மணவை முஸ்தபா 
சிறப்புக்கட்டுரைகள்

சொற்களோடு மல்லுக்கு நின்றவர்!

ப.திருமாவேலன்

எ த்தனையோ பழைய இதழ்களைத் தூக்கிப் போடும்போதும் அந்த இதழ்களை மட்டும் தூக்கிப் போட மனம் இல்லை.

அந்த இதழ்கள் முதன் முதலாக எனக்கு வரலாற்றை வாசிக்க வைத்தது. அறிவியலை அறிமுகம் செய்தது. புவியியலைப் புரிய
வைத்தது. சுற்றுச்சூழல் என்ற சொல்லை முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தது. பொன்மொழிகளை மனப்பாடம் செய்ய வைத்தது.இணையம், செல்போன்கள், இன்னும் சொன்னால் தொலைக்காட்சிகள் இல்லாத அந்தக் காலத்தில் உலகத்தைக் காட்டியது. கெட்டியான தாள் கொண்ட அந்த இதழ் இன்னமும் என்  பரணில் கட்டுக்களாக இருக்கிறது. அதுதான் யுனெஸ்கோ கூரியர்!

எங்களுக்கு அறிமுகம் ஆன முதல் கூரியர் அது. அநேகமாக கோவில்பட்டி நூலகத்தில் தான் அதனை முதன் முதலில் பார்த்தேன். உலகத் தத்துவவாதிகள் அனைவரும் அதில் வந்து போவார்கள். அந்த பெயரை மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டாலே உங்களை பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ளலாம். ஊமையன் கூட்டத்தில் உளறுவாயன் கெட்டிக்காரன். முதலில் புரியவில்லை. அது எல்லாம் புரியாமலேயே படித்த காலம் அது. அதன்பிறகு புரிந்ததாக நமக்கு நாமே பொய்யாக நம்பிக்கொண்ட காலத்தில் கூரியரில் இருந்து அந்நியமானேன். அதாவது அதைவிட நாம் ஞானம் பெற்றுவிடுகிறோம்.

சென்னைக்கு படிக்க வந்து, அது ஒருவழியாக 'முடிந்து', பத்திரிகைத் துறையில் வேலை பார்க்க ஆரம்பித்தபோதுதான் மீண்டும் கூரியர் மனதைக் குத்தியது. எனக்குச் சரியாக நினைவில் இல்லை.எதற்காக கூரியர் அலுவலகம் சென்றேன் என்று. முதல் பார்வையிலேயே அந்த வெள்ளை சஃபாரி மனிதர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டார். அவர் தான் யுனெஸ்கோ கூரியரின் ஆசிரியர் மணவை முஸ்தபா. நடமாடும் பல்கலைக் கழகம் கேள்விப்பட்டுள்ளோம். அவர் நடமாடும் உலகம். உள்ளுக்குள் ஒரு மனிதனுக்குள் எத்தனை சிப்புகள் இருக்குமோ தெரியாது. எதையும் பேசுவார். அவர் பேசாதது, அதுவரை கண்டுபிடிக்கப் படாததாக இருக்கும். தமிழகம் அவர் வாழ்ந்த காலத்தில் அவரை மதிக்கத் தவறியது என்பது தான் உண்மை. ஒரு தனிமனிதன், அறிவியல் மற்றும் தமிழ்ப் பல்கலைக் கழகமாகச் செயல்பட முடியும் என்றால் அதனை நிரூபித்து வாழ்ந்தவர் மணவை முஸ்தபா.

மணவை முஸ்தபா

தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குநராக 40 ஆண்டுகள் இருந்தார். யுனெஸ்கோ கூரியர் என்கின்ற பன்னாட்டு பன்மொழி இதழின் ஆசிரியராக 35 ஆண்டுகள் இருந்தார். அண்ணா பல்கலைக்கழக வளர்தமிழ் மன்ற 'களஞ்சியம்'அறிவியல் இதழில் ஆசிரியர் குழு உறுப்பினராகவும், தமிழ் வளர்ச்சித் துறை ஆலோசகராகவும் பணியாற்றினார். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் தமிழ் வளர்ச்சித்துறை ஆலோசகராகவும் இருந்தார்.  தமிழ்நாடு
அரசின்  அறிவியல் மன்றத் தலைவராக பொறுப்பு வகித்தார். 'அறிவியல் தமிழ் அறக்கட்டளையின்'' தலைவராகவும், தமிழ் மொழி மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினரகவும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சென்னை உறுப்பினராகவும் இருந்தார். இவ்வளவும் இருந்தாலும் அடக்கமாகவும் இருந்தார். எதுவும் தெரியாதவர் போல!

அவரது படைப்புகள் அனைத்தும் காலத்தால் அழிக்க முடியாதவை மட்டுமல்ல, காலத்தின் தேவைக்கேற்பத் தோன்றியவை. கணினி கலைச்
சொல் களஞ்சிய அகராதி, கணினி களஞ்சிய பேரகராதி, மருத்துவக் களஞ்சிய பேரகராதி, இளையர் அறிவியல் களஞ்சியம், அறிவியல் கலைச்சொல் களஞ்சியம், அறிவியல் தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி,சிறுவர் கலைக்களஞ்சியம் & இப்படி புத்தகங்களின் பெயரைப் பார்த்தாலே முஸ்தபா என்றால் யார் என்று தெரியும்.

எப்போது அவரது அறைக்குள் நுழைந்தாலும், தனக்கு முன்னால் புத்தகங்களை பரப்பி வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு அகராதிப் பணியை ஆழமாகச் செய்து கொண்டு இருப்பார். ''எப்போதுமே எழுதிக் கொண்டே இருக்கிறீர்களே? கை வலிக்காதா?'' என்று ஒரு முறை கேட்டேன். ''கைக்கு எல்லாம் அந்த வலி தெரியாது. எழுதும்போது சிந்தனை மட்டுமே செயல்படுகிறது. மற்றவை அனைத்தும் மறந்து போய்விடும்'' என்றார். ''மறந்து போய் விடுமா? அல்லது மரத்துப் போய் விடுமா?'' என்று கேட்டேன். அவரது தும்பைப்பூப் பற்களால் சிரித்தார்.

''சொற்களோடு மல்லுக்கு நிற்பது தான் என்னுடைய வாழ்க்கை. எல்லாம் தமிழில் வேண்டும் என்கிறோம், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வேண்டும் என்கிறோம். அப்படி மேடையில் சொல்லிக் கைத்தட்டல் வாங்கிவிட்டால் போதுமா? எங்கும் தமிழ் இருக்க என்ன செய்ய வேண்டும்? தமிழை அதற்குத் தகுதியுடையதாக ஆக்க வேண்டும். அதற்காகத்தான்
முயற்சித்து வருகிறேன்.

தமிழில் மருத்துவம் படிக்கலாம், தமிழில் பொறியியல் படிக்கலாம், தமிழில் அறிவியல் படிக்கலாம் என்ற குறையைப் போக்கியவர் என்ற சிறு பெயர் எனக்குக் கிடைத்தால் போதும்'' என்றார் ஒருமுறை. ''பெரிய பேரே கிடைக்கும்'' என்று நான் சொன்னேன். ''பெரிய பேர் எனக்குத் தேவையில்லை, தமிழுக்குக் கிடைத் தால் போதும்'' என்றார்.

''இப்படி எல்லாம் பணியாற்றி வருகிறீர்கள் என்பதை அறிவுலகம் அங்கீகரித்து விட்டதா?'' என்று ஒரு முறை கேட்டபோது, சிரித்தபடி சொன்னார்,
''அறிவுலகம் தெரிந்து கொண்டுவிட்டதா என்று கேளுங்கள், அதன்பிறகு அங்கீகரிக்கலாம்'' என்றார். ''தமிழ் அறிவுலகம் குறுங்குழு வாதத்தில் இருக்கிறது. அதனோடு பயணிக்காதவர்களை அறிஞர்களாக அது ஒப்புக் கொள்ளாது'' என்றார்.

அவரது அனுமதியுடன் பழைய யுனெஸ்கோ கூரியர் இதழ்களை அவரது அலுவலகத்தில் மொத்தமாகப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தபோது எனது பள்ளிக்காலம் துள்ளித்திரும்பியதாக மனவோட்டம் ஏற்பட்டது. சில பல அட்டைப் படங்கள் எனது ஞாபகப்படிக்கட்டுகளில் இருந்து லேசாகத் தென்படத் தொடங்கியது. அப்படிப் பிடித்த பல இதழ்களை மீண்டும் பழைய பணத்துக்கு ( ஒரு இதழ் ஐந்து ரூபாய் என்று இருபது ஆண்டுகளுக்கு முன்னால்!) வாங்கிக் கொண்டேன். கொஞ்சம் கெட்டியான தாளாக இருக்கும் கூரியர் இதழ். மொத்தமாக பத்து இதழை தூக்கினாலே கனமாக இருக்கும். பத்து ஆண்டு இதழ்களை வாங்கினேன். இவை தான் என்னிடம் இன்னமும் பாதுகாப்பாக இருக்கிறது. மணவையார் மறைவுக்குப் பிறகும் அழியாத கருவூலமாக அது இருக்கிறது.

அவர் கூரியர் இதழில் இருந்து ஓய்வுபெறும் நேரத்தில் அவருக்கு ஒரு ஆலோசனை சொன்னேன். அப்போது ஆனந்த விகடனுக்கு பிரிட்டானியா என்சைக்ளோபீடியாவை தமிழில் வெளியிடும் உரிமை கிடைத்திருந்தது. அந்த தமிழ்ப்பணிக்காக விகடனோடு இணைந்து பணியாற்றக் கேட்டுக் கொண்டேன். 'கூரியர் நினைவுகளோடு தனது பணிக்காலத்தை முடித்துக் கொள்ளலாம்' என்று தான் அவர் நினைத்தார். நான்கைந்து முறை அலுவலகத்துக்கும் இரண்டு மூன்று முறை அவரது வீட்டுக்கும் சென்று நான் அழைத்தேன். அவரை விடத் தகுந்தவர் யாரும் இருக்க முடியாது என்று நினைத்தது தான் காரணம். இறுதியில் ஒப்புக் கொண்டார். விகடனுக்கு அவர் வர ஆரம்பித்த தொடக்க காலத்தில் அந்த புத்தகத் தயாரிப்புக்கான முன்னேற்பாட்டுக் குழுவில் நான் இருந்ததால் அவரை தினமும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.தினமும் காலையில் ஒரு பத்து நிமிடமாவது அவரைச் சந்தித்து பேசிவிடுவேன். எத்தனையோ செய்திகள் அவ்வப்போது சொல்லி இருக்கிறார்.

''அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது ஒரு விவாத அரங்கம் நடந்தது. மாணவர்கள் ஒரு அணியாகவும் ஆசிரியர்கள் இன்னொரு அணியாகவும் மோதினோம். நான் மாணவர் அணியின் தலைவர். தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் ஆசிரியர் அணித் தலைவர். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் வளரவில்லை என்பது எங்களது அணி வாதிட்டது. இறுதியில் வாக்கெடுப்பில் எங்கள் அணி தான் வெற்றி பெற்றது. என்னுடைய வாதங்கள் தெ.பொ.மீக்கு பிடித்திருந்தது. எனது வாதங்களை வைத்து என்னை நச்சினார்க்கினியர் என்றும் சொன்னார். முஸ்தபா என்ற எனது பெயரை எப்போதும் மாற்றிக் கொள்ளக் கூடாது என்றும் அறிவுரை சொன்னார். ஒரு இஸ்லாமியர் தமிழுக்காக இவ்வளவு
சாதனை செய்துள்ளாரே என்று நினைக்கும் அளவுக்கு உனது சாதனைகள் இருக்க வேண்டும்'' என்று அறிவுரை சொன்னார். அவர் சொன்னதில் ஓரளவுக்கு சாதனை செய்துள்ளேன்' என்றபோது கண்கலங்கினார்.

''சேலம் அரசினர் கல்லூரியில் ஒரு கருத்தரங்கம் கேட்கச் சென்றிருந்தேன். அதில் பேசிய பேராசிரியர் ஒருவர், தமிழில் அறிவியல் கற்பிக்க முடியாது என்று பேசினார். இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. உடனே கோபமாக மேடைக்குச்
சென்று ஒலிபெருக்கியை வாங்கி,இப்படி எல்லாம் சொல்வதற்கு உங்களுக்கு யார் உரிமையைக் கொடுத்தது என்று கேட்டேன். நீங்கள் ஆங்கிலத்தில் சிந்திப்பவர்கள், நான் தமிழில் சிந்திப்பவன் என்று சொன்னேன். அதில் இருந்து தான் எனக்கு இந்த வேகம் வந்தது'' என்றார்.

இதைச் சொல்லிவிட்டு அவர் சொன்னது தான் மணவை முஸ்தபா என்றால் யார் என்பதைச் சொல்லும். அவருக்கு அப்போது அரசுப் பணி கிடைத்திருந்ததாம். அந்த ஆணையை அந்த மேடையில் கிழித்துப் போட்டுவிட்டு, 'அறிவியல் தமிழுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணிக்கப் போகிறேன்' என்று சொல்லிவிட்டு வந்தவர் அவர். கல்லூரிப் பேராசிரியராக ஆகி இருந்தால் எத்தனையோ பேர் வாழ்ந்ததும் தெரியாமல்
செத்ததும் தெரியாமல் போனது போல முஸ்தபாவும் போயிருப்பார். அந்த ஒரு கடிதத்தைக் கிழித்ததன் மூலமாக பல்லாயிரக்கணக்கான பக்கங்களை புதிதாக உருவாக்கி தமிழை இருபதாம் நூற்றாண்டுக்குப் புதுப்பித்த புலமையாளராக மாறிப்போனார். மரியாதைக்குரியவராகவும் ஆனார்.

யுனெஸ்கோ கூரியர் ஒவ்வொரு இதழுக்கும் புதிய புதிய தமிழ்க்கலைச் சொற்களை உருவாக்கியதாகச் சொன்னார். கூரியர் இதழ் உலகம் முழுவதும் நாற்பது மொழிகளில் வெளியானது. தமிழ் கூரியர் அதில் நான்காவது இடத்தைப் பெற்றது.மலேசிய அரசமைப்புச் சட்டத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் இவர் தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மொழிபெயர்ப்பை இவர் செய்ய முயற்சித்து அது இடையில் தடைப்பட்டது என்று நினைக்கிறேன்.

மொழியே இனத்தைக் காக்கும் என்பார். இந்தியைத் தடுக்க ஆங்கில அணையைக் கட்டி ஆங்கிலமே இன்று தவிர்க்க முடியாததாக ஆக்கப்பட்டுவிட்டது என்பார். தமிழ் அழியாது என்பார். அழிக்க வருவதை உண்டு செரிக்கும் என்பார். இப்படி எத்தனையோ குறிப்புகள் நினைவுகளில் நிழலாடுகிறது.

விகடனுக்கு அழைத்து வந்தேன் அல்லவா? அதில் அவரால் நீட்டிக்க முடியவில்லை. அந்தக் காரணங்களை நான் பேச விரும்பவில்லை. அவரும் இல்லை. நானும் விகடனில் இல்லை. ஆரம்ப கட்ட பிரிட்டானிகா பணியில் இருந்த நான் இடையில் அதில் இல்லை. நிருபர் பணியில் மும்முரமாகிவிட்டேன். புதிய குழு அதற்குள் இருந்தது. அவர் விடைபெறும் அன்று நான் ஆசிரியர் அசோகன் அறையில் இருந்தேன். அப்போது அவரிடம் சொல்லிவிட்டுச் செல்வதற்காக மணவை முஸ்தபா அவர்கள் வந்தார்கள். என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். எனக்கு நடந்த விவகாரங்கள் தெரியாது என்பதால் நானும் சிரித்துக்கொண்டேன். அவர் விடைபெற்றுச் சென்றபிறகு தான் இச்செய்தியை அறிந்தேன். அதன்பிறகு அவரைச் சந்திக்கவில்லை நான். ஏதோ ஒரு குற்றவுணர்ச்சி மட்டும் எனக்குள் இருந்தது. எனக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என்று நினைத்திருப்பாரோ என்று நான் நினைத்தேன். சில மாதங்களில் நானும் விகடனை விட்டு வெளியேறி, 'தினகரனில்' இருந்தபோது ஒருநாள் மணவை முஸ்தபா அவர்களே என்னை வந்து சந்தித்தார்கள். அப்போது பழைய விவகாரங்கள் குறித்து நானும் பேசிக்கொள்ளவில்லை. அவரும் என்னிடம் கேட்கவில்லை. அவர் கூரியர் காலம் போலவே பேசியதால் என்னை பழைய திருமாவாகவே நினைத்துப் பேசியது ஆறுதலாக இருந்தது. கள்ளமில்லாத அந்த வெள்ளைச் சிரிப்புக்கு அவர் தயாரித்த அத்தனை அகராதிகளில் எதிலாவது பொருள் சொல்லப்பட்டு இருக்குமா தெரியாது.

அன்புக்குப் பொருள் முஸ்தபா.

அறிவுக்குப் பொருள் முஸ்தபா.

டிசம்பர், 2019.