டெபால் தேவ் 
சிறப்புக்கட்டுரைகள்

820 நெல்ரகங்களைப் பாதுகாத்தவர்!

அசோகன்

டாக்டர் டெபால் தேவ், கல்கத்தாவில்  ஒரு  மருத்துவருக்கு மகனாகப் பிறந்தவர். சூழலியல் டாக்டர் பட்டம் பெற்றவர்.  கலிபோர்னியா பல்கலையில் படித்தவர். இப்போது இந்தியாவின் கிராமங்களிலும் பழங்குடிகளிடமும் பணி புரிந்துவருகிறார். இதுவரை அழியும் நிலையில் இருந்த நமது பாரம்பரிய நெல்ரகங்களில் 820 ரகங்களை இவர் பாதுகாத்துப் பயிரிட்டு விதைகளை விவசாயிகளிடம் வழங்கிவருகிறார் என்பது வியப்பூட்டும் செய்தி. இவரது Beyond Developmentality என்ற நூல், வளர்ச்சி என்று சொல்லப்படுவதை கடுமையான கேள்விக்கு உள்ளாக்கும் நூல். மேற்கு வங்கத்தில் இவரது விதைப்பண்ணை இருக்கிறது. இப்போது அங்கு தொடர்ந்துவரும் வறட்சியின் காரணமாக ஒடிஷாவுக்கு மாற்றியிருக்கிறார் டாக்டர் தேவ். ஒடிஷா மாநிலத்தில் பூரி நகரின் கடற்கரையில் இருந்த ஒரு விடுதியில் நீண்ட மாநாடு ஒன்றுக்குப் பின்னர் இரவு பனிரெண்டு மணியைக் கடந்த நிலையில் அந்திமழைக்காகப் பேசினார். கடற்காற்று தாலாட்ட, ஒரு படிக்கட்டில் அமர்ந்தவாறே பேசினோம். “மேற்கு வங்கத்தில் நகரத்தில் பிறந்து அங்கே வளர்ந்து, பின்னர் விவசாயியாக மாறியவன் நான் மட்டுமாகத்தான் இருப்பேன்” என்று புன்னகையுடன் குறிப்பிடுகிறார்.

எது உங்களை நெல் ரகங்களைச் சேகரிக்கத் தூண்டியது? எது ஆரம்பம்?

ஒரைசா சடைவா என்று சொல்லப்படுகிற நமது நெல் இனத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் 110,000 ரகங்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. எழுபதுகள் வரை அதாவது பசுமைப்புரட்சியின் ஆரம்பம் வரை இது நீடித்தது. அதன் பின்னர் ஐசிஏஆர் கணக்கெடுப்பின் படி இதில் 90 சதவிகித ரகங்கள் விவசாயிகளிடமிருந்து காணாமல் போய்விட்டன. ஆகவே நெல் இனம், ஒரு உயிரினமாக சூழலியல் விதிகள் படி மிகுந்த ஆபத்தில் உள்ளது. ஏதாவது ஒரு சூழலியல் பேரழிவு ஏற்படுமானால் நெற் பயிர் முழுக்கவே அழிந்துபோய்விடும். இது ஏற்கெனவே அயர்லாந்து உருளைக்கிழங்கு ரகங்களுக்கு நடந்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் 1970கள் வரை  5500 ரகங்கள் இருந்தன.  நான் 90களின் இறுதியில் என் பணியை ஆரம்பித்தபோது சுமார் 500 ரகங்களே இருப்பதாக கணக்கிட முடிந்தது. அதாவது 90 சதவிகித ரகங்களைக் காணவில்லை. இந்த நாட்டில் யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. நெல்லுக்கு மட்டுமல்ல இந்த நிலை. மா,கத்தரி, போன்ற பிறவற்றிலும் நூற்றுக்கணக்கான ரகங்கள் அழிந்துபோயின.  சில முயற்சிகளுக்குப் பின்னால் என்னுடைய பி.எப் பணம், சேமிப்பு, சில நண்பர்களின் நிதியுதவி ஆகியவற்றுடன் களத்தில் இறங்கினேன். நிலத்தை வாங்கி விதைகளைப் பயிரிட ஆரம்பித்தேன். கடந்த பதினைந்து ஆண்டுகளாக இதைச் செய்துவருகிறேன். இன்று என்னிடம் 820 நெல் ரகங்கள் உள்ளன. இதில் 500 ரகங்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவை. மீதி ஜார்க்கண்ட், அசாம், பீகார், கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த ரகங்கள். தமிழ்நாட்டில் இருந்து சில ரகங்களே என்னிடம் உள்ளன. ஆனால் இந்த ஆண்டும் மேலும் சில ரகங்களை தமிழக விவசாயிகள் என்னிடம் தர உள்ளனர்.

உலகம் முழுக்க பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 14 பழங்குடி இன மக்களிடம் ஆய்வு செய்தவர் நீங்கள். அவர்களிடம் இருந்து என்ன நாம் அறிந்துகொள்ளலாம்?

மானுட சூழலியல் குறித்த என்னுடைய ஆய்வுக்காக இந்தியா, தாய்லாந்து மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள 14 பழங்குடியினர் குறித்து ஆய்வு செய்தேன். மனிதன் பாரம்பரிய முறைப்படி எப்படி இயற்கையைப் பயன்படுத்திக் கொள்கிறான் என்ற ஆய்வு. பெரும்பாலான பழங்குடியினரிடம் இயற்கையை ஒரு அளவுக்கு மேல் சுரண்டாமல் தவிர்ப்பதற்காக, அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லவேண்டும் என்பதற்காக பாரம்பரியமாக  சில சமூகத் தடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நீர்நிலைகள், தோப்புகள், மலைகள், உயிரினங்களைப் புனிதமாக கருதுவது, வேட்டையாடுதல், மீன்பிடித்தலில் குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகள் போன்றவை அவை. இவற்றை நான் ஆவணப்படுத்தினேன். இது எந்த பாடப்புத்தகத்திலும் நாம் கற்றுக்கொள்ள முடியாத ஒன்று. முடிந்தவரை இயற்கையைச் சுரண்டும் நோக்கம் கொண்ட நமது இப்போதைய நவீன சமூகத்தின் பழக்க வழக்கங்களுக்கு முற்றிலும் எதிரானது  இது.   எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்லவேண்டும் என்பது நம் சமூகத்துக்குக் கொஞ்சமும் இல்லை.

பழங்குடி இனத்தவர் வாழ்வு முறைகளில் நீங்கள் கற்றது உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எப்படிப் பயன்படுகிறது?

இப்போது வளர்ச்சி என்று சொல்லப்படுகிறவற்றை பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலத்தில் இருந்தே நான் கேள்விக்குள்ளாக்கி வந்துள்ளேன். வளர்ச்சி என்பது என்ன? எதற்காக அந்த வளர்ச்சி? பொருளாதார கணக்கீடுகள் அனைத்துமே வளர்ச்சியின் பயனாளிகள், பணம் படைத்த சமூகத்தினரே என்பதையே காட்டிவருகின்றன. பொருளாதார வளர்ச்சி என்பது எப்போதுமே பணக்காரர்-ஏழை இடையிலான இடைவெளியை எப்போதும் அதிகப்படுத்தியே வந்துள்ளன. 1960-களில் ஏழை பணக்காரர் இடையிலான இடைவெளியோடு ஒப்பிடுகையில் அது இப்போது 20 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் இதை மாற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.  இந்தப் பொருளாதாரம் மேற்கத்திய உலகின் மாதிரிப் பொருளாதாரம். இதுதான் உலகுக்கே முன்மாதிரியாக முன்வைக்கப்படுகிறது. இதைக் கடைபிடிக்காதவர்கள் வளர்ச்சியில் பின் தங்கியவர்

களாகவும் பொருளாதார மைய நீரோட்டத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டியவர்களாகவும் கருதபடுகிறார்கள். இந்த கருத்து சமூகத்தின் நிதி நிபுணர்கள், பொருளாதார வல்லுநர்களிடம் மட்டும் காணப்படவில்லை. பிச்சைக்காரர் முதல் பணக்கார தொழிலதிபர் வரை எல்லோரிடமும் இதே மனநிலைதான் உள்ளது.  நான் இதைக் கேள்விக்குள்ளாக்கினேன். மாற்று வாழ்க்கை முறை, மாற்று சமூக அமைப்பு போன்றவற்றைப் பற்றி ஆய்வு செய்தேன். அங்கு பேராசையே வாழ்க்கை முறை என்பது மாறி முழுமையான பார்வையுடன் கூட்டுணர்வுடன் எதிர்கால சந்ததி பற்றிய கவலையுடன் கூடிய வாழ்க்கையே அடிப்படை. பின்னர் சூழலியல் பொருளாதாரம் பற்றி ஆய்வுகள் செய்தேன். இப்போது வளர்ச்சிக்கு எதிராக உறுதியான குரலில் என்னால் பேசமுடிகிறது. என்னுடைய சுய வாழ்வில் இதைக் கடைபிடிக்கிறேன். ஏ.சி இல்லாமல் வாழ முடியும் என்றால் பிறருக்கு அதைக் காண்பிக்க வேண்டியிருக்கிறது. சில முக்கியமான அறுவை சிகிச்சைகளுக்கு மட்டும் ஏசி தேவை. அதைவிட்டால் தேவையில்லை. ஏசி மட்டுமல்ல. பல ஆடம்பர நுகர்வுகளில் இருந்து வெளிவர வேண்டிய தேவை இருக்கிறது. நான் என்னுடைய பண்ணை வீட்டை, சுட்ட செங்கல் இல்லாமல், சிமெண்ட் இல்லாமல், மரங்களை அறுக்காமல், சூழலுக்கு கொஞ்சமும் தீங்கு விளைவிக்காமல் கட்டி உள்ளேன். சூரிய மின்சாரம் உற்பத்தி செய்கிறேன். மழை நீரை சேகரிக்கிறேன். இதெல்லாம் நான் கடைப்பிடிக்கும் உதாரணங்கள். பல கிரிமினல் கார்ப்பரேஷன்கள் தயாரிக்கும் பொருட்களை நான் வாங்குவதில்லை. இவற்றை நான் புறக்கணிப்பதால் அவற்றின் உற்பத்தி நிற்கப்போவதில்லை. ஆனால் என் புறக்கணிப்பு என்னுடைய தீர்மானிக்கும் உரிமையை உறுதி செய்கிறது. அது என்னுடைய வாழ்வியல் சுதந்திரம். மேற்குவங்கத்தில் நான் வாழும் கிராமத்தைச் சுற்றியுள்ள ஆறு கிராமங்களில் வாழும் இளைஞர்கள் வளர்ச்சிமனப்போக்கு எனப்படும் மனநிலையில் இருந்து மாறி சுதந்திரமாக உள்ளனர். இதைப் பெருமையுடன் கூறுகிறேன். நீங்கள் பணிபுரிய ஆரம்பித்த 16 ஆண்டுகளில் சுமார் 60 பேர்தானே அங்கு மாறியிருப்பார்கள்.  எப்படி உலகை மாற்ற முடியும் என்று கேட்கலாம். ஆனால் இது அதற்கான முதல்படி.

தன் ஆய்வுகளின் போது எதிர்கொண்ட பல சுவாரசியமான சம்பங்களைப் பற்றி தேவ் பகிர்ந்துகொண்டார். அதில் ஒன்று இது:

பழங்குடியினத்தவரிடம் சில ஆய்வுகளுக்குச் சென்றிருந்-தேன். அங்கே ஓரிடத்தில் சுமார் எட்டடி ஆழ-மான குறுகலான குழி ஒன்றில் மலைப்பாம்பு ஒன்று தவறி விழுந்துகிடந்ததைக் கண்டேன். நான் பாம்புகளைப் பிடிக்கப் பயின்றவன். அப்பாம்பை குழியில் இறங்கி மீட்க விரும்பினேன். மலைப்பாம்புகளின் வழக்கம் ஆளைச்--சுற்றி இறுக்கிக் கொள்வது. ஆகவே அவற்றைப் பிடித்தால் தலையையும் உடம்பையும் இழுத்து விலக்கிப் பிடிக்கவேண்டும். ஆனால் அந்த குழிக்குள் கைகளை நீட்ட இடம் இல்லை. எனவே என்ன செய்வ-தென்று தெரியவில்லை. என் உதவியாளர்களிடம் ஆலோசித்தேன். ஹோ இனத்தவர்களும் யோசித்தார்-கள். அவர்களில் முதியவராக இருந்த ஒருவர் நான் பிடிக்-கிறேன் என்று முன்வந்தார். ஒர் கயிறுடன் உள்ளே இறங்கியவர் பாம்பை லாகவமாகப் பிடித்து தலையையும் வாலையும் சட்டென்று ஒரு வளையமாக கயிறால் கட்டி-விட்டார். என்ன ஒரு அருமையான யோசனை! இப்போது பாம்பால் யாரையும் சுற்றி நசுக்க முடியாது. நாங்கள் ஒரு நீண்ட கயிறின் உதவியுடன் பாம்பைத் தூக்கிவிட்டோம். காட்டில் வாழும் அந்த முதியவருக்கு நான் எதாவது பரிசு வழங்க ஆசைப்பட்டேன். அவருடனான உரையாடல் இப்படி அமைந்தது.

“உங்களுக்கு எதாவது கொடுக்க விரும்புகிறேன். உங்களுக்கு என்ன வேண்டும்?”

“எனக்கா? எனக்கு ஒன்றும் வேண்டாம். என்னிடம் எல்லாம் இருக்கிறது”

“ம்ஹும் சொல்லுங்கள். என்ன வேண்டும்?”

“அய்யா வேண்டாம். எனக்கு எதுவும் தேவை இல்லை”

“ஒரு கம்பளியாவது தருகிறேன். வாங்கிக்கொள்ளுங்கள்”

“கம்பளியா? என்னிடம் ஏற்கெனவே ஒன்று இருக்-கிறதே?”

“இருந்தாலும் இன்னொன்று வைத்துக்கொள்ளுங்கள்”

“வேண்டாம். இரண்டையும் போர்த்தினால் வியர்க்கும். குடிசையில் வைத்தாலோ கரையான் அரித்துவிடும். வேண்டாம்”

“சரி.. சாப்பாட்டுத் தட்டுகள் வேண்டுமானால் தருகிறேன். உணவருந்த வைத்துக்கொள்ளுங்கள்”

“அதை யார் கழுவுவது? அந்த வேலையே பெரிதாகி விடுமே? இப்போது நாங்கள் காட்டு மரங்களின் இலைத் தட்டுகளில் உண்கிறோம். சாப்பிட்டுவிட்டுத் தூக்கிப் போட்டுவிடலாம்”.

கடைசிவரை அந்த பெரியவரை சம்மதிக்க வைக்க முடியவில்லை. பில்கேட்ஸிடம் என்ன வேண்டுமென்று கேட்டால் இன்னொரு ஜெட் விமானம் வேண்டும் என்று கேட்டிருக்கக் கூடும். ஆனால் இம்மனிதர் எதுவுமே வேண்டாம் என்கிறார். இவர் அல்லவோ உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்று தோன்றியது.

நவம்பர், 2012.