சென்னை மீது எனக்கு காதல் ஏற்படக் காரணமானது ஒரு புத்தகம். அது 'சென்னை மாநகர்'. எழுதியவர் மா.சு.சம்பந்தம். எல்லோரும் சொல்வார்கள், 'எங்க ஊரைப் போல வருமா?' என்று. ஏனோ எனக்கு சென்னை மீதான காதல் மாறவில்லை. ஒருவேளை முதல் முத்தம் போல், முதலில் அறிந்த ஊராக அது ஆனதால் இருக்கலாம்!விருப்பும் வெறுப்புமானது சரிவிகிதத்தில் இருந்தால் அதுதான் காதல். அப்படித்தான் சென்னையும். விருக்கவும் வெறுக்கவும் சரிவிகிதத்தில் இருப்பது. இந்தக் காதலை ஊட்டிய அந்த 'சென்னை மாநகர்' புத்தகத்தை கோவில்பட்டி மாவட்ட நூலகத்தில் படித்த அந்த பதினாறு வயதில் வாழ்க்கையை சென்னையில் கழிப்பேன் என்ற கனவுகள் இல்லை. அந்த புத்தகத் தகவல்கள் அப்படி ஒரு சுகமான சுமையை ஏற்றி இருக்கலாம்.
சென்னைக்கு வந்த முதல் ஆறு மாதங்கள் அந்த
சென்னை மாநகர் புத்தகத்தில் உள்ள இடங்களைத் தேடித்தான் என் கால்கள் நகர்ந்தன. பெரும்பாலும் நடைப்பயணங்களாக! இன்று அடுத்த தெருவில் ரொட்டி வாங்க ஸ்கூட்டி பெப் தேவைப்படுகிறது. ஆனால் அன்று சென்னையை அளக்கும் 'பெப்' இருந்தது. தேடிவந்ததை கண்டடையும் துடிப்பு. அப்படித்தான் ஒருநாள் மா.சு.சம்பந்தம் அவர்களையும் கண்டடைந்தேன். பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் ஒருநாள் மா.சு.ச. பேசினார். தலைப்பு நினைவில் இல்லை. எல்லாமே தகவல்கள். தகவல்கள். நம்மை சென்னைக்கு வர வைத்த சம்பந்தம் அல்லவா என்ற நேசத்தோடு அவரை நெருங்கிச் சொன்னேன். ''ஆமாம்! நான் சென்னை கவுன்சிலராக இருந்தபோது எழுதியது... சென்னை முழுக்க அலைந்து தகவல் களை திரட்டினேன்.. வார்டு கவுன்சிலராக மட்டுமல்ல சென்னைக்கே கவுன்சிலராக இருந்த மாதிரி தகவல்களை திரட்டினேன்' என்றார். அதன்பிறகு பெரியார் திடலில் நடக்கும் எல்லாக் கூட்டத்துக்கும் மறக்காமல் அந்த மனிதர் வந்து ஒரு ஓரத்தில் உட்கார்ந்து இருப்பார். மிகவும் குள்ளமாக, அழகியல் குறித்த கவலை இல்லாமல் அவராக அமைதியாய் வந்து அமைதியாய் செல்வார். யாராவது அவரிடம் போய் பேசினால், பேசுவார். குறை குடங்கள் சலம்பிக் கொண்டு இருக்குமே? அப்படி இல்லாமல், தளும்பாமல் இருப்பார். எனது சட்டக்கல்லூரி நண்பர்களுடன் போய் அவரிடம் பேச்சுக் கொடுத்து எதையாவது கேட்டுக் கொண்டு இருப்போம்.
சொல்லிக் கொண்டு இருப்பார். அதன்பிறகு
சட்டென்று அமைதியாகி விடுவார்.
சென்னையைப் பற்றி இன்று நிறையப் புத்தகங்கள் வந்துவிட்டது. அந்தக் காலத்தில் எழுத வேண்டும் என்று ஆசை அவருக்கு எப்படிப் பிறந்தது என்றால்..?
இன்றைக்கு சென்னை கடற்கரை இருக்கிறது அல்லவா? அந்த இடத்தில் இல்லை. அப்படியானால்..? அது ஊருக்குள் இருந்தது.
சட்டக்கல்லூரியைத் தாண்டி பிராட்வே வரைக்கும் இருந்தது. இன்றைய பிராட்வே சாலை தான் அந்தக் காலத்தில் கரை. கோட்டை இருக்கும் இடம் வரை கடல் இருந்தது. மேடான அந்த இடத்தில் கோட்டையை அமைத்துள்ளார்கள். மயிலாப்பூர் கோவில் வரைக்கும் கடல் இருந்துள்ளது. இப்படி இருந்த கடல் உள்வாங்கிச் செல்லச் செல்ல அந்தக் கரையில் குடியேறி குடியேறி கடலை இன்னும் உள்ளே தள்ளி இருக்கிறோம். இந்தக் கதையை அவரது தாத்தாவின் பாட்டி சொல்லி இருக்கிறார் சின்ன வயதில். மிகச் சிறுவயதில் ஒருவர் கேட்கும் கதையை உண்மையா என்று தேடிக் கிளம்பி இருக்கிறார் மா.சு.ச.
அவருக்குக் கிடைத்தவை எல்லாமே ஆங்கிலப் புத்தகங்கள். சென்னை மாநகராட்சி ஆவணங்களில் இருந்து தகவல்களை எடுக்கிறார். இவரது கண்ணுக்கு முன்னால் இருக்கும் சென்னையை அதற்குள் குழைத்துச் சேர்க்கிறார். இது தான் ரத்தமும் சதையுமான 'சென்னை மாநகர்' புத்தகமாக ஆகிறது. பாரிமுனையில் வந்து நான் இறங்கினேன்.அங்கே தான் சட்டக்கல்லூரி. புரசைவாக்கத்தில் சட்டக்கல்லூரி விடுதி. அதன்பிறகு மந்தைவெளி, அண்ணாநகர், திருவல்லிக்கேணி என்று சுற்றி இப்போது மடிப்பாக்கத்தில் மையம் கொண்டுள்ளேன். அலுவல் நிமித்தமாக கோடம்பாக்கம், வடபழனி,தியாகராயர் நகர், மயிலாப்பூர்,ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை என வலம் வந்தேன். இப்படி எங்கு சுற்றினாலும் எனக்கு தொடக்க கால வழிகாட்டி அவரது 'சென்னை மாநகர்'.
என்னைப் பொறுத்தவரை தகவல்களின் களஞ்சியம் அந்த நூல். எப்போது தகவல்களுக்கு முக்கியத்துவம் தருவோமோ அப்போது கொஞ்சம் நடை இறுக்கமாகும். நெகிழ்ச்சி இருக்காது. எல்லாத் தகவல்களையும் சொல்லி விட வேண்டும் என்று சினை தள்ளும் மாடாக உன்னித் தள்ளும் பேனா. ஆனால் சம்பந்தம், அனைத்து அழகையும் உள்ளே சதைக்குள் சேர்த்து குழந்தையாய் கொடுக்கத் தெரிந்தவர். 'படிக்க சுவாரஸ்யமாக இருக்கும் உங்களது நடை' என்றேன். வெட்கப்பட்டு சிரித்தார். 'எவ்வளவு வேண்டுமானாலும் குறிப்புகள் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அந்தக் குறிப்புகளை பார்த்து எழுதாதீர்கள். அதனை மனதில் உள்வாங்கிக் கொண்டு எழுதுங்கள்' என்று சொன்னார் ஒருமுறை.
அவரது சிறந்த பேச்சாளர்கள், அச்சுக்கலை, அச்சும்பதிப்பும், தமிழ்ப் பத்திரிகைகள் ஆகிய நூல்களைப் படித்தாலும் அந்த நடை இருக்கும். வேட்டியின் ஒரு புறத்தை தூக்கிக் கொண்டு வாத்து போல் அவர் நடப்பார். அவரது எழுத்து நடையும் அப்படித்தான் இருக்கும்.அவருக்குப் பிடித்த எழுத்தாளர் திரு.வி.க. அவரது எழுத்து நடையும் அப்படித்தான். தமிழுக்கு புதுநடை ஊட்டிய புலவன் திரு.வி.க.வின் தமிழ் நடையைப் பின்பற்றிய மா.சு.ச. அவர்கள் பெரியாரின் கொள்கை வழியினர்.
அவர் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தபோது அப்பள்ளிக்கு பேச பெரியார் வந்துள்ளார். அவர், மாணவ மாணவியருக்கு கையெழுத்துப் போட்டு புத்தகங்களைக் கொடுத்துள்ளார். முதல் எழுத்தில் இருந்து கடைசி எழுத்து வரைக்கும் கோர்த்து எழுதுவார் பெரியார். இது சிறுவன் சம்பந்தத்துக்கு ஆச்சர்யமாக இருந்துள்ளது. அதைப் போலவே அன்று முதல் இவரும் தனது கையெழுத்தைப் போட்டுள்ளார். பச்சையப்பன் கல்லூரியில் இவர் படிக்கும் போது பேராசிரியராக இருந்தவர் க.அன்பழகன். அவரது திருமண வரவேற்பு விழா நடந்துள்ளது. அதற்கு பெரியார் வந்துள்ளார். 'நீங்கள் எத்தனை பேர் தமிழ்த் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறீர்கள்?' என்று பெரியார் கேட்டிருக்கிறார். இவரது குடும்பம் பழுத்த வைதீகக் குடும்பம். வீட்டில் ஏற்கமாட்டார்கள் என்று தெரியும். ஆனாலும் உடனே இவரும் கைதூக்கி இருக்கிறார். பிற்காலத்தில் தமிழ்த் திருமணம் தான் செய்துள்ளார்.
''ஆரம்பத்தில் காங்கிரஸ்காரனாகத் தான் இருந்தேன். இந்தித் திணிப்பு ஏற்பட்டபோது திராவிடர் கழக ஈடுபாடு ஏற்பட்டது'' என்று சொன்னார். இவர் சொல்லும் 1948 காலகட்டத்தில் திரு.வி.க. அவர்களும் திராவிடர் கழக மேடைகளில் பங்கெடுத்து வந்தார். அவரோடு இவரும்
சேர்ந்துவிட்டார். அதன்பிறகு எப்போது காங்கிரசில் சேர்ந்தார் என்பது தெரியவில்லை. 1959 சென்னை மாநகராட்சித் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். அப்போது இவர் கொண்டு வந்த புகழ் பெற்ற தீர்மானம்தான், ஸ்ரீ, ஸ்ரீமதி என்பதை நீக்கிவிட்டு திரு, திருமதி என்ற அடைமொழிகளை பயன்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் ஆகும். தமிழைத் தள்ளி வைக்காத காங்கிரசுக்காரராகத் தான் இவர் இருந்தார். இந்த தீர்மானம் வந்தபோது பெரியார் ஆதரித்து எழுதினார். ஏனென்றால் அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஸ்ரீ போடுவதை நிறுத்துங்கள் என்று தலையங்கம் எழுதியவர் பெரியார். ஆனால் அன்றைய 'தினமணி' இதழ், 'ஸ்ரீயை பார்த்து கிலி' என்று எழுதியது.
மா.சு.சம்பந்தம் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதவர். தனது எண்ணங்களை எங்கும் எப்போதும் அஞ்சாமல்
சொல்லிக் கொண்டு இருந்தார். கட்சி அரசியலா, எழுத்தா என்றபோது எழுத்தின் பக்கம் வந்தவர். பேச்சு, எழுத்து, அச்சு, பத்திரிகைகள் குறித்து ஆய்வு செய்வதையே தனது வேலையாக மாற்றிக் கொண்டு எழுத்தில் மூழ்கினார். நானும் எனது பால்ய கால பழைய பேப்பர்களில் ஒன்றான நண்பன் விஜயவேலனும் ( அவன் தனது பெயரை சித்தானை என்று மாற்றிக் கொண்டதாக சரபோஜி மகால் வட்டாரங்களில்
சொல்கிறார்கள்!) ஒருநாள் மா.சு.சம்பந்தனின் லிங்கி செட்டி தெரு வீட்டுக்குச் சென்றோம். பிராட்வேயில் இறங்கி வீட்டைக் கண்டுபிடித்து போவதற்குள் யுவான் சுவாங் பயணம் போல இருந்தது. சம்பந்தம் தனக்குச் சம்பந்தமான எழுதுகோலும் தாளுமாக உட்கார்ந்து எதையோ எழுதிக் கொண்டு இருந்தார். அவரிடம் பேசுவதை விட, அவர் வைத்தும் புத்தகங்கள் என்னென்ன என்று பார்ப்பதில் தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. கிழிந்ததும் கரையானுமாக பெருங்குவியல் அது. எந்தப் புத்தகத்தைப் பார்த்தாலும் முக்கியமான புத்தகம், எதை எடுத்தாலும் கனமான புத்தகம், எதைத் தொட்டாலும் எங்கும் கிடைக்காத புத்தகம் என்று சொல்லத் தோன்றுவதாக இருந்தது. அதன் அட்டையைத் தொடும்போது அதன் உள்ளடக்கம் சொல்வார் சம்பந்தம்.
''புத்தகத்தின் அருமை தெரிஞ்சவங்களுக்குத் தான் அதன் பெருமை புரியும். மற்றவங்களுக்கு இது ஜடம். எழுத்துன்றதும் போதை. புத்தகம்ன்றது போதைக் கிடங்கு. மூழ்கினவன் மீண்டது இல்லை'' என்றார். ''ரொம்பவும் மூழ்கிடக்கூடாது'' என்றும் சொன்னார் என்று நினைக்கிறேன்.நானும் இதனை எல்லார்க்கும் சொல்லி வருகிறேன். ''இலக்கியம் கொன்றுவிடும்'' என்று புதுமைப்பித்தன் சொன்னது நினைவுக்கு வருகிறது. ''உண்மை இலக்கியம்'' என்று திருத்தம் போடலாம் என்று நினைக்கிறேன்.
ரோஜா முத்தையா நூலகத்துக்காக அவரது நூல்களைப் பெறச் சென்றதாக வேலவன் சொன்னான். அப்போது அவரைப் பற்றி விசாரித்தேன். அதன்பிறகு என்னுடைய வேலைகள், அவருடைய சந்திப்புகளைக் குறைத்துவிட்டன. பிழைப்பு எப்போதும் இரை தேடி வேறுவேறு பக்கத்துக்குத் துரத்தும். அப்போது நாம் பழைய கூண்டுகளை விடுத்து மாற்றுக் கூண்டுகளுக்குள் புகுந்து கொள்வோம். அப்போது பழைய கூண்டின் நினைவுகள் மட்டும் மனக்குகையில் மலடாகிக் கிடக்கும். அத்தகைய சூழ்நிலையில்
மின்சாரம் தாக்கியது போல இருந்தது அந்தச் செய்தி...
''மா.சு.சம்பந்தத்தை ஒருவாரமாக காணவில்லையாம்... சமீபத்துல எங்கயாவது பார்த்தியா?'' என்று கேட்டான் வேலவன். ''ஐயோ!' என்பது தான் என்னுடைய பதிலாக இருந்தது. வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. ''எங்காவது விழுந்து விட்டாரா? எங்கே போனாலும் நடந்தே போவாரே?'' என்றேன். ''அப்படினாலும் நான்கைந்து நாளில் தகவல் வந்துவிடுமே' என்றான். நாங்கள் இருவரும் அவரைப் பற்றி பேசிக் கொண்டோம்.
திடீரென்று சென்னைத் தெருக்களில் ஒரு
சுவரொட்டி...
''முதுபெரும் தமிழறிஞரைக் கண்டறிய உதவுங்கள்...தமிழுக்கு மாபெரும் தொண்டாற்றிய மா.சு.சம்பந்தம் அவர்கள் பற்றிய தகவல் அறிந்தால் உடனே தொடர்பு கொள்ளவும்'' என்று அறிவித்தது மே பதினேழு இயக்கம்.
சென்னை, சென்னை என்று இருந்தவர். அந்த சென்னைக்குள்ளேயே வள்ளலாரைப் போல திடீரென்று காணாமல் போய்விட்டார். அவரது தாத்தாவின் பாட்டி சொன்ன பழைய சென்னையில் சென்னபுரீஸ்வரரோடு... ராபர்கிளைவோடு... பின்னியோடு ... பேரியோடு... மன்றோவோடு... லிங்கிச் செட்டியோடு... தம்புச் செட்டியோடு... ஆர்மீரியரோடு...ஆர்மீயராய் எங்கள் சம்பந்தமும் வாழ்கிறார்.
''இன்றைக்கு சென்னை இவ்வளவு நெருக்கடியாக இருக்கு. ஆனா 1639ம் ஆண்டு மொத்தமே ஏழாயிரம் பேர் தான் இருந்தாங்க. இன்னைக்கு ஏழாயிரம் பேர் மூணு தெருவுல இருக்காங்க'' என்றும் -''தம்பு செட்டியும் லிங்கி செட்டியும் ஆங்கில வர்த்தகக் கழகத்தில் வேலை பார்த்தவர்கள், அவர்கள் பெயரால் தான் பாரிமுனையில் தெருக்கள் உள்ளது'' என்றும் & ''பின்னி மில் உரிமையாளர் பின்னியோட வீடு தான் கன்னிமரா ஹோட்டலாக இருக்கிறது'' என்றும் - சும்மா அவ்வப்போது அடித்துவிட்டு அடுத்தவர்களை ஆச்சர்யப்படுத்துகிறேன் என்றால் எனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?
'சம்பந்தம்' தான் உள்ளே இருந்து பேசுகிறார். காணாமல் போனது அவர் மட்டுமல்ல, அவர் காலத்துச் சென்னையும் தான்!
நவம்பர், 2019.