சிறப்புக்கட்டுரைகள்

ட்ரெண்டைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள்!

ஏ.எஸ்.பன்னீர்செல்வன்

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சரியாகச் சொன்னால் 2011ஆம் ஆண்டுக்கு முன்வரை டிஜிட்டல் செயல்பாடுகள், நிர்வாகம் ஆகியவற்றைச் செயல்படுத்த முடியவில்லை, இதற்குக் காரணம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பரவல் அப்போது குறைவாக இருந்ததுதான். ஆனால் ஆண்டிராய்டு கருவிகள் மூலமாக டேட்டா வரத் தொடங்கிய பிறகு, டேட்டா எளிதில் மலிவாகக் கிடைக்கும் என ஆனபிறகு பெரிய மாற்றம் உண்டானது. இன்றைய டிஜிட்டல் மீடியாவின் இவ்வளவு பெரும் வளர்ச்சிக்குக் காரணம், தொழில்நுட்பமே!

இதில் நாம் உருவாக்கிய எந்த உள்ளடக்கமும் இல்லை; உள்ளடக்கமே தொழில்நுட்பம் வந்த பிறகு வந்ததாகிவிட்டது. முன்னர், என்னிடம் இருந்த உள்ளடக்கத்துக்காக என்ன தொழில்நுட்பம் தேவையோ அதைப் பயன்படுத்தி அதை வெளியிட்டேன். ஆனால் கையடக்கக் கருவிகளில் டேட்டா அனைவருக்கும் போய்ச்சேர்ந்த பிறகு, தொழில்நுட்பம் சார்ந்த மாற்றங்களாக வந்தன. அப்படி மாறும்போது எந்த முழுமையான பயிற்சியையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை; எனக்கு மனதில் தோன்றுவதை நான் எளிதாக வெளியிட்டுவிட முடியும். இதைச் சொன்னால், மரபான பத்திரிகைகளில் தவறுகளே செய்யவில்லையா, பிரச்னைகளே இல்லையா, அங்கு கருத்துகளை முன்வைத்து சில பிரச்னைகளைச் செய்யவில்லையா என்று கேள்விகளை வைக்கிறார்கள். அங்கும் இவற்றுக்கு வாய்ப்பு இருந்தது; ஆனால், பத்திரிகையில் ஒரு வழிமுறை இருந்தது. ஒருவர் எழுதுவார், இன்னொருவர் படிப்பார். இரண்டு பேர் படித்தபிறகுதான் அது வெளியிடப்படும். அப்போது கருத்தாக்கரீதியாக குறிப்பிட்ட ஒரு கருத்தைச் சார்ந்து எழுதினாலும், அங்கு கட்டுப்பாடு இருந்தது. சமூக ஊடகத்திலோ நானே எழுதுபவன், நானே ஆசிரியர், நானே வெளியிடுபவன்... மூன்றும் நானாகவே இருக்கும்போது, இதற்கான திருத்தங்கள் எப்படி வரும்?

 இந்தத் துறைக்குள் நான் வந்தபோது 1980 - களில் எங்கள் (அவுட்லுக் இதழ்) ஆசிரியர் வினோத் மேத்தா ஒன்றைச் சொல்வார்:' நீ எழுதியதை நீயே படிக்காதே!'. ஏனென்றால், நம் மனதில் இருப்பதை வைத்து எழுதிவிடுகிறோம். நம் தவறுகள் நம்முடைய கண்களுக்குப் படுவதில்லை. இன்னொருவர் அதைப் படிக்கும்போதுதான், ‘இந்த வாக்கியம் சரியாக முடியவில்லை. இந்தக் கருத்து சரியாக வரவில்லை' என சொல்வார்கள். அப்படி, எழுதப்பட்ட செய்தியை  இன்னொரு ஜோடி கண்கள் பார்ப்பது என்பதே இப்போது இல்லாமல் போய்விட்டது. இதனால் நமக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஊடகத்துக்கு இரண்டு கடமைகள் இருக்கின்றன. ஒன்று, BEARING A WITNESS எல்லா விசயங்களுக்கும் சாட்சியமாக இருப்பது. இன்னொன்று, MAKING SENSE. ஒரு விசயத்தைப் பற்றி செய்தியாக்கம் முடித்துவிட்ட பிறகு அதைப் பற்றி  அலசி ஆராய்வது. உதாரணமாக, காஷ்மீரில் அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்கியது தொடர்பாக... காஷ்மீருக்குப் போய் அதைப் பற்றி செய்தி சேகரித்து வெளியிட்ட பிறகு, அதைப் பகுத்து ஆய்ந்து எழுதினால் அர்த்தம் கிடைக்கும்.

ஆனால், யூ டியூபில் BEARING WITNESS என்பதே பெரும்பாலும் இல்லை; எந்த யூ டியூபருமே ரிப்போர்ட் செய்வதில்லை. எல்லாருமே MAKING SENSE - இல் இறங்குகிறார்கள். சாட்சியமாக இல்லாமல் அலசி ஆராய்வதை மட்டும் செய்யும்போது, ஒரு கட்டத்தில் அது அலசலாகவும்கூட இருக்காது. நீங்கள் எதைப் பற்றி சொல்கிறீர்கள் என்பது கேட்பவர்களுக்கு புரிவதில்லை. குடியுரிமைச் சட்டம் விவகாரம் வரும்போது, அதன் மூலம் குடியுரிமை இழக்கப்பட வாய்ப்பு உள்ள ஐந்தாறு பேரிடம் பேசினால்தான், என்.ஆர்.சி., என்.பி.ஆர்., சி.ஏ.ஏ. பற்றி நமக்கு பிடிபடும். யூடியூபில் நாம் அப்படிச் செய்வதே இல்லை. அதாவது, சாட்சியமே இல்லை.

பத்திரிகைத் துறையில் இரண்டு பாதைகள் உள்ளன. ஒன்று  செய்தியாக்கம் அல்லது செய்தி சேகரித்தல். இன்னொன்று அலசல். செய்திச் சேகரிப்பில் ஈடுபடாமல் அலசல் என்பதைச் செய்யவே முடியாது. 1984இல் செய்தித்துறைக்கு வந்தேன். அந்த ஆண்டு டிசம்பரில் போபாலில் தொழிற்சாலை விபத்து நிகழ்ந்தது. அப்போது பத்திரிகையாளர்கள் அங்கே எல்லாவற்றையும் நேரடியாகப் போய்ப் பார்த்து விரிவாக எழுதினோம். இன்றைக்கு போபால் விச வாயுக் கசிவைப் பற்றி கேட்டால் பொதுப்புத்தியில் அது இருக்கிறது. பொதுப்புத்திக்குள் அது போனதற்குக் காரணம், அலசல் அல்ல, நேரடியாக  செய்யப்பட்ட சரியான செய்திச் சேகரிப்புதான் அடிப்படை.

யூ டியூபில் செய்தியாக்கம் என்பது எங்கே?

செய்தியாக்கம் என்பதில் நான் சாட்சியாக இருக்கிறேன். ரிப்போட்டர் என்பதன் மரியாதை எதிலிருந்து வருகிறது? இதற்கு நான் சாட்சியாக இருந்தேன் எனச் சொல்வதில் இருந்துதான். உதாரணமாக... கோவை கலவரத்தில் நான் சாட்சியாக இருந்து சொல்கிறேன்... கோட்டைமேடு பகுதியைப் பார்வையிட்டுவிட்டு, அத்வானி கோவைக்கு வருவதற்கு முன்னர் இந்துத்துவ சக்திகள் திட்டமிட்டு கலவரத்தை உண்டாக்க முயன்றார்கள் என ஒருவன் சொல்வதாக இருந்தால், அதற்கு அவன் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறான்.

நீங்கள் தூரத்திலிருந்து கருத்தை மட்டும் சொல்வதில், உங்களின் கருத்துக்கு யார் பொறுப்பேற்பது?

செய்தியாக்கத்தில் கிடைக்கும் மிக முக்கியமான ஒன்று, அது என்னுடைய பொறுப்பாகிவிடுகிறது; அதன் நேரடி சாட்சியமாக நான் மாறிவிடுவது. இதனால்தான் நம்பகத்தன்மை வருகிறது.

இப்போது உள்ள செய்தியாளர்களைவிட பழைய செய்தியாளர்களை மக்கள் நம்பினார்கள் எனக் கூறுகிறார்கள் அல்லவா?  இப்போதைய யூடியூப் அரசியல் விமர்சகர்கள் உங்கள் கருத்தைத்தான் சொல்கிறீர்கள். ஆனால்  உண்மைகளை எடுத்துச் சொல்லக் கூடிய சாட்சியாக நீங்கள் இல்லை. இப்படி இருந்தால், அதன் மீதான மதிப்புமரியாதை அதிகமாக  இருக்கும். நம்பகத்தன்மை இன்றைக்கு கடுமையாக அடி வாங்கியிருக்கிறது. முக்கிய காரணம், நம்முடைய வேலைத்தன்மையை நாமே மாற்றிக்கொண்டதுதான்!

காலைச் சிற்றுண்டித் திட்டத்தை எடுத்துக்கொண்டால், அது சரியா தவறா என அலசினால் அது எங்கும் போய்ச் சேராது. அதைச் சாப்பிடும் மாணவர்களை சந்தித்துப் பேசும்போதுதான், 72 சதவீத மாணவர்கள் காலைச் சிற்றுண்டியைச் சாப்பிடுவதே இல்லை என்கிறார்கள். அப்போதுதான் அதன் முக்கியத்துவம் நமக்குப் புரிகிறது. சாட்சியமாக இருந்தால்தான் நமக்கு இது பிடிபடும். ஆதரவு, எதிர்ப்பு என்றல்ல, நமக்கு தேவையா, தேவையில்லையா என்கிற புரிந்துகொள்ளல் வேண்டும். இதுதான் யூடியூபர்களிடம் நமக்கு கிடைக்காமல் போகிறது. டிஜிட்டல்மயம் ஆக்கத்துக்கு முன்னர் நம்மிடம் இருந்த ஊடகங்கள் குறைவு, புரிந்துகொள்வது அதிகமாக இருந்தது. இப்போது ஊடகங்கள் அதிகம்; புரிந்துகொள்வது சுருங்கிவிட்டது.

இந்த வெளிப்பாட்டுக்குள் இருக்கும் முக்கியமான பிரச்னை என்னவென்றால், கருத்துச் சுதந்திரம் என்பதை முன்வைத்து நிறைய வளர்ந்துவிட்டோம். அந்த சுதந்திரம் எப்போது முழுமையடையும்... அதைக் கேட்பதற்கு ஒருவர் இருந்தால்தானே? இப்போது எல்லாரும் கருத்து சொல்கிறார்கள்; ஆனால் கேட்பது யார் என்று தெரியவில்லை.

பலவிதமான உரைகள் (மல்ட்டிப்பிள் மோனோலாக்குகள்) இருக்கின்றன; ஆனால், உரையாடல் (டயலாக்) இல்லை. இந்த இடைவெளியை உணர்ந்துகொள்ளாவிட்டால் மிஞ்சப்போவது பல்வேறு கூச்சல்கள்தாம்! அந்தக் கூச்சல்கள் என்னுடைய கருத்து சுதந்திரத்தை உறுதிசெய்யவில்லை என நிச்சயமாகச் சொல்லமுடியும்.

என்னுடைய கருத்தை இரண்டு பேராவது கேட்டார்கள்; அரசு செவிமடுத்து திட்டங்களைத் தீட்டியது என்றால் அது கருத்து சுதந்திரமாக இருக்கும். ஆனால், என்னுடைய கருத்தாக மட்டும் வெளியே வருவது என்ன கருத்து சுதந்திரம்? அதற்கு என்ன அர்த்தம்? இதைத்தான் தொலைக்காட்சிகளின் முக்கிய நேர அரசியல் விவாதங்களில் பார்க்கிறோம். ஏழு பேரும் ஒரே நேரத்தில் இடத்தில் பேசுகிறார்கள். ஆனால் அவர்களின் கருத்துகள் அங்கிருக்கும் மற்றவர்களிடம் போய்ச் சேரவில்லையே?

மக்களில் கணிசமானவர்கள், ‘நான் அதை வாங்கிப் படிப்பதில்லை; அதைப் பார்ப்பதில்லை' எனச் சொல்கிறார்கள். குடிமக்களின் பார்வைக்கும் யூடியூபர்களின் 'என் கருத்து; என் சுதந்திரம்' என்கிற பார்வைக்கும் நீண்ட இடைவெளி இருக்கிறது. மக்கள் தங்களை சர்வதேசத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கிறார்கள். ஆனால் யூடியூபர்கள் தங்களைத்தான் முக்கிய ஆளாகப் பார்க்கிறார்கள். அடுத்த சேனலுக்கு முன்னால் யார் வெளியிடுவது, முதலில் யார் போடுவது என்பதில் இவர்களிடம் இருக்கும் போட்டி, தெளிவாக விளக்கமாகச் சொல்வது யார் என்பதில் இல்லை.

உதாரணமாக, பிரதமர் அலுவலகத்திலிருந்து விஸ்வகர்மா திட்டத்தைக் கொண்டுவருகிறார்கள். இது, ராஜாஜி காலத்தில் கொண்டுவரப்பட்ட குலக்கல்வித் திட்டம் போன்றது என்று விமர்சனம். இதைப் பற்றி சென்னை ஐஐடி ஆய்வாளர் வீரராகவன் ஒரு ஆய்வு நூலை எழுதியிருந்தார். இந்த விவாதம் வந்தபோது, அதைப் பற்றி ஒரு யூடியூபரும் பேசியதாக எனக்குத் தெரியவில்லை. அவர் இன்றைக்கு உயிரோடு இல்லை என்பது வேறு. அந்தப் புத்தகம் முக்கியமான பதிவு அல்லவா? அதற்குள் போய் விசயத்தை எடுத்துச்சொல்ல வேண்டும் என்பது நம்மிடம் இல்லை!

காரணம், வீரராகவன் நூலிடம் போய்விட்டால் நீங்களே அனைத்தும் அறிந்தவராக மாற மாட்டீர்கள்.  இதை வீரராகவன் சொன்னார் என்று கூறவேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் யூடியூபிலோ, 'நான்தான் உண்மையைச் ஆசொல்வேன்; உண்மையை அறிந்த ஒருவரிடம் நான் கேட்கமுடியாது. ஆதிமூலத்திடம் போய் ஓவியம் கற்பதோ, ஜெயரஞ்சனிடம் பொருளாதாரம் கேட்பதோ எனக்கு தாழ்வை ஏற்படுத்திவிடும். நானே சொல்லிவிட வேண்டும்.  சர்வதேசம் பற்றியும் நானே பேசவேண்டும். விளையாட்டைப் பற்றியும் பேசவேண்டும். இப்படித்தான் யூடியூபில் அனைத்தும் தெரிந்தவராக தம்மை நினைத்துக் கொள்ளும் மனநிலை இருக்கிறது.

ஊடகத்தின் அடிப்படைப் புரிந்துகொள்ளல் இதில் இல்லை. ஊடகத்தினர் எல்லா துறைகளிலும் வல்லுநர் இல்லை. கல்வி, பொருளாதாரம், நிதி, வெளியுறவு என அந்தந்தத் துறைசார்ந்த வல்லுநர்கள் தங்களின் கருத்துகளைச் சொல்வார்கள். அதன்மூலம் பல்வேறு கருத்துகளின் வெளிப்பாடாக மாறும்; மாறவேண்டும் அல்லவா? அது இங்கு அடிவாங்கியிருக்கிறது. மிகப் பெரிய இழப்பு இது.

யூடியூப் ஊடகப் பன்மைத்துவத்தை (புளூராலிட்டி) ஏற்படுத்தவில்லை. பிரதமர் பேசுகிறார் என்றால், 600 சேனல்கள் ஒளிபரப்புகிறார்கள். அவை 600 சேனல்களாக இல்லை, ஒன்றுதான்! ஆனால் பிரதமர் இன்ன பேசுகிறார், இதைப் பற்றி அவரின் கட்சிக்குள்ளும் மற்ற கட்சிகளுக்குள்ளும் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கேட்டு வெளியிட்டால், பலவிதமான குரல்கள் வரும்.

இன்றைக்கு நாம் பார்ப்பது, ஒரே விசயத்துக்கு முன்னால் எல்லா ஊடகங்களின் கவனமும் இருக்கிறது. அதற்கு வெளியில் இருக்கும் வேறு ஒரு விசயத்தின் பக்கமும் திரும்புவதில்லை. அன்றைய டிரெண்டைப் பிடித்துக்கொண்டு போகின்றன, யூடியூப் சேனல்கள்.

இந்தியாவைப் போல பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாட்டில், எவ்வளவோ சிக்கல்கள் உள்ள நாட்டில், ஒரே விசயம்தான் எல்லாருக்கும் பொதுவானதா?ஒவ்வொருவருக்கும் ஒரு பெரிய பிரச்னை இருக்கும். அந்த பிரச்னைகள் எங்கே? எந்தப் பிரச்னையையும்  இதன் மூலம் அறியப்பெற்று, அதன் மீது நாம் அக்கறைகொண்டு கவனம் கொள்ளமுடியாது. இதுதான் என்னுடைய கவலை!

யூடியூபில், யார் ஓங்கிப் பேசுகிறார்களோ அவர்கள் சரி என்று ஆகிவிட்டது. இது எந்த வகையிலும் புதிய உண்மைகளையோ நாட்டு நடப்புகளைப் புரிந்துகொள்வதற்கோ உதவியாக இல்லை.

எந்த ஒன்றையும் முழுமையாக அறியவிடாமல் இருக்கிறபடிதான், இவர்களின் செயல்பாடு இருக்கிறது.

இதற்கு, இந்தத் தொழில்நுட்பம், ஏதோ ஒரு படத்தில்,  சொல்வதைப் போல, குடோனிலேயே இருந்திருக்கலாம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!

(ஏ.எஸ்.பன்னீர்செல்வன்,மூத்த பத்திரிகையாளர். நம் செய்தியாளரிடம் கூறியதிலிருந்து)

கருத்து சொல்கிறவரே பொறுப்பாளி!

ப்ரியன், பத்திரிக்கையாளர்

பல யூடியூப் சானல்களில் பத்திரிகையாளர் என்கிற முறையில் அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்துகளைப் பேசிவருகிறேன். இந்த சானல்களைப் பொறுத்தவரையில் ஒரு நிகழ்வு நடந்தால் அதைப் பற்றி எவ்வளவு விரைவாக கருத்து பதிவேற்றுகிறோமோ அவ்வளவு அதிகமாக பார்வைகள் எண்ணிக்கை கூடும் என்பார்கள். நாம் கருத்துக் கூறும்போது நமக்குக் கிடைக்கும் எக்ஸ்குளூசிவ் தகவல்களையும் சேர்த்துக் கூறும்போது அதற்கு மதிப்பு கூடுவதுடன் பார்வையாளர்களும் அதிகரிக்கின்றனர். எந்த நிகழ்வைப் பற்றிப்பேசப்படுகிறது? யார் பேசுகிறார்கள்? எந்த நேரத்தில் இது பேசப்படுகிறது என்பதில்தான் இந்த யூடியூப் சானல்கள் கவனம் செலுத்துகின்றன. ஏனெனில் இதைப் பொறுத்தே பார்வையாளர்கள் கவனம் குவிகிறது.

இந்த சானல்களைப் பொறுத்தவரை தலைப்பு வைப்பது மிகவும் ஈர்ப்பாக வைப்பதில் கவனம் செலுத்துவர். அச்சு ஊடகத்தில் இருந்து வரும் எனக்கெல்லாம் பெரும் அதிர்ச்சியாக இருக்கும். ஏன்ப்பா இப்படி வைக்கறீங்க என்றால் அப்படி இருந்தால்தான் போகும் என்பார்கள். ரொம்ப உணர்ச்சி வயப்பட்டு பேசிவிட்டால், அப்படியே இருக்கட்டும், கட் பண்ணவேண்டாம் என்பார்கள். பொதுவாக நிகழ்ச்சியில் வரும் கருத்துகளுக்கு அதைச் சொல்லும் கருத்தாளர்களே பொறுப்பு என்று முன்கூட்டியே பெரும்பாலானோர் போட்டு விடுவதால் நாம் தான் கவனத்துடன் பேசவேண்டும். பல சானல்கள் சார்பு நிலையில் இருப்பவை அவை குறிப்பிட்ட கட்சிகளை எதிர்த்துப் பேசாதீங்க என்பார்கள். என்னையே குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளன் என்று நினைத்துக் கொண்டு என்னை அந்தக் கட்சியின் சொம்பு என பார்வையாளர்கள் விமர்சனம் செய்வார்கள். நானே வேறொரு விவகாரத்தில் அதே கட்சியை எதிர்த்துப் பேசியிருப்பேன் ஆனால் அதை அவர்கள் கவனத்தில் கொள்ளமாட்டார்கள். இந்த பிரச்னைகளும் உண்டு. சமீபத்தில் ஒரு நிகழ்வுக்காக செல்லும்போது சாலையைக் கடக்க நின்றிருந்தேன். அங்கிருந்த காவலர் ஒருவர் என்னை அடையாளம் கண்டுகொண்டு அருகில்வந்து கேட்டதுடன், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி என்னை சாலையைக் கடக்க உதவியது ஆச்சர்யம்.

(நமது செய்தியாளரிடம் கூறியதிலிருந்து)