டி.எஸ்.துரைராஜ் 
சிறப்புக்கட்டுரைகள்

“ங்கொப்பன் மவனே” சிங்கம்டா

மணா

“அடிக்கடி என்னைப் பார்க்க வருவீல்லே?''

‘‘கண்டிப்பா வருவேம்ப்பா''

‘‘எனக்கு நினைவிருக்கிற வரைக்கும் வா.. போதும்''

சமீபத்தில் ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ 60 வயது - மாநிறம்' படத்தில் நினைவுகளைப் படிப்படியாக இழந்து ஹோமில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரமான பிரகாஷ்ராஜ் தனக்கு நெருக்கமான நண்பரான மோகன்ராமிடம் இப்படிக் கேட்பார்.

நதியில் ஈரம் ஒட்டாத வினோதக் கூழாங்கல்லைப் போல் நினைவுகளை இழந்த நிலையில் ஒருவரைப் பார்ப்பது எப்போதும் மனதுக்கு நெருடலான ஒன்றாகவே இருக்கும்.

அப்படித்தான் இருந்தார் மூத்த கலைஞரான டி.எஸ்.துரைராஜும்.

சென்னையிலுள்ள சற்றுப் பெரிய வீட்டில் அவரைச் சந்திக்கப் போனது எண்பதுகளின் துவக்கத்தில். வார இதழ் ஒன்றிற்காகப் போய் ஹாலில் காத்திருந்தபோது குடும்பத்தினர் அவரை அழைத்து வந்தார்கள்.

தூய வெள்ளை உடை. பருமனான உடம்பு. பரந்த முகத்தில் குழந்தைமையின் சாயல். பார்த்ததும் முகத்தில் விரிந்த புன்னகை. நினைவுகள் தப்பிய நிலையில் எதிரே அவர் அமர்ந்திருக்க உறவினர்கள் அவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அவர் தொடர்பான புகைப்படங்களைக் காண்பித்துக் கொண்டிருந்தபோது, அதற்குத் தொடர்பே இல்லாதவரைப் போன்று கனிந்த முகத்துடன் அமர்ந்திருந்தார் துரைராஜ்.

‘‘ காலையிலே எந்திரிச்சு

கஞ்சித்தண்ணி இல்லாம

கஷ்டப்படுறேனே கடவுளே!''

மிகையில்லாத இயல்பான பேச்சு வழக்கில் அமைந்த இந்தப் பாடலை ‘‘ சகுந்தலை'' படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மீனவராகப் பாடும்போது கூடவே பாடுவார் துரைராஜ்.

பாட்டு முடிந்ததும் பிடித்த மீனை யார் வைத்துக் கொள்வது என்பதில் இருவருக்கும் இடையில் சண்டை வந்துவிடும். துரைராஜை என்.எஸ்.கே அடிக்கும்போது ‘‘ங்கொப்பன் மவனே சிங்கம்டா'' என்று அழுதபடியே உச்ச ஸ்தாயியில் கத்துவார் துரைராஜ்.

மேலும் அடிவிழ குரல் கலைந்து துரைராஜ் பேசிய ‘‘ ங்கொப்பன் மவனே''வசனம் அவரைக் கவனிக்க வைத்தது.

‘மலைக்கள்ளன்' படத்தில் எம்,ஜி.சக்கரபாணி யுடன் போலீஸ் மாம்பழ நாயுடுவாக துரைராஜ் இயல்பாக நடித்திருப்பார். ‘மல்கோவா மாம்பழமே' என்று ‘மாமன் மகள்' படத்தில் சந்திரபாபு பாடி நடித்தபோது கூடவே பாடி இவர் அமர்க்களப்படுத்தியிருப்பார். படிக்காத மேதை படத்தில் சிவாஜிக்கு உதவும் தோழனாக & ‘‘ எதையும் கூட்டிக்கழிச்சுப் பாரு.. கணக்குச் சரியா வரும்'' என்கிற வசனத்தை ஆண்மடண்  சொல்லி நடித்திருப்பார். கப்பலோட்டிய தமிழனில் வந்தேமாதரத்தின் மீது பிடிப்புக் கொண்ட சலவைத் தொழிலாளி பாத்திரத்தைக் கவனிக்க வைத்திருப்பார்.

துரைராஜூக்குப் பெரிய முழி. கண்ணை அகலவிரித்துக் குரலை ஏற்ற இறக்கத்துடன் பேசும்போது அவருடைய கனத்த உடலும் பேசும்.

இன்னொரு படத்தில் துரைராஜ் வீட்டுக்குள் நுழையும்போது நாய் இவரைப் பார்த்துக் குரைக்கும். அவர் பயந்து நடுங்குவார். குரைப்பு அதிகரிக்க அவருடைய பயமும் அதிகரிக்கும்.

‘‘ ஏங்க.. பயப்படுறீங்க.. குரைக்கிற நாய்

கடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியாதா?''

கேட்டவரிடம் வழக்கமான முழியை முழித்தபடி துரைராஜ் சாதுவாகக் கேட்பார்.

‘‘குரைக்கிற நாய் கடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியும். எனக்குத் தெரியும்.. ஆனா அந்த நாய்க்கு அது தெரியாதே''

ஏழு வயதிலேயே பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்ட இவருக்குப் பழக்கமானவர் கலைவாணர். பாடுவதில் தேர்ச்சி பெற்ற இவரை சினிமாத்துறைக்குத் தன்னுடன் அழைத்துப் போனார் என்.எஸ்.கே.

பக்த நாமதேவர், ராஜா கோபிசந்த், கிருஷ்ணன் தூது, சகுந்தலை, பொன்னி என்று அடுத்தடுத்துப் பல படங்கள்.

பல படங்களில் கலைவாணரும், துரைராஜூம் ஜோடி சேர்ந்தார்கள். அந்தப்படங்கள் அமோகமாக ஓடின. என்.எஸ்.கே லட்சுமிகாந்தன் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுச் சிறைக்குப் போனபோது துரைராஜ் வசம் நிறையப் படங்கள். கலைவாணரைப் போலவே அவர் சம்பந்தப்பட்ட படங்களின் நகைச்சுவைக் காட்சிகளை அவரே தீர்மானித்திருக்கிறார்.

1947 வாக்கிலேயே சொந்தமாகப் படம் எடுக்கத் துவங்கிவிட்டார். முதல் படம் - ‘பிழைக்கும் வழி'. கடைசியாகத் தயாரித்த படம் ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி'. இந்தப்படத்தில் சாவித்ரியின் அண்ணனாக இவர் பாடும் பாடல் பிரபலம்.

‘‘ புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே!''

அந்தப்பாடலை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவரைத் தான் நடத்தி வந்த நாடகக்கம்பெனியில் நடிக்க வைத்தவர் துரைராஜ்.

நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருக்கிற அவருக்குக் குதிரைப் பந்தயத்திலும் ஈடுபாடு அதிகம். ரேஸில் சம்பாதிக்கவும் செய்திருக்கிறார். மூன்று பந்தயக் குதிரைகளை வளர்த்திருக்கிறார்.

பெரிய பங்களாவைக் கட்டி, பல விலையுயர்ந்த கார்களை வாங்கியிருக்கிறார். புகைப்படக்கலையில் ஈடுபாடு அதிகரித்துத் தானே படம் எடுத்துத் தானே அவற்றைக்கழுவிப் பிரிண்ட் போடும் விருப்பத்துடன் இருந்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியில் உள்ள பல தலைவர்களுடன் நெருக்கம் கொண்டிருந்தவர், தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் தீவிரம் காட்டியிருக்கிறார்."

‘நகைச்சுவை நடிகனாக ஆனது தான் என்னுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத விஷயம்'' என்று தன்னைப் பற்றிச் சொல்லியிருக்கிற துரைராஜுக்கு இரு மனைவிகள்.

‘ ஒன்மேன் ஷோவாக' சில நிகழ்ச்சிகளைச் செய்திருக்கிற துரைராஜின் அபூர்வப்புகைப்படம் ஒன்றைக் காட்டினார்கள் அவருடைய உறவினர்கள். அதில் அந்தக் காலத்திலேயே தன்னுடைய உடம்பில் சேர்த்துக் கட்டிய மாதிரியான ஆளுயுரப் பொம்மையுடன் அவர் சிரித்துக் கொண்டிருந்தார்.

தகவல்களை உறவினர்கள் தொகுத்துச் சொல்லியதைக் கேட்டுக் கிளம்பியபோது எதிரே அமர்ந்திருந்த துரைராஜை உள்ளே அழைத்துக் கொண்டுபோனபோது அவர் பாந்தமான சிரிப்புடன் கடந்து போனார்.

இலைகளை உதிர்த்த பழுத்த மரத்தைப் போல நினைவுகளை இழந்திருந்தாலும், அவரை அமோகமாக வாழ வைத்த சிரிப்பு மட்டும் அவரிடம் விடாமல் ஒட்டிக் கொண்டிருந்தது.

அக்டோபர், 2018.