சிறப்புக்கட்டுரைகள்

தத்து!

நாஞ்சில்நாடன்

முத்து, வித்து, சொத்து, சத்து, பித்து, மத்து என்பல போல் ஒலிக்கும் இன்னொரு சொல் தத்து. திசைச் சொல்லோ, திரி சொல்லோ, வட சொல்லோ அல்ல. இயற்சொல்தான்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்முடன் வாழும் செந்தமிழ்ச்சொல். என்றாலும் தமிழ் கற்ற கர்வத்துடன் வினவுகிறேன் ஐயா! தத்து என்றால் என்ன பொருள்? இந்த இடத்தில் கட்டுரை வாசிப்பதை நிறுத்திவிட்டு, ஒரு வாரகாலம் அவகாசம் எடுத்துத் தத்து பற்றி யோசித்து மறுபடியும் தொடரலாம். ஆனால் Dutt அதாவது தத் என்று உச்சரிக்கப்படும் வடபுலத்துச் சாதியொன்றின் குலப்பெயர் திரிந்து தமிழில் தத்து எனவாயிற்று என்று எவரேனும் சொன்னால் மோதி மிதித்து விடு நண்ப, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு நண்ப!

சென்னைப் பல்கலைக்கழகத்துப் பேரகராதி (1922), தத்து எனும் சொல்லுக்குத் தரும் முதற்பொருள் To Leap, Jump, Skip, Hop, குதித்தல். ஓடையில் நீர் தத்தித் தத்திப் பாய்ந்தது என்றால் தண்ணீர் குதித்துக் குதித்து ஓடியது என்று பொருள். கவிஞர் கண்ணதாசன் - கவிஞர் என்று  சொன்னாலே அது உயரிய சிறப்புத்தான். கவிச்சக்கரவர்த்தி, கவியரசு, கவி நாட்டாமை எல்லாம் அநாவசியம் - திரைப்பாடல் அல்லாத ஒரு கவிதையில், ‘முத்துமணிப் பல்லக்கு, முளைத்தெழுந்த சிறு கீரை, தத்தும் கிளி, தேவதாரு உதிர்த்த இலை' என்பார் கண்ணுறங்கும் குழந்தையைப் பார்த்து.

குதித்துக் குதித்து நடக்கும் என்பதால் தத்தும் கிளி என்கிறார் போலும்! கிளிக்கு இன்னொரு சொல் தத்தை. மலையாளத்தில் ‘தத்தம்மா பூச்ச பூச்ச' என்பார்கள். கிளியம்மா பூனை, பூனை என்ற பொருளில் அச்சுறுத்த. ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான, திருத்தக்கதேவர் படைத்த, சீவக சிந்தாமணி காப்பியத்தின் மூன்றாவது இலம்பகம், ‘காந்தருவ தத்தையார் இலம்பகம்' என்பதாகும்.

கம்பராமாயணத்தின் யுத்த காண்டத்தில் நிகும்பலை யாகப் படலத்தில், இந்திரசித்தன் - இலக்குவன் பெரும்போர் நிகழும் காலை, ‘தத்தா ஒரு தடந்தேரினைத் தொடர்ந்தான்' என்பார் கம்பர். குதித்து நடந்து இந்திரசித்தனின் பெரிய தேரினைத் தொடர்ந்தான் இலக்குவன் என்று பொருள்.

பால காண்டத்தில், நாட்டுப் படலத்தில், ‘வரம்பெலாம் முத்தம்; தத்தும் மடையெலாம் பணிலம்' என்பார். வரம்பெலாம் முத்தம் என்றால் வயல் வரப்பில் கிடந்து முத்தமிட்டனர் என்பதல்ல பொருள். வயல் வரப்புக்களில் எல்லாம் முத்துக்கள் என்று பொருள். தத்தும் மடை எலாம் பணிலம் என்றால் தண்ணீர் குதித்துப் பாயும் படை எங்கும் சங்குகள் என்று பொருள்.

தத்து என்ற சொல்லின் இரண்டாவது பொருள் பதிவில் உண்டு. To go by Leaps and jumps. to move by jerks and alerts as cockroaches. அதாவது தாவிச் செல்லுதல். தாவுதலை மலையாளம் தத்து என்கிறது. தத்துக எனில் தாவுக.

பரிபாடலில் வையையைப் பாடும் கரும்பிள்ளைப் பூதனார், ‘தத்திப் புக அரும் பொங்கு உளைப் புள் இயல் மாவும்' என்பார். தாவி ஏறுவதற்குக் கடினமான, பிடரி மயிர் செறிந்த, பறவை போல் பறந்து செல்லும் குதிரையும் என்பது பொருள்.

தத்து எனும் சொல்லுக்குப் பேரகராதி தரும் மூன்றாவது பொருள் To jump over. அதாவது தாவி ஏறுவது. கலித்தொகையில் முல்லைக்கலி பாடும் சோழன் நல்லுருத்திரன், ‘போர் புகல் ஏற்றுப் பிணர் எருத்தில் தத்துபு' என்பார். ஏறு தழுவும் போருக்கு விருப்புடன் செல்லும் வீரன் சீறி நிற்கும் எருதின் மீது தாவி ஏறுகிறான் என்பது பொருள்.

காளமேகப் புலவரிடம் த எனும் எழுத்தை மட்டுமே பயன்படுத்திப் பாடல் சொல்லுமாறு கேட்டுக் கொண்டபோது, அவர் பாடிய முதல் வரி, ‘தத்தித் தாதூதி தாதூதித் தத்துதி' என்று தொடங்கும். வண்டை முன்னிறுத்திப் பாடுவது. பாடலின் பொருள் & ‘வண்டே! நீ தத்தித் தாது ஊதுகின்றாய். தாது ஊதித் தத்துகின்றாய்' என்பதாகும். இங்கு தாது என்றால் பூந்தாது, மகரந்தம். தத்தி என்றால் தாவி.

தத்து எனும் சொல்லின் நான்காவது பொருள் To measure as in pacing. அதாவது அடியால் அளத்தல். உலகம் அளந்த பாதங்கள் உடையவனை என்ற பொருளில் திருமூலர், ‘ஞாலம் தத்தும் பாதனை' என்பார். ‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி' என்பாள் ஆண்டாள் பந்துவராளி ராகத்தில், திரிபுடை தாளத்தில்.

ஐந்தாவது பொருள் - To be agitated. to heave, shake, as water in ajar. அதாவது ததும்புதல். பாத்திரத்தில் கோரிய தண்ணீர் ததும்புவதைத் தத்துதல் என்று குறித்துள்ளனர். கடலில் அலை அடித்துத் தண்ணீர் எப்போதும் ததும்பிக் கொண்டிருக்கிறது. கம்பன் யுத்த காண்டத்தில் படைத்தலைவன் வதைப்படலத்தில், ‘தத்து நீர்க்கடல் முழுதும் குருதியாய்த் தயங்க' என்பார். கொந்தளிக்கும் ததும்பும் கடல் முழுவதும் செந்நீரால் பெருக என்ற பொருளில்.

ஆறாவது பொருள் -  To Spread அதாவது பரவுதல் என்கிறது லெக்சிகன். எனவே நோய் பரவியது என்பதை நோய் தத்தியது எனலாம்.

ஏழாவது பொருள் - To be emitted, as lustre. அதாவது ஒளி வீசுதல், மணம் வீசுதல் போல. ‘தத்தொளி மணிமுடி' என்கிறது சீவக சிந்தாமணியின் நாமகள் இலம்பகத்துப் பாடல். ஒளி பரவும் மணி முடி என்பது பொருள்.

மேற்சொன்னவை அன்றியும் வேறு பொருள்களும் உள. தத்து என்றால் தாவி நடத்தல் என்றொரு பொருள். வேறொரு பொருள் Anxiety, மனக்கவலை. கம்பன் பாலகாண்டத்தில் மிதிலைக் காட்சிப் படலத்தில், ‘தத்துறல் ஒழி நீ; யானே தடுப்பென், நின் உயிரை' என்றொரு பாடல் வரி சொல்வார். பொருள் - கவலையை விடு நீ! யானே காப்பேன் நின் உயிரை.

தவறு,Mistake, Error எனும் பொருளிலும் தத்து என்ற சொல் ஆளப்பட்டது. எப்பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்தது அல்லது இன்னும் இருக்கிறது என்பதை யாரேனும் சொல்லுங்கள். பூச்சிக் கடியினால் ஏற்படும் தடிப்பையும் தத்து எனும் சொல்லால் குறித்துள் ளனர். அதுவும் எப்பகுதிச் சொல்லென்று அறிய ஆவலுண்டு.

நாஞ்சில் நாட்டில், வெட்டுக்கிளி என்றழைக்கும் ஜீவராசியைத் தத்துக்கிளி என்றார்கள். தாவித் தாவிச் செல்லும் இயல்புடையது என்பதால். வெட்டுக்கிளி, தத்துக்கிளி என்றால் Grass Hopper. நாம் தொடக்கத்திலேயே  தத்து எனும் சொல்லுக்கு Hop என்று பொருள் சொன்னோம். parrot அல்லது கிளியை, கிளிப்பிள்ளை என்று சொன்னதைப் போல தத்துக்கிளி என்றும் அழைத்திருக்கின்றனர். தவளை போலத் துள்ளும் ஒரு விளையாட்டை - Game of the leap frog- தத்துக்கிளி விளையாட்டு என்று சொல்வார்கள்.

பாரதியார் 1919-ம் ஆண்டு, நவம்பர் மாதம், ஒன்பதாம் நாள் ‘காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தார்' மீது வாழ்த்துப் பாடும்போது தத்து எனும் சொல் ஆள்கிறார்.

‘தத்து புகழ் வளப்பாண்டி நாட்டினில் காரைக்குடியூர் தனிலே சால உத்தமராம் தனவணிகர் குலத்துதித்த இளைஞர் பலர் ஊக்கம் மிக்கார்' என்பது பாடல் வரி. தத்து எனும் சொல்லுக்கு தாவித்தாவி ஏறும், குதித்துக் குதித்துப் பாயும், பெருகும், பரவும், வளரும் எனும் பொருள்களில் ஏதேனும் ஒன்றை நம் மனோபாவத்துக்கு ஏற்றாற்போலப் பொருத்திக் கொள்ளலாம்.

சின்னப் பிராயத்தில் அப்பா சொல்வார், ‘‘மக்கா லே! நம்ம நந்தானத்தடி வயல்ல வெள்ளம் இல்லயாம். போயி கால்லே இருந்து வெலவி விட்டுக்கிட்டு வந்திரு என்னா!'' என்று.

‘‘வெலவி விட்டுட்டு வந்தாப் போருமாப்பா? வெள்ளம் பாஞ்சு வயலு நெரக்கது வரை நிக்காண்டாமா?''

‘‘நிக்காண்டாம்... வெள்ளம் பாய ரெண்டு மணிக்கூர் ஆகும். அதுவரைக்கும் வெயில்லே என்னத்துக்கு காவலு கெடக்கணும்?''

‘‘பொறவு! வெள்ளம் நெறஞ்சு புதுசா நட்ட வயிலு பெருகி பயிரு முங்கீராதா?''

‘‘முங்காது லே... நம்ம வயலுக்குத் தெக்கு வரப்பிலே ஒரு தத்து கெடக்குல்லா! நமக்கு தேவைக்கு நெறஞ்ச பிறகும் பாயப்பட்ட வெள்ளம் அந்தத் தத்து வழியா தெக்கு வயலுக்கு வடிஞ்சிரும்...''

வெள்ளம் விலவிப் போட நந்தவனத்தடி வயலுக்குப் புறப்பட்டுப் போனேன். அப்போது எனக்குப் பதினான்கு வயதிருக்கும். அன்று அறிமுகமான சொல் இந்தத் தத்து.

வயல் மண்ணின் மட்டத்தில் இருந்து, வயல் வரப்பு முக்கால் அடி உயரம் என்று வைத்துக் கொள்ளுங்கள். வயலுக்கு நிரப்பாக அரையடி உயரத்தில் தண்ணீர் நின்றால் போதும் என்று கொள்ளுங்கள். மேலும் பாய்ந்து கொண்டிருக்கும் தண்ணீர் தன்னைப் போல் வெளியேற, தன் வயலைவிடப் பள்ளமான வயலின் எல்லை வரப்பில் செய்யும் சின்ன பள்ளம் தான் தத்து. தன் வயல் வரப்பில் முக்காலடி நீளத்தில், காலடி ஆழத்தில் சீரான பள்ளம் பறித்து வைப்பது. உபரி நீர் அந்தத் தத்து வழியாக அடுத்த வயலுக்குப் பாயும். அவரும் தனது வயலில் ஒரு தத்து போட்டு வைத்திருப்பார். தண்ணீரும் வீணாகாது, தன் பயிருக்கும் சேதம் இல்லை. அடுத்த வயலுக்கும் பயன்படும்.

தத்து என்பது பொந்தோ புடையோ அல்ல. வரப்பின் திறந்த மறுகால். சென்னைப் பல்கலைக்கழகத்து தமிழ் லெக்சிகன், தத்து எனும் சொல்லை, நான் மேற்சொன்ன பொருளிலும் பதிவிட்டுள்ளது. A Small Opening in a dam thrown across a canal, thro which a small quantity of water is allowed to flow during the draught என்பது பதிவு. வாய்க்காலின் குறுக்கே ஓடும் அணையின் நீர் சிறுகப் பாய்வதற்குக் குடைந்த துவாரம் என்றும் தமிழில் பொருள் தரப்பட்டுள்ளது. அதாவது வாய்க்காலின் குறுக்கே அணைகட்டி வயல்களுக்கு வெள்ளம் பாய வழி செய்யும்போது, வாய்க்காலின் மொத்தத் தணீரையும் தேக்கி விடாமல், ஒரு குறிப்பிட்ட உயரத்தில் தத்து அமைப்பது. அல்லது நீர் ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டும் வெளியேறும்படி மடை ஏற்படுத்தி வைப்பது.

தத்துக்கல் என்றால் Stone obstructing water fall and making it leap anew அருவி நீர் தத்தி விழுதல் என்று பொருள் சொல்கிறது பேரகராதி. ஆனால் நீர்வளம் மிகுந்த பகுதிகளில்தான் தத்து என்ற சொல் இந்தப் பொருளில் புழக்கத்தில் இருந்திருக்கும்போல.

பதினைந்து பதினாறு பிராயத்தில் பலமுறை பாம்புகளாகக் கனவில் வந்தது எனக்கு. வயற்கரையில் தோட்டம் போட மண் வெட்டிப் பறிக்கப் போனால் பாம்புகள் குறுக்கிட்டன. பறித்து வரப்பில் வைத்திருந்த களைக் குப்பங்களைச் சுமந்து வரப்புத் திரட்டில் குவிக்கப் போனால், காய்ந்த களைக் குப்பத்தின் கீழிருந்து படமெடுத்த குட்டிகள் ஓடின. ஆற்றில் குளிக்கப் போய் முங்கி எழுந்தால் தலைக்கு மேல் பாம்பு நீந்திக் கடந்து போயிற்று. ஆற்றங்கரையில் பட்டு நின்ற முள் முருங்கை மரத்தடியை விறகுக்கு என்று சுமந்து வீட்டுப் புறவாசலில் கொண்டு போட்டால் அதனுள் இருந்து எட்டடி விரியன் ஊர்ந்தோடியது. அம்மாதான் சொன்னாள், ‘‘இந்தப் பயலுக்க சாதகத்தை ஒண்ணு பாருங்கோ'' என்று. அப்பா பாம்புப் பஞ்சாங்கம் வைத்துக் கணிப்பார். சாதகம் பார்ப்பார். அளவாகப் பனையோலை நறுக்கி நிழலில் காய வைத்துப் பக்குவமான ஓலையில் எழுத்தாணி கொண்டு சாதகம் எழுதுவார். நான் பிறந்தபோது எனக்கு அவர் எழுதிவைத்த சாதகமும் அவர் எழுதிய எழுத்தாணியும் இன்னும் கைவசம் உண்டு.

அம்மாவின் சீண்ட்றம் தாங்காமல் என் சாதகத்தை எடுத்துக் கணக்குப் போட்டார். அவர் இறந்து 44 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவருக்கு அப்போது ஐம்பத்தைந்து வயது, எனக்கு இருபத்தெட்டு. அவர் குரல் இன்னும் மனதில் ஒலிக்கிறது, ‘‘இந்தப் பயலுக்குப் பதினாலு வயசிலே தண்ணீல ஒரு தத்து கெடந்திருக்கு... அது கழிஞ்சாச்சு... இனி எழுவத்தினாலு வயசு வரைக்கும் ஆயுசுக்கு எந்த விக்கினமும் இல்லட்டீ...'' என்றார் அம்மாவிடம். அவர் கணக்குப்படி எனக்கு இன்னும் ஈராண்டு கிடக்கிறது. ஆனால் அவர் தன் கணக்கைச் சரியாகக் கணித்திருக்க மாட்டார் போலும். ‘நாங் கெடக்கேன் பூமிக்குப் பாரமா, சோத்துக்குச் செலவா' என்று புலம்பிய அம்மா இருந்தாள் தொண்ணூறு வயது வரை.

அன்றெனக்கு அறிமுகமான சொல், தத்து என்றால் கண்டம் என்பது. கண்டம் என்றால் Dsk Continet அல்ல. உப்புக்கண்டமும் அல்ல. கண்டம் என்றால் ஆபத்து. Peril, misfourtune, Critical period in ones life as show by horoscope இது தத்து எனும் சொல்லுக்கு மறுபடியும் பொருள் தரும் பேரகராதி.

கிராமத்தில் அன்று இயல்பாகச் சொன்னார்கள், மைனாவுக்கு மூணு தத்து, கறிவேப்பிலைக்கு ஏழு தத்து என்று. நாஞ்சில் நாட்டுக் கிராமங்களில் இன்றும் கண்டம் என்றால் அபாயம், ஆபத்து. ‘தண்ணீரில் கண்டம், தீயிலே கண்டம், பிள்ளைப் பேற்றிலே கண்டம்' என்பர். சாதகம் பார்க்கும்

சோதிடர், ‘‘இந்த சாதகக்காரனுக்கு ஒரு தத்து உண்டும் நாப்பத்தஞ்சு வயசிலே... சூச்சிச்சு இருந்துக் கிடணும்'' என்பார்.

நடை பழகத் துவங்கியுள்ள பிள்ளைகளை, ‘தத்தக்கா புத்தக்கா' என்று நடப்பதாகச் சொல்வர் தாயர். தட்டுத் தடுமாறி, குழறிக் குழறிப் பேசுபவனை, உளறுபவனை, ‘அவனொரு தத்தக்கா புத்தக்கா' என்றனர்.

சுவீகாரம் எனும் வடசொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தத்து. தத்தெடுத்தல் என்றால் சுவீகாரம்  எடுத்தல். அதாவது  Adoptation. தத்துப்போதல் என்றால் சுவீகாரம் போதல். செட்டி நாட்டில் பிள்ளை கூட்டுதல் என்பர். தத்துப் பத்திரம் என்றால் Deed of Adoption. சுவீகாரம் உறுதி செய்யும் பத்திரம். தத்துப்பிள்ளை என்றால் தத்துப்புத்திரன் அல்லது சுவீகாரப் புத்திரன். பெண்பாலில் தத்துப் புத்திரி அல்லது சுவீகாரப் புத்திரி. சுவீகரித்தல் எனும் சொல் சமற்கிருதப் பிறப்பு என்றும் ஏற்கை, உட்கொள்ளுதல், ஒத்தேற்றல், விழைந்தேற்றல் என்பன பொருள் என்றும் சொல்கிறார் பேராசிரியர் அருளி. சுவீகாரம் என்றால் ஏற்பாரம், ஒத்தேற்பு, மகவேற்பு என்பார்.

மலையாளத்தில் நாட்டார் பாடல் ஒன்றிருக்கிறது.

‘சங்கரன் குட்டிக்கு மக்கள் இல்லாயப் போழ்

சக்கைக் குருவினைத் தத்தெடுத்து!

சங்கரன் குட்டிக்கு மக்கள் உண்டாயப்போழ்

சக்கைக் குருவினைச் சுட்டுத் திந்நு!'

என்பதந்தப் பாட்டு.

நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார், பேராசிரியர், இளம்பூரணர், சேனாவரையர், பரிமேலழகர், காளிங்கர், பரிதியார், மணக்குடவர், மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர் காலத்தில் மலையாளம் என்றொரு மொழி இருந்து, அதில் இந்தப் பாடலும் இருந்திருந்தால், தோராயமாகக் கீழ்க்கண்டவாறு உரை எழுதி இருப்பார்கள்.

சங்கரன்குட்டி என்பவனுக்கு மக்கள் இல்லாமல் இருந்த காலத்தில் பலாக்கொட்டை ஒன்றினைத் தத்தெடுத்தான். சங்கரன் குட்டிக்கு மக்கள் உண்டானபிறகு பலாக்கொட்டையைச் சுட்டுத் தின்றான் என்றவாறு.

மனிதனின் தன்னல இயல்பைப் புலப்படுத்தும் பாடல் இது.

இலக்கியத்தில் தத்து எனும் சொல், சுவீகாரம் எனும் பொருளில் ஆளப்பட்டிருக்கிறதா என்றொரு கேள்வி எழலாம். நாமும் அரங்கின்றி வட்டாடும் ஆள் அல்ல.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் பாடிய 473 பாடல்களில் ஒன்று. அப்பூச்சி காட்டுதல் என்ற பகுதியின் பாடல்.

‘‘தத்துக் கொண்டாள் கொலோ?

தானே பெற்றாள் கொலோ?

சித்தம் அனையாள் அசோதை இளஞ்சிங்கம்

கொத்தார் கருங்குழல் கோபால கோளரி

அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்

அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்''

என்பதந்தப் பாடல்.

யசோதையின் சிந்தைக்கு அவன் இனியவன், இளஞ்சிங்கம். கொத்தான கருங்குழல் கொண்ட கோபாலன், சிங்கக் கூட்டத்தின் தலைவன். அவனை அவள் தத்தெடுத்தாளோ? தானே பெற்றாளோ? அந்த அத்தன் வந்தெனக்கு அப்பூச்சி காட்டுகின்றான். அம்மா, அப்பூச்சி காட்டுகின்றான். இது பாடலின் பொருள்.

தத்தி நடந்தாலும் தமிழில் நடந்துள்ளேன். ‘தத்தம்மா பூச்சை பூச்சை' என்றெவரும் எமை அச்சுறுத்த இயலாது. மொழி எம்மைத் தத்தெடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், தத்துக்களைத் தாண்டியும் எம் பயணம் தொடரும்.

ஆகஸ்ட், 2020.