தம்பி எனக்குப் பசிக்கிறது. கொஞ்சம் உரை
யாடலாமா? என்றவர் எனக்கு ஞானியாகத் தெரிந்தார்..
‘உங்களுக்கு ஏதாவது உணவு வாங்கித்தரட்டுமா
சாப்பிடுக்கொண்டே பேசலாமே' என்றேன்.
‘சரி' என்றார்.
கண்களில் நீர் கொட்ட அள்ளி அள்ளிச் சாப்பிட்டார். எதுவும் பேசவில்லை. கை கழுவினார். கண்ணீரை நீரில் போகவிட்டார். முகத்தைக் கைகளால் துடைத்துக் கொண்டார். அவர் முகத்தில் வெளிச்சம் பரவி இருந்தது. வெளியே வந்தோம்.
‘அதோ அங்கே நிழலாக இருக்கிறது. அங்கு போய் நின்று இளைப்பாறிக்கொண்டே பேசலாமா' என்றேன்.
‘தம்பி, உங்கள் விருந்தோம்பலில் இளைப்பாறிவிட்டேன். கண்ணீரில் என் உரையாடல் முடிந்துவிட்டது. பிரபஞ்சம் நம்மைப் பார்த்துக்கொள்ளும்' எனச்சொல்லிவிட்டு வேகமாகப் போய்க்கொண்டிருந்தார் அந்த ஞானி.
புகைப்பட கலைஞர்
அவர் தேர்ந்த புகைப்படக் கலைஞர். அவளைப் பட
மெடுக்கத் தயாரானார். சிவப்பு பென்சிலை எழுதும் நோட்டின் மேல் வைத்தார். திரைச்சீலை வழியே மஞ்சள் வெளிச்சம் விழும்படி செய்தார்.
அவர் காமிரா செவ்வகத்திற்குத் தக்கபடி சில பொருட்கள் உள் வந்தன. சில பொருட்கள் வெளிப் போயின. அவளைப் படமெடுக்கத் தயாரானார்.
ஒன்றே ஒன்று குறைவாக இருந்தது. அது பிடிபட்டது. அவள் கண்ணிலிருந்த புன்னகையை நகர்த்தி நகர்த்தி அவள் உதடுகளுக்குக் கொண்டு வந்தார்.
எதிர்பார்த்த படம் கிடைத்தது. அவள் தேவதைப் போலிருந்தாள்.
தேங்கிப்போனவர்
பல சமயங்களில் நான் தவிர்த்த நண்பர் இன்று நேரெதிரே வந்து கேட்டார்.
‘ஏன் சார் என்ன அவாயிட் பண்றீங்க. ஏதாவது செய்யக்
கூடாதத செஞ்சிட்டனா?'
‘இல்ல செய்ய வேண்டியத செய்யல.' என் வேகமான பதில் அவர் தேங்கிப் போயிருப்பதை உணர்த்தக்கூடும்.
ரோமியோ ஜூலியட்
‘நான் போகவா?'
‘எதுக்கு அவசரம்!'
‘ரொம்ப நேரமாயிடுச்சு!'
‘இன்னும் கொஞ்ச நேரமிரு!'
‘எவ்வளவோ நேரம் இருந்தாச்சு!'
‘ பரவாயில்ல, உன் குரல்ல தேன் இருக்கு! '
‘ தூரத்துல ஊர் இருக்கு!'
‘அழகா பேசற!'
‘அப்படியா அழகி'
‘போய்தான் ஆகணுமா'
‘ஆமா இருட்ட ஆரம்பிச்சுடுச்சு!'
‘என்ன நெனைச்சிக்கிட்டு போ, வெளிச்சமாயிடும்!
‘வரட்டா!'
‘எப்படிப் போவ? மழை பெய்யுது!'
‘சில்லுன்னு காத்துதான அடிக்குது, மழை இல்லயே!'
‘ஆமால்ல!'
‘நானும் வரனே, நாம யார் கண்லயும் படாம ஓடிப் போயிடிவோம்!'
‘வார்டன்...அங்க ரோமியோ ஜூலியட் மாதிரி ரெண்டு பேசிக்கிட்டே இருக்கு. நாலு தட்டுத்தட்டி உள்ள போகச் சொல்லுங்க!'
அந்த மனநல காப்பகத்தின் விளக்குகள் நோய்மையுடன் முணுமுணுக்கின்றன.
அழகான சொற்கள்
சூர்யா ஹாஸ்பிட்டல் பக்கத்தில் உள்ள ஹைடெக் லேப். காலை ஏழரை மணிக்கு பிளட் டெஸ்ட் எடுத்துவிட்டு எதிரே உள்ள ரெஸ்டாரண்டுக்கு சாப்பிட வந்தேன்.
மறுபடியும் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அடுத்து டெஸ்ட் எடுக்க போக வேண்டும்.
வாழ்க்கை இனிமையாக இருக்கிறது என்பது அழகான எண்ணம்.சுகர் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்பது மனம் விட்டுவிடாத நம்பிக்கை. கால சுழற்ச்சிக்குத் தக்கபடி கால்கள் நடைபோட வேண்டும் என்று யாரோ சொன்னது நினைவைச் சுற்றி வந்தது.
இட்லி சொன்னேன். தொந்தி சாய வந்த வெயிட்டர் மந்தகதியில் இயங்கினார். சுடுநீர் கேட்டேன்.
கொண்டு வந்து வைத்தார். பச்சைத்தண்ணீருக்கு கொஞ்சம் கோபம் வந்து இளஞ்சூடானது போலிருந்தது.
வெயிட்டரைக் கூப்பிட்டேன்.. அதே தேர் நடை. சுலோ மோஷனில் வந்து சேர்ந்தார். சூடாக கேட்டேன். அவர் சூடானார்.
‘ஆளு இல்ல சார். வச்சிதான் எடுத்துக்கிட்டு வரணும்'
‘அண்ணே, நீங்க ஒரு ஆளு பத்து ஆளுக்கு சமம்ணே'
என் துள்ளல் வார்த்தைகளில் மானானார்.
அடுத்த நிமிடம் சூடாக கொண்டு வந்து வைத்தார். முகத்தில் கூலான புன்னகை.
வேறொரு டேபிளிலிருந்து குரல் வர நன்றியுடன் பார்த்துவிட்டுப் போனார்.
சில சொற்கள் தருணங்களை அழகாக்குகின்றன. அதில் மனிதர்கள் அழகாகத் தெரிகிறார்கள்.
பிப்ரவரி, 2023.