சிறப்புக்கட்டுரைகள்

தடை செய்யப்படுமா ஐ.பி.எல்?

முத்துமாறன்

அசாருதீன் அளவுக்கு கிளாசிக் கிரிக்கெட் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட வீரர் யாரும் உண்டா? அவரது மணிக்கட்டு சுழற்சியில் பாய்ந்து செல்லும் பவுண்டரிகளைப் பாராட்ட வார்த்தைகளே  இல்லை என்பர். சாதாரணக் குடும்பத்தில் இருந்து வந்த அவர் வந்த வேகத்தில் தொடர்ந்து மூன்று சதங்களை இங்கிலாந்துக்கு எதிராக அடித்து பெரும் புகழ் பெற்றார். சச்சினுக்கு முன்பாக  கிரிக்கெட் வெறி பிடித்த தேசத்தின் அன்பைப் பெற்றிருந்த அசாருதீன், 2000-த்தில் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் சிக்கினார். தென்னாப்பிரிக்க வீரர் ஹன்சி குரோனி, தனக்கு புக்கிகளை அறிமுகப் படுத்தியது அசாருதீன் தான் என்று சொல்ல வசமாகச் சிக்கினார் அவர். அவருக்கு பிசிசிஐ ஆயுள்காலத் தடை விதித்தது.

சமீபத்தில்தான் ஹைதராபாத் உயர்நீதிமன்றம் அவருக்கு விதித்த தடையை நீக்கி உள்ளது. அவர் இப்போது கௌரவமான காங்கிரஸ் கட்சியின் எம்பி. மேட்ச் பிக்ஸிங் அவர் செய்தது நிரூபிக்கப்படவில்லையாம்! ஜடேஜா, மனோஜ் பிரபாகர் - என்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு அல்வா கொடுத்தவர்கள் ஏராளம். எனவே ஸ்ரீசாந்த் மற்றும் அவருடன் இதற்கு முன் கேள்வியே பட்டிராத வீரர்கள் எல்லாம் சிக்கிய போது  ரசிகர்கள் அதிகம் விட்டது சின்னதாகப் பெருமூச்சுதான்.

டெஸ்ட், ஒரு நாள் ஆகிய போட்டிகளுக்கு ஒரு பத்தினித் தன்மை உண்டு. டெஸ்ட் போட்டிதான் உண்மையான கிரிக்கெட் என்று ஒரு நாள் போட்டியையே மதிக்காத ரசிகர்களும் உண்டு. ஆனால் இந்த நாட்டில் கிரிக்கெட்டை நடத்துபவர்கள் அப்படியெல்லாம் ரசிகர்கள் அல்லர். அவர்கள் அனைவரும் வியாபாரிகள்.

ஐபிஎல் உருவாக்கி அதைக் கோடிகள் கொட்டும் பொழுதுபோக்காக மாற்றிய லலித் மோடி இப்போது நாட்டுக்குள் வரவே முடியவில்லை. பிசிசிஐ தலைவராக இருக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் விதிகளை மீறி தானே ஒரு அணியை( சென்னை சூப்பர் கிங்ஸ்)வைத்திருக்கிறார்(இது பற்றி வழக்கு இருக்கிறது)!

எல்லாம் தெரியும்தான். ஆனாலும் ஐபிஎல் பார்க்க மாலையானால் எல்லாரும் வீட்டுக்குள் போய்விடுகிறோம்! இந்த ஆறாவது ஐபிஎல்லில் நடந்த 75 மாட்சுகளையும் ரத்தம் மூளைக்கு ஏற ஏற சலிப்பேயில்லாமல் பார்த்து ரசித்தோம்!  நம்ம மக்கள் ஐபிஎல் நடந்தால் தேர்தலுக்கு வாக்குப் போடக்கூட வரமாட்டார்கள் என்று 2009-ல் தேர்தலின்போது ஐபிஎல் தேதிகளை மாற்றி வைக்க அரசு விரும்பியது! நீங்கள் வேண்டுமானால் தேர்தல் தேதிகளை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு ஐபிஎல்லை தென் ஆப்பிரிக்காவில் நடத்தியது பிசிசிஐ.

கொச்சி அணியை ஐபிஎல்லில் சேர்த்ததில் ஏற்பட்ட பிரச்னையில்  அவர்கள் விரட்டப் பட்டார்கள். இப்போது பரிதாபமான புனே அணியை சகாரா கை கழுவியது.

இந்த ஐபிஎல்லில் கடைசியாக மும்பை இண்டியன்சுக்கும் சென்னை சூப்பர் கிங்சுங்கும் நடந்த போட்டியில் அனல் பறக்கவே இல்லை. (எப்படிய்யா  பறக்கும்? அதான் எல்லா காத்தையும் மெய்யப்பனும் விண்டுவும் பிடுங்கிவிட்டார்களே). கிட்டத்தட்ட அம்பானிகளின் மும்பை இந்தியன்களிடம் சென்னை கிங்ஸ் சரண் அடைந்தது. இது முன்கூட்டியே செய்யப்பட்ட

பிக்சிங் போலிருக்கிறது என்று ரசிகர்கள் முணுமுணுத்தாலும் பார்க்கத் தவறவில்லை. எப்படியும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் தோற்றுப் போய்விடும் என்றுதான் எதிர்பார்த்தார்கள்!  இது ஒரு மாதிரி தண்டனை என்று சொல்லலாம்! வரிசையாய் தோற்பதற்கே உள்ளே வந்தது மாதிரி சென்னை வீரர்கள் வெளியேறினார்கள். மைக் ஹஸ்ஸி அவுட் ஆனதுதான் கொஞ்சம் நல்ல பால் என்று சொல்லவேண்டும். 149 ரன் எடுப்பதெல்லாம் சென்னை அணிக்கு படுத்துக் கொண்டே ஜெயிக்கும் ஸ்கோர்தான்!  ஆனால் அஸ்திவாரமே ஆடுகிறதே அய்யா?

இதில் மிகப் பெரிய காமெடி,  தலைவர் சீனிவாசனின் மருமகன் மெய்யப்பன் மாட்டி கைதானதும்  அவர் அணியின் கௌரவ உறுப்பினர் மட்டுமே என்று பிளேட்டையே திருப்பிப் போட்டதுதான்!

சென்னை அணி இனி ஐபிஎல்லில் விளையாட முடியாது என்று ஆளுக்காள் பீதியைக் கிளப்ப சீனிவாசன் தன் வெய்ட்டை அசால்ட்டாகக் காண்பித்து மீண்டும் ஒருமுறை தான் டோனியை விட நல்ல கேப்டன் என்று நிருபித்திருக்கிறார்! இனி வரும் செப்டம்பரில் நடக்கும் தேர்தல் வரை அவரை அசைக்க முடியாது போலிருக்கிறது.

மும்பை டெல்லி, சென்னை என்று நாடு முழுக்க புக்கிகள் கைதாகிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எக்கச்சக்கமான கதைகள்; எக்ஸ்குளூசிவ் கதைகள் என்று ஊடகங்கள் நிரம்பி வழிகின்றன.  ஓட்டல் அதிபர்கள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் போதாதற்கு மும்பை நிழல் உலக அண்ணன் தாவூதின் ஆட்கள்-  கிரிக்கெட்டின் நிழல் வாழ்க்கையின் மீது வெளிச்சம் பாய்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த சூதாட்டத்தை மத்திய அரசு பார்த்துக் கொண்டிருக்கலாமோ? உடனே சூதாட்ட தடை மசோதா கொண்டுவரப் போகிறார்கள்!  பணத்தில் கொழிக்கும் பிசிசிஐக்கு வரிவிலக்கு அளித்திருக்கும் இந்த புண்ணியவான்கள் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. அவர்களுக்கு விளையாட்டில் நேர்மைதான் முக்கியம். அப்போதுதான் மக்கள் அரசைப் பற்றிக் கவனம் செலுத்தாமல் விளையாட்டின் மீது கவனம் செலுத்துவார்கள்?

“ஐக்கிய முற்போக்கு கூட்டணி தொடர்ந்து ஊழல் புகார்களில் சிக்குவதாலும், இரு அமைச்சர்கள், பவன்குமார் பன்சால் மற்றும் அஸ்வினி குமார் பதவி விலகிய பிறகும் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று கடும் நெருக்கடி தரும் நிலையில் இந்த விவகாரம் இந்தியாவின் கவனம் முழுவதையும் வேறொன்றுக்கு திசை திருப்புவதற்காக கையில் எடுக்கப்பட்டதோ என்றுகூடச் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

பாஜக அரசியல் தலைவர்களும் ஐ.பி.எல். அணியில் பங்குதாரர்களாக இருப்பதால், பதிலடியாக அவர்களுக்குப் புதிய நெருக்கடி தருவதற்காகவோ, அல்லது இந்தப் புகாரில் அதிக எண்ணிக்கையில் வீரர்கள் சிக்கியிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கழற்றிவிட்டு, வேறொரு பெரும்புள்ளியை உள்ளே கொண்டுவருவதற்காகவோ இந்தப் பிரச்னை தற்போது கையில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கும் இடமுண்டு”- இது தினமணி தலையங்கம் சொல்லும் செய்தி.

ஐபிஎல் என்பது மைதானத்தில் நடக்கும் விளையாட்டு இல்லை. அதற்கு வெளியே நடப்பது. அது பவர் கேம்! அது மிகச் சுவாரசியமாக இருக்கிறது.  சோம்பலான ஒரு தேசத்துக்கு இப்படி  ஒரு பொழுதுபோக்கு ரியாலிட்டி ஷோ தேவைதான்!

ஜூன், 2013.