சிறப்புக்கட்டுரைகள்

சாதனைக்கும் வயசுக்கும் சம்பந்தமில்லை

ஜா.தீபா

உண்மையிலேயே மூச்சு விடக்கூட நேரமில்லாமல் இருக்கிறார் தம்பி ராமையா. ‘யானைப் பாகன், சிரிப்பு அப்பா, மீனவன், போலீஸ், ஆசிரியர் என இயல்பான பாத்திரங்களின் தன்மையோடு பொருந்திப்  போவதினால் இவருடைய வளர்ச்சி கவனிக்கத்தக்கதாய் மாறியிருக்கிறது. வாழ்வியல் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொண்டவற்றையே அதிகமும் நம்புகிறார். தத்துவங்களிலும், ஆன்மிகத்திலும் ஆழமான தேடல் இருப்பது இவருடன் பேசும்போது தெரிகிறது. ‘சந்தோசத்தைப் பகிர்ந்து கொண்டால் இரட்டிப்பாகும். அதனால் அதை மட்டுமே பேசுவோம்’ என்று பேச்சைத் தொடங்கியவர் தனது பயணத்தை இப்போதுதான் வேகப்படுத்தியிருப்பதாக பகிர்ந்துகொள்கிறார். அவரிடம் பேசுவதற்கு நமக்கு நேரம் ஒதுக்கியதிலேயே அந்த வேகம் தெரிகிறது. ஒரு படப்பிடிப்பின் இடைவேளைகளில், தனது வாழ்வியல் அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டதிலிருந்து...

“காதல் திருமணமும், சினிமாவும் ஒன்று தான் தெரியுமா? டாக்டராக வேண்டும், இஞ்சினியராக வேண்டும் என்று சொல்லி குழந்தைகளை வளர்ப்பார்கள். யாராவது, ‘மகனே நீ பெரிய நடிகனாயிரனும், காமெடில பிச்சி உதறனும்..’ இப்படி சொல்வார்களா? அதையும் மீறி சினிமாவுக்கு வந்தோம் என்றால் காதல் திருமணம் செய்துகொள்பவர்களின் நிலைமை தான். கஷ்டப்படுகிறோம் என்று தெரிந்தால், ‘நீயாத் தேடிக்கிட்ட வாழ்க்கை தானே, நாங்களா போகச் சொன்னோம். விட்டுட்டு வா நாங்க பாத்துக்கறோம்’ என்பார்கள். அதனால் காதலோ, சினிமாவோ உள்ளார்ந்த நேசமும் பிடிப்பும் இருந்தால் தான் அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வாழ்க்கை எனக்குத் துளித் துளியாய் நிறைய அனுபவங்களைக் கற்றுக் கொடுத்திருக்கின்றது. இளமையில் வறுமை எவ்வளவு கொடுமையானது என்பதை நிறைய பேர் கேள்விப்பட்டிருப்பார்கள். அதை முழுதாக அனுபவித்தவன் நான். எனது சொந்த ஊர் புதுக்கோட்டை. அங்கே என் தாத்தா மணியக்காரராக இருந்தவர். என் அப்பாவோடு சேர்த்து பனிரெண்டு பேர் அவருக்கு பிள்ளைகள். எல்லாக் குடும்பத்தையும் போல் தாத்தாவுக்குப் பிறகு சொத்துத் தகராறு வந்தது. துரதிருஷ்டமான ஒரு நேரத்தில் குடும்ப சண்டையின் போது அப்பா ஜெயிலுக்குப் போகும்படியான சம்பவம் நடந்துவிட்டது. அப்போது நான் ஆறாவது படித்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பிறகு மூன்று தம்பிகள். ஒரு தங்கை. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தம்பியையும் தூக்கிக்கொண்டு, நானே மனு எழுதிப் போட்டு அப்பாவைப் பார்க்க திருச்சி மத்திய சிறைக்குப் போவேன். அப்பாவைப் பார்த்துவிட்டு ஊருக்குப் போக பஸ்ஸ்டாண்டில் காத்திருக்கிற நேரம் இன்னும் கொடுமையானது.  என் தம்பிகள் ஆசையாக, ‘பலூன் வாங்கித் தா, மிட்டாய் வாங்கித் தா’ என்று கேட்பார்கள். நானே சின்ன பையன், அந்த நேரம் பெரிய மனுஷன் போல அவர்களை சமாதானப்படுத்துவேன். இப்படித்தான் சின்ன வயசிலேயே வாழ்க்கை மீதான பக்குவம் வந்துவிட்டதென நினைக்கிறேன்.

நான் எம்ஜியாரின் தீவிர ரசிகன். யாரோ எம்ஜியாரைப் பார்த்து தவறாக எதோ சொன்னார்கள் என்று சின்ன வயதில் அவர்கள் மேல் கல்லை விட்டு எறிந்திருக்கிறேன். பின்னாட்களில் நான் ஏன் எம்ஜிஆர் மேல் இவ்வளவு தீவிர அன்பு வைத்திருக்கிறேன் என யோசித்துப் பார்த்தேன். அவரும் சிறுவயதில் அப்பாவை இழந்து அம்மாவின் கண்ணீரை என்னைப் போல் அருகிலிருந்தே பார்த்தவர். அது தான் என்னை அவரிடம் சேர்த்தது.

சின்ன வயதில் என்னுடைய பெரிய ஆசையே மூன்று வேளை உணவை ஒழுங்காக சாப்பிட வேண்டும் என்பது தான். பக்கத்து வீட்டை எட்டிப்பார்க்கும்போது, அங்கே தங்களது ஒரு பையனுக்கு விதவிதமாக பலகாரங்கள் செய்துவிட்டு, அவனை சாப்பிட சொல் லிக் கெஞ்சுவார்கள். அப்போதெல்லாம் நாமும் ஒரு பையனாக இருந்திருந்தால் இப்படி சாப்பாட்டுக்கு கஷ்டப்பட வேண்டாமே என நினைத்ததுண்டு. ஆனால் இன்று சொந்த பந்தங்களின் அருமைத் தெரிகிறது. எனது பெண்ணின் திருமணத்திற்கு எனது தம்பிகள் வந்து தூண்களாக நிற்கும்போது, நெஞ்சை நிமிர்த்தத் தோன்றியது. எது நமக்கு சோகத்தைத் தருகிறதோ அதுவே நமக்கு பின்னாளில் சுகத்தைத் தரும் என்பது நான் கற்றுக்கொண்ட பெரிய பாடம்.

நான் அடிக்கடி என் குழந்தைகளிடம் சொல்வேன், ‘கோபம் வந்தால் கதவை மூடி விடு. சந்தோசம் என்றால் உடனே அகலத் திறந்து கொள். இது தான் எனது வாழ்வியல் அனுபவம். நான் சிரமப்பட்டதற்கு யாரையும் பொறுப்பாளி ஆக்க முடியாது. நான் விரும்பித் தேர்ந்தெடுத்த பாதை இது. ‘அண்ணே.. எத்தனை வயசானாலும் ஜெயிச்சிர முடியும்னு உங்களைப் பார்க்கும்போதெல்லாம் எங்களுக்கும் நம்பிக்கை வருது’ என பல உதவி இயக்குனர்களும், நண்பர்களும் சொல்வார்கள். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.

சாதனைக்கும், வயதுக்கும் சம்பந்தமே இல்லை. நெஞ்சுகூட்டில் தகுதியான ஒரு லட்சியம் சுற்றி சுழலும்போது அது நிச்சயம் நிறைவேறியே ஆகும்.

நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்தேன். விரும்பித்தான் இந்தத் துறைக்கு வந்தேன். மீண்டும் பழைய வேலைக்கு போய்விடலாமே என எனது நெருங்கிய சொந்தங்கள் நினைத்தார்கள். என் மேல் உள்ள பிரியத்தினால் அவர்கள் வாய் திறந்து சொன்னதில்லை. ஆனாலும் அவர்களுக்கு நான் பதில் சொல்வேன். ‘திருப்பூர்ல தொலைச்ச பொருள திருப்பூர்ல தான் தேடணும். திண்டிவனத்துல தேடக்கூடாது. நான் எடுத்த முடிவ நானே நம்பலைனா எப்படி?’ இது எனக்கு நானே சொல்லிக் கொள்கிற உத்வேக வார்த்தைகளும் கூட. நான் எனது நேரத்தை, முயற்சியை சினிமாவிலேயே கழித்திருக்கிறேன். என்னைப் போய் வேறு வேலைப் பார்க்க சொன்னால் எப்படி முடியும்?

என்னிடமும் பலர், இது என்ன ராமையா என்று பழைய பெயராக இருக்கிறது? என்று சினிமாவுக்காக பெயரை மாற்ற சொன்னார்கள். ‘மைனா’ படத்திற்காக தேசிய விருது பெறுவதற்காக டெல்லி சென்றிருந்தேன். ஏதோ ஒரு கூச்சம். சுற்றி உள்ளவர்களை பார்க்கிறேன். எனக்கு புரியாத மொழியைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நொடி தான். நான் ஏன் இப்படி இருக்க வேண்டும்.? நான் தமிழ்ப்படத்தில், தமிழைப் பேசி நடித்து விருது வாங்க இங்கே வந்திருக்கிறேன். எதற்கு கூச்சம்? என்று தோன்றியவுடன் ஒரு கம்பீரம் வந்துவிட்டது. ‘மைனா’ படத்தில் என் கதாபாத்திரம் பெயர் ராமையா. கதாபாத்திரம் பெயரும், நடிகர் பெயரும் ஒரே மாதிரியாக, அதற்கு தேசிய விருதும் வாங்கியது இதுவரையிலும் நானாகத் தான் இருப்பேன்.”

தம்பி ராமையாவின் காதல் இசையின் மேல் இருக்கிறது. இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும் வரவேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை வந்தவர். இப்போதும் இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக் கொண்டு வருகிறார். “கண்ணதாசன், எம்.எஸ். விஸ்வநாதன் இருவரும் எனக்கு உயிர். அவர்களைப் போல இசையமைத்து பாடல் எழுத வேண்டும் என்கிற பெரும் விருப்பம் உண்டு. பறையோ, ஆர்மோனியமோ, கிடாரோ எந்த இசைக்கருவியைக் கொடுத்தாலும் உடனே வாசித்துவிடுவேன். இப்போதும் நிறைய பாடல்களுக்கான மெட்டுகள் என்னிடம் இருக்கின்றன. அடுத்து நான் இயக்கப் போகும்படத்தில் நீங்கள் அதைக் கேட்கலாம்.” தம்பி ராமையா அடுத்து இயக்கப்போகும் படமும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தருகிற படம் தான். இந்தப் படத்தின் மூலமாக தனது மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்கிறார்.

“நகைச்சுவை உணர்வு கொண்டவர்களின் மறுபக்கத்தைப் பாருங்கள். சிறந்த சிந்தனை யாளர்களாகவும், வாழ்க்கையில் சிரமப் பட்டவனாகவும் இருப்பார்கள். அவர்களால் தான் எதையுமே சுலபமாக எடுத்துக் கொள்ள முடியும். ‘மழை எனக்குப் பிடிக்கும். அது தான் என் கண்ணீரை யாருக்கும் தெரியாமல் மறைக்கிறது’ என்பார் சார்லி சாப்ளின். மனம் வெம்புகிற சோகத்தைக் கூட ரசனையோடு சொல்ல முடிகிற சிறப்பு நகைச்சுவை உணர்வு கொண்டவர்களுக்கு உண்டு.

பயம் தான் என்னை வழிநடத்துகிறது. ஓட வைக்கிறது. அது கடவுள் குறித்த பயம். எனது அப்பா அம்மாவுக்குப் பிறகு என்னை வழிநடத்த, நான் பயப்பட, கெட்டியாக பிடித்துக் கொள்ள ஒரு கொம்பு தேவைப்படுகிறது. அதை நான் கடவுளாக நினைக்கிறேன். சினிமாவுக்கு வந்து சிரமப்பட்டேன் என்று சொல்பவர்களை நான் ஊக்குவிப்பதில்லை. உடனே வெற்றியைத் தருவதற்கு அது ஒன்றும் ஐயாரெட்டு நெல் இல்லை. நின்று நிதானமாக உழைத்தால் தான் வெற்றி கிடைக்கும்”.

சினிமாவிற்கு வசனம் எழுதுவதில் மட்டுமல்ல, பலருடைய வாழ்வுக்கும் எனது அனுபவங்கள் பயன்படுகின்றன என்கிற தம்பி ராமையா மனவள ஆலோசகராகவும் இருக்கிறார். “இது அதிகம் பேருக்குத் தெரியாது. பலர் என்னுடன் பேசிய பிறகு தற்கொலை எண்ணத்தைக் கூட விட்டிருக்கிறார்கள். பலரும் குடும்ப வாழ்க்கையை அமைதியாக வாழ்கிறார்கள். ‘மனைவியிடம் தோற்பதில் கூச்சப்படாதே. குழந்தைகளிடம் முட்டாளாக நடிப்பதில் பெருமை கொள்’ இது தான் என்னிடம் ஆலோசனைக்காக வருபவர்களுக்கு சொல்கிற நட்பான வார்த்தைகள்.”

நீங்கள் விரும்பிய இடத்தை அடைந்து விட்டதாக நினைகிறீர்களா? என்று கேட்டதும், “எனக்கு எது சரியோ அதை இறைவன் மிகச் சரியான நேரத்தில் கொடுத்து வருகிறான். எனது பெண்ணுக்கு யாரிடமும் கடன் வாங்காமல் திருமணம் செய்யவேண்டும் என்று நினைத்தேன். அப்படியே நடந்து விட்டது. எனக்கு காலம் நிறைய உதாரணங்களைக்  காட்டியிருக்கிறது. ‘ஓய்வறியாத் தன்மை கொடு இறைவா’ என நான் பிரார்த்தித்த காலம் ஒன்று உண்டு. இப்போது இறைவனுக்கு நான் சொன்னது காதில் விழுந்துவிட்டது என நினைக்கிறேன். ஓடிக் கொண்டே இருக்கிறேன்” என்றவர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் பட்டியலை மட்டும் தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் வரிசைப்படுத்தினார். ‘ஷாட் ரெடி ‘ என்று கூப்பிடுகிற நேரத்திற்குள் எனது ஓய்வை அமைத்துக் கொள்கிறேன். இப்போதைய விதி எனக்கு அமைத்துக் கொடுத்த அற்புதமான பாதை” என்கிறார் புன்சிரிப்போடு.   

ஜூலை, 2013.