இந்நாவல் எனது முந்தைய நாவல்களில் இருந்து பெரிதும் வேறுபட்டது. வரலாற்றின் ஊடாக கரிசல்நிலத்தின் வாழ்க்கையை, அதன் விசித்திரத்தை விவரிக்கிறது இந்நாவல். இன்றும் தொடரும் சாதிய ஒடுக்குமுறைகளையும் கிராமியக்கலைகளின் வீழ்ச்சியையும் கைவிடப்பட்ட விவசாயிகளின் துயரத்தையும் ஊடாடி சமகாலப் பிரச்சனைகளைத் தொட்டுப்பேசுகிறது. காத்திருப்பும் ஏமாற்றமும் தனிமை உணர்வும் பீடித்துப் போன கரிசல்நிலத்து மக்களை ஆறுதல்படுத்தியது நாட்டார்இசையும் பாடல்களுமே. அந்த கலைகள் கண்முன்னே மறைந்து போய்விட்டன. அந்த நினைவுகளை இந்நாவல் பதிவு செய்திருக்கிறது. விந்தையும் யதார்த்தமும் நினைவுகளின் ஊடாட்டமும் ஒன்று கலந்த நாவலிது.
***
கரிசல் புரளும் காலமது, ஓயாத காற்றில் மணல் பறந்தபடியே இருக்கும், சிலநேரம் வெறிக் கொண்டது போலக் காற்று ஒட்டுமொத்த கரிசல்மண்ணையும் வாறி எறிந்துவிட்டு தான் ஓயும் என்பதாகப் பிசாசை போலச் சப்தமிட்டு மண்ணை அள்ளி வீசி எறியும், காற்றின் ஓலம் விநோதமானது, அது ஓநாயின் குரலையும் பூச்சிகளின் குரலையும் ஒன்று கலந்தது போலிருக்கும்.
இரவிலும் அந்தச் சப்தத்தைக் கேட்க முடியும். கரிசலில் வீசும் காற்று மூர்க்கமானது, மரங்களை வேரோடு பிடுங்கி எறிய ஆசைப்படுவது போல அது அசைத்து ஆட்டும். திடீரென அதை விடுத்து வீட்டு கூரைகளைப் பிய்த்து எறிய முயற்சியும், அதுவும் வேண்டாம் என ஓலைக்கொட்டான்களை, கிழிந்த காகிதங்களை, சாக்குபைகளை இழுத்துக் கொண்டு அலையும்.
நாய்கள் கூட அந்தக் காற்றைக் கண்டு பயங்கொள்கின்றன, காரணம் அது நாயின் கண்களில் சதா மண்ணை வீசிக் கொண்டேயிருப்பது தான், நாய் தலையைச் சிலுப்பியபடியே காற்றைக் கண்டு ஆங்காரமாகக் குரைத்து ஓடும். அந்தக் குரைப்பொலியை பரிகாசம் செய்வது போலக் காற்று நாயின் மீது மீண்டும் மண்ணை அள்ளிக் கொண்டு வந்து கொட்டிவிளையாடும். செய்வதறியாத நாய் ஓடி வீட்டுத் திண்ணைகளில் ஒண்டிக்கொள்கின்றன.
கிழக்கேயிருந்து தான் காற்றுப் புறப்படுகிறது, அதிகாலை நேரங்களில் மட்டுமே அது அடங்கியிருக்கிறது, சூரியன் எழத்துவங்கியதும் காற்று விழித்துக் கொண்டுவிடுகிறது, சுழிக்காற்று என்று அதற்குப் பெயர்.
அடிவானத்திலிருந்து கிளம்பிவரும் போது அது குடிகாரனைப் போலத் தள்ளாடியபடியே வருகிறது. கண்மாயை நெருங்கிய போது வேகம் கொண்டுவிடுகிறது. கண்மாயில் ஒரு சொட்டு தண்ணீரில்லை, பாளம் பாளமாக வெடித்துக்கிடக்கிறது. அந்த வெடிப்பை பிய்த்து எறிந்து கரம்பை மண்ணை அள்ளி வீசுகிறது காற்று.
மரங்கள் எல்லாம் தலைவிரித்து ஆடுகின்றன, பெருமரங்கள் கூடப் பயந்து கொள்வது போலக் கூச்சலிடுகின்றன, காற்றடி காலத்தில் மனிதர்களின் பேச்சு ஒடுங்கிவிடுகிறது, யாரும் அதிகம் பேசிக் கொள்வதில்லை, பேச காற்றுவிடுவதுமில்லை.
மேய்ச்சலுக்குப் போன மாடுகள் உலர்ந்த தரையை முகர்ந்தபடியே காற்றின் மூர்க்கத்தை எதிர்கொள்கின்றன, மாட்டினை முட்டி தள்ளி கிழே விழ்ச்செய்வது போல அடிக்கிறது காற்று.
அது பைத்தியக்காரத்தனம், சந்தேகமில்லை, பித்தேறிய நிலையே தான், யார் மீதான கோபமது, எதற்காகக் காற்று இத்தனை வெறிகொண்டுவிடுகிறது.
வறண்ட கிணறுகளுக்குள் காற்று நுழையும் போது விசித்திரமானதொரு சப்தம் எழுகிறது, விருட்டென ஒரு குருவி பாய்ந்து போவது போல ஓடையைக் கடக்கிறது காற்று, வேகம், அதிவேகம், உச்சவேகம் என அதன் உக்கிரம் மேலோங்கிக் கொண்டேயிருக்கிறது, காற்றின் சப்தம் இனிமேல் இந்தப் பூமியில் மனிதர்களே வசிக்க முடியாது என்பது போன்ற ஓலமாகயிருக்கிறது, ஊர் மூச்சிரைத்த வயசாளியை போல ஒடுங்கிக் கொள்கிறது.
காற்றின் பெருநடனம் பயம் கொள்ளவைக்கிறது, அது ஆட்டமே தான் அப்படித்தான் சொல்ல வேண்டும், காற்றுப் பொங்கிக்கொண்டேயிருக்கிறது, திடீரென ஒரு பனை உயரத்துக்கு மண்ணை அள்ளிக் கொண்டு சுழல்கிறது, மண்ணால் கோட்டை கட்டுகிறதோ எனும்படியான சுழலது, உயர்ந்தெழுந்த மண் சரிந்து அப்படியே பனையடியில் விழுந்து அடங்கிவிடுகின்றன.
வீட்டுபடிகள் மணலேறிக் கிடக்கின்றன, கோழிக்குஞ்சுகள் வீதியில் வருவதற்கே பயந்தன, வானில் பறவைகளே இல்லை, அரிதாக விடிகாலையில் பறவைக்கூட்டம் தெற்கே போகின்றன, காற்றடி காலத்தில் பறவைகள் வெகு உயரத்தில் பறப்பது போலிருக்கின்றன.
வீதியில் போட்டு வைத்த ஆட்டுஉரல்களில் மண் நிரம்புகிறது, மனிதர்களின் தலைகளில், உடைகளில் மண்படிகிறது, காற்றைச் சாந்தம் கொள்ள வைக்கவே முடியாது, தன்னிஷ்டம் போல அது அலைந்து ஒடுங்கட்டும் எனக் கரிசல் நிலம் காத்திருக்கிறது.
ஒன்றரை மாதங்களுக்குக் காற்றின் ஓயாத பெருங்குரல் கேட்டுக் கொண்டேதானிருக்கும், அது மரணத்தினை நினைவுபடுத்துவது போலவே இருக்கிறது.
மண் நிலை கொள்வதில்லை என்பதை மனிதர்களுக்கு நினைவூட்டுவதற்குத் தான் இப்படிக் காற்று சுழி கொள்கிறதோ என்னவோ, மனிதர்களை விடவும் மண் பெரியது என்பதை ஞாபகம் மூட்டுகிறதா?
எப்படியோ காற்றின் உக்கிரம் மனிதர்களைப் பயங்கொள்ளச்செய்கிறது, கரிசல்வாசிகள் அடிபணிந்துவிடுகிறார்கள். ஒரு மனிதன் கூடக் காற்றைச் சபிப்பதில்லை, கோபித்துக் கொள்வதில்லை, மாறாகச் செய்வதறியாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருக்கிறான்.
மண், கறுப்புமண், பூமியை விட்டு எழுகிறது. இதுரை பூமியில் உறங்கிக் கிடந்த மண் ஆகாசம் நோக்கி மிதக்கிறது, பூமியிலிருந்து கிளம்பும் மண் ஊற்று வான் நோக்கி போவது போலக் காற்று மண்ணை உயரச்செய்கிறது, தும்பை செடிகளும் மஞ்சனத்தியும் மண்வீசி நிறம் மாறுகின்றன. வீதிகளில் படியும் மண்ணை யாரும் அகற்றுவ தேயில்லை. தன் பிள்ளையைத் தொலைத்த தாய் தேடி அலைந்து புலம்பவுதை போலத் தான் காற்றுப் பதற்றம் கொண்டிருக்கிறது.
நடுங்கும் இலைகளும் நொய்ந்த கதவுகளும், உடைந்த ஜன்னல்களும் பதறுகின்றன, இனிமேலும் காற்றைத் தாங்கமுடியாதென இறைஞ்சுகின்றன. ஆனால் காற்று எதையும் கேட்டுக் கொள்வதில்லை, தன் கடமையைச் செய்வதைப் போல அது நொய்ந்தவற்றைச் சிதறடிக்கிறது, மனிதர்கள் காற்றடி காலத்தில் எடை இழந்துவிடுகிறார்கள் போலும், ஒருவராலும் தள்ளாடாமல் நடக்க முடியவில்லை. அதிலும் பெண்கள் இருவர் மூவராகச் சேர்ந்தே நடக்கிறார்கள், தனித்த பெண்களைக் காணமுடியாது. சைக்கிள் ஒட்டுகிறவன் தன்னைத் தவிர இன்னொரு ஆள் ஹேண்ட்டில்பாரை பிடித்து ஆட்டுவதை உணருகிறான். பூனைகள் காற்றில் நீந்துவது போலப் போகின்றன, காற்றின் தாரை நீண்டோடுகிறது.
அவர்கள் பஸ்பிடித்து அருப்புக்கோட்டைக்கு வந்து இறங்கியபோது ரத்தினம் சொன்னார். ‘வீட்ல போயி முதல்ல குளிக்கணும், தலைநிறைய மண்ணு. இப்படிக் காற்று அடிக்கிற ஊரை நான் பார்த்ததேயில்லை.’ பக்கிரி தனது துண்டை உதறினான், அதிலிருந்தும் மணலாகவே உதிர்ந்தன.
(விரைவில் வெளியாகவிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் நாவலிலிருந்து)
ஜனவரி, 2015.