திரைப்படங்களில் பல நடிகர்கள் குறிப்பாக சந்தானம், விவேக் போன்ற நகைச்சுவை நடிகர்கள் அதிகமாக நகைச்சுவை என்ற பெயரில் உச்சரிக்கும் வார்த்தை ‘ அட்டு ஃபிகர்’.
இந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்று என்பதைத் தெரிந்துதான் பேசுகிறார்களா? அல்லது காமெடி என்ற பெயரில் கடந்து போகிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த ‘அட்டு ஃபிகர்’ என்கிற சொல்லாடல் ஒரு குறிப்பிட்ட மக்களை இழிவுபடுத்துவதாக அமைகிறது என்பது அந்தச் சினிமாக்காரர்களுக்குத் தெரியுமா?
‘ அட்டு ஃபிகர்’ என்ற வார்த்தை எங்கிருந்து வந்திருக்க முடியும்? Hut என்பதிலிருந்துதான் வந்திருக்கலாம். Hut என்றால் குடிசை என்று அர்த்தமாகும். குடிசைப்பகுதி எங்கிருக்கும்? சேரிகளிலும் குப்பங்களிலும்தான் இருக்கும். அப்படியானால் சேரிப்பகுதி பெண்களையும், குப்பத்துப் பெண்களையும் ‘அட்டு ஃபிகர்’ (Hut Figure ) என்று கிண்டலடிப்பது கேலி செய்வது எப்படிச் சரியாகும்? கருப்பாக இருக்கும் பெண்களையும் இதில் சேர்த்துக்கொள்கிறார்கள்.சினிமா மொழிக்குள் ஒரு சமூகத்தின் பண்பாட்டையே கேவலப்படுத்தும் போக்கு இந்த விஞ்ஞான யுகத்திலும் தொடர்வது வேதனையளிக்கிறது. சேரிப்பெண்களின் பண்பாடு, அவர்களது ‘பிகேவியர்’ புறத்தோற்றத்தில் தெரிந்துவிடுமா?
தருமபுரியில் இளவரசன் திவ்யாவைத் திருமணம் செய்ய வீட்டை விட்டுக் கிளம்பிய பிறகு நத்தம் சேரி தீக்கிரையாக்கப்பட்டது. குருவி சேர்த்து வைப்பது போல் சேர்த்துவைத்துக் கட்டிய வீடுகள் பெட்ரோல் குண்டுகளால் தீக்கிரையாக்கப்பட்டன. ஒப்பாரியும் ஓலமுமாய் அந்தச்சேரி மாறிப்போனது.
அந்தச் சேரியை அன்றைக்குத் தோழர்களோடு பார்வையிடச் சென்றபோது ஆத்திரத்தோடும் கண்ணீரோடும் முகம் காட்டியவர்கள் பெண்கள்தான். இந்தச் சேரியில்தான் பல போராட்டக்காரர்கள் வந்து தங்குவாங்க, போலீசு அவங்களத் தேடி வரும்போது நாங்கதான் அடைக்கலம் கொடுப்போம். போலீசு எங்கள எப்படியெல்லாமோ மிரட்டிப் பார்ப்பாங்க. நாங்க பயப்படாம அவங்களுக்கு உதவி செஞ்சோம் என நத்தம் பெண்கள் எல்லோரும் சொன்னார்கள்.
ஊத்தங்கரை பகுதியில் நக்சலைட்கள் என்று சொல்லக்கூடிய பலரை சுற்றி வளைத்து சுட்டுக்கொன்ற பிறகுதான் இந்தச் சேரி சாதியவாதிகளால் இப்படிச் சூறையாடப்பட்டது. ஒரு சமூக மாற்றத்திற்காக ஜனநாயகப் பாதையில் நம்பிக்கை இல்லாமல் புரட்சிகர நடவடிக்கையில் நம்பிக்கை கொண்ட இளைஞர்கள் சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து இன்றுவரை தொடரத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட புரட்சிகர இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடிய தாய்மடியாக, பதுங்கு குழிகளாக சேரிகளும் குப்பங்களும் இருப்பதை அனுபவ ரீதியாகப் பார்க்க முடியும்.
ஏறுதழுவுதல் உரிமைக்காக மெரினாவில் இளைஞர்கள் போராட்டம் நடத்திய போது காவல்துறை மாணவர்கள் மீதும் இளைஞர்கள் மீதும் வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது. அப்போது மாணவர்கள் ஓடி ஒளிந்த இடம் கடற்கரைக்கு பக்கத்திலிருக்கும் நொச்சிகுப்பம்தான். அவர்களைப் பாதுகாத்ததும் குப்பத்துப் பெண்கள்தான். இந்த ஒரே காரணத்துக்காகத்தான் நொச்சிக்குப்பம் காவல் துறையால் சூறையாடப்பட்டது. திருமணத்துக்காக சேர்த்து வைத்த பணம் நகைகள் யாவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டு போனதை நாம் ஊடகங்களில் காண முடிந்தது. நேரிலும் அந்தக் கண்ணீர் கதைகளைக் கேட்க முடிந்தது. சாதிய பயங்கரவாதமும் அரச பயங்கரவாதமும் சேரிகளையும் குப்பங்களையும் எப்படி சின்னாபின்னப்படுத்தின என்பதும் அவற்றையெல்லாம் அவர்கள் எப்படி எதிர்கொள்ளக் கற்றுகொண்டார்கள் என்பதையும் நாம் பார்க்க முடிந்தது. அதாவது தங்களை நம்பி வந்தவர்களையும் விரட்டாமல், ஆபத்து வரும் என்று தெரிந்தே அடைக்கலம் கொடுப்பதும், உணவு கொடுப்பதுதான் சேரி ‘பிகேவியர்’. மனித நேயத்தின் உச்சம்தான் சேரி ‘பிகேவியர்’. மாற்றத்துக்கான களம்தான் சேரி ‘பிகேவியர்’.
இப்படியான சேரிப்பண்பாட்டைப் புரிந்து கொள்ளாமல் திரை ஊடகங்களில் கொச்சைப்படுத்துவோர் ஒரு வாரகாலம் சேரிகளில் தங்கி அந்தச் சேரிப்பண்பாடு எத்தகையது?, எப்படி இன்னும் அங்கு கூட்டுக்குடித்தனங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதை கற்றுகொள்ளலாம். அப்போதுதான் சேரி ‘பிகேவியர்’ குறித்த பொதுப்புத்திக்கான கருத்தாக்கமும் மாறும்.
ஆகஸ்ட், 2017.