சிறப்புக்கட்டுரைகள்

தந்தை பெரியார் : வீரத்தோடு நடந்த பெரும் பயணி!

தமிழேந்தி

இருபதாம் நூற்றாண்டு தமிழ்ச் சிந்தனை மரபில் எவராலும் எளிதில் புறக்கணிக்க முடியாத ஆளுமைக் குரியவர் அய்யா பெரியார் ஆவார். புரட்சிகரமான அவரது எழுத்துகளும் பேச்சுகளும் தமிழ்மண்ணைப் புரட்டிப் போட்டன.

பெரியார் மேடைகளில் பேசத் தொடங்கிய போது அவர் கழுத்தில் விழுந்தவை பூமாலைகள் அல்ல.காதறுந்த பழஞ்செருப்புகள். ஆரத்தி எடுத்துப் பேச அழைக்கவில்லை. அழுகிய முட்டைகள் வீசி எறியப்பட்டன. கூட்டத்தில்ஒரே ஆள்தான் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்றாலும் பேச்சை நிறுத்தமாட்டார். அப்படியும் ஒருமுறை நடந்துள் ளது. அக்கூட்டத்தில் தனித்து நின்ற கேட்ட அந்த ஆளிடம் ‘நீயாவது என் பேச்சைக் கேட்க இறுதிவரை இருந்தாயே!’ என்றார் பெரியார். “நான் தான் மைக்செட் போட்டவன்,இருந்துதானே ஆகவேண்டும்!” என்றாராம் அந்த ஆள்.

ஆனாலும் பெரியாரின் பெரும் பயணம் தொடர்ந்தது. வீசிய புயலுக்கு நடுவே வீரத்துடன் கலஞ்செலுத்தினார். தம் மேடை அனுபவங்கள் பற்றி அவர் குறிப்பிடும்போது, “செங்குத்தான மலையின் உச்சிமேல் தலைகீழாய் நின்று ஏறுவது போன்றது என்பணி” என்பார். ‘மயிரைக்கட்டி மலையை இழுக்கிறேன்,வந்தால் மலை, இல்லாவிடில் மயிர்’ என்று மக்கள் மொழியில் பேசிய மழைமேகம் பெரியார்.

சீர்காழி தமிழ்நாட்டின் தெய்வத்தலங்களில் ஒன்று.ஒருமுறை பெரியார் அவ்வூருக்குப் பேச அழைக்கப்பட்டார். இரயிலை விட்டு இறங்கியவுடன் அவரை ஊர்வலமாய் அழைத்துச்செல்ல ஏற்பாடு. ஆனால் நகரம் முழுவதும் காவலர்கள் விக்கப்பட்டிருந்தனர். ஊர்வலத்திற்குத்தடை,பெரியாரும் மற்றவர்களும் நடந்தே போனார்கள். கூட்டம் நடைபெற இருந்த இடம் கோவில் திடல். மூவாயிரம் பேர் அமர்ந்து கேட்கலாம். ஆனால் அன்றோ சிறிய கூட்டம்,மற்ற இடம் வெறிச்சோடிக்கிடந்தது. ‘திரும்பிப்போ! திரும்பிப்போ! என்று தொலைவில் கூக்குரல்கள். காவலர் சுற்றி நிற்க கலவரம் நிகழாமல் தடுக்க தாசில்தார், சப் மாஜிஸ்ரேட் உடன் இருந்தனர்.

பேச்சாளர் பட்டியலில் மூவர் பெயர் இருந்தது. மற்றவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் பெரியார் தனியாளாய்ப் போய் ஒலிப்பெருக்கி முன் நின்றார். திடுமென எங்கிருந்தோ ஒரு கல்வந்து பெரியார் காலடியில் விழுந்தது.

சிறிது நேரங்கழித்து வாழைப்பழ தோல்கள், அழுகிய முட்டைகள். “கல் வீச்சுக்கு அஞ்சுபவர்கள் எழுந்து போய்விடுங்கள்; மற்றவர்கள் தலையில் துண்டு கட்டிக்கொள்ளுங்கள்” என்று தொடங்கினார் பெரியார். அவர் பேசப்பேச மலைத்தேனை மொய்க்கும் வண்டுகளாய் மக்கள் ஒருவர் பின் ஒருவராய் வந்து கூட்டத்தில் உட்கார்ந்துகொண்டார்கள். மக்களின் கைத்-தட்டலும் மகிழ்ச்சி ஆரவாரமும் கோவில் சுவரில் மோதி எதிரொலித்தது.

கூட்டம் முடிந்ததும் சப் மாஜிஸ்ரேட் பெரியாரிடம் வந்தார். ‘மக்கள் எல்லோரும் ஊர்வலமாய் வந்து உங்களை ஊருக்கு வழியனுப்புகிறோமே’ என்றார். பெரியார் பெருந்தன்மையோடு மறுத்துவிட்டு வண்டி ஏறினார், வந்த பணி வெற்றியோடு முடிந்தது என்ற மகிழ்ச்சியில்!.

பத்து வயதிலேயே பள்ளிக்கூடத்தைத் துறந்தவர் பெயரில் இன்று ஒரு பல்கலைக்கழகம் இயங்குகிறது. எதையும் பட்டறிவோடு பட்டென வெளிப்படுத்துவார் பெரியார். மனித நேயமே அவர் போற்றிய நெறி. ஒருவரை பணத்தால் மதிக்க வேண்டும் என்றால் ரிசர்வ் பேங்கைத் தான் மதிக்கவேண்டும். அறிவால் மதிக்க வேண்டுமென்றால் என்சைக்ளோபீடியாவை மதிக்க வேண்டும் என்பார். என் முன் உள்ள பெரும் பணி ‘மனிதர்களுக்கிடையே உள்ள பேதங்களை ஒழிப்பதுதான்’ என்று மேடைதோறும் முழங்கியவர் அவர்.

‘பல்லாண்டாய் உள்ள பழக்கத்தை விட்டுவிட முடியுமா?’ என்று குதர்க்க வாதம் செய்த குறுமதியாளர்களின் தலையில் குட்டிய பெரியார்,‘ பெருச்சாளி கூடத்தான் பல்லாண்டாய் நம்மோடு உயிரோடு உள்ளது, அப்படியே விட்டுவிடலாமா?’ என்றார்.அவர் பேசியவை மேடைகள் அல்ல; மக்களுக்கு மானமும் அறிவும் ஊட்டிய மாலைநேரச் சிந்தனைப்பட்டறைகள். 

ஆகஸ்ட், 2013.