உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தமிழர் உரிமைகளுக்காக போராட்டக் களத்தில் எப்போதும் இருப்பவர். அவர் அந்திமழைக்கு அளித்த நேர்காணல்
அண்மையில் நடைபெற்று முடிவடைந்திருக்கும் மாணவர்களின் போராட்டங்கள் எற்படுத்திய விளைவுகள் எவை?அப்போராட்டங்கள் இப்போது ஓய்ந்திருப்பது எதனால்?
மாணவர்களின் போராட்டம் இயற்கையாக,தன்னெழுச்சியாக வெடித்துக் கிளம்பிய போராட்டம். தனிநபர்களோ அரசியல்கட்சிகளோ தூண்டிவிட்டு அவர்கள் போராடவில்லை. மாணவர்கள் தொடர்ந்து ஆத்திரமூட்டப்பட்டபோதும் எவ்விதமான வேண்டாத நிகழ்வுகளும் இல்லாமல் அமைதியாகவும் வேகமாகவும் இந்தப் போராட்டத்தை நடத்தினார்கள். தமிழகமக்கள் மத்தியில் இது அவர்களுக்குப் பெருமையைத் தேடித்தந்தது. மாணவர்களின் ஒன்றுபட்ட போராட்டம் தில்லி நாடாளுமன்றத்தையே குலுங்கவைத்தது என்று சொன்னால் மிகையாகாது. இதுவரை ஈழச்சிக்கல் பற்றிப் பேசாத கட்சிகள் மற்றும் தலைவர்கள்கூட இதுபற்றிப் பேசவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். இதுவே அவர்களுக்குக் கிடைத்த முதல்வெற்றி.இரண்டாவதாக,மாணவர்கள் என்னென்ன கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினார்களோ அவற்றையே அதிலும் குறிப்பாக தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு தேவை என்கிற வரலாற்றுச் சிறப்பமிக்க தீர்மானம் தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதற்கான உந்துசக்தியாக மாணவர்கள் திகழ்ந்தார்கள். அடுத்தது, இப்போராட்டம் உலகம்முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியில் ஒரு புதியநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இன்றைக்கு மாணவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டு தேர்வுகள் முடியும்வரை போராட்டங்கள் வேண்டாம் என்று முடிவுசெய்து படித்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்வுகள் முடிவடைந்த பிறகு தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்தத்திட்டமிட்டிருக்கிறார்கள்.
தமிழீழப் பரப்பில் மீண்டும் ஒரு போராட்டம் உருவாகும் நிலையே இல்லாதவாறு அங்கு கடும் நெருக்கடியிலும் அச்சத்திலும் அம்மக்களை சிங்களஅரசு வைத்திருக்கும்போது வெளியில் நடக்கும் போராட்டங்கள் எவ்வகையில் பயன்தரும் என்று கேட்கப்படுகிறதே?
இது ஒரு தவறான கருத்து. உலகவரலாற்றில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களைப் பற்றி அறியாதவர்கள் சொல்லும் கருத்து இது. தமிழீழத்தைப் பொறுத்தவரை விடுதலைப்போராட்டம் அம்மக்களின் உள்ளங்களில் கனன்றுகொண்டேயிருக்கிறது. இவ்வளவு கஷ்டங்களுக்கிடையேயும் அம்மக்கள் உறுதியோடு இருக்கிறார்கள். விடுதலைப்புலிகளை ஒழித்தாகிவிட்டது, பிரபாகரனைத் தீர்த்துக்கட்டியாகிவிட்டது என்றெல்லாம் கொக்கரிக்கிற ராஜபக்சே,ஏற்கெனவே அவர்களுடைய இராணுவத்தில் மூன்றுஇலட்சம் வீரர்கள் இருக்குமபோது புதிதாக ஒரு இலட்சம் வீரர்களைச் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன? இராஜபக்சேவுக்குத் தெரியும் மீண்டும் புலிகள் தாக்குவார்கள் என்று. இந்தியாவுக்கும் இது தெரியும். அதனால்தான் போர் முடிந்துவிட்ட நிலையிலும் இந்தியாவில் சிங்கள இராணுவத்துக்குப் பயிற்சி கொடுப்பது ஏன்? இன்னமும் ஆயுதம் கொடுப்பது ஏன்? ஆக எந்தநாட்டின் விடுதலைப்போராட்டத்தையும் யாராலும் எப்போதும் தோற்கடிக்கவே முடியாது. விடுதலைவேட்கை என்பது எரிமலை போன்றது.
ஆயிரக்கணக்கான ஏக்கர் தமிழர் நிலங்களை கையகப்படுத்துவது உள்பட தொடர்ச்சியான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் வடமாகாணத்திலும் தமிழர்களைச் சிறுபான்மையினராக்கும் முயற்சிகளைச் சிங்களஅரசு செய்துகொண்டேயிருக்கிறதே?
சிங்களஅரசு மட்டும் இதைச் செய்யவில்லை, இந்தியாவும் இதன் பின்னணியில் இருக்கிறது. இவர்கள் தமிழர்களுக்கு ஆயிரம் கோடி கொடுத்து வீடுகட்டித் தருகிறோம் என்று சொல்வதெல்லாம் பொய். இவர்கள் தருகிற பணத்தில் உருவாகிற எல்லா வீடுகளுமே சிங்களர்களைக் குடியேற்றவே உதவுகின்றன. தமிழ்ப் பகுதிகளைச் சிங்கள மயமாக்குவதற்கு இந்தியாவும் துணைநிற்கிறது. இது தற்காலிகமானது, ஒருபோதும் நிரந்தரமாகமுடியாது. அங்கு கொண்டு வந்து குடியேற்றப்படும் சிங்களர்கள் நாளைக்கு மீண்டும் புலிகள் தாக்குவார்கள் என்று சொன்னாலே ஓடிவிடுவார்கள்.
இந்தியஅரசு என்ன செய்யவேண்டுமெனக் கருதுகிறீர்கள்?
மன்மோகன்சிங் அரசு இருக்கும் வரை அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். இந்தஅரசுக்குத் தொலைநோக்குப் பார்வையும் இல்லை, இந்தியாவின் நலன்கள் பற்றியும் கவலை இல்லை. விடுதலைப்புலிகள் பலமாக இருந்தவரை இலங்கையில் எந்த அந்நிய வல்லரசும் கால்தடம் பதிக்க முடியவில்லை. விடுதலைப்புலிகள் தங்கள் மண்ணைக் காக்க மட்டும் போராடவில்லை. இந்தியாவுக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் போராடியிருக்கிறார்கள். அதை உணராமல் ஒரு முட்டாள்தனமான கொள்கையைக் கையாண்டு புலிகளுக்கு எதிராக சிங்களஅரசுக்கு இந்தியா உதவி செய்தது. இதனால் புலிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டது இதன் விளைவு என்ன? இலங்கையில் சீனாவும் பாகிஸ்தானும் ஆழமாகக் காலூன்றிவிட்டன. இப்போது இந்தியாவின் தென்வாயிலில் அபாயம் கதவைத் தட்டுகிறது. 1962 சீன ஆக்கிரமிப்பிற்குப் பிறகு என்றைக்கும் சீனாவை நம்பமுடியாது அதனால் நமக்கு ஆபத்து இருக்கிறது, மேற்கே பாகிஸ்தான் மூலம் ஆபத்து இருக்கிறது, எனவே முக்கியமான இராணுவத்தொழிற்சா லைகளை வடமாநிலங்களில் அமைக்கவேண்டாம் என உத்தரவிட்டதோடு எல்லாவற்றையும் தென்மாநிலங்களிலே நிறுவவேண்டும் என்று நேரு சொன்னார். ஏனெனில் தெற்கே இலங்கையைத் தவிர வேறுநாடு கிடையாது. இலங்கை நம் நம்பிக்கைக்குரிய நாடு என்று நினைத்தார். இன்றைக்கு என்ன ஆகியிருக்கிறது? ஆபத்து வடக்கிலும் மேற்கிலும் மட்டுமல்ல தெற்கேயிருந்தும் பேரபாயம் சூழ்ந்திருக்கிறது.
இப்போது பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள், ஈழத்துக்கு நன்மை செய்வோம் என்று பேசுகிறார்களே?
கடந்தகாலங்களில் என்ன நடந்தது என்பதை வைத்துத் தான் நாம் முடிவெடுக்கமுடியும். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இலங்கைக்கு ஆயுதஉதவி செய்யவில்லை. அப்போது பாதுகாப்புஅமைச்சராக இருந்த ஜார்ஜ்பெர்ணாண்டஸ் அதில் உறுதியாக இருந்தார். விலைக்காவது ஆயுதங்கள் கொடுங்கள் என்று இலங்கை கேட்டபோதும், பக்கத்திலே பகைநாடுகள் எதுவும் இல்லாத நிலையில் உங்களுக்கு எதற்கு ஆயுதம்? நீங்கள் தமிழ்மக்களைக் கொல்லவே ஆயுதங்கள் கேட்கிறீர்கள் எனவே தரமுடியாது என்று உறுதிபடச் சொல்லிவிட்டார்கள். கடைசிவரை கொடுக்க வில்லை. அதுமட்டுமின்றி அந்த ஆறாண்டுகாலத்தில் இலங்கைக்கு வேறுஎந்த நாடும் ஆயுதஉதவி செய்யாதவாறும் கவனமாகப் பார்த்துக்கொண்டார்கள். வரப்போகிற காலத்திலும் இதே நடைமுறையை பாஜக பின்பற்ற வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்.
முள்ளிவாய்க்கால் போரின்போது நம்பவைத்து கழுத்தறுத்ததாகச் சொல்லப்படும் அமெரிக்கா இப்போது ஈழத்தமிழர்கள் பால் அக்கறை கொண்டு செயல்படுவதுபோலக் காட்டிக்கொள்வது பற்றி?
அப்போது நம்பவைத்தார்களா என்பது பற்றி எந்தத்தகவலும் இல்லை. இன்றைக்கு அமெரிக்கா மனிதஉரிமைகள் பற்றிப் பேசுகிறது,மேற்கு நாடுகள் பேசுகின்றன. ஆனால் இந்தியாவை மீறி இந்தச் சிக்கலில் தலையிட அந்நாடுகளுக்குத் தயக்கம் இருக்கிறது.காரணம், இந்தியா, அமெரிக்காவுக்கும் மேற்குநாடுகளுக்கும் மிகப்பெரிய சந்தை. ஈழத்தமிழர்களுக்காக இந்தச் சந்தையை இழக்க அவர்கள் விரும்பமாட்டார்கள். அமெரிக்காவுக்கு ஈழத்தமிழர்கள் மீதான அக்கறையைக் காட்டிலும் இந்துமாக்கடலில் சீனாவின் ஆதிக்கம் வந்துவிடக்கூடாது என்கிற கவலைதான் அதிகம். ஆகவேதான் இலங்கைக்கு ஒரு நிர்ப்பந்தம் கொடுத்து அதை சீனாவின் பிடியிலிருந்து விடுவித்துவிடலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது. ஆனால் அது ஒருபோதும் நடக்காது. சீனா இப்போது இலங்கையில் மிகஆழமாகக் காலூன்றிவிட்டது. அதை அப்புறப்படுத்த ராஜபக்சே நினைத்தாலும் முடியாது.
முதல்வர் ஜெயலலிதாவின் இப்போதைய ஆதரவு நிலைப்பாடு உண்மையானதா என்று கேட்கப்படுகிறதே?
கடந்த காலத்தில் நான், வைகோ உட்பட பல தோழர்களை விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறார்கள் என்று சொல்லி பொடா சட்டத்தில் கைது செய்தவர் ஜெயலலிதா. ஆனால் இன்றைக்கு பொதுக்கூட்டத்தில் அல்ல தமிழக சட்டமன்றத்தில் பொருளாதாரத் தடை, பொதுவாக்கெடுப்பு உள்பட அடிப்படையான தீர்மானங்கள் கொண்டுவந்து நிறைவேற்றுகிறார். 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தையொட்டி, இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டும் என்கிற தீர்மானத்தை நான் கொண்டுவந்தேன். அன்றைக்கு எம்ஜிஆர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றைக்கு தமிழகச் சட்டமன்றத்தில் அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. கடந்த காலத்தில் எதிராக இருந்தவர் இப்போது ஆதரிப்பது ஏன் என்கிற சந்தேகம் வருவது இயற்கை. ஆனால் சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்திலிருந்து இனிமேல் அவரே பின்வாங்கமுடியாது. மக்களின் மனஉணர்வுகளை உணர்ந்துதான் இந்தத் தீர்மானங்களை அவர் நிறைவேற்றியிருக்கிறார். இப்போது நான் அதை வரவேற்கவேண்டுமே தவிர என்னைச் சிறையிலடைத்தவர் என்று நினைக்கக்கூடாது. நம் இனத்தைப் பாதுகாக்க இந்தத் தீர்மானங்கள் உதவும் என்கிற அடிப்படையில் நாம் இதை ஆதரிக்கவேண்டும்.
தமிழகத்தில் இப்போது காங்கிரஸ் கட்சி தனித்துவிடப்பட்டிருக்கிறதே?
காங்கிரஸ் கட்சியை முற்றாகப் புறக்கணிக்கத் தமிழக மக்கள் முடிவுசெய்துவிட்டார்கள். அடுத்த தேர்தலில் ஒரு இடத்தில்கூட அது வெற்றிபெறும் வாய்ப்பில்லை. இதற்காகக்கூட தேர்தலுக்கு முன்பு இந்தியஅரசு ஏதாவது செய்துவிடுமா என்றால் அந்த நம்பிக்கை சிறிதும் இல்லை.
இவ்வளவுக்குப் பிறகும் தமிழ்தேசியஅரசியல் முகிழ்த்தெழாமைக்கு என்ன காரணம்?
தமிழ்த்தேசியஅரசியல் முன்னெப்போதையும்விட இப்போது வலிமையாகியிருக்கிறது. முன்பெல்லாம் தமிழ்த்தேசியம் என்கிற வார்த்தையையே உச்சரிக்க மாட்டார்கள். தமிழுணர்வு என்று மட்டும் சொல்வார்கள். ஆனால் இப்போது தமிழ்த்தேசியத்தைப் பேசாத கட்சிகளே கிடையாது. தமிழ்த்தேசியர்கள் ஒருங்கிணைந்து தேர்தலில் போட்டியிடும்போது அவர்கள் எந்தஅளவு வளர்ந்திருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
பாலச்சந்திரன் படம் வெளியான பிறகு பிரபாகரன் இருப்பு குறித்தும் சலனங்கள் உருவாகியுள்ளனவே?
சலனவாதிகள் எல்லாக்காலத்திலும் இருந்து கொண்டுதானிருப்பார்கள். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் திடமான நம்பிக்கையுடன் இருக்கிறோம். அவர் நலமாக இருக்கிறார், பத்திரமாக இருக்கிறார். அடுத்த கட்டப் போராட்டத்துக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆதாரப்பூர்வ செய்திகளின் அடிப்படையிலேயே உறுதியாக இதைச் சொல்கிறேன்.
மே, 2013.