சிறப்புக்கட்டுரைகள்

சினிமாவை அழிப்பது சக தயாரிப்பாளர்கள்தான்

சரோ லாமா

இயக்குநர் லோகிததாஸ், தங்கர் பச்சான், பாலுமகேந்திரா எனப் பல  முக்கியமான இயக்குநர்களிடம் வேலை பார்த்தவர் மீரா கதிரவன். இவரது முதல்படம் தோல்பாவைக் கூத்தை மையமாகக் கொண்ட  அவள் பெயர் தமிழரசி.

 நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்திருக்கும் இரண்டாவது படம் விழித்திரு. பரவலான பாராட்டுகளையும் விமர்சனங்களையும் ஒருங்கே பெற்றது.  ஆனால் படம் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கல்களால் திரையரங்குகளில் சில நாட்கள் மட்டுமே ஓடியது. அவருடன் பேசினோம்.

“ அவள் பெயர் தமிழரசி. இதுதான் நான் உதவி இயக்குநராக இருந்து இயக்குநராகி எடுத்த முதல் படம்.  தோல்பாவைக்கூத்து என்கிற தொன்மையான கலையை மையமாக வைத்து  எழுதிய திரைக்கதையை என்னால் நினைத்த மாதிரி எடுக்க முடியவில்லை.  முதலில் அவள் பெயர் தமிழரசி படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. படத்தின் விஷுவல் பேட்டர்னை பார்க்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்தில் சொன்னதால் நான் முதன்முதலாக பாபி சிம்ஹாவை வைத்து  டீஸர் ஷூட் செய்தேன்.  ஆனால் தயாரிப்பாளர் சீனிவாசன், மனாலியில் ஒரு டிரெக்கிங் விபத்தில் இறந்ததால் படத்தயாரிப்பு கைவிடப்பட்டது. பிறகு  இயக்குநர் ஷங்கரிடம் கதை சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் தயாரிப்பதும் தள்ளிப்போனது. அதன் பிறகுதான் மோசர்பேர் நிறுவனம் படத்தைத் தயாரிக்க முன்வந்தது.

கதை இளையராஜாவுக்கு பிடித்துப்போனதால் அவரைப்பார்த்து கதை சொல்ல மும்பைக்கு செல்ல வேண்டி எனக்கு ஃப்ளைட் டிக்கெட் எல்லாம் புக் செய்து ஏர்போர்ட்டுக்கு போகும் வழியில் சந்திப்பு கேன்சல் ஆகிவிட்டதாக எனக்கு தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து போன் வந்தது. இளையராஜா இசை இல்லை என்றவுடனே அந்தப்படத்தின் தோல்வி தொடங்கிவிட்டது என நான் நினைத்துக்கொண்டேன். அதன் பிறகு எனக்கு சொல்லப்பட்டவர்களில் நான் தேர்ந்தெடுத்தது விஜய் ஆண்டனியை. அவர் அப்போது ஒரு சில படங்கள்தான் செய்திருந்தார். அவர் எனக்கு முதலில் போட்டுக் காட்டிய டியூன்தான் ’நாக்கமுக்க நாக்கமுக்க.’ ஆனால் படத்திற்கு குத்துப்பாட்டு எந்த விதத்திலும் பொருந்தாது என்பதால் நான் ’நாக்கமுக்கவை’ வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். பிறகு கஞ்சா கருப்புவின் காமெடி எல்லாம் வணிகரீதியான காரணங்களுக்காகச் சேர்க்கப்பட்டவை.

அவள் பெயர் தமிழரசிக்காக எனக்கு  சொல்லப்பட்ட தலைப்புகள் ‘ ரைட்டா தப்பா?, மீண்ட சொர்க்கம், உறவைக் காத்த கிளி. ஆனால் என்னுடைய தலைப்பு - அவள் பெயர் தமிழரசி, வயது 26 மாநிறம். பின்னர் தயாரிப்பு நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க நாயகியின் வயதை பதினெட்டாகக் குறைத்தேன். பின்னர் படத்தின் பெயர் அவள் பெயர் தமிழரசி என்று மட்டும் கடைசியில் முடிவாயிற்று. இப்படித்தான் தலைப்பு வைப்பதில் தொடங்கி, இசை அமைப்பாளர் தேர்வு, நகைச்சுவை திணிப்பு என தயாரிப்பு நிறுவனத்தின் அழுத்தங்கள், வணிகச் சூழல் மற்றும் இன்னபிற சொல்லமுடியாத காரணங்களால் படத்தை நினைத்த மாதிரி என்னால் எடுக்க முடியவில்லை.  படமும் மூன்று வருடங்கள் கழித்து வெளியானது. படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

அந்தப் படத்திற்கான தோல்விகளை நான் யோசித்த போது எனக்கு கிடைத்த பதில் பட உருவாக்கத்தில் எனக்கு சுதந்திரம் இல்லை. எல்லா முதல் பட இயக்குநர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிதான். ஆனாலும் படம் தோல்வியடையும்போது அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே அடுத்த படத்தை நானே தயாரிப்பது என்ற முடிவுக்கு வந்தேன்.

எனது இரண்டாவது படமான விழித்திருவை 2012ஆம் ஆண்டு தொடங்கினேன். எனது முதல் படம் தந்த மனச் சோர்வுதான் என்னை தயாரிப்பாளராக்கியது. ஒரு இயக்குநரே தயாரிப்பாளராக இருப்பதின் சிக்கலை நடைமுறையில் உணர்ந்தேன். பகல் முழுக்க முதலீட்டைத் திரட்டுவதற்காக பெரும்பாடுபட்டாலும் இரவில் நான் நினைத்த மாதிரி என்னால் படத்தை எடுக்க முடிந்தது.   2014ஆம் ஆண்டு படம் முடிந்தது. பலமுறை போராடி 2015ல் சென்சாரும் கிடைத்துவிட்டது. ஆனாலும் படம்  வெளியாவதில் உள்ள வினியோகச் சிக்கல்தான் முதன்மையான காரணம். படத்தை வாங்கி வெளியிட யாரும் முன்வரவில்லை. 

இடையில் உருவான மாநகரம் என்ற படத்தின் கதை என்னுடைய படத்தின் கதையை ஒத்திருப்பதால் அதன் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோரிடம் பேசினேன். என் தரப்பு நியாயங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மாநகரம் படத்திற்கு ஒன்றரை வருடங்கள் முன்பே தொடங்கப்பட்ட என் படம் விநியோகச் சிக்கல் களால் வெளியாகவில்லை. என் படத்தை வாங்கியவர் ஒன்றரை வருடத்திற்குப் பின்னர் படத்தை வெளியிட என்னிடம் பணம் இல்லை என்றார். தயாரிப்பாளர் சங்கத்தில் கலைப்புலி தாணுவிடம் முறையிட்டதற்கு அவர் விட்டுக்கொடுத்துப் போகச் சொன்னார்.

அவர்கள் ஒரு தயாரிப்பாளராக என்னுடைய பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளவேயில்லை. பல முறை தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டும் பலன் இல்லை. பின்னர் ஒருவழியாக மார்ச் 2017ல் வெளியிடுவதாக ஒப்பந்தம் போட்டார்கள். ஆனால் மார்ச்சிலும் படம் வெளியாகவில்லை. அதன் பிறகு பாகுபலி தயாரிப்பாளர்கள் என் படத்தை வெளியிட முன்வந்தும் படத்தை வாங்கியவர் அதற்கு ஏனோ உடன்படவில்லை. நாங்களே ரிலீஸ் செய்து கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு படத்தைப்பார்த்த தனஞ்செயன் சார் படம்  எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்லி படத்தை வாங்கி வெளியிட முன்வந்தார். ஆனால் படத்தை வாங்கியவர் எதற்கும் தயாரில்லை. கடைசியில் அக்டோபர் 6ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு செய்தித்தாளில் விளம்பரங்கள் வெளிவந்தன.

ஆனால் அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தியேட்டர் உரிமையாளர்கள் புதுப்படங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்தார்கள். மீண்டும்  பிரச்சினை. நான் கிட்டத்தட்ட நொறுங்கிப்போனேன். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம் முறையிட்ட போது அவர் எங்களது பிரச்சினைகளை கேட்டுப் புரிந்து கொண்டார். நவம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் என முடிவானது. ஆனால் படத்தை வாங்கியவர் ரிலீசுக்கு முந்தைய நாள் இரவில் மீண்டும் படத்தை ரிலீஸ் செய்ய தன்னிடம் பணம் இல்லை என்றார். ஒரே இரவில் 90 லட்சம் கடன் வாங்கித்தான் இந்தப் படத்தை வெளியிட்டேன். ஆனால் வெளியான அன்று நல்ல மழை. நல்ல விளம்பரங்கள் தரவில்லை. வெள்ளி மாலை படம் ரிலீஸானாலும் தொலைக்காட்சி விளம்பரங்கள், செய்தித்தாள் விளம்பரங்கள் எல்லாமும் நிறுத்தப்பட்டன. கன மழையால் போஸ்டர் ஒட்ட முடியவில்லை.

ஒரு வழியாக படம் ரிரீஸ் ஆனது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முன்பு இருந்த இறுக்கம் இப்போது இல்லைதான். ஆனால் இது போதாது.  நான் ஒரு பகுத்தறிவாளன். முஸ்லிம் சமூகத்தில் பிறந்தாலும் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். வீட்டில் காஃபீர் என்றுதான் என்னை அழைப்பார்கள். சோதிடம் மாதிரியான மூட நம்பிக்கை எனக்குக் கிடையாது. ஆனால் எனது இரண்டு படங்கள் வெளியாவதற்குள் நான்பட்ட பாடுகளை எல்லாம் பார்த்தபிறகு சோதிடம் எல்லாம் உண்மைதானோ என்கிற எண்ணம் எனக்குள் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. மிகுந்த மனக் கசப்பில்தான் இதை நான் சொல்கிறேன்.

எங்கோ இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் படம் வெளியானவுடன் இணையத்தில் வெளியிட்டு சினிமாவை அழிக்கிறார்கள் என்று சொல்கிறோம். தியேட்டர்காரர்கள் வசூல் பணத்தைத் திருப்பித் தருவதில்லை என்று குறை சொல்கிறோம். ஆனால் சினிமாவை அழிப்பது சக தயாரிப்பாளர்கள்தான் என்பது என் விஷயத்தில் நிருபணமாகியுள்ளது. என் பணம் எனக்குத் திரும்பி வருமா என்றெல்லாம் தெரியாது. ஆனால் எனக்கு நிகழ்ந்தது மாதிரி இன்னோரு இயக்குநரோ அல்லது தயாரிப்பாளரோ பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் இதையெல்லாம் பொது வெளியில் பேச வேண்டியிருக்கிறது.

எனது இரண்டு படத்தை எடுத்து முடிப்பதற்குள் பத்து வருடங்கள் கடந்து போய்விட்டன. ஒரு இயக்குநர் பத்து வருடத்தில் நான்கைந்து படங்களாவது எடுத்திருப்பார். அப்படி நான் யோசிக்கும் போது உருவானதுதான் நான்கு வெவ்வேறு கதைகளை ஏன் ஒரே படத்தில் இணைக்கக் கூடாது என்று. அப்படி நினைத்து எழுதியதுதான் விழித்திரு படத்தின் திரைக்கதை. இளவரசன், ராம்குமார் என அரசு அதிகார கூட்டால் வீழ்த்தப்பட்ட எளிய மனிதர்களின் கதைதான் விழித்திரு. ஆணவக் கொலைகளும் அரச பயங்கரவாதமும்தான் நம் சம காலத்தின் இரண்டு முக்கியமான பிரச்சினைகள். ஒரு சமூக அக்கறையுள்ள இயக்குநராக தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட இரண்டு முக்கியமான சம்பவங்களைத்தான் நான் படமாக்கினேன். கலை சமூகத்தின் பிரதி என்றால் கலைஞன் சமூகத்தின் பிரதிநிதி என்றுதான் அர்த்தம் இல்லையா?

டிசம்பர், 2017.