பாஸ், உங்களில் பலரைப் போல நானும் ரஜினி ரசிகன்தான். கோச்சடையான் என்கிற டெக்னாலஜிகல் விருந்துக்காக நாக்கை சப்புக் கொட்டிக்கொண்டு காத்திருப்பவன். அவதார், அட்வென்சர்ஸ் ஆப் டின்டின் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட மோஷன் கேப்சர் டெக்னாலாஜியில் ரஜினி எப்படி வருகிறார் என்று பார்க்க ஒரு ஐடி தொழில்காரனாக எனக்கும் ஆர்வம். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஜப்பானிய மொழிகளிலும் கோச்சடையான் பேசபோகிறது. இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளில் கூடவாம்!
125 கோடியில் தயாராகும் இப்படத்திற்கு ஆன்லைனில் எப்படி செய்திகள் உள்ளன என்று பார்த்தால் எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. கோச்சடையானுக்கு இணையதளங்கள் இருப்பினும் அதிகாரபூர்வமான இணையதளம் எதுவும் உண்டா என்று உறுதியாகத் தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் சில பக்கங்கள் இருக்கின்றன. ஆனால் ரொம்ப பரிதாபம். பேஸ்புக்கில் யாரோ ரசிகர் ஆரம்பித்த கோச்சடையான் பக்கத்துக்கு வெறும் 23,000 லைக்குகள்தான். இன்னும் பரிதாபம் ட்விட்டரில் இருக்கும் கோச்சடையான் கணக்கைப் பின் தொடர்பவர்கள் வெறும் 400 பேர்தான். யூ ட்யூபில் இருக்கும் வீடியோவை வெறும் 34829 பேர்தான் பார்த்திருக்கிறார்கள். என்ன நடக்கிறது இங்கே? ரஜினி ஆன்லைனுக்கு வந்தால் சர்வர்கள் க்ராஷ் ஆகவேண்டாமா? இந்த படத்தை ஆன்லைனில் பிரபலப்படுத்த பெரிய இணையதளம் ஒன்று கட்டமைக்க வேண்டாமா? இந்த தளத்தைப் பயன்படுத்தி நாம் இளைஞர்களுக்கு மோஷன் கேப்சர் டெக்னாலஜி போன்றவற்றை இப்படத்தில் கற்றுக் கொண்ட பாடங்களை வைத்துச் சொல்லித் தரலாம். இதை வைத்து தமிழ்/இந்திய திரையுலகில் வேலை பெறக்கூடிய வாய்ப்புகளை அவர்களுக்கு உருவாக்கலாம். இதை கோச்சடையான் இயக்குநர் சௌந்தர்யா அஸ்வின் மனதில் கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.
ஏனெனில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்த பின்னர் சினிமா தொழிலே முழுக்க மாறிவிட்டது. ப்ரிண்ட் போடுவதற்கே முன்பெல்லாம் கொள்ளைக்காசு ஆகும். இப்போது 4000 டிஜிட்டல் பிரிண்டெல்லாம் ஈசியாக போட்டுத் தாக்கிவிடுகிறார்கள்.
இதனால் இத்துறைக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகிறது. இந்தியாவில் சாட்டிலைட் வழியாக தியேட்டர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட முதல் படம் 2006-ல் வெளியான மலையாள டிஜிடல் படம் மூனம்மதோரல். டிஜிட்டல் ப்ரிண்ட் படங்கள் ஆரம்பத்தில் தியேட்டரில் பார்க்கையில் கொஞ்சம் தரக்குறைவாக இருந்தது என்று சிலர் புகார் சொன்னார் கள். இப்போது எதுவும் சொல்லமுடியாது. சமீபத்தில் வந்த ஹாபிட் படம் செகண்ட்டுக்கு 48 பிரேம்கள்! அவ்வளவு துல்லியத்தை நேரில் கூடப் பார்க்கமுடியாது!
ஆன்லைனில் சினிமாவை எப்படியெல்லாம் நல்லா மார்க்கெட் பண்ணலாம்? சில உதாரணங்கள்:
அவெஞ்சர்ஸ் படம் ரிலீசாவதற்கு முன்பே அதை வைத்து ஆப்பிள்காரர்கள் காசு பார்த்துவிட்டார்கள். இன்செப்ஷன் படம் வந்த போது படத்தின் மார்க்கெட்டிங் குழுவினர் ஆன்லைனில் கனவுகளை வைத்து கேம்களை உருவாக்கினார்கள். கனவுகளை ஆராயும் விஞ்ஞானிகளின் பேட்டிகளை வெளியிட்டு எதிர்பார்ப்பைக் கூட்டினார்கள்.
டெட் என்று ஒரு பேசும் கரடிபொம்மை படம் 2012ல் வெளிவந்தது. அந்த பொம்மை இன்றைக்கு மிகப் பிரபலமாகி சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அதன் பெயரில் ஒரு குறுஞ்செயலி கூட இருக்கிறது.
ஹங்கர் கேம்ஸ் படம் வெளியான போது அதன் பாத்திரங்களை வைத்து புத்தகங்களை வெளியிட்டு அதை ரசிகர்கள் மாய்ந்து மாய்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள். 2 கோடியே முப்பது பிரதிகள் இந்த புத்தகம் மட்டுமே விற்றது என்று கணக்கு சொல் கிறார்கள்!
ஆகவே ஒரு படத்தை எப்படி ஆன்லைனில் மார்க்கெட்டிங் செய்வது?
1) எல்லா படத்துக்கும் கட்டாயம் இணையதளம் ஆரம்பியுங்கள். முக்கியமான 20 தேடுபொறி களிலும் உங்கள் படத்தின் பெயர் ஆரம்பத்திலேயே வருவதற்கான வேலைகளைச் செய்யுங்கள்!
2) ஆன்லைனில் ஒரு பக்கம் ஆரம்பித்து படத்தைப் பற்றி ரசிகர்களை எழுத வையுங்கள்; விவாதிக்க வையுங்கள். ட்ரைலர் லாஞ்ச், ஆடியோ ரிலீஸ்- இதெல்லாம் பேசப்படட்டும்
3) படம் ஷூட்டிங் ஆரம்பிக்கும் போதிருந்தே நியூஸ் லெட்டர் ஆரம்பித்து அவ்வப்போது பதிவு செய்த ரசிகர்களுக்குத் தகவல்களை அனுப்புங்கள்!
4) ரசிகர்களை தாங்களே உங்கள் திரைப்படம் பற்றி இணைய தளங்களை உருவாக்கிக்கொள்ள ஊக்குவியுங்கள். ஆனால் அதிகார பூர்வமான தளத்துடன் அவை இணைக்கப் பட்டிருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவர்களுக்கு எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ், வால்பேப்பர்ஸ் போன்றவற்றைக் கொடுங்கள். ரசிகர்களைத் தவிர உங்கள் படத்தை மார்க்கெட் செய்ய வேறு எந்த நல்ல வழியும் இல்லை!
5) ஒரு வலைப்பூ ஆரம்பியுங்கள். ஹீரோ, ஹீரோயின், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அதில் எழுதட்டும். பாடல்கள், படத்தயாரிப்பு இதெல்லாம் வைத்து மின் புத்தகம் தயாரியுங்கள்!
6) ஆன் லைனில் போட்டிகள் அறிவியுங்கள். இயக்குநர், நடிகர்கள் இணைய தளம் வழியாக பட ரசிகர்களுடன் உரையாடுங்கள். இதெல்லாம் அதிகச் செலவில்லாமல் செய்யக்கூடிய விஷயங்கள்.
கோச்சடையான் மூலமாக ஏராளமான மென்பொருள் வேலை வாய்ப்பை திரைத்துறையில் இளைஞர்களுக்குக் கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது! ஒரு அனிமேஷன் யுனிவர்சிட்டியையே சூப்பர்ஸ்டார் மனசு வைத்தால் உருவாக்கலாம் என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்!
மே, 2013.