சிறப்புக்கட்டுரைகள்

சிக்மகளூருக்கு போ!

கதிர்

செய்தியாளனாக பயணம் தொடங்கியது தினமலரில். அப்போது திருநெல்வேலி, திருச்சி பதிப்புகள் மட்டுமே. முதலாவதில் சேர்ந்தேன். துறை வல்லுனர்களை பேட்டி காண்பது, உள்ளூர் பிரச்னைகளை தொகுத்து எழுதி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது, ஆங்கில கட்டுரைகளை மொழி மாற்றுவது, இப்படியாக நாட்கள் ஓடும்போது திடீரென வெளியூர் அசைன்மென்ட்.

“சிக்மகளூருக்கு போ. இடைத்தேர்தல் நடக்கிறது. இந்திரா காந்தி நிற்கிறார். அவர் கூடவே போ. கண்ணில் படுவதையும் காதில் விழுவதையும் அப்படியே எழுது. அவ்வளவுதான்” என்றார் டாக்டர் வெங்கடபதி. நிறுவனர் ராமசுப்பய்யரின் மூத்த மகன். ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் அண்ணன். அசாத்தியமான வேலையையும் அட, இவ்வளவுதானா என்று நினைக்க வைக்கும் அவர் பேச்சு.

சின்ன மகளின் ஊர் என்பது கன்னடத்தில் அப்படி. சிறிய ஊர்தான்.  லாட்ஜில் இரண்டு ரூம் எடுத்திருந்தார்கள். ஒன்று தினமலர் ஆபீஸ். இன்னொன்று நாங்கள் தங்க. நாங்கள் என்பது முத்துகிருஷ்ணன் என்ற சீனியர் சப் எடிட்டர், டெலிபிரின்டர் ஆபரேட்டர் நாகராஜன், பெங்களூர் நிருபர் வெங்கடேஷ் சேர்த்து.

இந்திராவுக்கு நான், எதிர்த்து நின்ற வீரேந்திர பாட்டீலுக்கு வெங்கடேஷ், ஏனைய வேட்பாளர்கள், நிகழ்ச்சிகள், சைட்லைட்ஸ், ரவுண்ட்அப் முத்துகிருஷ்ணன் என்று பணி பங்கீடு செய்திருந்தார் வெங்கடபதி.

அன்று மாலை மங்களூர் வந்திறங்கும் இந்திரா, கார் மூலம் கர்க்கல என்ற ஊர் வந்து 5 மணிக்கு நடக்கும் ஊர்வல முடிவில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என்று காங்கிரஸ் ஆபீசில் கிடைத்த பிரசார அட்டவணை தெரிவித்தது. உடனே புறப்பட்டேன். நாலரை மணி நேர பயணம்.

மலைகள் சூழ்ந்த மிகப்பெரிய மாவட்டம் சிக்மகளூர். 7,000 சதுர கி.மீ. பரப்பு. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரம். மலை மலையாக ஏறி இறங்கி சென்றது பஸ். நடந்து செல்பவர்கள் சீக்கிரம் இலக்கை அடையலாம்.  காணும் இடமெல்லாம் காபி, தேயிலை தோட்டங்கள். ஊடு பயிர் மாதிரி வரிசையாக ஆரஞ்சு, எலுமிச்சை மரங்கள். வீசும் காற்று அத்தனை சுகந்தங்களையும் சுமந்து வந்தது. பச்சைக்கு நடுவே ஆங்காங்கு சிறிய வெள்ளை கட்டிடங்கள். எஸ்டேட் ஓனர்களின் தங்குமிடங்கள்.

கர்க்கல அடைந்தபோது இருட்டி விட்டது. கூட்டம் தொடங்கி இருந்தது. இந்திராவுக்காக எம்.பி பதவியை ராஜினாமா செய்த டி.பி.சந்திர கவுடா பேசிக் கொண்டிருந்தார். அடுத்து கர்நாடக முதல்வர் தேவராஜ் அர்ஸ்.

“மத்தியில் ஆளும் ஜனதா கட்சி அரசால் பழி வாங்கப்படும் நேருவின் மகள் அடைக்கலம் தேடி வந்திருக்கிறார்; அவருக்கு வாக்களித்து பாதுகாக்க வேண்டியது நமது கடமை” என்று அவர் சொன்னதை ஆமோதித்து கூட்டமே தலையாட்டியது.

“உங்கள் சின்ன மகளாக வந்திருக்கிறேன், ஆதரவு தாருங்கள்” என்று இந்திரா கைகூப்பியபோது கூட்டமும் தன்னிச்சையாக கைகுவித்தது.

பிரமாண்ட பொதுக்கூட்டம் என்றார்கள். சில ஆயிரம் தாண்டாது கூட்டம். சாதாரண மேடை. மின் விளக்குகள் 20 தான் இருக்கும். அலங்கார மேடைகளையும் கூட்ட ஏற்பாடுகளையும் பார்த்த நமக்கு அந்த எளிமை ரொம்ப புதுமை.

தமிழ்நாட்டில் இருந்து ஆளனுப்பியது 2 நாளிதழ்கள். ஒன்று தினமலர். மற்றது காங்கிரஸ் பத்திரிகையான நவசக்தி. ‘நயினா’ கிருஷ்ணமூர்த்தி என்ற அற்புதமான சீனியர் செய்தியாளர் நவசக்திக்காக வந்திருந்தார்.

கோடு போட்டு சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று. எல்லா பத்திரிகைகளும் காங்கிரசுக்கு எதிராக நின்றன. தலைமை என்று இந்தியன் எக்ஸ்பிரஸை சொல்லலாம். அதிபர் ராம்நாத் கோயங்கா அருகில் ஒரு நண்பரின் எஸ்டேட்டில் முகாமிட்டிருந்தார். பெங்களூரிலும் மற்ற ஊர்களிலும் இருந்து ஒரு டஜன் எக்ஸ்பிரஸ் நிருபர்கள் போட்டோகிராபர்கள் திரண்டிருந்தனர். எக்ஸ்பிரஸ் வாங்கினால்  கன்னடபிரபா, தினமணி இலவசமாக கொடுத்தனர். முழுக்க இந்திராவுக்கு எதிரான அல்லது பாட்டீலை ஆதரித்து செய்திகள் விளம்பரங்கள்.

சென்னையில் இருந்து தினமணி அங்கு வர 2 நாள் பிடிக்கும். ஆனாலும் வரவழைத்து இலவச வினியோகம் செய்தார்கள். காரணம், தமிழ் மட்டும் தெரிந்த வாக்காளர்கள் கணிசமாக இருந்தனர். லால்பகதூர் சாஸ்திரி - சிரிமாவோ பண்டாரநாயக ஒப்பந்தப்படி இலங்கையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளர்களில் அதிகமானவர்கள் இங்குள்ள எஸ்டேட்களில் குடியமர்த்தப் பட்டிருந்தனர். இந்தியாவில் முதலில் காபி பயிரிடப்பட்டது இங்கேதான் என்பது கொசுறு.

இந்திராவின் பிரச்சாரத்தை மட்டும் கவர் செய்வது 22 வயதில் சிரமமாக தெரியவில்லை. காலை 7.30க்கு பிரேக்ஃபாஸ்ட். அவர் முடிப்பதற்குள் போய்விடுவேன். தங்குமிட உரிமையாளர்கள் ஓரிருவர் உடனிருப்பார்கள். அமைச்சர் குண்டுராவ் அல்லது பிரச்சார பொறுப்பாளர் எப்.எம்.கான் இருப்பார். சில சேர்கள் காலியாக இருக்கும். வணக்கம் சொன்னதும் புன்னகையுடன் தலையசைத்து இன்று என்ன செய்தி என்று கேட்பார். முந்திரி பருப்புகளை நம் தட்டில் வைப்பார். தொட  தயங்கினால் அலைச்சலுக்கு நல்லது என்பார் அம்மா போலவே.

சரியாக 8 மணிக்கு புறப்பாடு. இங்குதான் தங்கியிருக்கிறார் என்று  தெரிந்து வரும் மக்கள் இருபுறமும் நிற்பார்கள். ஏழைகள். பெரும்பாலும் தொழிலாளர்கள். நடந்து சென்று அவர்களை நெருங்கி பேசுவார். சீருடையுடன் தென்படும் குழந்தைகளிடம் பெயர், வகுப்பு விசாரிப்பார். வேலையை நிறுத்திவிட்டு தொழிலாளர்கள் ஓடி வருவதை பார்த்தால் காத்திருப்பார். காரில் எப்போதும் இருக்கும் பழங்களில் சிலவற்றை எடுத்துக் கொடுப்பார்.

ஆள் நடமாட்டம் இல்லாத இடம் வந்ததும் காரில் அமர்வார். மலைப்பாதையில் கார் மெதுவாக செல்லும். முன்னால் ஒரு கார், ஒரு ஜீப், பின்னால் இரண்டு அல்லது மூன்று கார்கள். வாடகைக்கு கார் கிடைக்காததால் குண்டுராவ் புண்ணியத்தில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு காரில் தொற்றிக் கொள்வேன். மற்ற பத்திரிகையாளர்கள் முதலிலேயே பேசி வைத்துக் கொண்டு, ஏதோ ஒரு பத்திரிகைக்கு சொந்தமான கடைசி காரில் வருவார்கள். அதில் எப்போதுமே இடம் இருக்காது. இருந்தாலும் கிடைக்காது.

சிறு கிராமங்களில் ஒலிபெருக்கி, நோட்டீஸ் மூலம் விளம்பரம் செய்திருப்பார்கள். ஒரு கூட்டம் காத்திருக்கும். காரில் இருந்து இறங்கி ஓப்பன் ஜீப்பில் ஏறி இந்திரா பேசுவார். “உங்கள் வீட்டு பெண்ணாக என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள். ஏழைகளுக்கான திட்டங்கள் இன்னும் வைத்திருக்கிறேன். நிறைவேற்ற வாய்ப்பு தாருங்கள்” என்பார். வாசித்து உருப்போட்ட கன்னடம்தான் என்றாலும் கேட்டவர்களின் மகிழ்ச்சி முகங்களில் வழியும்.

ஒரு நாளைக்கு 10 முதல் 13 சாலையோர கூட்டங்கள். 5 மணிக்கு பொதுக்கூட்டம். நடுவில் கட்சிக்காரர் வீட்டில் 1 மணிக்கு லஞ்ச், ஒரு மணி நேர ஓய்வு. இதுதான் ரொட்டீன். நகர்ப்புறமாக இருந்தால் ஏழரை வரை சாலையோர கூட்டம், 8 மணிக்கு பொதுக்கூட்டம்.

இந்திரா தனது வழக்கப்படி எதிர்க்கட்சி தலைவர்கள் பெயரை உச்சரிக்கவே இல்லை. தனிநபர் தாக்குதல் கூடாது என்று குண்டுராவும் கண்டிப்பாக இருந்தார். ஆனால், எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் இந்திரா சார்ந்ததாக அமைந்தது.

“எமர்ஜென்சியில் லட்சக்கணக்கான இந்தியர்களின் உயிரை குடித்த ரத்தக் காட்டேரி, அப்பாவி கர்நாடக மக்களின் ரத்தம் குடிக்க வந்திருக்கிறது. அந்த பிசாசை ஓட ஓட விரட்டி அடியுங்கள்” என்று மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் முழங்கினார். கைகளில் மனித எலும்பு, கழுத்தில் மண்டை ஓடு மாலை, டிராகுலா பற்கள், வாயிலிருந்து வழியும்  சிவப்பு ரத்தம்.. இந்த தோற்றத்தில் வெறியாட்டம் போடும் காட்டேரியின் சித்திரங்கள் சுவர் முழுவதும் வரையப்பட்டன. பிட் நோட்டீஸ் தொடங்கி பத்திரிகை விளம்பரம் வரையில் இந்திராவின் முகம் கோரமாக வரையப்பட்டு ஆவேசத்தை தூண்டும் வாசகங்கள் இடம் பெற்றன.

கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்திராவுக்கு எதிராக இருந்தாலும் தோழர்கள் பெரிய அளவில் பிரச்சாரம் செய்யவில்லை. தொழிற்சங்கங்கள் தரப்பில் எஸ்டேட் தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம் நடந்தது. அதில் உற்சாகம் இல்லை. தமிழ், மலையாளம் பேசும் தோட்ட தொழிலாளர்களின் ஆதரவு இந்திராவுக்கே என தெரிந்தது காரணம்.

அதிமுக சார்பில் இந்திராவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய முதல்வர் எம்ஜிஆர் ஒரு குழுவை அனுப்பி இருந்தார். நாஞ்சில் மனோகரன் தலைமையில் மூன்று அமைச்சர்களும் சில எம்.எல்.ஏ.க்களும் வந்தார்கள். தமிழர்கள் பகுதி என அறியப்பட்ட இடங்களில் அவர்களுக்கு ஒதுக்கி கொடுத்தது மாவட்ட காங்கிரஸ். அல்டூர் அல்லது முடிகிரேயில் முதல் கூட்டம் என நினைக்கிறேன்.  அதிமுக, காங்கிரஸ் கொடிகள் கட்டிய கார் வந்தது. அமைச்சர்கள் இறங்கினார்கள். நானும் கிருஷ்ணமூர்த்தியும் இந்து நாளிதழின் மாவட்ட நிருபரும் மட்டுமே செய்தியாளர்கள். மலைச்சரிவு புல் தரையில் 2 பெஞ்ச், ஒரு டேபிள், 3 நாற்காலிகள், ஒரு பெட்ரோமாக்ஸ் லைட் இருந்தது. மேடை மாதிரி தெரிவதற்காக பெஞ்சுக்கு பின்னால் ஒரு ஓலை தடுப்பு.

நாஞ்சிலாருக்கு நயினா வணக்கம் சொன்னார். தமிழ்நாட்டில் இருந்து செய்தியாளர்களா, அமைச்சர் களுக்கு சந்தோஷம். “மீட்டிங் என்றார்கள், எங்கே தெரியுமா?” என அமைச்சர் விசாரித்தார். “இதுதான் மீட்டிங் ஸ்பாட், இதுதான் ஸ்டேஜ், இவங்கதான் ஆடியன்ஸ்” என்று உற்சாகமாக காட்டினார் நயினா.

அமைச்சர்கள் முகத்தில் ஈயாடவில்லை. “எல்லோரும் மறக்காமல் கை சின்னத்தில் ஓட்டு போடுங்கள்” என்று ஆடியன்சாக இருந்த 30, 40 பேரிடம் சொல்லிவிட்டு அதிமுக குழு 5 நிமிடத்தில் எஸ்கேப்.

செல்போனும் டெலிவிஷனும் இல்லாத யுகம். மொழி தெரியாத மாநிலம்.  அங்கே உலக மீடியாவே உற்று நோக்கும் இடைத்தேர்தல். அடுத்த 13 மாதங்களில் மீண்டும் பிரதமராக இருந்த தலைவருடன் இரண்டு வார  பழக்கம். ப்ளிட்ஸ் கரஞ்சியா போன்ற பிரபலமான எடிட்டர்களோடு அரசியல் அலசல். இன்று வெவ்வேறு ஊடகங்களில் உயர் பொறுப்பு வகிக்கும் பலருடன் ஓடியாடி பணி... எந்த கோணத்தில் பார்த்தாலும் இன்னொரு முறை கிடைக்க முடியாத அனுபவம்.

எதிர்மறை பிரசாரம் பொதுமக்களிடம் எடுபடாது என்பது சிக்மகளூர் தேர்தலில் கற்ற முதல் பாடம்.ஓட்டுப்பதிவு நாளில் ஒவ்வொரு பூத்தாக சென்று வாசலில் நின்று வெளியே வந்தவர்களிடம் கேட்டேன். அனைத்து தரப்பும் அறிய பிரித்து பிரித்து கேட்டு பதில்களை தொகுத்தேன். காலை முதல் மாலை வரை நகரங்களிலும், கிராமங்களிலுமாக 16 சாவடிகளில் சேகரிக்க முடிந்தது. சில கணக்குகள் போட்டுப்பார்த்து செய்தி அனுப்பினேன்.

“முக்கால் லட்சம் முதல் ஒரு லட்சம் வரையிலான ஓட்டு வித்தியாசத்தில் இந்திரா வெற்றி பெறுவார்” என்ற எனது கணக்கை நீக்கிவிட்டனர். “இந்திரா வெற்றி உறுதி?” என்று தலைப்பு கொடுத்தார்கள். அதுவே ரிஸ்க் என்றார்கள். ஏனென்றால், இந்திராவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகக்கூட வேறெந்த பத்திரிகையும் சொல்லவில்லை. 77,000+ ஓட்டு வித்யாசத்தில் இந்திரா வெற்றி என தகவல் வந்த இரவில் எனக்கு நியாஸ் ஓட்டலில் டின்னர் கொடுத்தார் வெங்கடபதி.

12 ஆண்டுக்கு பிறகு அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தபோது, ‘ப்ரி போல், எக்சிட் போல்’ என்று தேர்தல் கருத்து கணிப்புகள் குறித்து நிபுணர்கள் பாடம் நடத்தினார்கள். அந்த பெயரே தெரிவதற்கு முன்னால் சிக்மகளூரில் நான் பயன்படுத்திய சில உத்திகள் அதில் இடம் பெற்றிருந்ததை பார்க்க பெருமையாக இருந்தது.

பிப்ரவரி, 2016.