சிறப்புக்கட்டுரைகள்

சட்டங்கள் செய்திட வந்தோம்

மு.வி.நந்தினி

“பெரியோர்களே! தாய்மார்களே!” -வாக்குக் கேட்கும் அனைத்து கட்சிகளும் பேதம் பார்க்காமல் உச்சரிக்கும் சொற்கள் இவை. பெரியோர் என்றால் அதில் ஆண், பெண் எல்லோருமே வந்துவிடுவார்கள். அடுத்து வருகிற ‘தாய்மார்களே’ என்பது சிறப்பான சொல். தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் வாக்கு வங்கியை நேரடியாக ஓட்டுக் கேட்க இறைஞ்சும் சொல். பெண்கள், ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கிறார்கள் என்பது உண்மையா? மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கக் கூடிய பெண்கள் தேர்தலில் ஆண்களைவிட அதிக சதவீதத்தில் வாக்களிக்கிறார்கள் என்பது ஒவ்வொரு தேர்தல் முடிவின் போதும் நிரூபணமாகிறது.  தமிழக அரசியல் வரலாற்றில் பெண்களின் வாக்குகளைக் கவர்ந்த அரசியல்வாதியாக எம். ஜி. ராமச்சந்திரன் இருந்தார் என்பதை அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அவருக்குப் பிறகு அவர் தலைமை தாங்கிய அஇஅதிமுகவுக்கு ஜெயலலிதா தலைமை தாங்கியபோது பெண்களை தக்க வைத்துக் கொண்டார். எம்.ஜி. ஆரின் அரசியல் வெற்றியை முன்மாதிரியாகக் கொண்டு பெண்களைக் கவரும் திட்டங்களை முன்வைத்து கட்சிகள் களம் காணுகின்றன. குறிப்பாக, திமுக, அதிமுக அறிவிக்கும் இலவச அறிவிப்புகளைச் சொல்லலாம். கருணாநிதி தன்னுடைய ஆட்சியில் கேஸ் அடுப்பையும் தொலைக்காட்சிப் பெட்டியையும் தந்தார். அடுத்து வந்த அதிமுக மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் ஆகிய இலவசங்களை அறிவித்தது. பெரும்பாலான பெண்களின் அன்றாட நடவடிக்கைகளில் தொடர்புடைய வீட்டு உபயோகப் பொருட்களை வழங்குவதன் மூலம் மகளிர் வாக்கு வங்கியை தனதாக்கிக் கொள்ள அனைத்து கட்சிகளும் போட்டி போடுகின்றன.

பெண்களை வெற்றிக்குரிய வாக்குவங்கியாகப் பார்க்கும் அரசியல் கட்சிகளின் தேர்தல் உத்திகள் எல்லாம் சரிதான். ஆனால், இதே பெண்கள், அரசியலில் பங்கெடுக்க வரும்போது கட்சிகள் அவர்களை எப்படி வரவேற்கின்றன? அவர்களை எப்படி பிரதிநிதித்துவப் படுத்துகின்றன? அரசியலில் பெண்களுக்கான இடம் என்ன?

சுதந்திரத்துக்குப் பிறகான தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதாவைத் தவிர மிகப் பெரும் அரசியல் சக்தியாக வேறு பெண் உருவாகவில்லை. சக்தி வாய்ந்த ஜெயலலிதாவின் தலைமைகூட அரசியலில் பெண்களின் பங்களிப்பை கூட்ட முடியவில்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது. 2011 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளில் 2748 ஆண் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? அதில் ஒரு சிறு துளி. 134 பேர் மட்டுமே!  இந்த 134 பேரில்  அதிமுக சார்பில் 15 பேரும் திமுக 1, தேமுதிக 2, சிபிஎம் 1, காங்கிரஸ் 1 என மொத்தம் 17 பெண்களே வெற்றி பெற்றார்கள்.

சமூக நீதிக் கொள்கைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்லிக் கொள்ளும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் ஏன்

சொல்லிக் கொள்ளும்படி இல்லை? இதுபற்றிச் சொல்லும் பேராசிரியர் சரஸ்வதி,“பெண்களைப் பற்றிய பொதுப்புத்தி  அவர்கள் நான்கு சுவர்களுக்கு மத்தியில் இருந்துகொண்டு குடும்பத்துக்கு தொண்டு செய்ய வேண்டும் என்பதுதான். அதைப் பிரதிபலிக்கிற ஆணாதிக்க அரசியல்வாதிகளும் பெண்களுக்கு உரிய நீதியை உரிமையைப் பற்றிக் கவலைப் படாதவர்களாக இருக்கிறார்கள்.  இந்த ஆணாதிக்க சமூக கலாச்சார சூழலை மாற்றியமைக்கும்போதுதான் ஆணாதிக்க அரசியல் சூழலையும் மாற்ற முடியும். ஆனால் அதற்கான முயற்சியை யாரும் எடுப்பது கிடையாது. ஏனென்றால், பெண்ணடிமை என்பதை ஏதோ போற்றிப் பாதுகாக்க வேண்டிய விஷயமாக, அதுதான் தமிழ்நாட்டின் கலாச்சாரம் என்று போற்றி புகழ்ந்துகொண்டு இருப்பதால் சமூகத்தின் பொதுப்புத்தி மாறவில்லை. எல்லாத் தலைமைகளும் ஆணாதிக்க தலைமைகள்தான். ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். ஜெயலலிதாவோ, சோனியோ காந்தியோ பெண்ணுரிமை சிந்தனைகளோடு, பெண்களின் சமவாய்ப்புக்காக செயலாற்றுகிறவர்களாக இல்லை. ஏனென்றால் அவர்களும் உள்வாங்கிக் கொண்டிருப்பது ஆணாதிக்க சிந்தனைகளைத்தான்” என்கிறார்.

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட காங்கிரசால் வாய்ப்பு மறுக்கப்பட்டவர் ஜோதிமணி.  பெண் என்பதால்தான் இந்த வாய்ப்பு ஜோதிமணிக்கு மறுக்கப்பட்டதா?

“ இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 41 இடங்களில் மூவர் மட்டும் பெண்கள். பெண்களை ஊக்குவிக்காத நிலைமைதான் அரசியல் கட்சிகளிடத்தில் இருக்கிறது. ஆண் அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்று வெளிப்படையாகவே சொல்கிறேனே... பெண்கள் இவர்களின் வீட்டு வாசலில் போய் நின்று எனக்கு ஆதரவு கொடுங்கள் என்று கெஞ்சிக் கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இப்படியான சிந்தனையுள்ள அரசியல்வாதிகளால் சுயமாக சிந்திக்கக் கூடிய, மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க பெண்கள் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகிறார் ஜோதிமணி.

பெரும்பாலான அரசியல்வாதிகள் பெண்களை அடிமைகளாகப் பார்ப்பதாகச் சொல்லும் ஜோதிமணி, சில அரசியல்வாதிகள் பெண்களைப் பார்க்கிற பார்வை, அவர்களுடைய பேச்சு ஆகியவை ஆணாதிக்க மனோபாவத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது என்கிறார். 

தேர்தல் அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் விதமாக 33 சதவீத இடஒதுக்கீடு கட்டாயமாக்கப்படும் என்று அரசியல் அறிஞர்களும் எல்லா அரசியல் கட்சிகளும் பேசுகின்றன. ஆனால் உண்மையில் 33 சதவீத இடஒதுக்கீட்டை ஒரு வெற்று வாக்குறுதியாகத்தான் எல்லா கட்சிகளுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதைப் பேசினால் தேர்தல் நேரத்தில் பெண்களின் வாக்குகளைப் பெற்றுவிட முடியும் என்ற நோக்கில் பேசுகிறார்கள். நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவருவோம் என்று சொன்ன பாஜக மகளிர் மசோதாவை நிறைவேற்றும் பேச்சையே விட்டுவிட்டது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஒரு அவையில் நிறைவேற்றப்பட்டு இன்னொரு அவையில் முடங்கிப்போனது மகளிர் இடஒதுக்கீடு மசோதா.

தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் 33 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஆண் தான் அதிகாரம் செலுத்துகிறவராக இருக்கிறார் என்கிற விமர்சனங்கள் வந்தாலும், வீட்டுக்குள் முடங்கிய பெண்களை கட்டாயத்தின் பேரிலாவது பொது வெளிக்கு இழுத்து வந்ததை பெரும் சாதனையாக சொல்லத்தான் வேண்டும். அதேபோல சமீபத்தில் இந்த இடஒதுக்கீடு விகிதத்தை 50 சதவீதத்துக்கு உயர்த்தி சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் இந்த இடஒதுக்கீட்டை வரவேற்றுள்ளன.

“சமூகத்தில் சரிபாதியாய் பெண்கள் இருக்கிறார்கள். அந்த இயற்கை நீதிதான் எல்லா தளங்களிலும் பிரதிபலிக்க வேண்டும்.  பஞ்சாயத்துகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பஞ்சாயத்துகள் முடிவை எடுக்கிற அமைப்புகள் அல்ல, அவை கொடுக்கப்பட்ட வேலைத் திட்டத்தை  செயல்படுத்துகிற அமைப்புகள். கொள்கை ரீதியிலான முடிவுகளை இந்த அமைப்புகளால் எடுக்க முடியாது.

சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு கேட்பது, அவை கொள்கை முடிவுகள் எடுக்கிற இடங்களாக இருப்பதால்தான்” என்கிற பேரா. சரஸ்வதி, இடஒதுக்கீடு என்பது சர்வரோக நிவாரணி அல்ல என்கிறார். “இடஒதுக்கீடு கொடுத்த உடனேயே சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிகழ்கிற எல்லா வன்முறைகளும் மனித உரிமை மறுப்புகளும் போய்விடும் என்று சொல்லவில்லை. இது அரசியல் ரீதியாக வலிமைப்படுத்துகிற முயற்சி” என்கிறார் அவர்.

 இடஒதுக்கீட்டில் பதவிக்கு வந்த பெண்களின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துகிறவர்களாக அவர்கள் வீட்டு ஆண்கள் இருக்கிறார்கள் என்கிற கருத்தையும் கடுமையாக விமர்சிக்கிறார் பேரா. சரஸ்வதி. “ஆண் அரசியல்வாதிகளாக இருக்கிற இடங்களில் அவருடைய குடும்பம் தாக்கம் செலுத்துவதில்லையா?” என்று கேட்கிறார்.

இந்த வாதத்துக்கு வலிமை சேர்ப்பதுபோல, பஞ்சாயத்து அமைப்புகளில் கிடைத்த இடஒதுக்கீடே, அரசியல் பின்புலம் இல்லாத தன்னை அரசியல்வாதியாக்கியிருக்கிறது என்கிறார் பஞ்சாயத்து அமைப்பில் பொதுவாழ்வை ஆரம்பித்த ஜோதிமணி. பெண்களின் பிரதிநிதித்துவத்தை எப்படி அதிகரிப்பது என்பதற்கு ஜோதிமணி, “பஞ்சாயத்துகளில் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட இந்த 15 ஆண்டுகளில் ஏராளமான பெண் நிர்வாகிகள் எல்லா அரசியல் கட்சிகளிலும் தோன்றிவிட்டார்கள். தகுதியான, திறமையான பெண்கள் இல்லையென்று இனி சொல்ல முடியாது” என்கிறார்.

பேராசிரியர் சரஸ்வதியோ, “பெண்களுக்கு சரியான பயிற்சி கொடுத்து, உரிய தெளிவைக் கொடுத்து பதவிக்கு அனுப்புகிற பொறுப்பு அரசியல் கட்சிகளுடையது. எந்தக் கட்சியுமே போராட்டங்களுக்கு முன்னால் நிற்க மக்களாக மட்டுமே பெண்களைப் பார்க்கின்றன.  எந்த கட்சி அரசியல் நுணுக்கத்தையும் ஆளுகைத் திறனையும் பெறுவதற்கான பயிற்சி கொடுக்கிறது? எல்லா கட்சிகளின் தலைமையிலும் ஆண்கள்தானே இருக்கிறார்கள். தங்கள் இடத்தைப் போராடி போராடி பெற வேண்டிய கட்டாயத்தில் பெண்களும் பெண்கள் அமைப்புகளும் இருக்கிறார்கள்” என்கிற வழிமுறைச் சொல்கிறார்.

ஜோதிமணி இறுதிக் கருத்தாக இதைச் சொன்னார், “அரசியலுக்கு வரும் பெண்களை ஆண் அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்வதுதான் சிக்கலே தவிர, மக்கள் எப்போதும் வரவேற்று கொண்டாடுகிறவர்களாக இருக்கிறார்கள். இதற்கு உதாரணங்களாக, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, ஷீலா தீட்சித், மாயாவதி, ஜெயலலிதா போன்றவர்களைச் சொல்லலாம். இதில் குறிப்பிட்டுச் சொல்ல ஒரு விஷயம் இருக்கிறது.  இவர்களில் சிலர் மேல் ஊழல், சர்வாதிகார தன்மை என்கிற குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஆனால் அதை எல்லாம் மறந்து மக்கள் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்” என்றவர், “ஆண் அரசியல்வாதிகளின் அடையாள அழிப்பு முயற்சிகளுக்கு பயந்து பின்வாங்காமல் இருப்பது  மிக முக்கியம்!” என்கிறார்.

மே, 2016.