சிறப்புக்கட்டுரைகள்

கொழுப்பு வாழ்க!

இரா. கௌதமன்

இவ்வளவு நாளாக முட்டை மஞ்சள் கருவை சாப்பிடாதே, எண்ணெய் அதிகம் சேர்க்காதே, சிக்கனா ம்ஹூம் என்று கொழுப்புக்கான அறிவுறுத்தல்களை வாரி வழங்கியவர்கள் சில ஆண்டுகளாக பல்டி அடித்திருப்பதைக் கவனித்திருக்கலாம். அமெரிக்க விவசாயத்துறை இதில் முக்கியமானது. இதுவும் கொலஸ்ட்ராலுக்கும் இதய நோய்களுக்கும் தொடர்பில்லை என்று  அறிவித்துள்ளது.

 ஐந்தாண்டுக்கு ஒருமுறை உணவூட்டத்திற்கான அளவீடுகளை வெளியிடும் இந்த அமைப்பு  இந்த நல்ல தகவலை அறிவித்ததைத் தொடர்ந்து இது கவனம் பெற்றது. அமெரிக்க இதய மருத்துவ கல்லூரியும் இதை உறுதிப்படுத்தி இரு விஷயங்களைச்
சொல்கிறது. ஒன்று,  உணவில் அதிக அளவு கொழுப்பை சேர்த்துக் கொள்வதால் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என்பது தவறானது. இரண்டு, இரத்தத்தில் அதிக அளவிலான கொலஸ்ட்ரால் மாரடைப்புக்கு காரணம் என்பதும் தவறானது.  மாரடைப்பு ஏற்பட்டவர்களில் பெரும்பாலோனோர் இரத்த கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருந்தவர்கள் என்பதும் இந்த ஆராய்ச்சியின் முடிவிற்கு முக்கியமான காரணம்.

1970 கள் தொடக்கத்தில் அமெரிக்க அறிவியலாளர்கள் அதிக கொழுப்பு உண்பது மாரடைப்பு மற்றும் இதய நோய்களுக்கு காரணமாகிறது என்று அறிவித்து ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு மனிதன் 300 மில்லிகிராம் அளவே கொழுப்பை உட்கொள்ளலாம் என்று நிர்ணயித்தார்கள். ஏறக்குறைய 45 ஆண்டுகளுக்குப் பிறகு இது தவறானது என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள்.

சராசரியாக ஒரு மனிதனுக்கு நாளொன்றுக்கு 950 மில்லி கிராம் கொழுப்பு தேவைப்படுகிறது. மனிதனின் நரம்பு செல்கள் சரியாக செயல்படவும் மற்றும் ஹார்மோன்கள் முக்கியமாக ஸ்டீராய்டு ஹார்மோன்கள் சுரக்கவும் கொலஸ்ட்ரால் அவசியம் தேவை. நம்முடைய மூளையே முழுக்க கொழுப்பால் ஆனது தானே! நாளொன்றுக்கு 950 மி.கிராம் கொழுப்பு உணவு வழியாக கிட்டாதபோது மிச்சத்தை ஈரல் உற்பத்தி செய்கிறது. அதனால் இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு சரியாக இருந்தால் உங்களின் ஈரல் சரியாக இயங்குகிறது என்பது பொருள் என்கிறார்கள்.

உடல் பருமன் மற்றும் இதய சம்பந்தமான வியாதிகளுக்கு
சர்க்கரை மற்றும் உப்பின் அளவே காரணமாக இருக்கலாம் என்று அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது இன்றைய மருத்துவ ஆராய்ச்சி.

ஆகவே நீங்கள் தாராளமாக முட்டை, பால் பொருட்கள், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை உண்ணலாம். ஆனால் நிறைவுற்ற கொழுப்பு(saturated) பொருட்களில் மட்டும் கவனமாக இருங்கள் என்ற ஓர் எச்சரிக்கையும் உண்டு. அதேபோல் சர்க்கரை நோயாளிகள் கொழுப்பை உட்கொள்வதில் கட்டுப்பாடு தேவை என்கிறார்கள்.

இத்தனை ஆண்டுகாலம் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைப்பதற்காக உலக மக்கள் செலவிட்ட தொகை எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

இரண்டு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள். இன்னும் எளிமையாகச் சொன்னால் இந்த ஆண்டு (2019 - 20) இந்திய பட்ஜெட் மதிப்பைப் போல ஐந்து மடங்கு பணம்!

ஆகஸ்், 2019.