Fear breeds stress and the fear of corona virus is more deadly than the virus itself - Dr.Bruce Lipton
நேரில், தொலைபேசியில், தொலைக்காட்சியில், நாளிதழ்களில் எங்கும் துயர கதைகளும் துன்பத்தால் துரத்தப்படும் நிகழ்வுகளும் நிரம்பி வழியும் சூழலில் ஒரு பாஸிட்டிவ் கட்டுரை எழுத பணிக்கப்பட்டுள்ளேன்.
முன்பொரு காலத்தில் மேல்நாட்டில் ஒருவர் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்தார். அவரிடம் குதிரை ஒன்று இருந்தது. பக்கத்து ஊர்களுக்கும் உறவினர்கள், நண்பர்களை சந்திக்கவும் குதிரையில் கம்பீரமாக சவாரி செய்வார். ஒருநாள் குதிரை காணாமல் போய்விட்டது. உடனே பக்கத்து தோட்டக்காரர்கள் வந்து ‘என்ன ஒரு துரதிர்ஷ்டம்' என்று ஆறுதல் கூறினார்கள்.
‘இருக்கலாம்' என்றார் விவசாயி.
இரண்டு நாட்களுக்குப் பின் அவரது குதிரை மூன்று காட்டு குதிரைகளுடன் பண்ணைக்கு வந்து சேர்ந்தது. ‘அதிர்ஷ்டக்காரன் நீ' என்று அருகிலிருந்தவர்கள் விவசாயிடம் கூற ‘இருக்கலாம்' என்று புன்னகைத்தார் விவசாயி.
பழகாத காட்டு குதிரையில் அடுத்த நாள் சவாரி செய்ய முற்பட்ட விவசாயியின் மகனை குதிரை தள்ளிவிட கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டான். விசாரிக்க வந்த அந்த பக்கத்து பண்ணையாளர்கள் ‘இப்படி ஆயிடுச்சே, நேரமே சரியில்லை' என்றனர்.
‘இருக்கலாம்' இது விவசாயி.
அது போர்க்காலம். ராணுவத்திற்கு இளைஞர்களை சேர்க்க கிராமம் கிராமமாக வந்த அதிகாரிகள் இவரது வீட்டிற்கு வந்தார்கள். காலுடைந்த அவரது மகனின் நிலையைப் பார்த்து உதட்டை பிதுக்கி விட்டுச்செல்ல உடனே வந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் ‘உனக்கு எல்லாமே நல்லதாக நடக்குதய்யா' எனக்கூற இதற்கும் ‘இருக்கலாம்' என்றார் விவசாயி பாவனையற்ற முகத்தோடு.
விவசாயி சொல்லும் நான்கு ‘இருக்கலாம்'களுக்கு இடையே இந்த ஜென் கதை சொல்லும் வாழ்க்கை, இன்பமும் துன்பமும் நிச்சயமற்றவை, கடந்து போகும் என்ற நாளையின் நம்பிக்கையை மனதில் விதைக்கிறது.
‘‘வேலை போய் விடுமோ, மகன் /மகளுக்கு எப்போது கவுன்சிலிங் நடக்கும், விரும்பிய துறையில் இடம் கிடைக்குமா? போன மாசமே
20% பிடித்துதான் சம்பளம் போட்டான், கம்பெனி இந்த மாசம் என்ன செய்யும் ? வேலை போய்விட்டது சம்பளம் இல்லை. வெளியே போகும்போதும் வரும்போதும் ஓனர் வீட்டு வாடகை கேட்கிறார். கைமாத்து வாங்க யாரும் இல்லை என்ன செய்வது? விற்ற பொருளுக்கான பணத்தைத் தர மாட்டேங்குறாங்க, ஆனால் பொருளை நமக்கு விற்றவன் நெருக்குகிறான்,''
‘‘குடும்பத்தோடு பாரின் போலாம்னு ஒரு வருஷமா திட்டமிட்டு புக் பண்ணி வச்சு இருந்தேன் சார். போவாட்டியும் பரவால்ல, பணத்தையாவது திருப்பிக் கொடுடான்னா, தரமுடியாதுன்னு அழகான வார்த்தைல சட்டமா மெயில் அனுப்புறான்''.
உண்ண உணவில்லை என்பதில் தொடங்கி உல்லாசத்திற்கு வழியில்லையே என்பது வரை கோடான கோடி கவலைகள். ஆனால் இந்த கவலைகளை விட உயிர் பயமே உச்சத்தில் இருக்கிறது.
கேன்சருக்கு பயப்படாதவர்கள் கூட கொரோனாவிற்கு பயப்படுகிறார்கள். ‘‘துயரம் ஒரு தொற்று நோய்'' என்ற மார்த்தா கிரகாமின் வார்த்தைகளை நான் நம்ப மறுத்தது உண்டு. கொரோனா அதை நம்ப வைத்து விட்டது . எச்சரிக்கையாக இருப்பது வேறு, கவலையாக இருப்பது வேறு.
ஒவ்வொரு நபரின் பிரச்னையும் வேறு வேறானவை. இப்போது செய்யவேண்டியது, ஆகஸ்ட் 15 வரை இது தொடரும் என்று நினைத்துக்கொண்டு அடுத்த கட்டத்தை பற்றி யோசிக்க வேண்டியது தான். உணவு உடை உறைவிடம் முதற்படி. திட்டமிட்ட, திட்டமிடாத மருத்துவம் இரண்டாம் நிலை. கொரோனா அழித்துப் போட்ட கோலத்தை திரும்ப போடுவது மூன்றாம் திட்டம். வழிதவறிய பாதையிலிருந்து நாம் பயணம் செய்துகொண்டிருந்த பாதைக்கு திரும்ப வருவது நான்காம் படி.
ஒருமுறை சுசுகி ரோஸி என்ற ஜென் மாஸ்டரிடம் அவரது மாணவன், ‘‘நான் பல வருடங்களாக உங்கள் சொற்பொழிவை தொடர்ந்து கேட்டு வருகிறேன், ஆனால் புரியவில்லை. புத்தரின் தத்துவங்களை ஒரு வரியில் கூற முடியுமா?'' என்று கேட்டான். எல்லோரும் சிரித்தனர். சுசுகியும் சிரித்தார்.
பின் ‘‘எல்லாமும் மாறக்கூடியதுதான்,'' என்றார் அவன் கேட்டபடி ஒரே வரியில்.
‘‘நம்முள் இருக்கும் இயற்கையான சக்திதான் உண்மையாக நோயிடமிருந்து நம்மை மீட்கும் மருந்து'' என்ற ஹிப்போகிரேட்டசின் வார்த்தைகளை திடகாத்திரமாக இருக்கும் அனைவரும் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். மனித இனம் நோய்களை வென்று இருக்கிறதே தவிர நோய்கள் மனித இனத்தை வெல்ல முடியாது.
"The moon ceases to exit when no one is looking'' என்ற வாசகத்தை விஞ்ஞானி எட்டிங்டன் கட்டுரையில் வாசித்திருக்கிறேன். நிலவின் இடத்தில் கொரோனாவை மாற்றிப் பாருங்கள், புன்னகை உங்கள் முகத்தில் மலரும் .
பின்குறிப்பு: மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடலை கொரோனா கவலை வரும்போது கேட்கவும்.
என்றும் உங்கள்
அந்திமழை இளங்கோவன்
ஜூலை, 2020 அந்திமழை இதழ்