ஏற்கனவே ஒன்றரை கிமீ தூரம் சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு நீர் வரும்படியான அமைப்பு தான் இருக்கிறது. மேலும் ஒரு சுரங்கப்பாதை என்பது முடியாத ஒரு விஷயம். 152 அடி நீர் தேக்கத்தில் 104 அடிக்கு மேல் தான் நீர் எடுக்க முடியும் என்பதால் 48 அடி நீரை நாம் எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்தது. அது சிக்கலாகி 136 அடியாக குறைந்தது. இப்போது 34 அடி நீரை பய ன்படுத்த முடியும். அவர் கூறுவதுபோல் 50 அடியில் ஒரு சுரங்கப் பாதை அமைக்க முடியுமா? முதலில் 50 அடி வரை தோண்டுவது முடியாத காரியம்.
முல்லைப் பெரியாறு அணை புலிகள் காப்பக சரணாலயப் பகுதியில் வருகிறது. நாம் மராமத்து வேலை செய்ய எடுத்துச் செல்லும் பொருட்களுக்கே அங்குள்ளவர்கள் தடை விதிக்கின்றனர். இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய விடுவார்களா? பிறகு ஒன்றரை கிமீ சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். அந்த இடத்தை வெடிக்கச் செய்து உருவாக்க முடியுமா? நிச்சயமாக கூடாது. செய்யவும் முடியாது. தற்போது யுனெஸ்கோ மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை புராதனச் சின்னமாக அறிவித்துள்ளது. இதனை இந்திய அரசு ஒப்புக்கொண்டு விட்டால் இனி அங்கே ஒரு மரம் வெட்டுவதாய் இருந்தாலும் யுனெஸ்கோவை கேட்காமல் செய்ய முடியாது. உச்சநீதிமன்றமே அணை உறுதியாக உள்ளது என்று தெரிவித்துவிட்ட பிறகு ஏன் மற்ற திட்டங்களை ஆராய வேண்டும்?
ஆர்விஎஸ் விஜயகுமார், தமிழக பொதுப்பணித் துறை முன்னாள் தலைமைப் பொறியாளர்.
சி.பி.ராய் இந்தத் திட்டத்தைப் பற்றி யோசிக்கும் போது என்னிடம் வந்தார். அவர் சொல்லும் திட்டம் பாதுகாப்பிற்காக பென்னிகுயிக் போட்ட துதான். 1895ல் பென்னிகுயிக், ஒரு வேளை எதிர் காலத்தில் வெள்ளம் அதிகரித்து அணை உடையாமல் இருக்க கிழக்கு பக்கமாக ஒரு சுரங்கப்பாதையை 50 முதல் 70 அடிக்குள் அமைத்து நீரை வெளியேற்றலாம் என்று கூறியுள்ளார். நான் அவரிடம் மற்றொரு திட்டத்தையும் சொன்னேன். அதாவது முல்லைப் பெரியாறு அணை இடுக்கி அணையை அடைய 48 கி.மீ. தூரம் கடக்க வேண்டும். வழிநெடுகில் ஒவ்வொரு கிமீக்கும் ஒரு தடுப்பணை அமைத்து நீரை தேக்கிக் கொள்ளலாம். மின்சாரமும் எடுக்கலாம் என்றும் கூறினேன். இது முன்னாள் நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் பொறியாளருமான கே.எல்.ராவ் கொடுத்ததுதான். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவரது புதிய திட்டம் நமக்கு தேவையில்லாதது. ஏனெனில் 2000ல் மத்திய நீர்ப்பாசன ஆணையம் 145 அடியாக நீரைத் தேக்கிக்கொள்ளலாம் என்று கூறியது. பிறகு உச்சநீதிமன்றம் 142 அடியாக தேக்கி கொள்ளலாம் என்று கூறிவிட்டது. இப்போது ஆனந்த் குழுவின் இறுதி அறிக்கையும் 142 அடி தேக்கலாம்; அணை பலமாக உள்ளது என்று தெரிவித்துவிட்டது. பிறகு ஏன் நாம் நீர் தேக்கி வைப்பதைக் குறைக்க வேண்டும்?
கே.எம். அப்பாஸ், ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவர்
தண்ணீர் போதாது!
50 அடியில் சுரங்கப்பாதை அமைப்பது என்பது சாத்தியமில்லாதது. 104 அடிக்கு மேல் வரும் நீரை நேரடியாக சுரங்கப் பாதையின் வழியாக அனுப்பும் போது முதலில் போர்பே அணைக்கு வருகிறது. இங்கு தான் நமது பவர் ஹவுஸ் உள்ளது. இப்போது 50 அடி என்று வரும்போது தேவையான நீர் இல்லாமல் நம்மால் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது.
அடுத்து கடைசிப் பகுதி வரை நீர் சென்றும் சேராது. இப்போதுள்ள 136 அடி தேக்க நிலையிலேயே கடைசி பகுதி வரை நீர் கிடைக்காமல் நமது விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். 50 அடி என்றால் யாருக்கும் நீர் கிடைக்காது. பிறகு அவர் கூறுவது போல் 100 அடியில் நீர் இருத்தினால் அவர்களுக்கும் போதுமான நீர் கிடைக்காது. நாம் அதிகளவு நீர் உறிஞ்சும் போது ஏரி என்பது மாறி இரண்டே ஆண்டுகளில் தண்ணீர் வற்றிவிடும். படகு சவாரி, சுற்றுலா என எல்லா பாதிப்புகளும் ஏற்படும். வனத்துறையும் சும்மா இருக்காது. அப்போது பிரச்சனை இதைவிட பெரிதாகும். பிறகு மீண்டும் யாராவது ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பார். வழக்கு நீண்டு கொண்டே செல்லுமே தவிர பிரச்சனை தீராது. நான் 36 ஆண்டுகள் அங்கே பணியாற்றி இருக்கிறேன். அப்போது நான் சந்தித்த மூன்று பூகம்பங்களில் அணைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதில்லை. அதனால் அணை உடையும் அச்சுறுத்தல் என்பதெல்லாம் வீண் வதந்தி. எனவே இந்த நீர் குறைப்பு, புதிய சுரங்கப்பாதை என்பதெல்லாம் திசை திருப்பும் செயல். இதனால் பின்விளைவுகளே அதிகம்.
- பி.ஆர்.சுந்தரராஜன்
முல்லைப் பெரியாறு அணையின் முன்னாள் அணைப்பொறியாளர்
***
ஏன் காவிரிக்கரைக்குச் செல்ல வேண்டும்?
காவிரி ஜீவநதி. ஆண்டுமுழுவதும் தண்ணீர்வரும். மூன்று மாதங்களுக்கு மட்டும் தண்ணீர் வரத்து சற்றுக் குறைவாக இருக்கும். நதியில் மணல் திட்டுக்கள் தென்படும். ஆடிப்பெருக்கென்றால் சின்னவயதில் எங்களுக்கு கும்மாளம்தான். வெள்ளம் பொங்கிவரும். காவிரிக்கரையில் இருக்கும் வெங்கூர் எங்கள் கிராமம். சிறுவர்கள் எல்லாம் சேர்ந்து தேர் செய்து இழுத்துவருவோம்.
அதில் விரும்பும் கடவுளின் படத்தை வைத்துக்கொள்வோம். பூக்களால் அலங்கரித்த அந்த தேரை காவிரியில் விட்டு, குளித்துவிட்டு வீடு திரும்புவோம்.இளம்பெண்களும் திருமணமான பெண்களும் பல சடங்குகளை காவிரிக்கரையில் செய்வார்கள். அது ஒரு கொண்டாட்ட தினம். வாலிப வயதில் ரயில் பாலத்தில் டயர்களுடன் ஏறி டயரை ஆற்றுக்குள் எ றிந்துவிட்டு நாங்களும் குதிப்போம். அந்த அளவுக்கு தண்ணீரின் போக்கு இருக்கும். இப்போ அங்கே மணல்தான் இருக்கு.
ஒரு கட்டத்தில் காவிரியில் தண்ணீர் குறைய ஆரம்பித்தது. ஓடையாக தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. பின் அதுவும் போய், ஊற்று நீரை எடுத்து ஆடிப்பெருக்கு நடக்கும். இப்போது அதுவும் இல்லை. போர் தண்ணீர்தான். வறண்டுபோன காவிரிக்கரைக்கு ஆடிப்பெருக்கு கொண்டாட ஏன் போகவேண்டும் என்று இப்போது வீட்டில் சும்மா இருக்கிறோம்’’
காவிரியில் தண்ணீர் இல்லை என்பதால்இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு அன்று சடங்குகள் செய்ய வருபவர்கள் வசதிக்காக திருச்சி மாநகராட்சி குழாய்களை ஏற்பாடு செய்திருந்தது. ஏற்கெனவே இந்த ஆண்டு முதல்முறையாக திருச்சி மெரினா என்று ஆற்று மணலில் மேடை போட்டு கடைகள் போட்டு காசு பார்த்து திருப்திப் பட்டுக் கொண்டதிருச்சிவாசிகளை எண்ணி காவிரித் தாய் கண்ணீர் வடித்திருப்பாள்.
– புலவர் முருகேசன், காவிரி வேளாண் கழக அமைப்பாளர்.