சிறப்புக்கட்டுரைகள்

டிஜிட்டல் திருடர்கள்

இரா. கௌதமன்

நான் இதுமாதிரி நடக்குமென்று நினைக்கவில்லை. நான் பழைய ஏடிஎம் கார்டுகளை என் கணக்கில் வைத்திருந்தேன். அவற்றை புது கார்டுகளாக மாற்ற வேண்டுமென்று நினைத்தேன். 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என் பழைய ஏடிஎம் கார்டிலிருந்து பணம் எடுக்க முடியவில்லை. புதுகார்டை வாங்க வேண்டுமென்று நினைத்தேன்.

சில தினங்களுக்கு முன்னால் ஒரு செய்தி வங்கியிலிருந்து வந்தது. உங்கள் வீடு தேடி ஏடிஎம் கார்டு வருமென்று. நான் அதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். வரவில்லை. இன்று காலை 9.24 மணிக்கு போன் வந்தது. இந்தியன் வங்கி ஏடிஎம் அலுவலகத்திலிருந்து பேசுகிறேன். உங்கள் பழைய கார்டுகளை மாற்ற வேண்டுமில்லையா என்று. ஆமாம் என்று சொன்னேன். அப்படி பேசியது ஒரு பெண்.

உங்கள் பழைய கார்டு எண்ணை சொல்லுங்கள் என்றாள். நான் அவசரம் அவசரமாக இரண்டு பழைய கார்டு எண்களைச் சொன்னேன். எனக்கு புது ஏடிஎம் கார்டுகள் வாங்க வேண்டுமென்ற அவசரம். ஒரு கார்டு நவீன விருட்சம் கணக்கு. இன்னொரு கார்டு நானும் சகோதரனும் சேர்ந்த வைத்துள்ள கணக்குக் கார்டு.

உங்களுக்கு ஒரு ஓடிபி வரும். அதைச் சொல்லுங்கள் என்றாள்.

நீங்கள் யார் இந்தியன் வங்கிதானே என்றேன்.

ஆமாம் என்றாள்.

என் செல்போனில் ஒரு செய்தி வந்தது. அது இதுமாதிரி எழுதப்பட்டிருந்தது.

Rs.9999.00 Spent on POS/Ecom using IB Debit card on 02/07/2019 09.33 at Pay*WWW OLA - CABS Com Gurgaon from A/c XXX58463

என்று.

உடனே போன் பேசியவள் அவசரப்பட்டு ஓடிபி எண்ணைக் கேட்டாள். நானும் என்னை ஏமாற்றுகிறாள் என்று புரியாமல் கூறிவிட்டேன். இது மாதிரி இரண்டு முறை நடந்தது.

அதன் பின் தான் எனக்கு சந்தேகம் வந்தது. என்னை ஏமாற்றுகிறாள் என்று. நான் உடனே மேற்கு மாம்பலம் இந்தியன் வங்கிக்குச் சென்று நான் இதைப் பற்றி வங்கி மேலாளரிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன்.

அதற்குள் என் கணக்கிலிருந்து இரண்டு முறை பணம் டெபிட் ஆகிவிட்டது. நான் தாமதமாக சுதாரித்துக்கொண்டதால் ஐந்து முறை அதுமாதிரி பண்ணியிருந்தது தப்பித்தது.

நான், உங்கள் பெயர் என்ன? என்று கேட்டேன்.,

அருணா என்றாள்.

என்னவாக இருக்கிறீர்கள்? என்றேன்.

ஏடிஎம்மில் என்றாள்.

எந்த இடம் என்றேன்.

தலைமை அலுவலகம் என்றாள்.

நான் ஏமாந்து விட்டேன் என்பதை மேற்கு மாம்பல கிளை அலுவலகத்திற்கு வந்தபிறகு தெரிந்து கொண்டேன். நல்ல காலம் என்னுடைய இன்னொரு கணக்கிலிருந்து பணம் எடுக்கவில்லை. என் முட்டாள்தனம் நான் ஏமாந்து விட்டேன்.

இதை ஏன் இங்கு பதிவு செய்கிறேன் என்றால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக.

நான் இதோ க்ரைம் பிராஞ்சில் புகார் கொடுக்கப் போகிறேன். இந்தப் பணம் எனக்குக் கிடைக்காது என்ற முழுநம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் புகார் கொடுக்க உள்ளேன். பழைய கார்டு புது கார்டு குழப்பம் இருக்கிறது. புது கார்டு வேண்டும் என்கிற அவசரத்தால் நான் எமாந்து போனேன். இத்தனைக்கும் நான் வங்கியில் 33 வருடங்கள் பணிபுரிந்தவன்.

- இது நவீன விருட்சம் பத்திரிகை ஆசிரியரான அழகிய சிங்கரின் பதிவு.

வங்கியில் வேலை பார்த்தவருக்கே இதுதான் நிலைமை. இதேபோன்று நம் எல்லோருக்கும் அனுபவமிருக்கிறது. சிலர் ஏமாந்திருக்கலாம், சிலர் சுதாரித்துக் கொண்டு தகவல்களை கொடுக்காமல் தப்பித்திருக்கலாம். ஆனால் வங்கி அட்டை வைத்திருக்கும் அனைவரும் இது போன்ற தொலைபேசி அழைப்புகளை எதிர் கொண்டிருப்போம். இவர்களெல்லாம் யார்? எப்படி நம்முடைய பணத்தை சில நொடிகளில் எவ்வித அடையாளமும் இல்லாமல் எடுத்து விடுகிறார்கள் என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக வந்திருக்கிறது நெட் ஃபிளிக்ஸின் ‘ஜாம்தாரா' இணையத் தொடர்.

2015 லிருந்து 2017 வரை இந்தியாவில் நடைபெற்ற கடடிண்டடிணஞ் எனப்படும் இணைய வழி பண மோசடி களில் எண்பது சதவீதத்திற்கும் மேலாக ஒரு சிறிய மாவட்டத்திலிருந்து நடந்துள்ளது. அது ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிழக்கு புறமாக மேற்கு வங்கத்தின் அருகிலுள்ள ‘ஜாம்தாரா' என்கிற மாவட்டம்.

இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளதது தான் ‘ஜாம்தாரா' வெப் சீரீஸ்.

பணத்தை திருட கொலை செய்ய வேண்டியதில்லை, அதி புத்திசாலிகளுடன் இணைந்து துல்லியமான திட்டமிடல்கள் தேவையில்லை, முக்கியமாக நேரடியாக களத்திலிறங்கி உயிரைப் பணயம் வைத்து சாகசங்கள் எதையும் நிகழ்த்த வேண்டியதில்லை என்பதை முதல் காட்சியிலேயே தெளிவாகச்

சொல்லிவிடுகிறது ஜாம்தாரா. பதினாறு, பதினேழு வயதொத்த பத்தாம் வகுப்பைக் கூட நிறைவு செய்யாத விடலைகள் தங்கள் வீட்டின் மொட்டை மாடியிலிருந்தோ, தோட்டத்திலுள்ள பரண்களில் அமர்ந்தோ சாதாரணமாக நண்பர்களுடன் பேசுவது போன்று அநாயசமாக இதைச் செய்கிறார்கள்.

தொலைபேசி எண்களை சேகரித்து தரும் மூளையாகச் செயல்படுவது சன்னி. அவனுடைய சகோதரனான ராக்கிக்கும் சன்னிக்கும் ஒத்து வருவதில்லை. சன்னி கொடுக்கும் தொலைபேசி எண்களை வைத்தே அந்த கிராமத்திலுள்ள இளைஞர்கள் பலரும் இந்த நூதன திருட்டைச் செய்கிறார்கள். மக்களின் அறியாமையும், பேராசையுமே இவர்களின் மூலதனம். உங்களுடைய கிரெடிட் பாய்ண்ட் காலாவதியாகப் போகிறது, அதனால் பேங்க் உங்களுக்கு கோவா செல்ல டிக்கெட் ஏற்பாடு செய்திருக்கிறது, உங்களுக்கு மாருதி கார் கிஃட்டாக வந்துள்ளது, உங்களுடைய கார்ட்டை அப்டேட் செய்ய வேண்டும் இப்படி வாயில் வந்தபடி பல பொய்கள். பள்ளி ஆசிரியர், நீதிபதி, அரசியல்வாதி, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் என்று இவர்களுடைய வலையிலிருந்து எவரும் தப்புவதில்லை. ஒரு முறை வங்கி கணக்கிலிருந்து  பணம் வெளியே சென்று விட்டால் அவ்வளவுதான். அது திரும்பி வருவதற்கான வாய்ப்பேயில்லை.

ஜாம்தாரா போலீஸ் இதையெல்லாம் அறியாமலில்லை. ஆனால் நம் நாட்டில் இணைய வழி பொருளாதாரக் குற்றங்களுக்கான சட்டங்கள் தெளிவாக இல்லை. அதனால் இவர்களை கைது செய்தாலும் உடனடியாக ஜாமீனில் வெளிவந்து விடுகிறார்கள். அதற்குமேல் போலீசுக்கும் செய்வதற்கு ஏதுமில்லை.

இந்த சமயத்தில் ஜாம்தாரா எஸ்பி ஆக டாலி சாகு என்ற இளம் பெண் அதிகாரி பதவியேற்கிறார். இக்குற்றங்களை தடுத்து நிறுத்த தீவிர முயற்சிகளையும் எடுக்கிறார். ராக்கியின் அரசியல் ஆசையை பயன்படுத்திக் கொள்ளும் கிராமத்தின் பெரிய மனிதர் பிரஜேஷ், இவர்களுடைய திருட்டில் பாதியை அவருக்கு கொடுத்து விட வேண்டும்; பதிலுக்கு கைதாகாமல் பாதுகாப்பு தருவதாகக் கூறுகிறார்.

சன்னிக்கு இவருடன் சேர்வதில் விருப்பமில்லை.

சன்னி, குடியா என்ற படித்த பெண்ணை திருமணம் செய்கிறான். குடியா அதே கிராமத்தில் டியூசன்

சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார். பிறகு அந்த டியூசன் சென்டரை, கால் சென்டர் போல உபயோகப்படுத்தி திருட்டை பரவலாக்குகிறார்கள். கிராமத்தின் பெரிய மனிதர் பிரஜேஷ் இதே போன்று ஒரு கால் சென்டரை ராக்கியின் நண்பர்கள் மூலமாக தன்னுடைய ரகசிய இடத்தில் நடத்துகிறார்.

 சன்னியைப் போன்றே கிராமத்திலுள்ள மற்ற இளைஞர்களும் படித்த நன்றாக ஆங்கிலம் பேசக் கூடிய பெண்களைத் தேடி திருமணம் செய்கிறார்கள். திருட்டுக்கான வலைப் பின்னல்களை பெரிதாக்கி, இவர்கள் அமைப்பாக மாறி வருவதை போலீஸ் மோப்பம் பிடிக்கிறது. இன்னொருபுறம் இரண்டு குழுக்களுக்கான பகை முற்றுகிறது. குடியாவின் தம்பி கொல்லப்படுகிறான். பழி சன்னி மேல் விழுகிறது. ஆனால் பிரஜேஷ்தான் இதைச் செய்ததாக எல்லோரும் நம்புகிறார்கள். குடியாவை துருப்புச் சீட்டாக்கி பிரஜேஷை கைது செய்கிறார், டாலி.

சன்னியும், குடியாவும் தப்பி ஓடுகையில் சன்னி சுடப்படுகிறான். இதனுடன் முடிகிறது முதல் பாகம்.

இதுவரை திரையில் பார்த்திராத முகங்களுடன் வறண்ட ஜார்க்கண்ட் பிரதேசத்தை அப்படியே காமிரா அள்ளி வந்திருக்கிறது. நகர பின்னணி கொண்ட கதைக் களன்களையே அதிகம் பார்த்திருக்கும் நமக்கு இது வித்தியாசமான அனுபவமாக அமைகிறது.

ஆனால், கதையில் முழுதாக நம்மால் ஒன்ற முடிவதில்லை. முதற்காரணம், குற்றவாளிகளின் பார்வையில் கதை நகர்கிறது. அதுவும், பணத்திருட்டை தொழிலாகவே செய்யும் ஒரு கும்பல். அதனால் இறுதியில் சன்னி சுடப்பட்டு கீழே விழும்போது கூட அவன் மீது நமக்கு பரிதாபம் வருவதில்லை. எத்தனை பேரின் வயித்துல அடிச்சிருப்ப, செத்தாதான் என்ன என்று தான் தோன்றுகிறது. இரண்டாவதாக, ஜாம்தாரா மாவட்டத்தில் மட்டும் ஏன் இந்த குற்றங்கள் அதிகமாக நடக்கிறது, இவர்களுக்கு மட்டும் தொலைபேசி எண்கள் எங்கிருந்து கிடைக்கிறது என்பதற்கு தெளிவான பதில்கள் இல்லை.

ஆனாலும், எப்படியெல்லாம் நம்மிடமிருந்து மிக எளிதாக பணத்தைத் திருடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ஜாம்தாராவை கண்டிப்பாக பார்க்கலாம். அடுத்த முறை தொலைபேசி அழைப்பு அல்லது மின்னஞ்சல் வரும்போது உஷாராக இருப்பதற்கும்.

இந்த குற்றங்களைத் தடுக்காமல் நாம் டிஜிட்டல் இந்தியா ஆகி என்ன பிரயோசனம்?

பிப்ரவரி, 2020.