சிறப்புக்கட்டுரைகள்

ஜிகர்தண்டா ஒரு பின்நவீனத்துவப் படம்

Staff Writer

கேள்வி:உங்களுக்கு நண்பர்களாக இருந்த பலர் பிற்காலத்தில் தீராத எதிரிகளாக மாறிவிட்டதாக உங்கள் பதிவுகளிலிருந்து அறிகிறேன்.யாரைத்தான் நம்புவதோ என்ற இந்தச் சூழலில் தற்போது உங்களைச் சுற்றியிருப்பவர்களை எப்படி அணுகுகிறீர்கள்? இவர்களில்  நம்மை பின்னாளில் போட்டுத் தாக்குவார்களோ என்ற பயம்/ஐயம் இருக்குமா?

கனவு திறவோன்,நெல்லை.

பதில்: நான் யாரையுமே எதிரியாக நினைப்பதில்லை.  வெறும் பேச்சுக்காக இதைச் சொல்லவில்லை.  ஆனால் பிரிந்து போன சில நண்பர்கள் என்னை எதிரியாக நினைக்கிறார்கள்.  அது என் பிரச்சினை அல்ல.  அவர்களுடைய தலைவலி அது.  ஆனால் எனக்கு நண்பர்கள் நிரந்தரமாக அமைவது இல்லை.  அதற்கு நான் தான் காரணமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.  என்னிடம் உள்ள ஏதோ ஒன்று அவர்களை என் மீது வெறுப்பு கொள்ளச் செய்கிறது.  அது என்ன என்று தெரிந்து விட்டால் அதை விட்டு விட நான் மனப்பூர்வமாக முயற்சி செய்வேன்.  சம்ஸ்கிருதத்தில் பரஸ்பர நீச பாவம் என்பார்கள்.  அதாவது, உன்னை விட நான் தாழ்த்தி என்று பொருள்.  ஆண்டாளின் எல்லே இளங்கிளியே பாசுரத்தில் இந்த நீச பாவத்தைப் பேசுகிறாள்.

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!

சில்லென்றழையேன் மின் நங்கைமீர்! போதருகின்றேன்!

வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்

வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக!

 ”நானே தானாயிடுக” என்றால் எல்லா தவறும் என்னுடையதே என்று ஏற்றுக் கொள்ளும் பாவம்.  அதனால் இப்போது உள்ள நண்பர்களிடம், “என்னிடம் ஏதாவது பிடிக்காவிட்டால் முன்கூட்டியே சொல்லி விடுங்கள்; அதைத் தவிர்த்துக் கொள்ள முயல்கிறேன்” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

கேள்வி: ஜிகர்தண்டாவில் Dirty Carnival படத்தின் ஒன்லைன் தான்  நீட்சி பெற்றிருக்கிறது.   இதை எப்படி எடுத்துக் கொள்வது? ஆரண்ய காண்டம் எவ்வித வணிக சமரசமும் இல்லாத படைப்பு.  ஜிகர்தண்டா அதைப் போல் இருக்கிறதா?

கார்த்திக். ஆ.

பதில்: Dirty Carnival மட்டும் அல்ல.  Rough Cut என்ற கொரிய படத்தின் தாக்கமும் ஜிகர்தண்டாவில் இருக்கிறது.   அந்த இரண்டு கொரிய படங்களின் கதையும் கூட கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான்.  வலைத்தளங்களில் ஜிகர்தண்டா கொரியப் படத்தின் காப்பி என்று சொல்லி பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள்.  நான் என்னுடைய வலைத்தளத்தில் ஜிகர்தண்டாவைப் பாராட்டி எழுதியதும் பல நலம்விரும்பிகள் எனக்கு ஆபாசக் கடிதம் எழுதினார்கள்.  மணிரத்னத்தின் நாயகன் உலகின் முக்கியமான நூறு படங்களில் ஒன்று என அமெரிக்காவின் டைம் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது.  அதே பட்டியலில் காட்ஃபாதர் படமும் உண்டு.  நாயகன் காட்ஃபாதர் படத்தின் தாக்கத்தில் உருவான படம்.  யாரும் காப்பி என்று சொல்லவில்லை.  மேலே குறிப்பிட்ட கொரியப் படங்களையும் ஜிகர்தண்டாவையும் பார்த்த போது எனக்கு நாயகன் - காட்ஃபாதர் விஷயம்தான் ஞாபகம் வந்தது.

மேலும், சினிமாவை Auteur film, ஜனரஞ்சக சினிமா என்று இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.   ஆரண்ய காண்டம் முதல் ரகம்.  அதாவது, கலைப் படைப்பு.  ஜிகர்தண்டா ஜனரஞ்சகப் படம்.  முதல் ரகத்துக்கான தகுதிகளை இரண்டாவதில் எதிர்பார்க்கக் கூடாது.  இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொண்டால்தான் ஜிகர்தண்டா போன்ற படங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும்.  தமிழில் பல கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கப்படும் பொழுதுபோக்குப் படங்கள் மிக மோசமாகவும் பத்து நிமிடம் கூட பார்க்க விடாமல் நம் பொறுமையை சோதிப்பதாகவும் இருக்கின்றன.  உதாரணம், பில்லா 2.  மாற்று சினிமா என்ற பெயரில் எடுக்கப்படும் படங்களோ நம் சுரணை உணர்வையே மழுங்கடிப்பவையாக இருக்கின்றன.  உ-ம்: தங்க மீன்கள், குக்கூ.  இந்த சூழ்நிலையில் எல்லா தரப்பு மக்களும் பார்க்கக் கூடிய தரமான பொழுதுபோக்குப் படம் என்றால் அது ஜிகர்தண்டா போன்ற படங்கள்தான்.  

ஜிகர்தண்டாவுக்கு எழுதிய மதிப்புரையில் என் நண்பர் ராஜேஷ் (கருந்தேள்) இதை Quentin Tarantino-வின் படங்களோடு ஒப்பிட்டு எழுதியிருந்தார்.  இந்தப் படத்தைப் பார்த்த போது நானும் அப்படியே நினைத்தேன்.  அந்த Genre-இல் தமிழில் வந்திருக்கும் முதல் படம் ஜிகர்தண்டா என்றே சொல்ல வேண்டும். அதேபோல் இதை ஒரு பின்நவீனத்துவ படம் என்றும் சொல்லலாம்.  அழுகை, சோகம், காதல், தியாகம், வீரம் போன்ற எல்லாவற்றையும் நகைச்சுவையாக மாற்றுவது பின்நவீனத்துவத்தின் ஒரு முக்கியமான அம்சம்.  இந்தப் படத்தில் அது நடந்திருக்கிறது.  காதல் கூட பரிகாசம் செய்யப்பட்டிருக்கிறது.  பொதுவாக, தமிழ் சினிமாவில் மதுரையைச் சார்ந்த “வீரர்களின்” வாழ்க்கை இதுவரை ஒருவித வழிபாட்டுத் தன்மையுடன் மட்டுமே காண்பிக்கப்பட்டு வந்தது.  இந்தப் படத்தில்தான் முதல்முதலாக அது காமெடியாக மாற்றப்பட்டுள்ளது.

ஜிகர்தண்டாவின் இசை பற்றி தனியாகவே ஒரு கட்டுரை எழுதலாம்.  இந்தியில் தேவ்.டி வந்த போது அந்தப் படத்தின் இசை அமைப்பாளரான அமீத் திர்வேதி இந்தி சினிமாவில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார் என்று எழுதினேன்.   அதே போன்றதொரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.  பீட்ஸா, சூது கவ்வும் போன்ற படங்களிலேயே அது தெரிந்தது.  ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், குக்கூவுக்கும் சந்தோஷ்தான் இசையமைப்பாளர்.  குக்கூ பாடல்களையும் அதன் பின்னணி இசையையும் மிக மோசமான செண்டிமெண்டல் குப்பை என்று சொல்லலாம்.  ஆனால் தவறு சந்தோஷிடம் இல்லை.  எந்த இயக்குநருக்கு எந்த இசை தெரியுமோ அதை சந்தோஷிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள். 

ஜிகர்தண்டாவில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னும் இரண்டு பேர், பாபி சிம்ஹா, சித்தார்த்.  தமிழ் சினிமாவில் இதுவரை ஒரு வில்லன் பாத்திரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதில்லை.  சிம்ஹாவிடம் ஒரு வில்லனுக்கு வேண்டிய தோற்றம் இல்லை, குரல் இல்லை. ஆனாலும் சிம்ஹாவின் நடிப்புத் திறமையைப் பார்த்து அசந்து விட்டேன்.  இரண்டே முக்கால் மணி நேரமும் சிம்ஹாவின் அட்டகாசம்தான்.  இயக்குநர் கார்த்திக், சிம்ஹா மீது வைத்த அபாரமான நம்பிக்கையை அவர் காப்பாற்றி விட்டார்.  சிம்ஹாவுக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது.  இந்த அளவுக்கு வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத பாத்திரத்தில் ஒரு சீனியர் நடிகரான சித்தார்த் நடித்திருப்பதற்காக அவருக்கும் நம் பாராட்டு.

நாயகன் வெளிவந்த போது மணிரத்னத்துக்குக் கிடைத்த பிரம்மாண்டமான வரவேற்பு எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது. ஜிகர்தண்டா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை நான் அப்படித்தான் எதிர்பார்க்கிறேன்.

(ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் www.andhimazhai.com-ல் வெளியாகும் சாரு பதில்கள்  பகுதியிலிருந்து. வாசகர்கள் q2charu@andhimazhai.com என்ற

முகவரிக்கு கேள்விகளை அனுப்பி வைக்கலாம்)

செப்டெம்பர், 2014.