சிறப்புக்கட்டுரைகள்

சரிநிகர்

ஜோதிமணி

மார்ச் 8 உலக மகளிர் தினம்! நாடுகளின் எல்லைக்கோடுகளைக் கடந்து உலகவரலாற்றில் பெண்களின்  சாதனைகளை நினைவுகூறும் ஒரு தினம். பொதுவாக போராட்டங்களும்  சவால்களும் இல்லாமல் யாரும் எதையும் சாதித்துவிட முடியாது. ஆனால் ஒரு பெண்ணின் போராட்டங்கள் ஆணின் போராட்டங்களில் இருந்து வேறுபட்டவை. பொதுவாக போராட்டக்களங்களை ஆண்கள் தனக்குள்ளிருந்தும், சமூகத்தில் இருந்தும் சந்திப்பார்கள். ஆனால் ஒரு பெண் இவற்றை எதிர்கொள்வதற்கு முன்பாகவே தான் ஒரு “பெண்” என்கிற போராட்டத்தில் இருந்து துவங்க வேண்டியிருக்கிறது என்பதுதான் வேதனை! அந்தப் போர்க்களத்திலேயே போராடிப் போராடி ஓய்ந்துபோன, களப்பலியாகி  மடிந்துபோன போராளிகள் ஏராளம்!

 பெண்ணுரிமை, பெண் சமத்துவத்திற்காக துணிச்சலும்,தியாகமும் மிகுந்த  வீரம்செறிந்த போராட்டங்களை நிகழ்த்திய வரலாற்றில் பெயரும், முகமும், முகவரியும் அற்றவர்களாகிப்போன அந்தக் களப்போராளிகளின் பல நூற்றாண்டுகாலப் போராட்டம்தான் இந்த உலக உழைக்கும் மகளிர் தினத்தின் உரிமைக்குரல்! சங்கநாதம்!

இன்று உலகெங்கும் என் போன்ற பெண்கள் கல்வியோடும், சுயசிந்தனையோடும், ஆண்களின் உரிமையாக மட்டுமே கருதப்படுகிற பெண்களுக்குத் தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிற அரசியல், இராணுவம், அறிவியல், விஞ்ஞானம், சமயம் போன்ற பலதுறைகளிலும் கூட பங்கேற்று வெற்றிகரமாகச் செயல்படக் காரணம்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் அந்தப் பெண்களின் பெருந்திரளையும் அந்தக் காலகட்டத்தில் அவர்களுக்குத் துணைநின்ற ஓருசில ஆண்களையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

வரலாற்றைத் திரும்பிப் பார்க்கின்றபொழுது பெண்ணினம் கடந்துவந்திருக்கின்ற தூரம் கணிசமானது என்பதை மறுப்பதற்கில்லை. பெண்கல்வி, சமத்துவம், உரிமைகள், வேலைவாய்ப்பு, என்று ஒவ்வொரு நெடிய போராட்டமும் சில விசயங்களை சாதித்திருக்கிறது,

சாத்தியமாக்கியிருக்கிறது. ஆனாலும் இன்னும் கடக்க வேண்டிய கடல்கள் கண்முன் அலையடித்தபடியே கண்ணுக்கெட்டியவரை விரிந்துகிடக்கின்றன. என்பதுதான் நிதர்சனம்.

நான் முதன்முதலில் உள்ளாட்சித்தேர்தலில் அதுவும் பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டில் ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் போட்டியிட முடிவுசெய்தபோது  அச்செயல்பாடு ஒரு “பெண்” தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அதிர்ச்சி அலைகளை மக்களிடம் ஏற்படுத்தவே செய்தது. அதுவும் பெண்கள் மட்டுமே அந்தப் பகுதியில் போட்டியிடமுடியும் என்பது “கலிகாலத்திற்கான” அடையாளமாகக் கருதப்பட்டது!

 இன்னும்கூட பெண்கள் பணியாற்றுவதற்கென்றே சிலதுறைகள் பெரிய மனதோடு ஒதுக்கப்படுகின்றன! ஆசிரியை, செவிலியர் போன்றவையே அவை! (அவையிரண்டும் மிக முக்கியமான பணிகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை) அதையெல்லாம் விட்டுவிட்டு ஏன் பெண்கள் கடினமான அரசியலுக்கும், இராணுவத்திற்கும், காவல்துறைக்கும், போக்குவரத்து துறைக்கும் வரவேண்டும் என்று நம் சமூகம் அதீத அன்போடும், அக்கறையோடும் கேட்டுக்கொண்டே இருக்கிறது!

 வீட்டுவேலைகளில், விவசாயத்தில், கட்டுமானப் பணிகளில் பெண்களின் கடின உழைப்பு காலம்காலமாகத் தொடர்கிறது. இவையெல்லாம் கடினமான பணியில்லாமல் வெறென்ன? இவற்றையெல்லாம பெண்கள் செய்வதிலையா? குறைந்தபட்சம் அதற்கான அங்கீகாரம் கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை. சமமான ஊதியம்பற்றிச் சொல்லவே தேவையில்லை. மாகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்புச் சட்டம் மட்டுமே பெண்களுக்கு நடைமுறையில் சமமான ஊதியத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறது ( நன்றி: மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு!)

 உழைக்கும் மகளிரைப் பொறுத்தவரை (உழைக்காத மகளிர் என்று ஒருவரும் இல்லை! அதனை உணர்ந்ததால் தானோ என்னவோ ‘உழைக்கும் பெண்களின் தினம்’ இப்பொழுது ‘பெண்கள் தினம்’ என்றாகிவிட்டது.!) பணியிடச் சூழல்,பாதுகாப்பு, பாலின சமத்துவம், சமவாய்ப்பு, சமமான ஊதியம் என்று நாம் கடக்கவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. பெண்ணும், ஆணும் சமத்துவத்தோடு சரிநிகர் சமானமாக தலைநிமிர்ந்து நடக்கும் ஒரு தேசம் தான் நம் எல்லோருக்குமான கனவாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அப்படியொரு கனவுதேசத்தை நாம் கட்டியெழுப்புவோம்.அதுவரை.. போராட்டங்கள் ஓய்வதில்லை!

(ஜோதிமணி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பேச்சாளர்) 

மார்ச், 2017.