சிறப்புக்கட்டுரைகள்

சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கலாமா?

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு

நம் நாட்டில் சூதாட்டம் குறித்த தெளிவான சட்டம் இல்லை. உதாரணத்துக்கு சீட்டாட்டத்தை எடுத்துக்கொள்வோம். இதில் உயர் நீதிமன்றம் திறமையை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுகளை நடத்துவதைத் தடைசெய்ய முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது. இதை ஆதாரமாக வைத்து பல சீட்டாட்ட கிளப்புகள் இயங்கிவருகின்றன. அங்கு காசு வைத்து சூதாட முடியாது என்பதால் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. பின்னர் அதைக் காசாக்கிக் கொள்கிறார்கள். இதே போல் குதிரைப் பந்தயத்துக்குக்கும் பல குழப்பங்கள் இருந்தன. அரசே குதிரைப்பந்தயத்தை ஒழித்தபோது, உச்சநீதிமன்றம் அது திறமை சார்ந்த விளையாட்டு என்று சொல்லி அதற்கு அனுமதி அளித்தது. இன்னும் அண்ணா சாலையில் குதிரைப் பந்தயத்தை ஒழித்ததன் நினைவாக சிலை வைக்கப்பட்டிருப்பது வேடிக்கை! முன்பெல்லாம் தெருவுக்குத் தெரு சாலையோரங்களில் எல்லாம் குதிரைகளின் மீது பணம் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதுவும் தடைசெய்யப்பட்டுவிட்டது. முன்பு பருத்தி சூதாட்டம் நடக்கும். பெருமளவில் பணம் கட்டி சூதாடுவார்கள். லாட்டரி சீட்டும் சூதாட்டம் என்று நம் மாநில அரசு தடை செய்தது. ஆனால் பிற மாநில அரசுகள் லாட்டரி வைத்துள்ளன. அதை ஒழிக்க முடியவில்லை.

சூதாட்டம் என்பது நம் மகாபாரத காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருக்கிறது. பாஞ்சாலி சபதத்தில் தன்னை சூதில் தருமர் தோற்ற பின்னர் பாஞ்சாலி கேட்பாள்: என்னை முன்னே கூறி இழந்தாரா? தம்மையே முன்னம் இழந்து முடித்து என்னைத் தோற்றாரா? என்று. இது ஒரு முக்கியமான சட்ட வாதம்.

என்னிடம் சீட்டாட்ட கிளப்களில் போலீஸ் தலையிடுவதை எதிர்த்து ஒருமுறை வழக்கு வந்தது. வாதாடிய வழக்கறிஞர்களிடம் நான் சொன்னேன்: தேனியில் மட்டும் 23 கிளப்கள் இருக்கின்றன. விவசாயிகள் ஆண்டுமுழுவதும் உழைத்து தங்கள் பொருட்களை சந்தையில் விற்றுவிட்டு இந்த கிளப்களில் நுழைகிறார்கள். ஒரு மாலைக்குள் அனைத்தையும் இழந்து விட்டு சென்றுவிடுகிறார்கள். இதனால் தேனியில் தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளன. பணம் படைத்தவர்களுக்கான விளையாட்டில் ஏழைகள்தான் கடைசியில் பாதிக்கப்படுகிறார்கள். இதை அனுமதிக்க முடியாது என்றேன். இந்த கிளப்களை மாலை ஏழு மணிக்கு மேலும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று ஒரு வழக்கு மதுரையில் இருந்தபோது வந்தது. அதை நான் அனுமதிக்க மறுத்தபோது நான் பாரபட்சமாக செயல்படுவதாக ஒரு வழக்கறிஞர் கூறினார். அப்படியே இருக்கட்டும். அந்த கிளப் இருக்கும் பகுதிக்கு நான் ரெகுலராக வாக்கிங் செல்கிறேன். அங்குள்ள தாய்மார்கள் இதற்காக எனக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள். நான் பாரபட்சமாக நடந்ததாகவே இருக்கட்டும் என்று பதில் சொன்னேன்.

கிரிக்கெட்டில் சூதாட்டம் நடை பெறுவது இந்திய தண்டனைச் சட்டத்தில் ஏமாற்றுவதற்கு எதிரான சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் தண்டிக்கப்படும். நம்பி வரும் பார்வையாளர்களை அவர்கள் ஏமாற்றுகிறார்களே அந்த அடிப்படையில்.

என்னதான் தடைகள் போடப்பட்டாலும் சூதாட்டம் நடந்துவருவதால் அதை சட்டபூர்வமாக ஆக்கினால் என்ன என்று கேட்கிறார்கள். ஆனால் கடைசியில் இதனால் பாதிக்கப் படப்போவது ஏழைமக்கள் எனவே இதை நான் ஆதரிக்க மாட்டேன்.

(நமது செய்தியாளரிடம் கூறியதில் இருந்து)

ஜூன், 2013.