சிறப்புக்கட்டுரைகள்

சிறுகச் சிறுக ஏமாற்றி..

Staff Writer

இந்தியாவில் தங்க வியாபாரம் என்பது சிறுகச் சிறுக ஏமாற்றி பெரு பெருக வாழ் என்பதுதான். மக்களுக்கு தங்க நகை மீது மோகத்தை உண்டாக்கி அதன் விலையை உயர்த்தி அதில் லாபம் பார்ப்பது’ என அதிரடியாக ஆரம்பிக்கிறார் கன்ஸ்யூமர் அசோசியேசன்ஸ் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவர் தேசிகன். ஈஞ்சம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் அந்திமழைக்காக அவரைச் சந்தித்தோம். கல்லூரி விரிவுரையாளர் போன்ற மென்மையான தோற்றத்தில் உற்சாகமாகப் பேசுகிறார் 86 வயது தேசிகன். முதலில் இந்தியாவில் தங்க விற்பனையில் நடக்கும் தில்லுமுல்லுகளை வரிசைப்படுத்தினார்.

1.கேட்மியம் போன்ற ஏழு வகையான ஒயிட் மெட்டல்கள் தங்கத்துடன் கலக்கப்படுகின்றன. 2500 டிகிரி செல்சியசிக்தான் ஒயிட் மெட்டல் உருகும். ஆனால் தங்கம் 1200 - 1300 டிகிரி வெப்ப நிலையில் ஆவியாகிவிடும். ஒயிட் மெட்டலை நைசாக டால்கம் பௌடர் போல வைத்திருப்பார்கள். உருகிய நிலையிலுள்ள தங்கத்தில் அதை 5 முதல் 10 சதவீதம் தூவிவிடுவார்கள். இதனை கண்டுபிடிக்க முடியாது.மொத்த நகையையும் உருக்கினால் மட்டுமே இதனை கண்டுபிடிக்க முடியும்.

 நகைக் கடைக்காரருக்கு 100 ஜிமிக்கி தேவைப்பட்டால் அதை ஏஜண்டிடம் 91 டச்ல ( 916 அல்லது 22 கேரட்) இத்தனை வேணும்னு சொல்லி அதற்கான தங்கத்தைக் கணக்கிட்டு கொடுத்துவிடுவார். அந்த ஏஜண்ட் நகை செய்பவர்களுடன் தொடர்புடைய வியாபாரியுடம் 89 டச்ல இத்தனை வேணும்னு சொல்லுவார். அவர் நகை செய்பவர்களிடம் 87 டச்ல இத்தனை வேணும்பார். அவர் 85 டச்ல செய்து கொடுப்பார். நகைக் கடைக்காரர் இது எத்தனை காரட் தங்கத்தில் செய்யப்பட்டது என்று கண்டுபிடிக்கும் வசதி வைத்திருந்தால் அதைக் கண்டுபிடித்து அதற்கான தொகையை கொடுப்பார். இல்லையெனில் அதை 916( 22 காரட்) என்றே அவர் விற்பார். கடைசியில் ஏமாற்றப்படுவது மக்கள் தான். 20 காரட் தங்கத்தை 22 காரட் தங்கம் என்று ஏமாந்து வாங்குவார்கள்.

3.உதாரணமாக நகையின் எடை மெஷினில் 7.82 கிராம் தங்கம் என்று காட்டும்.இந்தப் பக்கம் அது தெரியாது. அவர்கள் அதை ரௌண்ட் செய்வதற்காக இன்னொரு பட்டனை வைத்திருப்பார்கள்.அதை அமுக்கியவுடன் 8.00 கிராம் ஆகிவிடும்.180 மிலி கிராம் இல்லாத தங்கத்திற்கு பணம் கொடுக்கிறோம்.

4.பெரும்பாலும் எந்த நகைக் கடையிலும் கல் பதித்த நகைகளுக்கு தனியாக கணக்கு காட்டுவதில்லை. விலை மிகக் குறைவான கற்களைப் பதித்து அதனையும் தங்க கணக்கில் பணம் வசூலிப்பார்கள்.

5.தற்போது வருடத்திற்கு இந்தியாவின் தங்கத்தேவை 900 டன்.இந்தியாவில் மொத்தம் 324 ஹால்மார்க் செண்டர்களே உள்ளது.500 தங்க நகைகளை மட்டுமே ஒரு நாளைக்கு ஒரு செண்டரில் பரிசோதிக்க முடியும். அதுவும் சாம்பிள் (Random Test)  மட்டுமே. மொத்தமாக ஒரு  நாளில் 162000 நகைகளை இந்தியாவில் பரிசோதிக்கலாம். சராசரியாக ஒரு நகை 10 கிராம் என்று வைத்துக் கொண்டால் கூட வருடத்திற்கு 591 டன் மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும்.மிச்சமுள்ள 309 டன் நகைகள்?

6. நகைகளில் சேதாரம் என்பது முழுக்கவே பொய்.பழைய நகைகளில் சேதாரம் என்றால் கொஞ்சமாவது ஒத்துக் கொள்ளலாம். ஆனால் புது நகைகளில் சேதாரம் எப்படி வரும்? நகை செய்பவர்கள் கையில் ஒரு மெழுகு உருண்டையை வைத்திருப்பார்கள். ஒவ்வொரு முறையும் சுற்றியுள்ள சின்ன துகளையும் அதில் உருட்டி எடுத்து விடுவார்கள். அதனால் மைக்ரோ கிராம் அளவு தங்கம் கூட செய்யும் போது சேதாரமாகாது.

நகை வியாபாரத்தை எப்படி முறைப்படுத்தலாம்?

முதலில் ஒயிட் மெட்டல் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும்.அடுத்து ஒயிட் மெட்டல் பயன்படுத்துபவர்-களுக்கு கடுமையான தண்டணை கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்.மேலும் அரசாங்கமே தங்க கட்டிகளை பரிசோதித்து முத்திரையுடன் வழங்கி கணக்கு காட்ட சொன்னால் முறைகேடு குறையும்.

இன்னொரு யோசனையும் உள்ளது. மக்கள் தங்களிடமுள்ள அதிகப்படியான தங்கத்தை ஹால்மார்க் முத்திரை வாங்கி அதற்கான சர்ட்டிபிகேட்டும் புகைப்படத்தையும் பெற்றுக்கொண்டு மத்திய வங்கியில் செலுத்த வேண்டும். அரசாங்கம் அதற்காக ஒரு குறிப்பிட்ட வட்டித்தொகையை தரலாம். முதல் ஆறு மாதத்திற்கு தங்கம் எங்கிருந்து வாங்கப்பட்டது என்கிற ஆதாரத்தை கேட்க மாட்டோம் என்று சொன்னால் கருப்பு பணமும் தங்கமாக மாறி கஜானாவில் சேர்ந்துவிடும்.தற்போது உலகில் அரசு தரப்பிலுள்ள தங்க கையிருப்பில் 11 வது இடத்திலுள்ள இந்தியா மேலே வந்துவிடும். இதனால் நம் எக்கானமி பலப்படும்.

மேமே, 2015.