ஓவியம் மனோகர்
சிறப்புக்கட்டுரைகள்

தன்னை அறியாமல் தானே கெடுகிறார்!

நாஞ்சில்நாடன்

அக்க்ஷய' என்பது வடசொல். தமிழாக்கினால், அட்சய என்று எழுத தொல்காப்பியரின் இலக்கண அனுமதி உண்டு. வியாழ வட்டத்தின் ஆண்டுகளான அறுபதில், இறுதி ஆண்டின் பெயர் அட்சய. அட்சய அல்லது அட்சயம் என்ற சொல்லுக்கு, கேடில்லாதது, குறைவுபடாதது என்று பொருள். அட்சயன் எனில் கடவுள். அழிவில்லாதவன், குறைவுபடாதவன், As exempt from decay.

அட்சய பாத்திரம் என்றால், தெய்வத் தன்மையால் என்றும் எப்பொழுதும் குறைவுபடாத, எடுக்க எடுக்க உணவு வந்துகொண்டே இருக்கும் பாத்திரம்.
அமுதசுரபி என்பது மணிமேகலை கையில் இருந்ததோர் அட்சய பாத்திரம். ஆபுத்திரன் கையில் இருந்த, ஆதிரையின் கையில் இருந்த அமுதசுரபி அது.

'ஆபுத்திரன் கை அமுத சுரபி எனும்
மாபெரும் பாத்திரம் மடக்கொடி'

என்றும்,

'அமுத சுரபியின் அகன் சுரை நிறைதர
பாரகம் அடங்கலும், பசிப்பிணி அறுக என
ஆதிரை இட்டனள் ஆர் உயிர் மருந்து'

என்றும் மணிமேகலைக் காப்பியம் உரைக்கும்.

திரிதிகை அல்லது திரிதியை என்பது சுக்கில பட்சத் தின் மூன்றாம் திதியான புண்ணிய காலம். அட்சய திரிதியை என்பது வெண்பக்கத்து மூன்றாம் நாள். அதாவது வைசாக மாதத்தின் சுக்கிலபட்சத்து மூன்றாம் திதியாகிய புண்ணிய காலம். அறிந்தபடி, ஆண்டில் ஒரு முறையே வரும். நல்ல காரியங்கள் செய்வதற்கு உகந்த நாள் என்பது நம்பிக்கை.

நல்ல காரியம் என்பது, எந்த நல்லகாரியம் ஆனாலும் என்பதல்லவா நியாயம்? அதெப்படி தங்கம் வாங்குவதற்கு நல்ல நாள் ஆயிற்று? அன்று கண்டிப்பாக கரண்ட் பில் கட்டியே ஆகவேண்டும் என்பதுபோல, தங்கம் வாங்கியே தீரவேண்டும் என்று ஆனது எப்படி? இல்லத்துக்குத் தங்கம் வாங்குவது என்பது சேமிப்பின் உத்தி என்றவகையில் நல்ல காரியம்தான். ஆனால் தங்கம் வாங்கினால் மட்டுமே வளர்ச்சி, மேன்மை, புரோகதி, வர்க்கத்து, கடைத்தேற்றம், மங்கலம், ஐசுவரியம், புண்ணியம், இறையருட்பெருக்கம் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் வேரோடியது எங்ஙனம்?

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொகுக்கப்பெற்ற Tamil Lexicon –ல் அட்சய திரிதியை பற்றிய பதிவு உண்டு. ஆனால் அங்கு தங்கம் பற்றி எங்குமே பேசப்படவில்லை. எழுபது வயது கடந்த இந்தக் கட்டுரையாளன், கடந்த பத்து ஆண்டுகளாகத் தான் அட்சய திரிதியை எனும் சொற்றொடரை வைகாசி மாதத்தில் எதிர்கொள்கிறான்.

அனைத்து தமிழ் நாளிதழ்களும் தமிழ்நாட்டுப் பதிப்பு ஆங்கில நாளேடுகளும் முழுப்பக்க விளம்பரங்கள் வெளியிடுகின்றன. நகரின் பிரபலமான நகைக்கடைகள் அனைத்துமே வரிசை வரிசையாக விளம்பரப்படுத்துகின்றன. முழுப்பக்கச் செய்திகள் வெளியிடுகின்றன. நாளிதழ்கள் அக்கறை என்னவென்றால், விளம்பரக் காசு. இளம்பருவத்தில் தமிழ்&ஆங்கில தினசரிகளின் தலையங்கங்கள், செய்தி ஆய்வுக்கட்டுரைகள், பிற சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டுரைகள் விரும்பி
வாசித்து என்னை செம்மைப்படுத்திக் கொண்டேன். நடுவுநிலை, மக்கட்தொண்டு, நாட்டுப்பற்று, நாளிதழ் அறம் எல்லாம் அன்று அவர்கள் கைக்கொண்டிருந்தனர். இன்றோ...

ஓவியம்

எந்த நல்ல காரியத்துக்கும் உகந்த நாள், எப்படித் தங்கம் வாங்கும் நாளாக மட்டும் மாறிற்று? நகைக்கடைக்காரர்களின், புரோகிதர்களின், ஊடகங்களின் கூட்டு வணிகம் இது! வணிகத்துக்குக் கொள்ளை என்றும் ஒரு பொருள் இருக்கக்கூடும் போலும்! ஆயிரக்கணக்கான கோடிகளின் வர்த்தகம். இருபத்திரண்டு காரட்டின் விலை வாங்கிக்கொண்டு பதினெட்டு, பதினாறு, பதினான்கு காரட் தங்கம் விற்கலாம். இந்தத் தொழிலின் அதிபதிகள் அறங்காவலராக, சமூக சேவகராக, கவிஞராகவும் இருக்கிறார்கள் என்பதெமது வியப்பு.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பும் இந்திய மரபில் பிரதோஷம் இருந்தது. ஒன்றேகால் இலக்கம் சொற்களை அகரவரிசைப்படி பதிவிடுகிற Tamil
Lexicon –ல் பிரதோஷம் எனும் சொல்லுண்டு. பிரதோடம் என்றாலும் அஃதே. பிரதோஷம் எனும் சொல்லின் பொருள்களைத் தருவதை அப்படியே நானும் எழுதுவேன்.

பிரதோஷம்  1.  Evening. 33/4 Naazhikai before and after sunset; அத்தமனத்துக்கு முன்னும் பின்னும் உள்ள மூன்றே முக்கால் நாழிகை.

2. Evening of the 13th titi of dark fortnight, considered auspicious for worshipping Siva;  சிவபிரானை வழிபடுவதற்குரியதாய்க் கிருஷ்ணத் திரயோதசி கூடியதான மாலைக்காலம்.

பேராசிரியர் அருளி சொல்கிறார், பிரதோஷம் & பிரதோடம் & சமற்கிருதம். முன்&பின் ஏற்பாட்டு மூன்றே முக்கால் நாழிகை; மாலைக்காலம் என்று.

அல்லும் பகலும் அறுபது நாழிகை என்பது நம் மரபுக் கணக்கு. நாள் என்பது சூரிய உதயத்தில் இருந்து தொடங்கியது. உதயாதி நாழிகை பதினெட்டு என்றால், சூரியன் உதித்துப் பதினெட்டு நாழிகைகள். இன்றைய கணக்கில் ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள். உத்தேசமாக, சூரியன் காலை ஆறுமணிக்கு உதயம் என்றால், உதயாதி நாழிகை பதினெட்டு என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தால், மத்தியானம் ஒருமணி, பன்னிரண்டு நிமிடங்கள். சரிதானே!

நமக்கு இன்று நாள் என்பது நள்ளிரவு 12 மணி. அன்று நாள் என்பது சூரிய உதயத்தில் தொடங்கியது. டிசம்பர் 31&ம் தேதி நள்ளிரவு 12 மணியைத்தானே நாம் புத்தாண்டு பிறந்தது என்று, நட்சத்திர
ஓட்டல்களில் குடித்து, குதூகலித்து, பலூன்கள் வெடித்து, பட்டாசுகள் கொளுத்தி, காதலியரை முத்தமிட்டுக் கொண்டாடுகிறோம். ஆனால் நம் மரபுப்படி நாள் பிறப்பது கிழக்கில் சூரியன் தோன்றிய பொழுதில்.

இப்படித்தான், டிசம்பர் 30-ம் நாள் இரவில் பிறந்தேன். என் அப்பா, எழுபத்தோரு ஆண்டுகளுக்கு முன்பு, பனையோலையில், எழுத்தாணி கொண்டு, தன் கைப்பட எழுதிய ஜாதகம் இன்றும் என்னிடம் உண்டு பாதுகாப்பாக. அவர் எழுதிய கணக்கு, உதயாதி நாழிகை 59-ல் சிரசு உதயமாயிற்று என்பது. அதாவது அவர் கணக்கில் நான் பிறந்தது, டிசம்பர் 30&ம் நாள் இரவு 59 நாழிகை. இன்று நாம் கைக்கொண்டிருக்கும் கணக்குப்படி, நான் பிறந்தது 31-ம் நாள் அதிகாலை 5 மணி 36 நிமிடங்கள். என் பிறப்புச் சான்று, பள்ளிப் பதிவேடுகளின்படி, 1947 டிசம்பர் 30. ஆனால் அது 1947 டிசம்பர் 31 என்றல்லவா இருத்தல் வேண்டும். அப்பா
சொன்ன கணக்கு ஒன்று, தலைமை ஆசிரியர் தாழக்குடி கணபதி ஐயர் எழுதிய கணக்கு ஒன்று. என்ன செய்ய, நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு உண்டா?

சொந்தக் கதையை நீக்கி, பிரதோஷக் கணக்குக்கு வரலாம். பிரதோஷம் எனும்
சொல்லின் முதற்பொருளைக் கொண்டால், சூரிய அத்தமனத்துக்கு முன்னும் பின்னுமான மூன்றே முக்கால் நாழிகை. அதாவது Sunset - க்கு முன்னும் பின்னுமான 90 நிமிடங்கள். அதாவது, மாலை 6 மணிக்கு சூரியன் அத்தமிக்கும் எனில், மாலை 5.15 முதல் 6.45 வரையிலான நேரம் பிரதோஷம். கிருஷ்ண பட்சத்துப் பதின்மூன்றாம் திதியின் மாலை 5.15 முதல் 6.45 வரையிலான நேரம் என்பது இரண்டாவது பொருள். மாதத்தின் இந்த ஒரு நாள் மாலை நேரம் சிவனை வழிபடுவதற்கான மகத்தான நேரம் என்று கருதப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளாகவே தமிழன் தமிழச்சிகள் பிரதோஷப் பித்துப் பிடித்து, சிவன் கோயில்களில் மாலை வழிபட நெரிசல் படுகிறார்கள்.

ஓவியம்

'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்பதில் நமக்கு மறுப்பு இல்லை. இந்தியாவிலும், சென்ற வெளிநாடுகளிலும், புகழ்பெற்ற மசூதிகள், தேவாலயங்கள், கோயில்கள், புத்த விகாரைகள் என்று சென்று வழிபட்டவன் நான். 2018 பெப்ரவரியில் ஜப்பானில் பத்து நாட்கள் இருந்தபோது நண்பர்கள் டோக்கியோ செந்தில், ரகு ஆகியோர் ஏற்பாட்டில் அசக்குசா சென்சோஜி (Asakusa Senjoji) புத்தர் கோயிலுக்கும், காமக்குரா (Kamakura) புத்தர் கோயிலுக்கும் சென்று வழிபட்டேன். இறைவன்மீது எவர்க்கென்ன முன்விரோதம் & பகை & காழ்ப்பு? அவரவர் இறை, அவரவர் மதம், அவரவர் சடங்கு, மரபு, தோத்திரப் பாடல்கள், புராணங்கள், கதைகள், அற்புதங்கள் அவரவர்க்கு உயர்வு.

வாழ்க்கையில் ஒரேயொரு முறை பிரதோஷத்தன்று சிவன் கோயில் சென்றேன் நான். அன்று சனிப் பிரதோஷம். 13669 ஆண்டுகளுக்கு ஒரு முறையே வருவது என்றார்கள். சிவன் என்னை ஆட்கொண்ட அந்த நாள் 2019&ம் ஆண்டு, பெப்ரவரி இரண்டாம் நாள். எனக்கேதும் நோபல் பரிசு, புக்கர் பரிசு, ஞானபீடம், பத்ம விபூஷண், ராஜ்ய சபா எம்.பி. பதவி, சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு அழைப்பு முதலாய கோரிக்கைகள் இல்லை. அதற்கான கேந்திர ஸ்தானம் சிவன் இல்லை என்பதுவும், அவர் நினைத்தால்கூட நடக்காது என்பதுவும் அறிவேன். அத்தனை ஏன், நற்றிணை பதிப்பகம் வெளியிட்டிருக்கும் அ. முத்துலிங்கம் கட்டுரைகள் இரண்டு தொகுதிகள் கூட அவரால் வாங்கித்தர இயலாது.

பிறகெதற்கு சனிப்பிரதோஷம் அன்று சிவன் கோயிலுக்குப் போனாய் என்று கேட்கலாம். முன்னொரு காலத்தில் எம் மரபு சைவ மதம்,
சைவர் இனம், சைவ உணவுப் பழக்கம் என்பதாலும் அல்ல. நெற்றியில் தீ, கையிலே தீ, அகத்திலே தீ கொண்டவன்தான் என் நெஞ்சிலும் படைப்புத் தீ தந்தவன் என்பதை அறியாதவனா? எமது தரித்திரம் புகன்றால் மட்டும் யாவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நள்ளென்று ஒலிக்கும் யாமத்தில், எம் வீட்டுச் சுற்றுச்சுவருக்குள் சில கோடிகள் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுக் களாக எறிந்துவிட்டு அனக்கமின்றி அகன்றுவிடப் போகிறானா? நன்றே செய்வான், பிழை செய்வான், நாமோ இதற்கு நாயகமே!

சினிமா இயக்குநரும், நடிகரும், சிவ பக்தரும், திருவாசகத்தில் ஈடுபாடு கொண்டவரும், நாஞ்சில் நாட்டுக்காரரும், நண்பருமான அழகம்பெருமாள் படப்பிடிப்புக்காகப் பொள்ளாச்சியில் வந்து தங்கியிருந்தார். தமிழ்ப் பொதுப்புத்தி, உடனே என்ன சினிமா என்று கேட்கும். எனக்கது முக்கியமில்லை என்பதால் நினைவிலும் இல்லை. What to choose from rotten apples என்று நினைப்பவன் நான். கோவைப் பக்கம் அழகம்பெருமாள் வந்தால் ஒன்று அவர் என்னைப் பார்க்க வருவார், அல்லது நான் அவரைப் போய்ப் பார்ப்பேன். நட்பினுள் குய்யம் இருக்கலாகாது என்பதைப்போல Protocol –ம் இருக்கக்கூடாது என்பதில் தெளிவு வேண்டும்.

ஓவியம்

கோயம்புத்தூர் - பாலக்காடு சாலையில் இருந்த AJK கலை அறிவியல் கல்லூரியில், மாணவருடன் அன்று எனக்கோர் உரையாடல் இருந்தது. பொள்ளாச்சி பேருந்து போகும் மதுக்கரை மார்க்கெட் நிறுத்தத்தில் என்னை விடச் சொன்னேன். பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இறங்கி, முக்கால் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் விடுதி நோக்கி நடந்தேன். மாலை ஐந்தரை ஆகியிருக்கும்.

''அண்ணாச்சி! இன்னைக்கு சனிப் பிரதோஷம். கோயிலுக்குப் போலாமா?'' என்றார் அழகம் பெருமாள். நமக்கும் ஆலால கண்டன், ஆடல் வல்லான், தீயாடி, சுடலைப் பொடியாடியுடன் ஒரு வழக்கும் இல்லை.

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தின் பின்புறம் இருக்கும் T. கோட்டாம்பட்டி சிவன் கோயில். மூலவர் அம்மணீஸ்வரர். அதென்ன சில ஊர்களுக்கு மாத்திரம் இனிஷியல்? M. சுப்பலாபுரம், T. கல்லுப்பட்டி, S. தாமரைக்குளம் போல! அந்தந்த ஊர்க்காரரிடம் காரணம் கேளுங்கள். 1946&ல் பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை வெளியிட்ட 'தமிழகம் ஊரும் பேரும்' கிடைத்தால் தேடிப் பாருங்கள்.

T. கோட்டாம்பட்டி என்றால் தொட்டியர் கோட்டாம்பட்டி. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, கிருஷ்ணதேவராயர் காலத்தில், தமிழ்நாட்டுக்கு வந்த நாயக்கர், நாயுடு, ரெட்டி, ராஜு எனப்பட்டவரில், தொட்டிய நாயக்கர் என்றொரு பிரிவு. அவர்கள் அதிகம் வாழ்ந்த கோட்டாம்பட்டி, தொட்டியர் கோட்டாம்பட்டி என வழங்கப்பெற்று, இப்போது T. கோட்டாம்பட்டி ஆகிப்போயிற்று. R.S. புரம், K.K. நகர், T. நகர், V.O.C. நகர் என்பது போல. கொஞ்ச நாட்கள் சென்றால், தமிழன் மூலப்பெயர் மறந்துபோவான். இன்று தமிழனுக்கு மூலம் என்றால் மூலநோய், Piles மட்டுமே!

அம்மணீஸ்வரரை தரிசிக்க, வேண்ட, முறையிட, இரக்க ஏராளமான மக்கள், கூட்டம், நெரிசல். பக்தர்களில் சிலர் அழகம்பெருமாளை அடையாளம் கண்டு வழிவிட்டனர். வெளியே வந்ததும்,
பிரசாத விநியோக இடத்திலும் வரிசை. என்னைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு, சர்க்கரைப் பொங்கல் கொதிக்கக் கொதிக்க, எள்ளுருண்டை என வாங்கி வந்தார். இன்னொரு முறை போய்க் கை நீட்டலாமா என்ற அளவுக்கு சுவைபட இருந்தன பிரசாதங்கள்.

திரும்புகாலில் அழகம் பெருமாள் கேட்டார் &

''அண்ணாச்சி! என்ன சரக்கு சாப்பிடலாம்?''

''பல வருசமா அரசு அமுதம் சாப்பிடுவது இல்ல! தொடர்ந்து சாப்பிட்டா ஆண்மை போயிரும்ங்கான்!''

''எழுவது வயசுக்கு மேல, ஆண்மையை வச்சுக்கிட்டு என்ன செய்யப் போறியோ?''

''பிரதோச விரதத்துக்கு இது தடஸ்தம் இல்லையா?''

''நம்ம ஆளு வெசத்தையே குடிச்சவன்லா
அண்ணாச்சி!''

முதல் பிரதோஷ தரிசனமும் இரண்டு லார்ஜ்
சிக்னேச்சர் விஸ்கி ஆன் த ராக்ஸ்&ம் மறக்க முடியாதது எனக்கு. 'ராத்திரியோட ராமானமா' வீட்டுக்கும் வந்துவிட்டேன்.

கோவை பேருந்தில் ஏறி வீடு திரும்பும் வழியில் ஒரே பிரதோஷ சிந்தனை. எந்த சமரசமும் இன்றித் தமிழன் எல்லா வேலையையும் எப்படி எந்த மனச்-
சங்கடமும் இன்றிச் செய்கிறான்? அட்சய திரிதியைக்கு நகைக்கடை வாசலில் வரிசையில் நிற்கிறான். பிரதோஷத்துக்கு சிவன்கோயில் பிராகாரத்தில் பழிகிடக்கிறான். எத்தனை மெகாத் தொடர் நாடகங்களானாலும் தொலைக்காட்சிப் பெட்டி முன் சலிப்பின்றி அமர்ந்திருக்கிறான். தல, இளைய தளபதி, சீயான், சூப்பர் ஸ்டார், அகிலாண்ட நாயகன் சினிமாக்களுக்காக ஆயிரம் பணத்துக்கு இருக்கை முன்பதிவு செய்கிறான். கடை திறக்க இன்னும் மூன்றுமணி நேரம் இருக்கும்போதே மதுச்சாலைகள் முன்பு காவல் நிற்கிறான். தீமைக்கும் தீமைக்கும் நடக்கும் தேர்தல் போரில் ஏதோவோர் தீமையின் பக்கம் குவார்ட்டருக்கும் பிரியாணிக்கும் இரண்டாயிரம் பணத்துக்கும் வாக்களிக்கிறான். ஆண்டுக்கு ஆயிரம் கோடி சம்பாதிக்கும் கிரிக்கெட்காரனின் விளையாட்டுச் சூதாட்டம் காண இரவெல்லாம் கண்விழிக்கிறான்.

எவரை நினைத்துச் சொன்னார் திருக்குறள் ஆசான், ''மக்களே போல்வர் கயவர்!' என்று.

'அற்புதத் திருவந்தாதி' பாடிய காரைக்கால் அம்மை கேட்பதுபோல் நமக்கும் கேட்கத் தோன்றுகிறது.

'பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன் & நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்பது இடர்?'

ஆம்! எப்போது தீர்க்கப்  போகிறாய் கண்டத்தில் விடம் தேக்கிய தில்லைச் சிற்றம்பலவனே!

அட்சய திரிதியை அன்று நகரத்தில் நகைக்கடைகள் இருக்கும் தெருக்களில் நடமாடக்கூடவில்லை, நெரிசல். சைக்கிள் நிறுத்த இடம் இல்லை! மாரடைப்பு வந்தவரை மருத்துவமனை சேர்க்க அவசரமாக அந்தச் சாலை கடக்க முனைந்தால் நோயாளிக்கு மறுநாள் பால். அந்த தினத்தில், மருத்துவர்களிடம் முன்பதிவு நேரம் பெற்றுக்கொள்வதைப்போல, முன்பதிவு உண்டு என்கிறார்கள். நல்ல தினத்தில், நல்ல வேளையில், நல்ல காரியங்கள் செய்வது சிறப்பு என்று நாம் அறியாததல்ல. ஒருநாள் முன்போ பின்போ தங்கம் வாங்கினால் சேதாரம் ஆகிவிடும், செய்கூலியும் உண்டு, புண்ணியம் பக்கத்து வீட்டுக்குப் போய்விடும் என்பார்கள் புரோகிதர்கள், வானநூல் வல்லுனர்கள், வாஸ்து சாத்திரக்காரர்கள், சோழி உருட்டிப் பிரஸ்னம் பார்ப்பவர்கள், ஏடு பார்ப்பவர்கள், நிமித்திகர்கள். அரசியல்வாதி & அதிகாரி & ஒப்பந்தக்காரர் கூட்டுப்போல் ஆகிவிட்டது நகைக்கடைக்காரர் & ஊடகங்கள் & புரோகிதர் கூட்டு. ஆண்டுக்கு ஐயாயிரம் கோடி வணிகம் என்கிறார்கள் பொருளாதார நோக்கர்கள்.

எனக்கொரு ஐயப்பாடு! ஏனிந்த அட்சய திரிதியை தங்கக் காமம் கேரளத்தில், கர்னாடகத்தில், ஆந்திரத்தில், தெலுங்கானாவில், மராத்தியத்தில், கூர்ச்சரத்தில், வங்கத்தில், பிற மாநிலங்களில் இல்லை?

அரிசி இலவசமாகத் தந்து, மூத்திரம் போக ஐந்து பணம் வாங்கும் அரசாங்கம் நமது. அட்சய திரிதியை அவ்வளவு புண்ணிய காரியம் எனில், கலைஞர் டி.வி. போல, மிக்சி&கிரைண்டர் போல, மடிக்கணினி போல, வெள்ளாடு போல, வீடுதோறும் ஒரு பவுன் தங்கம் இலவசமாகத் தரலாமே! ஏழரைக் கோடித் தமிழர் வாழ்வில் புண்ணியம் பொங்கி வழியுமே!

ஒருவேளை அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கினால் மட்டுமே ஆண்டுதோறும் வாங்கிக்கொண்டே இருக்கலாம், இலவசமாகப் பெற்றால் அதன் பயன் இல்லை என்பார்களோ சனாதன தர்மத்தின் ஆயிரங்கால் மண்டபத்துத் தூண்களான புரோகிதர்கள்? சகோதரிகளுக்கு பச்சை நிறத்தில் புடவை வாங்கிக் கொடுத்தால் புண்ணியம் என்றனர் பத்தாண்டுகளுக்கு முன்பு. துணிக்கடைக்காரர் எல்லாம் பல விலைகளில் தரங்களில் பச்சைப்புடவை நெய்ய ஆர்டர் கொடுத்து வாங்கித் தத்தம் கடைகளில் அடுக்கி மக்கள் தொண்டு மகேசன் தொண்டு ஆற்றினர். பச்சையிலும் கிளிப்பச்சை, மயில் கழுத்துப் பச்சை, மரகதப் பச்சை, மாந்தளிர்ப் பச்சை, திருநீற்றுப் பச்சை, இளம்பச்சை, கடும்பச்சை, திருமால் பச்சை, பாம்புப்பச்சை, துளசிப்பச்சை, சினிமாப் பச்சை என்று பச்சைமேல் பச்சை. 'எங்கிட்ட இந்தப் பச்சை இருக்கு, அந்தப் பச்சை வாங்கு!' என்று சோதரருக்குச் சோதரிகள் குறிப்பு அனுப்பினார்கள்.

அதற்கும் கொஞ்ச நாட்கள் முன்பு வீட்டில் இரட்டைக் கழுதைகள் படம் வைத்துத் தினமும் அதிகாலையில் அதன் முகத்தில் விழித்தால் ஐசுவரியம் ஓடிவந்து உட்புகுந்து பண்டாரம் நிறைக்கும் என்றனர். அவனவன் வாசல் முகப்பில் இணைக் கழுதைகள் படம் தொங்கவிட்டான். கழுதைப் புடுக்கைத் தொட்டுக் கும்பிடப்போய், எறி வாங்கித் தாடை எலும்பு பெயர்ந்தவன் உண்டு.

மார்க்சியம், அம்பேத்காரியம், காந்தியம், பெரியாரியம், அண்ணாயிசம், கலைஞரியம் பட்டொளி வீசிப் பறக்கும் மண் இது. ஒரே
சொல்லில் பெரியார் மண் என்கிறார்கள். நமக்குப் புரியாத ஒரு சங்கதி அதுவும் சரி, இதுவும் சரி, எல்லாம் சரி என்றால் எப்படி? மலையாளத்தில்
சொல்வார்கள், ''அச்சன்ர மடியிலே இரிக்கவும் வேணும், அம்மயிட முலை குடிக்கவும் வேணும்'' என்று. தமிழில் சொன்னால், அப்பாவின் மடிமீது இருக்கவும் வேண்டும், அம்மாவின் பால் குடிக்கவும் வேண்டும்.

திருமூலர் சொல்கிறார்,

'தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்'

என்று. எங்கள் அம்மா அடிக்கடி சொன்ன வாசகம், ''கொழுத்துச் சாவாரை எடுத்துச் சுடுவாரோ?'' என்று.

ஆகஸ்ட், 2019.