்து அன்புடன் தழுவிக் கன்னத்தில் முத்தமிட்டேன். வெட்கத்துடன் என்னிடமிருந்து விலகிய தம்பி அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டு, அவருடன் சென்று அருகில் அமர்ந்து கொண்டார்.

‘தம்பி! இன்னும் கொஞ்சம் நேரம் வெளியே போய் விளையாடுங்க. வகுப்பு முடிஞ்சவுடனே வீட்டுக்குப் போகலாம்' என்றார்.

‘அம்மா! வீட்டுக்கு வேண்டாம்; அப்பாவைப் பாக்கப் போகலாம்.. சரியா?' என்று பாலச்சந்திரன் அம்மாவிடம் கெஞ்சினான். ‘சரி தம்பி போகலாம்;

நீங்க போய் விளையாடுங்க‘ என்றார்.

‘போங்கம்மா... அன்னிக்கு அப்பாவைப் பாக்கப் போம்போது என்ன விட்டுட்டுப் போயிட்டீங்க. நான் வருவேன்; நான் அப்பாவைப் பாக்கணும்'.

நினைத்த போதெல்லாம் பிள்ளைகள் கூடச்

சென்று பார்க்க முடியாத சூழலில் அப்பா இருக்கிறார் என்பதை அந்தப் பிஞ்சு உள்ளத்திற்கு எப்படிப் புரிய வைப்பது என்ற திகைப்புடன் ஒருவாறு பேசிச் சமாளித்து மகனை வெளியே அனுப்பினார் அந்தத் தாய்.

தாயக விடுதலைக்கான போர் நடைபெறுகிறது; அந்தப் போருக்கு அப்பா தலைமை தாங்குகிறார். உடன் பிறந்த அண்ணன் சார்லசும் அக்கா துவாரகாவும் எதிரிப் படைகளை எதிர்த்துக் களத்தில் நிற்கின்றனர் என்னும் விவரம் எதுவும் அறியாத விளையாட்டுப் பருவத்தில் அந்தச் சிறுவன் & பாலச்சந்திரன் முள்ளிவாய்க்கால் போரின் முடிவில் சிங்களப் படையினரின் கையில் சிக்கினான்.

அந்த மாசற்ற சிறுவனை & மதிவதனி அம்மையாரின் மகனை & தலைவர் பிரபாகரன் அவர்களின் தவப் புதல்வனை & பன்னிரெண்டே வயதான் பாலச்சந்திரனை சிங்களப் படையைச் சேர்ந்த பாவி ஒருவன் மூன்றடித் தொலைவில் நின்று நெஞ்சில் சுட்டு வீழ்த்தியிருக்கிறான்.

‘அம்மா, அப்பாவைப் பார்க்கனும் அழைச்சுட்டுப் போங்கம்மா' என்ற குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது''   & என்று எழுதினார் அறிவரசன். அழுத்தி முத்தமிட்டால் வலிக்கும் என்று இருத்தி முத்தமிடும் தாய்க் குணம் கொண்ட உள்ளத்தோடு அறிவரசன் எழுதி இருப்பார். பேச அழைத்துவிட்டு, இணைப்பைத் துண்டித்துவிட்டேன்!

எத்தகைய மனிதர் அவர்? ஆழ்வார்குறிச்சிக் கலை அறிவியல்  கல்லூரியில் தமிழ்ப்  பேராசிரியராகப் பணியாற்றி 1996இல்ஓய்வு பெற்றவர். அவர். கல்லூரிக்கு வெளியில் தான் அவரது முழுப்பணி தொடங்கியது. தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய முதுபுலவர் மு.அருணாசலம், இவரது பெரியப்பா. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துவிட்டு, பல பல்கலைக் கழகங்களை உருவாக்கிய பேராசிரியர் இவர். 2006ம் ஆண்டு ஈழம் சென்றார். தமிழும் ஆங்கிலமும் கற்பிக்க நல்ல ஆசிரியர்கள் தேவை என்று புலிகள் அமைப்பின் நிதித்துறை பொறுப்பாளர் தமிழேந்தி அவர்கள், பழ.நெடுமாறனிடம் கேட்க அவர் தான் அறிவரசன் அவர்களை அனுப்பி வைத்தார்கள். 2006 மார்ச் 1 முதல் 2008 மார்ச் 1 வரை ஈழத்தில் இருந்தார். தம்பி பிரபாகரன் அணிவித்த மோதிரம் அவர் விரலில் எப்போதும் இருக்கும்.

ஈழத்தில் வாழ்ந்த நினைவுகளை  ‘ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள் 'என்ற நூலாக எழுதியுள்ளார். விடுதலை புரம், மதமா மனிதனா?, யார் இந்த ராமன், திராவிடர் இயக்க வரலாறு,

சோதிடப்புரட்டு,இவர் தாம் பெரியார் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். விடுதலை, உண்மை இதழ்களின் துணையாசிரியராக இருந்தார். தமிழர் தாயகம் என்ற மாத இதழை இறுதிவரை நடத்தினார். ஈழத்திலிருந்து வந்த பிறகு பிரான்சு, ஆஸ்திரேலியா, கனடா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஆண்டு தோறும் சென்று ஈழ இளைய தலைமுறைக்கு தமிழ் கற்பித்து வந்தார்.

அவரது மனைவி ஞானத்தாய், 1980களில் புலிகளின் தாயாக இருந்தவர். புலிப்படையினர் பலருக்கும் உணவு  தயாரித்து வழங்கியவர். உண்டு, உறைவிட இல்லமாக அவரது கடையம் இல்லம் இருந்தது. பின்னர் திருச்சியில் பெரியார் நாகம்மை ஆதரவற்றோர் இல்லப் பொறுப்பாளராகவும் இருந்தார்.

கடையம் தந்தெங்கள்

கடையாணித் தமிழரிவர்!

குடைசாய்ந்தே  அறியாத

கொள்கைச் செறிவரிவர்!

ஈராண்டு ஈழத்தில்

எம்தமிழை விதைத்தமகன்!

எம்தலைவர் இதயத்தில்

இடம்பிடித்த ‘மகிழ்ச்சி'இவன்!

தமிழீழ வரலாற்றில்

தகுதியுடன் நீயிருப்பாய்!

தணல்பிடிக்கும் தமிழ்த்திரிக்குத்

தான்இருப்பாய் தாய்நெருப்பாய்!

& என்று பாவலர் அறிவுமதி எழுதினார் என்றால் பெரியாரியம், தமிழியம், தமிழீழவியம் ஆகியவற்றின் பெரும்புலவராக இருந்தார் அறிவரசன்!

இவை எதையும் அடக்கமாகச் செய்து காட்டியவர் என்பதே அவருக்கான பெருமை. ‘இரண்டு ஆண்டுகள் வரவேண்டும். 40 பேரைத் தமிழராசிரியர்களாக ஆக்க வேண்டும். பாடத்திட்டத்தையும் நீங்களே தேர்வு செய்யுங்கள். நீங்களே பயிற்சி கொடுங்கள்' என்றார்கள். எந்தக் கவலையும் இல்லாமல் கிளம்பிப் போனார்.

சங்ககால இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்கள் ஆரம்பித்து அனைத்து இலக்கண பயிற்சியும் அவர்களுக்குத் தரப்பட்டது. தவிர... பிறமொழி கலப்பில்லாமல் பேசும் பயிற்சி, எழுதும் பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தனர்.பிரபாகரனின் மனைவி மதிவதனி, தமிழின் அடிப்படை இலக்கணம் குறித்து 8 மாதங்கள்  பயிற்சி  எடுத்துக் கொண்டார். ‘‘உலகத் தமிழர்கள் போற்றும் ஒரு மாமனிதரின் மனைவிக்கு தமிழ்ப் பயிற்சி கொடுத்தேன் என்பதில் எனக்கு பெருமிதம் உண்டு'' என்று சொல்லிக் கொண்டார்.

இசைப்ரியாவை யாராலும் மறக்க முடியாது. அவரையும் சந்தித்தவர் அவர். மாலை 7 முதல் இரவு 9 மணி வரை மட்டுமே புலிகளின் ‘தமிழீழத் தேசியத் தொலைக் காட்சி' ஒலிபரப்பு செய்யப்படும். இதில் தினமும் செய்தி வாசிப்பார் இசைப்பிரியா. நல்ல கணீர் குரல்.

‘‘வானொலி மற்றும் தொலைக்காட்சி பணியாளர்கள் எனக்கு அறிமுகமானவர்கள் என்பதால் ஒருமுறை நான் அங்கு சென்றபோது, இசைப்பிரியாவை சந்தித்தேன்.அப்போது அவரிடம், ‘இசை சரி... பிரியா என்பது தமிழ்ப் பெயர் இல்லையே...' என்றேன். அதற்கு அவர், ‘இயக்கத்தில் நான் சேர்ந்தபோது இசை அருவி என்றுதான் பெயரிட்டனர். ஆனால் இசைப்பிரியா... இசைப்பிரியா... என்று என் தோழிகளும் உறவினர்களும் அழைத்ததால், அதுவே நிலைத்துவிட்டது' என்றார்.இசை அருவி மிக அழகான தமிழ்ப் பெயர்.

ப்ரியா என்பது தமிழ் கிடையாது என்றேன். மறுநாள் தொலைக் காட்சியில் செய்தியை கவனித்தபோது செய்தி வாசிப்பவர் இசை அருவி என்றே பதிவு செய்தனர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ப்ரியா என்பது தமிழ் பெயர் என்றே நினைத்திருந்தனர். தமிழ்ப் பெயர் அல்ல என்று சொன்னதை ஏற்று உடனே அவர்கள் அதை மாற்றிக் கொண்டது எனக்கு மகிழ்ச்சியாகவும் ஆச்சரிய மாகவும் இருந்தது,'' என்று சொன்னார் அறிவரசன்!

பிரபாகரனை இரண்டு முறை சந்தித்ததாக அறிவரசன் எழுதி இருக்கிறார்.

‘‘நான் ஒரு தமிழ்ப் பேராசிரியர் என்பதால் மொழியைப் பற்றி மட்டுமே என்னிடம் பேசினார். மொழியின் வளர்ச்சி குறித்தும் மொழியைப் பாதுகாப்பது குறித்தும் பேசிய பிரபாகரன், ‘யுனெஸ்கோ நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் 50 ஆண்டுகளில் அழியக் கூடிய மொழிகளின் பட்டியலில் தமிழ் மொழியையும் சேர்த்துள்ளனர்.எதனை கண்டு அழியும் மொழியில் தமிழைச் சேர்த்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இங்கு வந்து பார்த்திருப்பார்களாயின் அப்படி கூறியிருக்கமாட்டார்கள்.

தமிழீழம் கிடைத்துவிட்டால், தமிழை பாதுகாக்கவும் வளர்ச்சிக்காகவும் நிறைய திட்டங்களை வைத்திருக்கிறோம். தமிழை அழியவிட மாட்டோம்' என்றார். மொழி மீது அவருக்கிருந்த பற்று புரிந்தது.இப்படிச் சொன்னவர் சட்டென்று, ‘என் பெயர் (பிரபாகரன்) தமிழ்தானே அய்யா?' என்றார்.

நான் பதில் பேசாமல் சிரித்துக்கொண்டே இருந்தேன். அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டாரோ என்னவோ ‘எனக்கு கரிகாலன்னு ஒரு பெயர் உண்டு. கரிகாலன் தமிழ் பெயர்தானே?' என்றார்.

உடனே நான், ‘மிக அழகான சரியான தமிழ்ப்பெயர்' என்றேன். மகிழ்ந்து சிரித்தார். ‘உங்களின் தமிழ்ப் பணி எங்களை நெகிழ வைக்கிறது' என்று கூறி அனுப்பி வைத்தார் பிரபாகரன்.

இதற்கு பிறகு, 2008 மார்ச்சில் என் பணியை நிறைவு செய்துவிட்டு கிளிநொச்சியிலிருந்து தமிழகத்திற்கு புறப்பட வேண்டிய நாளில், விடைபெற்றுச் செல்வதற்காக அவரை சந்தித்தேன்.

சிங்கள அரசு யுத்தத்தை துவக்கியிருந்த நேரம் அது. அந்த சூழலிலும் முகம் மலர்ந்து பேசிய அவர், ‘அய்யா வந்து எவ்வளவு நாட்கள் ஆகியுள்ளன?' என்றார். ‘சரியாக இரண்டு வருடம்' என்றேன். ‘அப்பா... இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டனவா?' என்று ஆச்சரியப்பட்டார்.

‘தமிழீழம் மலர்ந்தால் நீங்களெல்லாம் இங்கு வந்து தமிழ்ப்பணி செய்ய வேண்டும் அய்யா' என்று கூறி வழி அனுப்பி வைத்தார் பிரபாகரன்.கிளிநொச்சியில் இரண்டு வருடம் தமிழ்ப்பணி செய்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன். அந்த 2 வருடங்கள்தான் என் தமிழ்ப்பணியில் மறக்க முடியாத நாட்கள். அங்குதான் தமிழ் வாழ்கிறது'' என்றார் பேராசிரியர் அறிவரசன்.

தமிழீழமெனும் நாட்டில் வாழ்ந்த உண்மைத்

தமிழுரு அறிவரசன்!

‘மாவீரர் போற்றுதும் மாவீரர் போற்றுதும்

ஆவி துறந்தும் அழியாமல் எம்நெஞ்சில்

மேவி அவர் வாழ்தலான்!‘ - என்று எழுதிய

அறிவரசனும் மாவீரர் தான்! தமிழக மாவீரர்!

ஏப்ரல், 2020.